உங்க குழந்தை ஸ்மார்ட் ஆகணுமா? (மருத்துவம்)

Read Time:22 Minute, 57 Second

சட்டுன்னு சொல்லுங்க பார்க்கலாம்.53-ஐ 8-ஆல் வகுத்தால் என்ன விடை?உடனே செல்போனை எடுத்து, அதில் கால்குலேட்டரைதானே தேடுறீங்க? அது போங்கு ஆட்டம் சார்.சின்ன வயசுலே நம்ம கணக்கு வாத்தியார் கையில் பிரம்பை வெச்சிக்கிட்டு, கண்ணை உருட்டிக்கிட்டே கேட்குறப்போ டக்குன்னு ‘6.6’-ன்னு மனசுலேயே கணக்கு போட்டு சரியா சொல்லியிருப்போம் இல்லே?

மூளைதான் உலகின் மிகச்சிறந்த கால்குலேட்டர். தலைசிறந்த கம்ப்யூட்டர். இன்றைய நவீன வாழ்வில் அதை நாம் முழுமையாக பயன்படுத்துவதில்லை. செல்போன், கம்ப்யூட்டர், கூகுளென்று நம் மூளை செய்ய வேண்டிய வேலையை எல்லாம் இயந்திரங்களிடம் கொடுத்து விடுகிறோம். மூளையின் திறனை மழுங்கடிக்கிறோம்.நம்முடைய மூளையின் சைஸ் ஒரு கைப்பிடி அளவுதானாம்.ஆனால் -“அதன் செயல்திறன் கற்பனைக்கும் எட்டாதது. மூளையின் திறனை சில பயிற்சிகள் மூலமாக தூண்டினால் போதும். மகத்தான சாதனைகளை ஒவ்வொருவரும் படைக்கலாம்” என்கின்றனர் நண்பர்களான ஆதிராஜும், ஈஸ்வரும்.

இவர்கள் சென்னை கொளத்தூரில் ‘டேலண்ட்ஸ்’ என்கிற பெயரில் ஒரு மையத்தை நடத்தி வருகிறார்கள். மாணவப் பருவத்திலேயே குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த பிரத்யேக பயிற்சிகளை வழங்குவதுதான் ‘டேலண்ட்ஸ்’ செய்யும் வேலை.சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தில் வேலை பார்த்து வந்தார் ஆதிராஜ். அந்த வேலையை விட்டு விட்டு இப்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்பான நிறுவனம் ஒன்றை தனியாக நிர்வகித்து வருகிறார்.
“இந்த ‘டேலண்ட்ஸ்’ பயிற்சிகளை ஆரம்பிக்க என்னோட மகன்தான் காரணம். அவன் நல்லாதான் படிப்பான். ஆனா, படிச்சது எதுவுமே மனசுலே தங்காது. காலையிலே படிச்சதை சாயங்காலம் மறந்துடுவான். ஸ்கூலில் இருந்து எப்பவும் கம்ப்ளையண்ட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. ‘ஒருவேளை அவனுக்கு டிஸ்லெக்சியா மாதிரி பிரச்சினை ஏதாவது இருக்கலாம்’னு ஒருவாட்டி அவங்க சொன்னப்போ அப்படியே மனசு உடைஞ்சிப் போய் உட்கார்ந்துட்டேன். ஓர் அப்பாவுக்குதான் என்னோட அந்த பதட்டம் புரியும்.

உடனே, குழந்தைகள் மனநிலை தொடர்பான டாக்டர்கள் ஏகப்பட்ட பேரை பார்த்தேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா அவனை டெஸ்ட் பண்ணிப் பார்த்தாங்க. அத்தனை பேருமே சொல்லி வெச்ச மாதிரி ‘பையன் நார்மலாதான் இருக்கான் சார். நீங்கதான் ஓவரா டென்ஷன் ஆவுறீங்க’ன்னு சொன்னாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. ஒரு மனநல நிபுணர்தான், ‘பையனுக்கு mid brain activation பண்ணிப் பாருங்களேன்’னு ஆலோசனை சொன்னாரு.
அப்படின்னா என்னன்னே எனக்குத் தெரியலை. கூகுள் பண்ணிப் பார்த்தேன். மும்பையில் இது தொடர்பாக பயிற்சிகள் தருவதாகவும், அதன் மூலம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்தி அவங்க கவனத்தைஒருநிலைப் படுத்துவதாகவும் ஒரு செய்தி வாசிச்சேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த ஆதிராஜை இடைமறித்து ஈஸ்வர் தொடர்ந்தார்.

