டயாபர் தேர்வு சரியானதாக இருக்கட்டும்!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 45 Second

‘‘வீட்டுக்குப் புது சொந்தமாக ஒரு குட்டி செல்லம் மட்டும் வந்துவிட்டால் போதும். மகிழ்ச்சியின் உற்சாகத்துக்கே சென்று விதவிதமான பொம்மை, கலர் கலரான உடைகள் என பார்த்துப் பார்த்து பெற்றோர் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.அதேபோல் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் சுத்தத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டு யோசிக்கும் பெற்றோர் டயாபர் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்’’ என்கிறார் பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவரான ஸ்தர் கணபதி. டயாபர் தேர்வில் அக்கறை செலுத்த வேண்டிய காரணங்கள் குறித்து தொடர்ந்து விளக்குகிறார்.

டயாபர் தேர்வு என்பது சின்ன விஷயமாக தோன்றினாலும், உங்கள் குழந்தையை மிக வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் டயாபரையே சார்ந்திருக்கிறது.

குழந்தை பிறந்தது முதல் மழலையர் பள்ளி முடித்து, அதன்பின் ஒரு 6 வயது வளரும் வரையிலும் கூட சிறுநீர், மலம் கழிக்க பழக்கப்படுத்துவது பெற்றோரைப் பொறுத்தவரை சற்று சவாலான விஷயம். அதிலும், அடுத்து வர இருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் புதிதாய் குழந்தை பிறந்திருக்கும் தாய்மார்களுக்கோ சற்று கூடுதல் டென்ஷன்.

சில்லென்று இருக்கும் பருவநிலை மட்டுமின்றி, திரவ உணவு மட்டுமே பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவதால், அடிக்கடி சிறுநீர் வெளியேறும் என்பதால், பார்த்துப் பார்த்து குழந்தையின் நாப்கினை மாற்ற வேண்டும். இல்லையெனில், ஈரத்துணியால் கூட குழந்தைக்கு சளி பிடித்துக் கொள்ளும். ‘இந்த சிரமமெல்லாம் துணி டயாபர் உபயோகிப்பவர்களுக்குத் தான் எங்களுக்கில்லை’ என்பார்கள் சிந்தடிக் டிஸ்போசபல் டயாபரை பயன்படுத்தும் நவீன தாய்மார்கள்.

தங்கள் வேலையும், தூக்கமும் கெடாமல் இருப்பதற்காகவே பல மணி நேரம் தாங்கும் டிஸ்போசபிள் டயாபரை அம்மாக்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள். குழந்தை ஈரத்திலேயே ஊறி அலர ஆரம்பித்த பிறகுதான் அதை மாற்றுகிறார்கள். இதனால், எப்போதும் குழந்தை ஈரப்பதத்தோடு இருப்பதால் டயாபரில் கலந்துள்ள ரசாயனம் குழந்தையின் தோலில் பட்டு, புண்களை ஏற்படுத்திவிடுகிறது.

நம் பாட்டி காலத்தில் மெல்லிய பருத்தியிலான துணிகளை சின்ன, சின்னதாக கட் பண்ணி வைத்துக் கொண்டு, அதை அரை மணிக்கு ஒருமுறை மாற்றிவிடுவார்கள். இதனால் குழந்தையும் ஈரத்தால் தூக்கம் கலையாமல் நன்றாகத் தூங்கும். இப்போது அப்படியில்லை, அறிவியல் வளர்ச்சிக்கேற்ப சிந்தடிக் பொருட்களால் ஆன டயாபர்களை சர்வ சாதாரணமாக அம்மாக்கள் உபயோகிக்கிறார்கள். மாதாந்திர மளிகை சாமான்களின் லிஸ்ட்டில் டயாபர் முதலிடம் பிடிக்கிறது என்றால் அதன் முக்கியத்துவம் புரியும்.

அம்மாவிற்கு சௌகரியம்தான். இருந்தாலும், குழந்தையின் ஆரோக்கியம் முக்கிமாயிற்றே. தனித்துவமான உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள உங்களுக்காக டயாபர் தேர்வு செய்வதில் சில டிப்ஸ்கள் இதோ…

வயது மற்றும் எடை

உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடைக்கேற்ற டயாபரை தேர்ந்தெடுக்கும்போது, அது சரியாகப் பொருந்துவதால் சிறுநீர் கசிவை ஏற்படுத்தாது. இதனால் உங்கள் குழந்தை சௌகரியமாக உணரும்.

