6 மாதம் முதல் 2 வயது வரை….!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 19 Second

டயட் டைரி

தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு சில மாதங்களுக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிப்போம். அப்படி உணவு கொடுக்க ஆரம்பிக்கும் 6 மாதங்களுக்குப் பிறகான காலகட்டத்திலிருந்து 2 வயது வரை என்னென்ன உணவுகள் குழந்தைக்குக் கொடுக்கலாம் என்பது பற்றிய தெளிவு பெற்றோருக்கும், வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் இருக்க வேண்டும்.

திட உணவு

குழந்தைகளுக்கு முதல் 4-6 மாதம் வரை தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையின் தலை நின்ற பிறகு குழந்தை உட்கார ஆரம்பித்த பிறகு திட உணவை ஆரம்பிக்கவும். திட உணவை தேக்கரண்டியின் உதவியினால் கொடுப்பது குழந்தைக்கு எளிதாக இருக்கும். முதலில் தானிய உணவு கொடுக்க வேண்டும். அத்துடன் இரும்புச்சத்து சேர்த்து தரவேண்டும். பின்னர் பழம், காய்கறி மற்றும் இறைச்சி உணவு கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு உணவு தரும்போது நம் பாரம்பரிய உணவான சிறுதானியத்தை சிறிதளவாக கொடுத்து வந்தால், அந்தக் குழந்தை பிற்காலத்தில் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்படாது. இதனால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். உடல் வலிமை அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான எல்லா வகை ஊட்டச்சத்தும் சிறுதானியம் மூலம் கிடைக்கும்.

மேலும் குழந்தைக்கு இதுபோன்ற ஆரோக்கியமான உணவு கொடுத்து பழக்கும்போது அவர்கள் பெரிய வயது அடையும்போது இதுபோன்ற ஆரோக்கியமான உணவையே தேடுவார்கள். இது ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்க உதவும்.
எளிதாக குழந்தை உணவருந்த சில வழிகள்

*குழந்தைக்கு கொடுக்கும் திட உணவுகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகப்படுத்த வேண்டும்.
*திட உணவு அதிக உப்பு, காரம், இனிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
*குழந்தைக்கு கொடுக்கும் திட உணவு கைக்கு இதமான சூட்டில் இருப்பது அவசியம்.
*குழந்தையின் வயிறு சிறிதாக இருப்பதால் அதற்கு கொடுக்கும் உணவு சிறிய அளவில் இருக்க வேண்டும்.
*இடைவேளை விட்டு உணவை மறுபடியும் கொடுக்க வேண்டும்.
*உணவை உண்ணும் முன்னர் பால், பழரசம், இனிப்பு உணவு இவற்றை அதிகம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

இனிய சூழ்நிலையில் உணவூட்டுதல்

*குழந்தை சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் இருக்க பலவித உணவு அருந்துவது நல்லது. இப்பழக்கம் உடல் வளர்ச்சி தடையின்றி முன்னேற உறுதுணையாக இருக்கிறது.
*குழந்தைகள் உணவு அருந்தும்போது அவசரப்படுத்தாமல், தேவையான நேரத்தைக் கொடுக்கவும்.
*கட்டாயப்படுத்தி உணவு கொடுப்பது தவறானது. குழந்தையின் விருப்பு, வெறுப்பு அறிந்து அதன்படி உணவு அளிக்க வேண்டும்.
*சாப்பிடும்முன் படங்கள் வரைவது, புத்தகங்கள் படிப்பது போன்றவைசெய்தால் பசியைத் தூண்டும்.

1 – 2 வருடங்களில் குழந்தைக்கான வளர்ச்சி சில குழந்தைகள் வயதுக்கான வளர்ச்சி, திடமான உடல் அமைப்பு இல்லாமல் இருக்கும். இதுபோன்ற குழந்தைகளுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் அதிக சத்துள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் அவற்றை சரி செய்ய இயலும். குழந்தைக்கு எல்லாவித உணவு வகைகளும் கலந்து சரிவிகித உணவை ெகாடுக்க வேண்டும்.