“மேடம், நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்டில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னோட அக்கா, ஸ்கூல் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பாங்க. குழந்தைகள்னா யாருக்குதான் பிடிக்காது? டியூஷனுக்கு வர்ற குழந்தைகளோட ஜாலியா விளையாடிக்கிட்டு அவங்களோட ஒருத்தனா பழகுறது எனக்குப் பிடிக்கும். அப்போதான் கவனிச்சேன். சில குழந்தைகள் ரொம்ப சுட்டித்தனம் பண்ணுவாங்க. ஒரு இடத்துலே அவங்களாலே உட்கார முடியாது. அப்படியும் இப்படியும் ஓடிக்கிட்டே இருப்பாங்க. குறிப்பா சொல்லணும்னா, இதில் ஆண் குழந்தைகளோட சதவிகிதம்தான் அதிகம்.

அவங்களோட இந்த தன்மையைப் பற்றி எனக்கு பெரிய ஆச்சரியம் இருந்தது. இவங்க மட்டும் ஏன் இப்படி மணிரத்னம் படத்துலே வர்ற குழந்தைகள் மாதிரி ரொம்ப ஹைப்பர் ஆக்டிவ்வா இருக்காங்கன்னு ஆராய ஆரம்பிச்சேன். அப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். மூளையோட இடப்பக்கத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் கூடுதல் ஆக்டிவ்வா இருக்காங்க. அது ஒண்ணும் தப்பில்லை. ஆனா, தெரியாதவங்க யாராவது திடீர்னு இந்த குழந்தைகளை
பார்க்குறப்போ, ‘இந்தப் பையனுக்கு ஏதோ பிராப்ளம் போலிருக்கு’ன்னு தப்பா நெனைச்சுடுவாங்க.
நாம யாருமே ரெண்டு பக்க மூளையையும் பொதுவா சமமா பயன்படுத்துறதில்லை. அதுமாதிரி பயன்படுத்துறதுக்குதான் mid brain activation பயிற்சிகள் உதவுது. என்னோட தனிப்பட்ட ஆர்வத்தாலே இதுபத்தி நிறைய தெரிஞ்சுக்க முயற்சி பண்ணப்போதான் ஆதிராஜோட அறிமுகம் கிடைச்சது. ரெண்டு பேரோட தேடலும் ஒண்ணுங்கிறதாலே, நாமளே நம்ம ஊரு குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பயிற்சிகளை தரணும்னு யோசனை வந்தது. அதுக்கப்புறம்தான் ‘டேலண்ட்ஸ்’ ஆரம்பிச்சோம்”தங்களுடைய பயிற்சி மையம் பற்றிய அறிமுகப்படலத்தை இருவரும் இணைந்து முடித்தவுடன் கேள்விகளை ஆரம்பித்தோம்.

“நீங்க சொல்லுறது புதுசா இருக்கு. Mid brain activation பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.”

“மூளையோட நடுப்பகுதி வலது, இடது இரு பக்கத்துக்கும் பாலமா செயல்படும். ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுக்கங்க. உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள நம்ம உடலை சரிபாதியா இடது, வலதுன்னு பிரிச்சுக்கங்க. வலது பக்கம் மொத்தத்தையும் இடது மூளையும், இடது பக்கத்து செயல்பாடுகள் மொத்தத்தையும் வலது மூளையும் பங்கு பிரிச்சிக்கிட்டு செயல்படுது. இதுதான் இயற்கை.

