அழகு… குட்டி… செல்லம்! (மருத்துவம்)
பச்சிளங் குழந்தை என்பது பசுந்தளிரைப் போல… பாதுகாப்பும் அரவணைப்பும் அவ்வளவு அவசியம். என்னதான் மனதளவில் முதிர்ச்சி அடைந்தவராக இருந்தாலுமே கூட முதன்முதலாக ஒரு புத்தம் புதிய உயிரை கையாள்வது என்பது அத்தனை சுலபமான காரியமில்லை.
அது இளம் பெற்றோர்களை கொஞ்சம் பதற்றமடையவே செய்யும் விஷயம். குழந்தை எதற்காக இப்படி அழுகிறது? எப்படி அதற்கு பால் புகட்டுவது? ஏன் இவ்வளவு நேரம் தூங்குகிறது?
இப்படி பல கேள்விகளும் குழப்பங்களும் பயமும் பெற்றோருக்கு ஏற்படுவது சகஜம். அந்த சமயத்தில் வயதில் மூத்தவர்கள் தம்முடன் இருக்க வேண்டும் என்று அக்குழந்தையின் பெற்றோர் எதிர்பார்ப்பதும் அதனால்தான்.
பச்சிளங் குழந்தை பராமரிப்பு கொஞ்சம் கடினமானதாக தோன்றினாலும் சில விஷயங்களை முறையாக பின்பற்றினால் இந்த விஷயத்தில் நீங்கள் கை தேர்ந்தவர் ஆகி விடுவீர்கள். அதற்காகவே நிபுணர்கள் வழங்கியிருக்கும் கருத்துகள் இங்கே தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது…
தாய்ப்பால்
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் தாய்ப்பால் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதில் நிரம்பி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயம். அதனால் தாய் தன் சீம்பாலை குழந்தைக்கு கட்டாயம் புகட்ட வேண்டும். ஒருவேளை குழந்தை பால் குடிக்க தடுமாறினால் அந்த பாலை தாயே வெளியேற்றி குழந்தைக்கு தேக்கரண்டியிலோ, பாலாடையிலோ புகட்டலாம்.
அடுத்து குழந்தை பிறந்தது முதல் குறைந்தது ஒரு வருடம் முதல் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் சில மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். பிறகுதான் தாய்ப்பாலுடன் தண்ணீர், பசும்பால், பால் பொருட்கள் போன்ற மற்ற உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டும்.
சில குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருக்கும். அப்போதும் இதே போல்தான் குழந்தைக்கு தேவையான உணவை மருத்துவரின் ஆலோசனையின் படி தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு சோயா பாலும் அலர்ஜி ஏற்படுத்தும். அலர்ஜி ஏற்படுத்தாத பச்சிளங் குழந்தைக்கான பால் பொருட்கள் கிடைக்கின்றன. அதை மருத்துவரின் பரிந்துரைப்படி பார்த்து வாங்க வேண்டும்.
குளியல்
குழந்தையை அதிக சூடான நீரிலோ அல்லது மிகவும் குளிர்ந்த நீரிலோ குளிப்பாட்டக் கூடாது. வெதுவெதுப்பான நீரில் தான் குளிப்பாட்ட வேண்டும். குழந்தைகளுக்கென உள்ள மிருதுவான சோப்பினால் குளிப்பாட்ட வேண்டும். பாத் டப் பயன்படுத்தலாம். காதில், மூக்கில் ஊதுவது எல்லாம் கூடாது.
குழந்தையை கையாளுதல்
பச்சிளம் குழந்தையைத் தூக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். கழுத்திற்கு சப்போர்ட் கொடுத்து தூக்க வேண்டும்.
முகப் பராமரிப்பு
குழந்தையின் முகத்தில் சிவப்பு புள்ளிகள் வருவது சகஜம்தான். பயப்படத் தேவையில்லை. குழந்தையின் முகத்தை கழுவ மிருதுவான சோப்பை பயன்படுத்த வேண்டும்.
