குழந்தைகளின் பார்வைத்திறன் கோளாறுகள்!! (மருத்துவம்)
‘‘குழந்தைகளின் பார்வை பிரச்னைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வருடத்துக்கொரு முறை உங்கள் குழந்தையை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். சிறிய பிரச்னையாக இருந்தாலும் அலட்சியம் வேண்டாம்’’ என்கிறார் விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம். குழந்தைகளின் கண் பராமரிப்பு பற்றி அவர் தரும் ஆலோசனைகள்…
ஒரு காட்சியில் குவிகிற கவனம், ஆழமான பார்வை, இரண்டு கண்களையும் ஒரே நேரத்தில் ஒரு காட்சியில் பதிப்பது போன்ற எல்லா விஷயங்களும் குழந்தையின் 7 வயதுக்குள் முழுமையடைகின்றன. அதனால்தான் குழந்தைக்கு பார்வை தொடர்பாக ஏதேனும் பிரச்னை இருப்பது தெரிந்தால் இந்த வயதுக்குள் கவனிக்கப்படவும், சிகிச்சை அளிக்கப்படவும் வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலுமோ கண்புரை, பிறவி இமைத் தொய்வு, கருவிழி ஒளிர்வில் கோளாறுகள், விழித்திரைக் குறைபாடுகள், ரெட்டினோபிளாஸ்ட்டோமா என்கிற கட்டிகள், கண்புரை மற்றும் விழித்திரை விலகலுக்குப் பிறகான அதிர்ச்சியால் உண்டாகும் பிரச்னைகள் போன்றவற்றால் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம்.
சற்றே வளர்ந்த குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை, மாறுகண், விழித்திரைத் தசை இயக்கக் குறைபாடுகள் போன்றவற்றால் பார்வைத்திறன் பாதிக்கப்படக்கூடும். தெளிவான பார்வையை ஏற்படுத்தித் தருவதன் மூலம் அவர்களது வாழ்க்கைச் சூழலை மேம்படுத்த முடியும்.
ரெட்டினோஸ்கோபி சோதனை அவசியம்ரெட்டினோஸ்கோபி கண்களில் மருந்து விட்டு கண்களை விரியச் செய்து, பிறகு பரிசோதிப்பது. இதில் கீழ்க்கண்ட பிரச்னைகள் சோதிக்கப்படும்.
* கிட்டப்பார்வை
* தூரப்பார்வை
* சிதறல் பார்வை
* இரு கண்களிலும் சமநிலையின்மை உங்கள் குழந்தையிடம் இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கண் மருத்துவரை கலந்தாலோசிப்பது
அவசியம்.
* ஒரு காட்சியைப் பார்ப்பதில் பார்வையைப் பதிக்க இயலாமை.
* மாறு கண்
* பார்வையில் தெளிவற்ற தன்மை இருப்பதாகச் சொன்னால்.
* குழந்தைக்குத் தலைவலி, கண்கள் சிவந்துபோவது, கண்ணீர் வழிவது போன்ற பிரச்னைகள் தொடர்ந்தால்.
* குழந்தை ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண்ணால் பார்ப்பது தெரிந்தால்…
குழந்தைகளுக்கான கண்ணாடியை எப்படித் தேர்ந்தெடுப்பது?
தடிமனான லென்ஸ் உள்ள கண்ணாடியை உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பரிந்துரைக்கிறபோது, கண்ணாடியின் ஃப்ரேம் சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். முழு நேர உபயோகத்துக்கோ, பகுதி நேரத்துக்கோ… கண்ணாடி அணிகிற குழந்தைகள் சிறிய அளவிலான கிண்டல், கேலியைச் சந்திக்கவே செய்கிறார்கள். குறிப்பாக, முதல் முறை கண்ணாடி அணிகிற குழந்தைகளுக்கு இது மிகப் பெரிய தர்மசங்கடத்தைத் தரும். அதைத் தவிர்க்க அவர்களுக்குப் பிடித்த மாதிரியான ஃப்ரேம்களைத் தேர்ந்தெடுக்கச் செய்யலாம்.
பிளாஸ்டிக் ஃப்ரேம் பொருத்திய கண்ணாடிகளே குழந்தைகள் கையாள ஏற்றவை. உடையாது, வளையாது. எடைகுறைவாக இருக்கும். இப்போது எடை குறைவான உலோக ஃப்ரேம்கள்கூட வருகின்றன. உங்கள் குழந்தைக்கு அலர்ஜி ஏதும் இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு அவற்றை வாங்கித் தரலாம்.
