12 மணிக்கும் ஆப்பம் கிடைக்கும்!! (மகளிர் பக்கம்)
‘‘அம்மா ஒரு ஆப்பம், தேங்காய்ப் பால்…’’ என்று சொன்னதும், சூடாக மல்லிகை பூ நிறத்தில் பஞ்சு போல் மென்மையான ஆப்பத்தின் மேல் தேங்காய்ப்பால் ஊற்றி கொண்டு வந்து தருகிறார் அந்த வயதான பெண்மணி. மற்றொருவர் இட்லி கேட்க ஒரு தட்டில் ஆவிப் பறக்க இட்லி, சாம்பார், வடகறி என அவருடைய மகன் தட்டில் பரிமாறுகிறார். சென்னை, ராயப்பேட்டை, வெங்கடாச்சலம் தெருவில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் செயல்பட்டு வரும் இந்த ஆப்பக் கடையை பற்றி அங்கு தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
கடந்த 40 வருடமாக அதே இடத்தில் இயங்கி வரும் இந்த கடைக்கான பெயர் பலகை என்று எதுவுமே கிடையாது. ஆப்பம், இட்லி, தோசை, பூரி… என அனைத்து வகை டிபன் உணவுகளை காலை எட்டு மணி முதல் பரிமாறி வருகிறார்கள் முனியம்மாள் மற்றும் அவரின் குடும்பத்தினர். ‘‘என்னோட சொந்த ஊர் மதுராந்தகம். அங்கு தான் பிறந்தேன், வளர்ந்தேன், படிச்சது எல்லாம். அந்த ஊரில் எங்களுடையது பெரிய குடும்பம். அப்பாவை எங்க ஊரில் எல்லாருக்கும் தெரியும். வசதியான குடும்பம். கல்யாணமாகி நான் சென்னைக்கு வந்துட்டேன். என் கணவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார்.
என் கணவரின் குடும்பமும் நல்ல வசதி தான். இதே இடத்தில் தான் எங்களுக்கு சொந்தமாக இடம் எல்லாம் இருந்தது. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது’’ என்று ஒரு நிமிடம் அமைதியான முனியம்மா பிறகு தொடர்ந்தார். ‘‘என் கணவர் ஒரு மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். எங்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் மகன்கள் என நாலு பசங்க. வருகிற வருமானத்தில் நாங்க சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தோம். அது என்னவோ தெரியல… கடவுளுக்கு அவன் படைத்த மக்களே சந்தோஷமாக இருந்தால் பிடிக்காது போல… ஒரு பிரச்னை ஏற்பட்டால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைப்பாரோ என்னவோ! ஆனால் எனக்கு பிரச்னையை தாண்டி என்
வாழ்க்கையை அடி பாதாளத்திற்கு தள்ளிவிட்டார் என்று தான் சொல்லணும்.
என் கணவர் வேலைப் பார்த்து வந்த நிறுவனத்தின் முதலாளி இறந்துவிட்டார். அவர் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் எல்லாம் வேலை செய்யவில்லை. ஒரு 40 பேர் கொண்ட சாதாரண மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்தில் தான் வேலைப் பார்த்து வந்தார். அதனால் முதலாளியின் மறைவுக்கு பிறகு அந்த நிறுவனம் முற்றிலும் செயல்படாமல் முடங்கிவிட்டது. அங்க வேலைப் பார்த்த எல்லாருக்கும் வேலை இல்லாமல் போனது. அதுதான் என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் சறுக்கல். அதன் பிறகு அவர் வேறு இடத்திற்கு சென்று வேலைப் பார்ப்பதற்கு பதில் நாமே அதே போன்ற ஒரு மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கலாம் என்று திட்டமிட்டார்.
ஒரு சுபதினத்தில் நிறுவனத்தையும் துவங்கினார். ஓரளவு தொழிலும் நன்றாகத்தான் போனது. அப்பாடா என்று மூச்சு விடலாம்ன்னு நினைச்ச போது, மறுபடியும் ஒரு பெரிய பாராங்கல் என் தலையில் விழுந்தது. மோட்டார் தயாரிப்புக்காக பணம் கொடுத்த இடத்தில் இருந்து பொருள் வரவில்லை. ஆர்டர் கொடுத்தவங்களுக்கு பொருளா தரணும்… இல்லைன்னா பணமா கொடுக்கணும். இதனால் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. கையில் இருந்த காசை கொண்டு எல்லா கடனையும் அடைச்சோம். ஏமாற்றப்பட்டதால் என் கணவர் மிகவும் மனமுடைந்து போனார். இதற்கு
கிடையில் வருமானமும் முடங்கிபோனது. நாலு பசங்களும் சின்னச் சின்ன பசங்க. இவர்களை படிக்க வைக்கணும் கரைச் சேர்க்கணும். என்ன செய்வதுன்னு தெரியல’’ என்றவர் குடும்ப பொறுப்பை தன் தலையில் ஏற்றிக் கொண்டார்.