நம்மில் பெரும்பாலானோர் வலது கைப்பழக்கம் கொண்டவர்கள்தான். எனவே, நமக்கெல்லாம் இடதுபக்க மூளையோட செயல்பாடுதான் அதிகமா இருக்குன்னு புரிஞ்சுக்கலாம். அதாவது உடல்ரீதியான உழைப்பு தொடர்பான ஏரியாவை இடதுபக்க மூளை கவனிச்சுக்குது. பேச்சுத்திறன், எழுத்துத் திறன், கற்பனைத் திறன் போன்ற ஏரியாவையெல்லாம் வலதுபக்க மூளை லீசுக்கு எடுத்துக்குது. இந்த ரெண்டு பக்கமும் ஒண்ணுக்கு ஒண்ணு பர்ஃபெக்டா கோஆர்டினேட் ஆனாதான் ஒரு மனிதன் ஸ்மார்ட்டா இருக்க முடியும். ஒரு பக்கம் கொஞ்சம் சுணங்கிட்டாகூட, நம்மோட நடவடிக்கைகள் வித்தியாசப்பட ஆரம்பிச்சுடும்.

அதே நேரம் இந்த இரண்டு பக்கத்துக்கும் நடுவிலே இருக்கிற பகுதியோட பணிகளும் ரொம்பவே முக்கியம். பார்க்குறது, கேட்குறது, தூங்குறது உள்ளிட்ட நம்ம உடலுக்கு தேவையான அத்தியாவசிய செயல்பாடுகளை கவனிச்சுக்கற ஏரியாதான் அது. அதாவது சிந்திக்கிறது தொடர்பான வலது மூளை, உடலுழைப்பு தொடர்பான இடது மூளை.. இவை இரண்டும் ஒழுங்கா செயல்பட பார்வை, செவித்திறன், ஓய்வு எல்லாம் உடலுக்கு அவசியம் இல்லையா? அந்த பணிகளை நடுமூளை செய்யுது.

இதோட செயல்பாட்டை இன்னும் கொஞ்சம் தீவிரப்படுத்தினால் இருபக்க மூளைகளோட வேலைகளும் இன்னும் கூடுதல் பர்ஃபெக்டா நடக்கும். சிந்தனை, செயல் ரெண்டுமே அறிவுப்பூர்வமாகவும், வேகமாகவும் நடக்கும். நடுப்பக்க மூளையை தூண்டுவதற்கு தரக்கூடிய பயிற்சிகளைதான் mid brain activation என்கிறோம். இதில் மூடநம்பிக்கை எதுவுமில்லை. அறிவியல் பூர்வமாக, ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயத்தை பத்திதான் நாம இப்போ பேசிக்கிட்டிருக்கோம்.”

“என்னென்ன மாதிரி பயிற்சிகளை கொடுப்பீங்க. எல்லாருமே இந்தப் பயிற்சிகளை எடுத்துக்கலாமே? எதுக்கு குறிப்பா குழந்தைகள்?”

“எல்லாருக்குமே இதுமாதிரி பயிற்சிகள் நிச்சயமா தேவைதான். ஆனா, குழந்தைகள்தான் ஸ்பெஷல். ஏன்னா, அவங்கதான் Learning processல் இருப்பவர்கள். பெரியவர்கள் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குற பிராசஸில் இருக்கிறவங்க. குழந்தைகளோட உலகம்தான் புதிரானது. அவங்களுக்கு இன்னிக்கு ரஜினியை பிடிக்குதுன்னா, நாளைக்கே அஜித்தை பிடிக்குது, நாளன்னிக்கு விஜய்யை பிடிக்குது. அதுக்குன்னு லாஜிக்கல் ரீசன்ஸ் எதுவுமிருக்காது. ஆனால், ஒரு வயது வந்தவருக்கு தன்னுடைய விருப்பு, வெறுப்பு குறித்த ஒரு தீர்மானமான முடிவு இருக்கும். எனவேதான் mid brain activation குழந்தைகளுக்குதான் ரொம்ப அவசியப்படுது.