சிறு குழந்தைகளின் மூக்கு முற்றிலும் வளர்ச்சியடைந்திருக்காது என்பதால் கண்ணாடி அணிகிறபோது பிடிமானமின்றி அது வழுக்கி விழக்கூடும். அதைத் தவிர்க்க Adjustable nose pad வைத்த ஃப்ரேமைத் தேர்ந்தெடுக்கவும்.
குழந்தைகளுக்கு கண்ணாடிகளை முறையாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தெரியாது. எனவே லென்ஸ் பகுதியானது சரியான இடத்தில் உட்காரும்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கீழே இறங்கிய கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்யாமல், மேலே உள்ள பகுதி வழியே பார்க்கப்பழகுவார்கள் பிள்ளைகள்.
விளையாடும்போது கண்ணாடி கீழே விழாமல் இருக்க, Cable temples அமைப்புள்ள மாடல்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றிலுள்ள பிடிமானம் கண்ணாடி கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும். சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கு கண்ணாடி ஃப்ரேமில் கயிறு இணைத்துக் கொடுக்கலாம்.
பாலி கார்பனேட் அல்லது Trivex material lenses, பிளாஸ்டிக்கை விடவும் எடை குறைவாக இருக்கும். இவை UV பாதுகாப்புடனும், கீறல் விழாத தன்மையுடனும் வருகின்றன.
எப்படி உதவலாம்?
குழந்தைகளை அவர்களின் கண்ணாடியைத் தாமாகவே எடுத்து அணியப் பழக்குங்கள். அது கண்ணாடி அவர்களின் உடைமை என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும்.கண்ணாடி அணிய வேண்டும் என மருத்துவர் எழுதிக் கொடுத்த உடனேயே அதைப் பற்றி உங்கள் குழந்தையிடம் சொல்லித் தயார்படுத்துங்கள். கண்ணாடி அணிவதால் ஏற்படப் போகிற பாசிட்டிவான விஷயங்களைச் சொல்லி, அதைப் பத்திரமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் சொல்லிக் கொடுங்கள்.
எப்போதும் கண்ணாடி அணியச் சொல்லப்பட்டிருந்தால், தினமும் காலையில் எழுந்ததும் அதை அணிவதைப் பழக்குங்கள். குழந்தைக்கு அந்தப் பழக்கம் முழுமையாக வரும்போதுதான், கண்ணாடி அணிவதை ஒரு சுமையாகப் பார்க்கிற மனநிலை மாறும்.வேறு யாரும் நினைவுப்படுத்தாமல் குழந்தை தானாக தன் கண்ணாடியை எடுத்து அணிகிற போது பாராட்டுங்கள். அந்த ஊக்கத்தில் குழந்தை கண்ணாடி அணிவதை மறக்காமல் இருக்கும்.
கண்ணாடி அணிவதென்பது அடுத்தவரின் கிண்டல், கேலிக்குள்ளான விஷயமல்ல என்பதையும் அப்படி யாரேனும் கிண்டல் செய்தால் அதைப் பொருட்படுத்தக் கூடாது என்கிற மனப்பக்குவத்தையும் ஏற்படுத்த வேண்டும்.நீங்கள் கண்ணாடி அணிகிற பழக்கம் உள்ளவர் என்றால், உங்கள் குழந்தையின் முன்னால் கண்ணாடி அணிவதைத் தவிர்க்காதீர்கள்.
கண்ணாடியுடன் உங்களைப் பார்க்கும்போது குழந்தைக்கும் அதை அணிகிற ஆர்வம் வரும். தூங்கும் நேரம், குளிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கண்ணாடி அணிந்திருக்க வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைக்குப் புரிய வையுங்கள்.
தன்னுடைய கண்ணாடியை தானே சுத்தப்படுத்தவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும் பழக்குங்கள்.ஒரு புதிய விஷயத்துக்குப் பழகுவதற்கு உங்கள் குழந்தைக்கு சற்று அவகாசம் தேவைப்படும். எனவே அதுவரை பொறுமையுடன் உங்கள் குழந்தைக்கு உதவுங்கள்!
Average Rating