குழந்தைகளின் தூக்கத்தை கவனியுங்கள்! (மருத்துவம்)
‘எப்போ பார்த்தாலும் தூக்கம்…. எழுப்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது’ என பெற்றோர் புலம்பியது அந்தக் காலம். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குத் தூக்கம் இரண்டாம்பட்சமாகிவிட்டது. மொபைல், லேப்டாப், டி.வி என எந்நேரமும் ஏதோ ஒரு திரையில் ஆழ்ந்துகிடக்கிறார்கள். அதற்காக தூக்கத்தைத் தவிர்க்கிறார்கள்.
நள்ளிரவு வரை விழித்துக் கொண்டிருந்துவிட்டு, சில மணி நேரமே தூங்கி எழும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தூக்கம் என்பது மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. அது குறையும்போது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படும். அதிலும் குழந்தைகளுக்குப் போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான பிரச்னைகளை சந்திப்பார்கள் என்கிறார்கள்
மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு ஏன் தூக்கம் அவசியம்?
தூக்கத்தின்போதுதான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம்.
சரியாகத் தூங்கினால்தான் அவர்களால் கனவுகள் காண முடியும். கனவுகள் அவர்களுடைய கற்பனைகளை விரிக்கும். தூங்கும்போது பகலில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை மூளையானது சேகரித்து வைக்கும்.
அப்போதுதான் குழந்தைகளால் நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆழ்ந்த, போதுமான உறக்கம். பள்ளிக்கூடத்தில் தூங்காமலிருக்கவும், பாடங்களை கவனித்து உள்வாங்கவும் இரவில் போதிய தூக்கம் முக்கியம். போதிய அளவு தூங்கும் குழந்தைகள் பாடங்களை மறப்பதில்லை என்கிறது உளவியல்.
பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு தூக்கம் அதிகம் தேவை. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 11 முதல் 14 மணி நேரத் தூக்கம் அவசியம். 3 முதல் 5 வயதுக் குழந்தைகளுக்கு 11 முதல் 13 மணிநேரத் தூக்கம் தேவை. 6 முதல் 13 வயதுக் குழந்தைகளுக்கு 9 முதல் 11 மணி நேரத் தூக்கம் அவசியம். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு 8 மணிநேரத் தூக்கம் தேவை.
குழந்தையை பகலில் தூங்க அனுமதிக்கலாமா என்பது பல பெற்றோர்களின் சந்தேகம். அது குழந்தை இரவில் தூங்கும் நேரத்தைப் பொறுத்தது. பொதுவாக 5 வயதுக்கு மேல் குழந்தைகளின் பகல் தூக்கம் குறைய ஆரம்பிக்கும். அந்த வயதைத் தாண்டியும் குழந்தைகள் பகலில் தூங்கினால், அவர்களை இரவில் இன்னும் சீக்கிரம் தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதுவே டீன் ஏஜில் உள்ளவர்கள் பகலில் தூங்கினால், அது அவர்கள் இரவில் போதுமான அளவு தூங்கவில்லை என்பதையே குறிக்கும்.
பல பெற்றோர்களுக்கும் குழந்தையைத் தூங்க வைக்கிற நேரம் போராட்டமானதாகவே இருக்கிறது. உண்மையில் அதை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. தினமும் இரவில் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். ஒரே நேரத்தில் தூங்குவதைப் பழக்குங்கள். விடுமுறை நாட்களிலும் இதையே பின்பற்றுங்கள். தூங்குவதற்கு முன் பல் தேய்ப்பது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை ரொட்டீனாகச் செய்யப் பழக்குங்கள்.
குழந்தைகளின் படுக்கையறையில் வெளிச்சமின்றியும், சத்தமின்றியும், குறிப்பாக மொபைல், டி.வி திரைகள் இன்றியும் பார்த்துக் கொள்ளுங்கள்.தூங்குவதில் பிரச்சனை செய்கிற குழந்தைகளுக்கு படுக்கையை தூக்கத்துக்கு மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள். படுக்கையில் இருந்தபடி ஹோம் வொர்க் செய்வது, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்ய அனுமதிக்க வேண்டாம்.
மேலே சொன்ன விஷயத்தை சிறு குழந்தைகளுக்குப் பழக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகள் விஷயத்தில் அது கஷ்டம். உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்கிறார்களா? தூங்கும் நேரம் வந்ததும் வீட்டின் அனைத்து அறைகளின் வெளிச்சத்தையும் குறையுங்கள். டி.வி., லேப்டாப், மொபைல் போன்றவற்றை இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு உபயோகிப்பதை அனுமதிக்காதீர்கள். விடுமுறை நாட்களில் கூடுதலாக, அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதியுங்கள். அதற்கு மேல் வேண்டாம்.
உங்கள் குழந்தையை காலையில் எழுப்பும்போது அதிக சிரமமின்றி எழுந்துகொள்கிறார்களா என கவனியுங்கள். அப்படி எழுந்துகொண்டால் இரவில் நன்றாகத் தூங்கியிருக்கிறார்கள் என அர்த்தம். குழந்தைகள் போதுமான அளவு தூங்காமலிருக்க வெளிப்புறச் சூழல்கள் மட்டுமின்றி, உடல்ரீதியான விஷயங்களும் காரணமாக இருக்கலாம்.
எனவே, தூக்கத்தில் பிரச்னை இருக்கும் பிள்ளைகளின் தூக்கத்தை கவனியுங்கள். குறட்டை விடுகிறார்களா, இரண்டு மூச்சுகளுக்கு இடையில் அதிக இடைவெளி இருக்கிறதா, சுவாசப் பிரச்னைகளைப் பார்க்கிறீர்களா? மருத்துவரை சந்திக்க வேண்டியதன் அவசியம் உணர்த்தும் அறிகுறிகள் இவை.
தூக்கத்தில் நடப்பது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றாலும் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படலாம். இந்தப் பிரச்னைகள் இருந்தால் குழந்தைநல மருத்துவரை அணுகுங்கள். ADHD பாதிப்புள்ள குழந்தைகளுக்கும் தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். பிற அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மருத்துவரை அணுகி உறுதி செய்து கொள்வது பாதுகாப்பானது.
Average Rating