பெரியவர்களை பொதுவா மிகக்குறைவான சில வகைகளில் நீங்க பிரிச்சிடலாம். அவர் கோபமானவர், அவர் அமைதியானவர்னு ஒருத்தரோட பர்சனாலிட்டியை சொல்லிடலாம். ஆனா, குழந்தைகளில் ஏகப்பட்ட விதங்கள் உண்டு. சில பசங்களுக்கு கவனிக்கும் திறன் குறைவா இருக்கும். ஆனா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரனா இருப்பாங்க. சில குழந்தைகள் ரொம்ப பயந்த சுபாவமா இருப்பாங்க. ஆனா, படிப்புன்னு வந்துட்டா கில்லியா நிப்பாங்க. சில குழந்தைகள் ஓவரா சேட்டை பண்ணுவாங்க. அவங்களாலே ஒரு இடத்துலே அஞ்சு நிமிஷம் நிக்கக்கூட முடியாது.
அப்பாக்களைவிட அம்மாக்களுக்குதான் குழந்தைகளோட இந்த தன்மைகள் எல்லாம் தெரியும். ‘நல்லாதான் படிக்கிறான். கேட்கிற கேள்விக்கு எல்லாம் டக்கு டக்குன்னு பதில் சொல்லுறான். அவனோட ஹேண்ட் ரைட்டிங் அவ்ளோ அருமையா இருக்கு. ஆனா, எக்ஸாமில் மட்டும் மார்க் கம்மியா எடுக்கிறான்’னு துல்லியமா சொல்லுவாங்க.
இதெல்லாம் நிரந்தரக் குறைகள் இல்லை. சரிப்படுத்திக்கக் கூடியதுதான். அஞ்சாவது வரை பாடத்துலே ரொம்ப மந்தமா இருந்தவங்க, யுனிவர்சிட்டியிலே கோல்ட் மெடல் வாங்குற அளவுக்கு எல்லாம் வந்து ஆச்சரியப்படுத்துவாங்க. நம்ம மூளையோட திறன் அந்தந்தப் பருவத்திலே எப்படி செயல்படுதுங்கிறதைப் பொறுத்துதான் நம்ம வாழ்க்கை அமையுது. இதைதான் ‘தலைவிதி’ன்னு பெரியவங்க சொன்னாங்க.

இப்போ நம்ம குழந்தைகள் எப்படி படிக்கிறாங்க?

‘அசோகர், சாலையோரங்களில் மரங்களை நட்டார்’ அப்படின்னு மனப்பாடம் பண்ணிக்கிறாங்க. அதையே தேர்விலும் அப்படியே எழுதுறாங்க. ‘ஏன் மரங்களை நட்டார்?’னு கேட்டா முழிப்பாங்க. மனப்பாடம் பண்ணிக்காமே புரிஞ்சுக்கிட்டு படிச்சா மறதியே வராது. ஒரு தேர்வுக்கு நாற்பது வாக்கியங்களை ஒரு பையன் மனப்பாடம் பண்ண வேண்டியிருக்குன்னு வெச்சுக்கங்களேன். அவன் என்னதான் மனப்பாடம் பண்ணினாலும், தேர்வு எழுதற சூழலில் எங்கோ சிந்தனையில் தடை ஏற்பட வாய்ப்பிருக்கு. அந்த நாற்பது வார்த்தைகளை கோர்த்து ஒரு கதையா சொன்னோம்னு வெச்சுக்கங்களேன். அந்த கதையை மறக்கவே மாட்டான். எப்படிப்பட்ட சூழலிலும் அந்த கதையை அவனாலே கோர்வையா சொல்ல முடியும். உதாரணத்துக்குதான் இதை சொன்னோம். எங்களோட பயிற்சி முறைகள் இதுமாதிரி எளிமைப்படுத்தப் பட்டவை. ஆனா, தீவிரமான விளைவுகளை கொடுக்கவல்லவை.”

“பாடத்தையெல்லாம் கதையா மாத்தி அமைச்சிட்டா போதுமே?”