பிள்ளைகள் வளர வளர அவர்களின் உணவுப் பழக்கம் மாறுபடும். அதனால், வளரும் குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை கொடுப்பது அவசியமானது. இந்த மாதிரி ஊட்டச்சத்து உள்ள உணவு கொடுப்பதால் பிள்ளைகளுக்கு வரக்கூடிய நோய்களை தடுக்க முடியும்.
சக்தியும் புரதச்சத்தும் தரும் உணவுகள்பால் மற்றும் பால் சார்ந்த உணவு, முட்டை, கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன், பருப்பு வகைகள் இவற்றில் அதிக புரதச்சத்து உள்ளது. வெண்ணெய், தேன், ஜாம், சர்க்கரை, வெல்லம், க்ரீம் போன்ற சக்தி அதிகம் உள்ளதை உணவில் கலந்து
சாப்பிடவும்.

எண்ணெயில் பொரித்த பலகாரங்களை கொடுப்பதில் தவறு இல்லை. ஆனால், அவற்றில் உப்பு அதிகமாக இருக்கக் கூடாது. சாதம், பருப்பு இவற்றில் நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பது நல்லது. சூப் கொடுக்கும்போது அதில் சிறிது முட்டை கலந்து வேக வைத்துக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு திட உணவை எந்த வயதில் அறிமுகப்படுத்தலாம்?

வயது உணவு

4 – 6 மாதம் – அரிசி, தானியம்
5 – 7 மாதம் – காய்கறி
6 – 8 மாதம் – பழம் மற்றும் பழச்சாறு.
7 – 9 மாதம் – மாமிசம் (மீன், கோழிக்கறி, பருப்பு வகைகள்)
8 – 10 மாதம் – பாலில் தயாரிக்கப்பட்ட உணவு.
9 – 11 மாதம் – வேக வைத்த முட்டையின் மஞ்சள் கரு மட்டுமே.
11 மாதம் – வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கரு.
11 மாதம் மேல் – பசும்பால்.

உணவு பாதுகாப்பு முறை

*உணவு கெட்டுப்போய் விட்டால் அந்த உணவை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. உணவை தயாரிக்கும்போது சுத்தமான சூழ்நிலையில் சமைக்க வேண்டும். உணவை கையால் தொடுவதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும்.

*குழந்தை உணவை சாப்பிடாவிட்டால் உணவைக் குளிர்பெட்டியில் வைக்கவும். அந்த உணவை ஒருமுறை மட்டும் சுடவைத்துக்
கொடுக்கவும்.

* முதல் ஐந்து வருடங்களில் நல்ல சத்துள்ள உணவு முறையைப் பழக்கப்படுத்தினால் குழந்தைக்கு நல்ல உடல்நலமும் வளர்ச்சியும் கிடைக்கும். ஊட்டச்சத்துள்ள உணவை பழக்கப்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் நல்ல உடல் நலத்துடன் இருக்க முடியும்.

ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (French Toast)

தேவையான பொருட்கள்

முட்டை – 1, பால் – ½ கப், ரொட்டி – 2 to 3 ஸ்லைஸ், சர்க்கரை – தேவையான அளவு, வெனிலா எஸென்ஸ் – 2 துளிகள், நெய் – தேவையான அளவு.

செய்முறை

முட்டை, பால், சர்க்கரை, எஸென்ஸ் நன்றாக சேர்த்து கலக்கவும். அதில் ரொட்டி துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து 5 நிமிடம் ஊற வைக்கவும். கடாயை சூடாக்கி அதில் நெய் சேர்த்து அந்த ரொட்டித் துண்டுகளை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வர வேண்டும்.

