கதை நல்லது…!! (மருத்துவம்)
இரவில் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக குட்டிக்கதைகள் சொல்லும் பழக்கம் முன்பு அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றி வந்த இந்த பழக்கம் உண்மையில் உளவியல்ரீதியாக பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் பலன் தரக் கூடியது. எனவே, பெற்றோர்கள் இந்த நடைமுறையைக் கைவிடக் கூடாது என்கிறார்கள் உளவியலாளர்கள்.
‘உங்கள் குழந்தைக்கு சரியான ஆகாரம் கொடுக்கவில்லை என்றால், அதன் விளைவு உடனே தெரிந்துவிடும். அதே குழந்தைக்கு சுத்தமான காற்று, சுகாதாரமான இடம் கிடைக்கவில்லையென்றாலும், உடனே அதன் விளைவை நோயாக உடலில் வெளிப்படுவதை பார்க்க முடியும். ஆனால், அந்தக் குழந்தைக்கு அன்பைக் கொடுக்கவில்லை என்றாலோ, அதன் சேதம் பல ஆண்டுகளுக்கு வெளியே தெரியாமல் இருந்தாலும், நிரந்தரமான விளைவை ஏற்படுத்தக்கூடும்’ என்று எச்சரிக்கிறார் குழந்தைகளுக்கான மிகப்பெரிய இலக்கிய விருதான 2005-ம் வருடத்திற்கான Asrid Lindgren Memorial Award – ஐ வாங்கிய பிலிப் புல்மன்.
இவர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ‘என் குழந்தைக்கு என்ன? நன்றாகத்தானே இருக்கிறான்’ எப்போதும் போல, சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டுதான் இருக்கிறான் என்று நினைக்கலாம். ஆனால், ஒரு குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஓவியம், இசை, நடனம் போன்ற கலைகளும், கற்பனைத் திறன் மிக்க கதைகளும் முக்கியம். கலையோ, கதையோ கற்பிக்கப்படாத குழந்தையின் மனதில் ஏற்படும் காயம் பல ஆண்டுகளுக்கு வெளியே தெரியாவிட்டாலும் அது நிரந்தரமானது’ என்ற உண்மையைக் கண்டறிந்தார்.
இதைப்பற்றி அவர் மேலும் விவரிக்கும்போது, ‘எந்த ஒரு கலையையும் கற்காதவர்களாகவோ அல்லது படிப்பைத்தவிர எந்த புத்தகத்தையும் படிக்காதவர்களாகவோ இருந்தாலும் கூட சிலர் மகிழ்ச்சியாகவும், மதிப்புமிக்க வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், என்றாவது ஒரு நாள் ஒரு நல்ல இசையை கேட்கும் சந்தர்ப்பத்திலோ, ஒரு புத்தகத்தை படிக்க நேரும்போதும் அல்லது சுவற்றில் வரையப்பட்ட சித்திரத்தை பார்க்கும்போதும் தங்கள் வாழ்வின் இருண்ட பக்கத்தைப் பார்த்தது போல அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். சிலருக்கு அந்த அதிர்ச்சியால் மயக்கம் ஏற்படுகிறது. அப்போதுதான் அவர்களுக்குள் இருக்கும் மனப்பதற்றம் வெளியே தெரிகிறது.
இந்த கலைப்பசி பல குழந்தைகளிடத்தில் இருக்கிறது. மற்ற விஷயங்கள் அந்த குழந்தையிடத்தில் பசியை தணிப்பதில்லை. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பல குழந்தைகள் தங்கள் ஆத்மாவுக்கு உணவளிக்கும் கலைக்காக பட்டினி கிடக்கின்றனர்’ என்கிறார். எப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் உணவு, கல்வி, தங்குமிடம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை கலாச்சாரத்தின் அனுபவத்திற்கும் உரிமை உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் மதிப்பெண் குவிக்கும் எந்திரமாக உங்கள் குழந்தைகளை பார்க்காதீர்கள்.
பெற்றோரின் பரபரப்பான நாளின் முடிவில், குழந்தைகளின் படுக்கையறை கதைக்கான நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். அவர்கள் சொல்லும் கதைகளையும் காது கொடுத்து கேட்டால் அவர்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். அதை உணராமல், கதை சொல்லவெல்லாம் எனக்கு ஏது நேரம்? என்று அலட்சியம் காட்டினால் என்றாவது ஒரு நாள் அவர்களின் மனக்குமுறல் நிச்சயம் வெடிக்கும். அதன் விளைவு அதிபயங்கரமாக இருந்தாலோ அன்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். அன்று உங்களின் மெத்தனத்திற்காக வருத்தப்பட்டு பயனில்லை’ என்று எச்சரிக்கிறார்கள் குழந்தை மனநல நிபுணர்கள். ஆம்… கதை சொல்வது என்பது கதை சொல்லல் மட்டுமே அல்ல. அது குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே இருக்கும் சுவர்களைத் தகர்க்கும் நேரமும் கூட!
Average Rating