“நீங்க நம்மோட கல்வித் திட்டத்தோட அடிப்படையையே அசைத்துப் பார்க்குறீங்க. அதைப் பத்தியெல்லாம் கல்வியாளர்கள் பார்த்துக்கட்டும். நாங்க நினைவுத் திறனை அதிகரிப்பது பற்றிதான் யோசிக்கறோம். இதன் மூலமாக சிந்தனைத் திறனில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதை ஆதாரப் பூர்வமா எங்களாலே நிரூபிக்க முடியும். நாம சில பாடங்களை கதையா அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தா போதும். அதுக்கப்புறம் அவங்களே தாங்க படிக்கிற எதையும் ஒரு கதையாவோ, ஓவியமாவோ மனசுக்குள்ளேயே மைண்ட் மேப் பண்ணி, படிக்கிறதையெல்லாம் அப்படியே மூளையில் ஸ்கேன் பண்ணி வெச்சுக்க ஆரம்பிச்சிடுவாங்க.

ரெண்டு நாள் பயிற்சிதான். காலை முதல் மாலைவரை அவங்களோட மூளைத்திறனை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம்னு குழந்தைகளுக்கு கோடிட்டு காட்டுறோம். அதுக்கப்புறம் அவங்க தினமும் வீட்டிலேயேகூட பெற்றோர் உதவியோட இந்த பயிற்சிகளை செய்யலாம்.முதல்ல கடவுள் வாழ்த்தோடதான் ஆரம்பிக்கிறோம். அதுக்கப்புறம் சில விளையாட்டுகள். குறிப்பா வார்த்தை விளையாட்டு, புதிர், சிந்திக்கும் பயிற்சிகள்னு கொடுக்கறோம். அப்புறம் உடம்பை ஃப்ரீ பண்ணுறதுக்காக ஜூம்பா டான்ஸ். இது முடிச்சதுமே எவ்வளவு கவலையிலே இருந்தாலும் மனசை ரிலாக்ஸ் ஆக்கிறதுக்காக சிரிப்புப் பயிற்சி. மனசை ஒருநிலைப்படுத்த தியானம்.

இதெல்லாம் முடிஞ்சதும் ‘ஃபிங்கரிங்’னு ஒரு ஸ்பெஷல் டிரைனிங். இடது, வலது இரு கரங்களையும் பயன்படுத்தி இரண்டு பக்க மூளைகளையும் ஸ்டிமுலேட் செய்யக்கூடிய வகையில் இந்த பயிற்சி இருக்கும்.
ஃபைனலா மியூசிக். இந்த இசை, குழந்தைகளோட உடலில் இருக்கிற ஏழு சக்கரங்களையும் தூண்டுவிடும். இசை என்றதுமே சினிமா பாட்டோ, கர்நாடக சங்கீதமோன்னு நெனைச்சுடாதீங்க. கோவில் மணி மாதிரி ஓசை, காட்டுக்கு நடுவில் விழும் அருவியின் சப்தம், சலசலத்து ஓடும் நதியின் ஒலி, பறவைகள் எழுப்பக்கூடிய இன்னிசை மாதிரியான இசைத்துண்டுகள். இந்த இசையை கேட்டா மனசு லேசாவது மட்டுமில்லாமே, மூளையும் தன்னை ரெஃப்ரெஷ் பண்ணிக்கும். நாங்க இந்த மியூசிக் போடுறப்போ சில குழந்தைகள் அப்படியே தூங்கிடுவாங்க. மிகக்கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இசைக்கோர்வையை எங்கள் பயிற்சியின் முக்கியமான அம்சமா சொல்லலாம்.
இந்த பயிற்சிகளை எடுத்துக்கிட்ட குழந்தைகளுக்கு ஐம்புலன்களும் ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைத்து செயல்படத் துவங்குகின்றன. மனசு தெளிவாகுது. ஞாபகத்திறன் அதிகரிக்குது. உடலோட செயல்பாடு சுறுசுறுப்பாகுது.”

