பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?! (மருத்துவம்)
கட்டுரையில் நுழையும் முன் பெற்றோருக்கு சில கேள்விகள்…உங்கள் குழந்தை விரும்பும் பெற்றோரா நீங்கள்?! உங்களது பதில் ‘ஆம்’ எனில் குழந்தையின் எந்த வயது வரை நீங்கள் பிடித்தமானவராக இருந்தீர்கள்? உங்கள் குழந்தைக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை? உங்கள் குழந்தைக்குப் பிடித்தமானவராக மாற நீங்கள் முயற்சித்ததுண்டா?
மேலே சொன்ன கேள்விகளுக்கு உண்மையான பதிலை யோசித்துப் பாருங்கள். அப்படி மனதோடு பேசி பதில் சொன்னால்தான் நீங்கள் பொறுப்பான பெற்றோராக உங்கள் குழந்தைகளுடன் பயணிக்க முடியும். இதற்கு முதலில் உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மனநல ஆலோசகர் தேவிப்பிரியா.
ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரிடம் நிறைய எதிர்பார்க்கிறது. எதிர்பார்க்கிற எல்லாவற்றையும் அப்படியே செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்கள் விரும்பும் வகையில் பெற்றோரால் நடந்துகொள்ள முடியும். இன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளைத் தனிமைப்படுத்தி மிகச் சிறு வயதிலேயே அவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது.
குழந்தைகளைக் கண்டுகொள்ளுங்கள் பெற்றோர் எப்போதும் தங்களது வேலைகளையே பெரிதாக நினைக்கின்றனர். வேலை செய்து களைத்து விட்டதால் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாது என்று நினைக்கின்றனர். குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவதால் தனது நேரம் வீணாவதாக பெற்றோர் எண்ணுகின்றனர்.
குழந்தைகள் மட்டும் சும்மாவா இருக்கிறார்கள்? காலை முதல் மாலை வரை பள்ளி, மாலையில் டியூஷன் முடித்து இரவு தூங்குவதற்கு முன்பாவது பெற்றோர் நம்மிடம் பேச மாட்டார்களா என்று நினைக்கும்போது பெற்றோரோ மொபைலில் சாட்டிங் செய்வதிலேயே பிசியாக உள்ளனர். இது குழந்தைகள் தனிமையாக உணர்வதற்குக் காரணமாகிறது.
குழந்தைகளின் தனிமையைப் போக்கவும், தங்களின் நேரம் செலவழிக்க முடியாமையை சமாளிக்கவும் குழந்தைகளுக்கு மொபைல் அல்லது டேப்(Tab) வாங்கித் தந்துவிடுகின்றனர். இது குழந்தைகளை சிறு வயதிலேயே மொபைல் அடிமைகளாக மாற்றுகிறது. இது சுயமாகச் சிந்திக்கும் திறனை பாதிப்பதுடன் குழந்தையை ஓரிடத்தில் கட்டிப் போடுவதற்குச் சமமானது.
எவ்வளவு பிசியான பெற்றோராக இருந்தாலும் குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தில் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அன்று காலை முதல் என்ன நடந்தது என்ற கதையாகக் கூட இருக்கலாம். அப்போதுதான் அவர்களின் நட்பு வட்டத்துக்குள் உங்களால் நுழைய முடியும்.
பெற்றோரிடம் தனக்கென்று ஓர் இடம் உண்டு என்பதை குழந்தைகள் நம்புகின்றனர். இந்த உரையாடல் குழந்தைகளின் அன்றைய மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அவர்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது, அவர்களின் நண்பர்கள் யார் என்பதையும் தெரிந்து கொள்ள உதவுகிறது.