உறிஞ்சும் தன்மை

அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான டயாபரை தேர்ந்தெடுக்கும்போது நனையாமல் இருப்பதும், ஈரப்பதமில்லாததாகவும் இருப்பது முக்கியம்.

மென்மையான உணர்வு

குழந்தை கால்களை அசைக்கும்போது இடுப்பு மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் உராய்வு ஏற்படும். குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், சொரசொரப்பான டயாபர்கள் உரசி, அந்த இடங்களில் சிவந்து, தடித்துக் கொண்டு, சிலநேரங்களில் தோலே உரிந்தும் போய்விடும்.

இதனால் எரிச்சல், வலி உண்டாகும். அதிலும் உங்கள் குழந்தையின் தோல் மிகவும் சென்சிடிவானது என்றால் நிலைமை மேலும் மோசமாகும். இதற்கு உடலோடு பொருந்தக்கூடிய, மெல்லிய பருத்தித் துணியினாலான டயாபர்கள்தான் சிறந்தவை. அவை உராய்வை ஏற்படுத்தாது.

அதிலும், வெயில் காலங்களில் குழந்தையின் தொடை இடுக்குகளில் வியர்வை அதிகம் சுரந்து உராய்வின் போது கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எந்த பருவத்திற்குமே உராய்வை ஏற்படுத்தாத மென்மையான பருத்தித் துணி சிறந்ததாக இருக்கும்.

விலை

சராசரியாக ஒவ்வொரு பெற்றோரும் வருடத்திற்கு ரூபாய் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை டிஸ்போஸபல் டயாபருக்காக மட்டுமே செலவழிப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. நிஜமாகவே இது சற்று அதிகமான தொகைதான். காட்டன் துணிகள் என்றால் அதை துவைத்து மீண்டும், மீண்டும் உபயோகிக்க முடிவதால் செலவும் குறையும். உங்கள் மாத பட்ஜெட்டில் பெரும் தொகையை மிச்சப்படுத்தலாம்.

பயணங்களிலும், டே கேரில் விடும்போதும் டிஸ்போசபல் டயாபரை உபயோகிப்பது எளிதாக இருக்கும் என்பதால் அப்போது மட்டும் உபயோகிக்கலாம். இருந்தாலும் குழந்தையின் உடல்நலம் கருதி, பெற்றோர்கள் கூடியவரை காட்டன் துணியால் ஆன டயாபரையேஉபயோகிப்பது நல்லது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

துணியாலான டயாபர்கள் மண்ணில் எளிதில் மக்கும் தன்மை உடையது என்பதால் அதனால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நாம் அதற்காகவே துணி டயாபர்களை உபயோகிக்கவேண்டிய அவசியத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

சாதாரணமாக ஒரு குழந்தைக்கு, ஒரு நாளுக்கு 6 முதல் 8 டயாபர்கள் வரை தேவைப்படும்போது, அக்குழந்தையின் 3 வயது வரை குறைந்தபட்சம் 7000 டயாபர்களாவது உபயோகிக்கிறோம். ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2 கோடியே 70 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் 5-ல் ஒரு பங்கு குழந்தைகளுக்கு டயாபர்கள் உபயோகப்படுத்தினால் கூட அதனால் உருவாகும் கழிவு நிச்சயமாக மிக அதிகமாகத்தான் இருக்கும்.

மேலும், ஒவ்வொரு சிந்தடிக் டயாபரும் மக்குவதற்கு 500 முதல் 700 வருடங்கள் வரை ஆகும் என்பதால் நமது சுற்றுச்சூழலுக்கு மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும். மறுபுறம், துணி டயாபர்களை துவைத்து மீண்டும், மீண்டும் பல முறை பயன்படுத்த முடிவதோடு, துணி மக்குவதற்கு சில ஆண்டுகளே தேவைப்படும் என்பதால் இதன் உபயோகத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

உங்கள் சௌகரியத்தை மட்டும் பார்க்காமல் உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரக்கூடிய சுத்தமான, ஆரோக்கியமான டயாபர்களை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் உங்கள் குழந்தைக்கு தரக்கூடிய அனைத்துமே மிகச்சரியானதாக இருக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உக்ரேன் ரஸ்யா சமாதானம் ! படைகள் விலத்தப்படுகின்றன விமானங்கள் பறப்பு ! (வீடியோ)
Next post பறக்கும் தட்டு, பருவ மாற்றம், சந்திர பயணம் கிழிகிறது முகமூடி சுனவ்டன் கருத்து ! (வீடியோ)