“பொதுவா டிரைனிங்னாலே குழந்தைகளுக்கு அலுப்பு ஏற்படுது. நாள் முழுக்க ஸ்கூலில் படிச்சிட்டு வந்து, வீட்டுலேயும் இந்த டிரைனிங்கெல்லாம் எடுக்கணும்னா…”

“ச்சே.. ச்சே.. எங்க பயிற்சி, விளையாட்டு மாதிரி ஜாலியா டிசைன் செய்யப்பட்டது. எந்தக் குழந்தைக்குதான் விளையாட பிடிக்காது. இந்தப் பயிற்சியிலே அவங்க மூளையை ரொம்ப கசக்கி டென்ஷன் ஆகவேண்டியது இல்லை. வியர்க்க விறுவிறுக்க எக்சர்சைஸ் பண்ண வேண்டியதில்லை. எல்லாமே விரும்பி செய்யக்கூடிய வகையில்தான் அமைஞ்சிருக்கு.ரெண்டு நாள் பயிற்சியை குழந்தைகளுக்கு கொடுத்துட்டு, பெற்றோரிடம் இது தொடர்பான விளக்கங்களையும், பதிவு செய்யப்பட்ட சிடியையும் கொடுத்துடுவோம். அதுக்கப்புறம் தினமும் பெற்றோர் கண்காணிப்போடு அரை மணி நேரம் செஞ்சா போதும். நைட்டு குழந்தை தூங்குறதுக்கு முன்னாடி இந்த மியூசிக்கை கேட்டா போதும்.

இந்த பயிற்சி பெற்ற குழந்தைகள் முன்னைக் காட்டிலும் ரொம்பவே இம்ப்ரூவ் ஆகியிருக்கிறதா பேரன்ட்ஸ் சொல்லுறாங்க. ‘இப்போ என் பொண்ணு சுயமா சிந்திக்கிறா, எதுக்கெடுத்தாலும் என்னை கூப்பிடறதில்லை’ன்னு ஒரு அம்மா சொல்லுறப்போ எங்களுக்கும் அவ்வளவு சந்தோஷமா இருக்கு. குழந்தைகளுக்கு எதிர்மறையான எண்ணங்கள் குறையுது. முக்கியமா கம்ப்யூட்டர், செல்போனில் கேம்ஸ் ஆடுறதை தவிர்க்கிறாங்கன்னுலாம் எங்களுக்கு ஃபீட்பேக் வருது.நாங்க அஞ்சு முதல் பதினஞ்சு வயசு வரைக்கும் இருக்கிற குழந்தைகளுக்குதான் இந்த பயிற்சி அளிக்கிறோம். இந்த பத்து வருஷம்தான் ஒரு குழந்தையோட கேரியரில் மிக முக்கியமான காலக்கட்டம். இப்போதான் மூளை புதுசா
கத்துக்குறதுக்காக பசியோட காத்திருக்கும். இந்த நேரத்துலே மூளையோட அடித்தளத்தை நாம பலமா அமைச்சிட்டோம்னா, அதுக்கப்புறம் குழந்தைகளோட எதிர்காலத்தை பத்தி கவலைப்பட வேண்டியதே இல்லை.”

“உங்க ‘டேலண்ட்ஸ்’ மையத்தோட அடுத்த பிளான்?”

“இப்போதைக்கு சென்னையில் மட்டும்தான் எங்களால் இந்த சேவையை செய்ய முடியுது. தமிழகத்தோட மற்ற ஊர்களிலும் செய்யணும்னு ஆசைப்படுறோம். பள்ளிகளிலும் mid brain activation பற்றிய விழிப்புணர்ச்சியை ஆசிரியர்களுக்கு எடுத்துச் சொல்லணும். ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ன்னு பாட்டுகூட இருக்கே? பெற்றோரும், ஆசிரியரும்தான் அந்த குழந்தையை செதுக்கற சிற்பிகள். அவங்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதுதான் எங்களோட பிரதானமான பணி.”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக மாற, உறவுக்கு வழிவகுக்க!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அழுக்கு துணி அணிந்து ஹோட்டலுக்கு சென்ற விவசாயி!! (வீடியோ)