‘‘குழந்தைகளை படிக்க வைக்கணும். வருமானம் இல்லைன்னு அப்படியே ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு இருக்க முடியாது. வாழ்க்கையை நகர்த்த வேண்டும். அந்த சமயத்தில் தான் ஊரில் இருந்து என் பெற்றோர்… ஒரு இட்லி கடையை போடு. உன்னுடைய தரம் நல்லா இருந்தா மக்கள் திரும்ப திரும்ப வருவார்கள்ன்னு சொன்னாங்க. எனக்கும் அது சரின்னு பட்டது. ஆனால் அதற்கான ஒரு தனி இடம் எல்லாம் பார்க்கக் கூடிய நிலையில் நான் இல்லை. இருக்கிற இடத்தைக் கொண்டு தொழில் துவங்கலாம்ன்னு முடிவு செய்தேன். அப்ப நாங்க இருந்தது ஓலை குடிசை வீடு. அதனால் வீட்டு வாசலிலேயே இட்லி, வடை, சட்னி, பொங்கல்ன்னு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.
நாலு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்றேன். அதன் பிறகு தோசை, ஆனியன் ரவா தோசை, பொடி தோசைன்னு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கொடுத்து வந்தேன்’’என்றவர் அதன் பிறகு மீளா துயரத்திற்கு தள்ளப்பட்டார். ‘‘என் கணவருக்கு தொண்டையில் கட்டி மாதிரி வந்தது. டாக்டரிடம் போன போது புற்று நோயின் பாதிப்புன்னு சொல்லிட்டார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். புற்றுநோய் மருத்துவமனைக்கு அவரை அழைச்சிட்டு போனேன். அறுவை சிகிச்சையும் செய்தேன். அதுவரை கடையில் எனக்கு உதவியாக இருந்தவர் முற்றிலும் முடங்கிவிட்டார். தொண்டையில் அறுவை சிகிச்சை என்பதால், அவரால் திடமான உணவினை சாப்பிட முடியவில்லை. எல்லாமே பழச்சாறு, சத்து மாவு கஞ்சின்னு திரவ உணவு தான். ஐந்து வருஷம் எங்களுடன் இருந்தவர், நிரந்தரமாக எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
அதன் பிறகு இந்தக் கடையை நடத்தனுமான்னு எனக்கு தோணுச்சு. ஆனால் என் பசங்க தான், விடாப்பிடியா நடத்த சொன்னாங்க’’ என்றவர் மறுபடியும் தன் ஆப்பக்கடையை திறந்துள்ளார். ‘‘ஆரம்பத்துல பத்து இருபது பேர் தான் சாப்பிட வருவாங்க. இரவே மாவு அரைச்சு வச்சிடுவேன். அப்ப கிரைண்டர் எல்லாம் கிடையாது. காலையில் சாம்பார், சட்னி, வடகறி எல்லாம் செய்திடுவேன். ஆட்டுக்கல்லில் தான் போட்டு அரைப்பேன். ஆரம்பத்தில் பத்து பேர் தான் சாப்பிட வந்ததால் அதற்கு ஏற்ப தான் மாவு அரைப்பேன். பொங்கல் மட்டும் ஒரு கிலோ போடுவேன். 50 காசு இட்லி, வடை ஒரு ரூபாய், ஆப்பம், தோசை ஐந்து ரூபாய்ன்னு விற்றேன். இப்ப வடை ஆறு ரூபாய், ஆப்பம், தோசை எல்லாம் 25 ரூபாய்க்கு போடுறோம். நடுவுல ஒரு வருஷம் ஓலை வீட்டை கான்கிரீட் வீடா கட்டன போது கடை போடாம இருந்தேன்.