பலன்கள்

முட்டையில் புரதச்சத்து உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் – ஏ கண் பார்வைக்கு நல்லது. பாலில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு வளர்ச்சி மேம்படும். இதன் பொட்டாசியம் சத்து உள்ளதால் இதய நோய் வராமல் காக்கும். ரொட்டியில் மாவுச்சத்து உள்ளதால் செரிமானம் எளிதாக இருக்கும். நெய்யில் இருக்கும் கொழுப்புச்சத்தினால் சக்தி கிடைக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவும்.

ராகி களி (Ragi kali)

தேவையான பொருட்கள்

ராகி மாவு – 2 தேக்கரண்டி, வெல்லம் – தேவையான அளவு, கடலைப்பருப்பு மாவு – 2 தேக்கரண்டி.

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடான பின்னர் வேறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ராகி மாவு மற்றும்
கடலைப்பருப்பு மாவை நன்கு கலந்துகொள்ளவும். கட்டிகள் இல்லாமல் இதை ஒரு சூடான தண்ணீரில் ஊற்றி நன்கு கிளறவும். இதில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கிளறி களி பதம் வந்தவுடன் பரிமாறவும்.

பலன்கள்

ராகியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து உள்ளதால் செரிமானத் திறன் அதிகரிக்கும். இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்தம் அதிகரிக்க உதவும். கடலைப்பருப்பில் புரதச்சத்து உள்ளது. கண் பார்வைக்கும் சருமத்துக்கும் நல்லது. எலும்புக்கு மற்றும் பற்களுக்கு நல்லது. வெல்லத்தில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்த சோகையை சரி செய்யும்.

ஸ்டுவுட் ஆப்பிள் (Stewed Apple)

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 1, சர்க்கரை – தேவையான அளவு, தண்ணீர் – ½ கப்.

செய்முறை

ஆப்பிளை தோல் சீவி அதை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடான பின்னர் அதில் ஆப்பிள் துண்டுகளைப் போடவும். கொஞ்ச நேரத்தில் அது வெந்தவுடன் அதை கரண்டி வைத்து மசித்துக் கொள்ளவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறி பரிமாறவும்.

பலன்கள்

ஆப்பிள் ஆன்டி ஆக்ஸிடன்ட் கொண்டது. ஆஸ்துமாவை சரி செய்யும். நார்ச்சத்து உள்ளதால் வயிற்றுக்கோளாறுகளை சரி செய்யும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். வைட்டமின் மற்றும் கனிமங்களும் நிறைந்துள்ளது.

வெஜ் சூப் (Veg Soup)

தேவையான பொருட்கள்

கேரட் – 20 கிராம், உருளைக்கிழங்கு – 20 கிராம், காலிஃப்ளவர் – 20 கிராம், பீன்ஸ் – 20 கிராம், பூண்டு – 1.

செய்முறை

குக்கரில் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதை குக்கரில் சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேக விடவும். அதனுடன் பூண்டு சேர்க்கவும். பின்னர் நன்றாக வெந்தவுடன் அதை மசித்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு சேர்த்து கலந்து குழந்தைக்கு ஊட்டவும்.

பலன்கள்

கேரட்டில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பீட்டாகரோட்டின் இருப்பதால் புற்றுநோய் வராமல் காக்கும். வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வைக்கு நல்லது. பீன்ஸில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளது. குடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
உருளைக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்க உதவும். எளிதில் செரிமானம் ஆகும். ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து உள்ளது. காலிஃப்ளவர் மூளை வளர்ச்சியின் குறைபாட்டை சரி செய்யும். நுரையீரல் பிரச்னையைத் தீர்க்கும். பூண்டு இதய நோய் வராமல் தடுக்கும். செரிமான கோளாறை சரி செய்யும். சளி, இருமல் பிரச்னையைத் தீர்க்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அறந்தாங்கி நிசா காமடி கலாட்டா!! (வீடியோ)
Next post இந்தியாவின் மாறுபாடான இராணுவ கொள்கைகள் !! (கட்டுரை)