டிரெண்டில் இருங்கள்
இன்றைய பெற்றோர் தங்களது குழந்தைப் பருவத்தில் வளர்ந்தது போலவே தன் குழந்தையும் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். இது சாத்தியமற்ற ஒன்று. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைய குழந்தைகள் மத்தியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கானதை ஆன்லைனில் தேடுகின்றனர், விலை, ஒப்பீடு என பலதையும் அவர்களே செய்கின்றனர். ஒரு சில விஷயங்களில் நமக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். ‘உனக்கெல்லாம் என்ன தெரியும்?’ என்று பார்வையில் அணுகாதீர்கள்.
அதேபோல கண்டிப்பதும், தண்டிப்பதும் இன்றைய குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தும். அவர்கள் பார்வையில் அணுகுங்கள். குழந்தைகள் விரும்பும் விஷயங்களை ஆன்லைனில் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். இவையும் குழந்தைகளுக்குப் பிடித்தமானவராக உங்களை மாற்றும்.
பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்
அவர்களுக்காக ஒரு பொருளைத் தேர்வு செய்வதில் இருந்து அவர்களுக்கான உணவு தயாரிப்பு என அனைத்திலும் அவர்களுக்கு நல்லதா? என்பதை அக்கறையுடன் கவனித்துச் செய்யுங்கள். அவர்களது இன்றைய திறமை, எதிர்கால வாய்ப்புகள் என அவர்களது நிலையில் இருந்தே படிப்பு, விளையாட்டு, ஓவியம், பாட்டு என பிடித்ததெல்லாம் கற்றுக் கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
உங்களது கோபம் மற்றும் வெறுப்பை குழந்தைகள் மீது திணிப்பதும் தவறு. பெற்றோருக்கு இடையில் நடக்கும் சண்டைகளுக்காக குழந்தைகளின் விருப்பங்களை உதாசீணம் செய்வது, அவர்களது வளர்ச்சியை பாதிக்கும் வகையில் முடிவெடுப்பதையும் தவிர்த்திடுங்கள். பெற்றோர் இருவரும் இணக்கமான சூழலை இல்லத்தில் கடைபிடிப்பதும் குழந்தைகளை பாதுகாப்பாக உணரச் செய்யும்.
குறைகளை பட்டப்பெயர் ஆக்காதீர்கள்
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவர்களிடம் சில குறைகள் காணப்படலாம். சில வீடுகளில் உள்ள வளர்ப்பு முறையால் குழந்தைகள் காலையில் எழுவது, வெளியிடங்களுக்குக் கிளம்புவது, சொன்னவுடன் ஒரு வேலையைச் செய்வது ஆகியவற்றில் தாமதம் இருக்கலாம். சில குழந்தைகள் துறுதுறுப்பாக இருப்பார்கள், சின்ன விஷயத்துக்கும் குழந்தைகள் கோபப்படலாம். இவற்றின் அடிப்படையில் அவர்களுக்குப் பெயரிட்டு அழைப்பது, தோற்றம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் பட்டப் பெயர் வைத்து அழைப்பது, பலர் முன்னிலையில் அவர்களது குறையை பகிரங்கமாகச் சொல்லி கிண்டல் செய்வதைத் தவிர்க்கவும்.
இதுபோன்ற செயல்கள் குழந்தைகளின் சுயமதிப்பீட்டைக் குறைப்பதுடன் பெற்றோர் மீது வெறுப்பை ஏற்படுத்தும். பெற்றோர் குறைசொல்லிக் கொண்டிருந்தால் நான் அப்படித்தான் என அதன்படியே குழந்தைகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. அவர்களது நடத்தையின் வழியாக இவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களின் நிறைகளையும், திறன்களையும் பலர் முன் சொல்லிப் பாராட்டுங்கள். அவர்கள் தனது பாசிட்டிவ் விஷயத்தில் கவனம் செலுத்துவார்கள்.
நண்பனாக இருக்கப் பழகுங்கள்
குழந்தைகளின் நட்பு வட்டத்தில் பெற்றோர் இடம் பிடிப்பது மிகவும் எளிது. அவர்களது மனநிலையைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். அவர்களது நடத்தையில் மாற்றம் இருந்தாலோ, சோர்வாகக் காணப்பட்டாலோ அவர்களிடம் அன்பாக விசாரித்து நம்பிக்கை ஏற்படுத்துங்கள்.
அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்து மனநிலையை மாற்றுங்கள். சின்னச்சின்ன விஷயங்களைக் கூட அவர்களிடம் பகிர்ந்துகொண்டு அவர்களது கருத்துகளையும் கேளுங்கள். அவர்கள் சின்னத் தவறுகள் செய்யும்போது மன்னித்து திருத்திக் கொள்ள வாய்ப்பளியுங்கள். உங்களுக்கும் அவர்களுக்குமான நெருக்கத்தை அதிகரிக்கும்.
உங்களது எதிர்பார்ப்புக்களைத் திணிக்காதீர்கள்
ஒவ்வொரு பெற்றோருக்கும் சிறு வயதில் ஒரு ஆசை இருந்திருக்கும். காலப் போக்கில் அந்த ஆசைகள் பல்வேறு காரணங்களால் நிறைவேறாமல் போயிருக்கலாம். பல பெற்றோர் தன் கனவுகளை எல்லாம் நிறைவேற்றப் பிறந்த தேவதையாக தனது குழந்தைகளைப் பார்க்கின்றனர். இதனால் தன் குழந்தையை தனக்குப் பிடித்த மாதிரி ஆவதற்காகத் திட்டமிட்டு வளர்ப்பதையும் நாம் பார்க்கிறோம்.
ஆனால், இதற்காகவா இங்கு குழந்தைகள் பிறக்கின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி மனது உண்டு. அவர்களின் விருப்பங்கள் வேறு வேறாக உள்ளது. உங்கள் குழந்தையாக இருந்தாலும் அதன் வாழ்க்கையை அந்தக் குழந்தை வாழ வேண்டும். அவர்களுக்கென்று நோக்கம் உள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.
பெற்றோரின் முதுமைக் காலத்துக்கான காப்பீடாகவும் இங்கு குழந்தைகள் பிறப்பதில்லை. பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், விருதுகள் வாங்கித் தரவும் குழந்தைகள் பிறப்பதில்லை. உங்களுக்குப் பிடித்த மாதிரியே அவர்கள் இருக்க வேண்டியதில்லை. அவர்களுக்கான பாதையை தீர்மானிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தனது பாதையை நம் குழந்தைகள் செதுக்கிக் கொள்ள பெற்றோர் உதவியாக இருக்கலாம். அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை ரசித்து அவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் மீதான உங்களது எதிர்பார்ப்புக்கள் இருந்தால் அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்.
தனித்திறனை ஊக்கப்படுத்துங்கள்
குழந்தைகள் தனக்குள் உள்ள திறமையை வெளிப்படுத்துவதில் ஆர்வமாகவே இருப்பார்கள். மகிழ்ச்சியை அல்லது கோபத்தை அவர்கள் தனக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தின் வழியாகவே வெளிப்படுத்துவார்கள்.
குழந்தைகளுடன் விளையாட வாய்ப்புக் கிடைக்கும்போது தனக்குப் பிடித்தமானதைத் தேர்ந்தெடுத்துச் செய்வார்கள். இவற்றின் வழியாக அவர்களின் விருப்பங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற விருப்பங்களில் அவர்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கலாம்.
அதேபோல அவர்கள் தங்களுக்குப் பிடித்த பாணியில் அவற்றைச் செய்யவும் அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற வாய்ப்புள்ள குழந்தைகள் புதிய விஷயங்களை உருவாக்குவதில் ஆர்வமாக இருப்பார்கள். வெற்றி, தோல்வி என்ற அளவுகோல்களைத் தாண்டி ரசிக்கவும், விளையாட்டுப் போல கொண்டாடவும் வாய்ப்பளிக்கலாம். குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான உறவு அன்பாலானதாக மாறும்!
Average Rating