பலர் வந்து பார்த்திட்டு எப்ப திரும்ப ஆரம்பிப்பீங்கன்னு கேட்டு போவாங்க. அவங்களுக்காகவே நான் வீடு கட்டி முடிச்ச பிறகு கடையை ஆரம்பிச்சேன். இதற்கிடையில் என் இரண்டு மகள்கள் வளர்ந்துட்டாங்க. அவங்க கொஞ்சம் எனக்கு வீட்டு வேலை செய்ய உதவியா இருந்தாங்க. காய்கறி மற்றும் அரிசி போன்றவற்றை கடையில் வாங்கி வரும் பொறுப்பை என் இரண்டு மகன்களும் பார்த்துக்கிட்டாங்க. அதனால நான் கடையை மட்டும் பார்த்துக் கொள்ள ஆரம்பிச்சேன். என் கணவருக்கு பிறகு இவங்க வளரும் வரை கடைக்கு போவது முதல் எல்லாமே நான் தான் பார்த்துக் கொண்டு இருந்தேன்’’ என்றவர் தன் நான்கு பசங்களையும் இந்த வருமானத்தில் படிக்க வச்சு திருமணமும் செய்து கொடுத்துள்ளார்.
‘‘இப்ப எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. எனக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும், என் பெரிய மகள் வசந்திக்கும் ஹார்ட் அட்டாக் வந்து அவ எங்க எல்லாரையும் விட்டுட்டு போயிட்டா’’ என்று சொல்லும் போதே அவரின் கண்கள் கலங்கின. அதன் பிறகு என்னால முன்பு போல வேலை செய்ய முடியல. இப்ப என் சின்ன மகள், சின்ன மகன் மற்றும் இரண்டு மருமகள்களும் தான் எல்லா வேலையும் பார்க்கிறாங்க. நான் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது அவர்களின் தேவை என்ன என்று பார்த்து பார்த்து செய்கிறேன். என் சின்ன மகன் பழனி எனக்கு ஒத்தாசையா பரிமாறுவான். சமையல் எல்லாம் என் மருமகள்கள் பார்த்துக்கிறாங்க.
பெரிய மருமகள் வனிதா தான் சமையல் வேலை முழுசா பார்த்துக்கிறாங்க. காலையில் எழுந்து சாம்பார், சட்னி அரைப்பது, தேங்காய்ப்பால் எடுப்பது, குருமா, வடகறி செய்வது மற்றும் பூரிக்கு மாவு திரட்டுவதுன்னு செய்திடுவாங்க. சின்ன மருமகள் கற்பகம் ஆரம்பத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தாங்க. அப்பக்கூட காலையில் சமையலுக்கு தேவையான எல்லாவற்றையும் ஏற்பாடு செய்திட்டு போவாங்க. இப்ப அவங்க வேலையை விட்டுட்டாங்க. அவங்களும் என் சின்ன மகள் வச்சலாவும் சமையல் வேலையை பார்த்துக்கிறாங்க. மருமகள் மறுநாள் இட்லிக்கு மாவு அரைச்சிடுவா. அதே போல் காலையில் தோசை சுடுவது, பூரி பொரிப்பதுன்னு பார்த்துப்பா. மகள் அவங்க பசங்கள பள்ளிக்கு அனுப்பிட்டு எங்களுக்கு உதவ வந்திடுவாங்க. அவங்க தான் ஆப்பம் எக்ஸ்பர்ட்.
ஆர்டர் சொல்ல சொல்ல தான் ஆப்பம் மற்றும் தோசை சுட்டு தருவோம். எதையுமே முன்கூட்டியே செய்து வைப்பதில்லை. காரணம் வரும் கஸ்டமர்கள் எல்லாரும் சூடா சாப்பிடவே இங்க வராங்க. இப்ப காலை டிபன் மட்டும் தான் போடுறோம். அதுவே 12 மணி வரைக்கும் ஓடும். அன்னனிக்கு மாவு அன்றே தீர்ந்திடும். மீதம் இருந்தா, அதை நாங்க எங்களுக்காக பயன்படுத்திப்போம். அந்த மாவை எடுத்து வச்சு மறுநாள் பயன்படுத்துவது கிடையாது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எப்போதுமே புது மாவில் தான் சமைச்சு தரோம்.
முன்பு இரவு நேரமும் கடைப் போட்டு இருந்தோம். இப்ப போடுறது இல்லை. மழைனாலும் நாங்க கடை போடாமல் இருப்பதில்லை. எந்த நேரம் போனாலும் இங்க சாப்பாடு இருக்கும்னு வராங்க. அவங்கள ஏமாத்த எனக்கு மனசு இல்லை. பசின்னு வரும் போது இல்லைன்னு சொல்ல மனசு வராது. அதனால என்ன மழை பெய்தாலும் ஆப்பக்க கடை கண்டிப்பா இருக்கும்’’ என்றார் புன்னகைத்தபடி முனியம்மாள்.
Average Rating