கண்கள் பராமரிப்பு
கண்ணீர் குழாய் அடைப்பினால் கண்களின் ஓரம் மஞ்சள் நிறத்தில் கழிவு வெளியேறும். பல மாதங்கள் வரை கூட இந்த நிலை இருக்கும். கண்கள் அல்லது இமைகளின் ஓரம் ஏற்படும் இந்த கழிவுகளை வெதுவெதுப்பான நீரில் நனைத்த பஞ்சினால் துடைத்து விட வேண்டும்.
மண்டை ஓடு
பிறந்த குழந்தையின் மண்டையோட்டில் (உச்சந்தலையில்) செதில் செதிலாக பக்கு வருவதுண்டு. இதனை கிராடில் கேப் என்பார்கள். இதற்கு வாரம் மூன்று முறை மட்டும் மிருதுவான ஷாம்பூவை பயன்படுத்தி குழந்தைக்கு தலைக்கு ஊற்ற வேண்டும். அதன் பிறகு மிருதுவான குழந்தைக்கென உள்ள சீப்பு அல்லது பல் துலக்கும் பிரஷ்களை கொண்டு அந்த செதில்களை நீக்க வேண்டும்.
நகங்கள்
பச்சிளம் குழந்தைக்கு நகங்கள் வேகமாக வளரும். விளையாடும்போதோ அழும்போதோ நகங்களால் அதன் உடலில் கீறல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் குழந்தையின் நகங்களை குழந்தைக்கென உள்ள நகவெட்டி கொண்டு வெட்ட வேண்டும். குழந்தை குளித்த உடன் வெட்டினால் ஈரத்தினால் நகங்களை எளிதாக வெட்ட முடியும் அல்லது குழந்தை தூங்கும்போது நகம் வெட்டலாம்.
தோல்
சில குழந்தைகளுக்கு தோல் சிவந்து போதல் போன்று தோல் அலர்ஜி ஏற்படலாம். அப்படியான நேரங்களில் குழந்தையை மிருதுவான வாசனை நீக்கப் பெற்ற சோப்பினை கொண்டு வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். ஆனால் 10 நிமிடம் வரை குளிப்பாட்டினால் போதும். குளித்து முடித்து துடைத்த பின் குழந்தைக்கு ஹைப்போ அலர்ஜி க்ரீம் தடவ வேண்டும். பின்னர் சிறிது நிமிடங்கள் கழித்து பருத்தி ஆடைகளை அணிவிக்க வேண்டும்.
பின் பக்கம்
குழந்தையின் தோல் ரொம்ப சென்சிடிவ்வானது. தொடர்ந்து ஒரு இடத்தில் ஈரம் இருந்து கொண்டே இருந்தால் அந்த இடத்தில் தோல் கொஞ்சம் பாதிக்கப்படலாம். தொடர்ந்து டயாபர் பயன்படுத்தும் போது டயாபரினால் ராஸஸ் ஏற்படலாம். அதனால் குழந்தைக்கு அடிக்கடி டயாபரை மாற்ற வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து முறையாவது டயாபர் மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை டயாபர் மாற்றும் பொழுதும் குழந்தையின் பின்பக்கத்தினை நீரினால் கழுவி பின் துடைத்து அந்த இடம் உலர்ந்த பின் வேறு டயாபர் போட்டுவிட வேண்டும்.
தொப்புள் கொடி
குழந்தையின் தொப்புள் கொடி பிறந்து சில நாட்களுக்குப் பிறகு காய்ந்து சுருங்கி உதிர்ந்து விழும். அதுவரை அதனை தூய்மையாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். டயாபர் போன்றவற்றை அதன் மீது போடக் கூடாது.
ஸ்பான்ஞ் கொண்டு அந்த இடத்தை துடைத்து விட வேண்டும். சில குழந்தைகள் எதற்கு அழுகிறது என்றே தெரியாது. பிறகு நன்கு சோதித்துப் பார்த்தால் தான் தொப்புள் கொடி உலராமல் அந்த இடம் புண்ணாகி இருக்கும். அதற்கு மருத்துவரிடம் சென்று அந்த இடத்திற்கு மருந்து போட்டுவிடும் போது தொப்புள் கொடி உலர்ந்து உதிர்ந்துவிடும்.
பிறப்புறுப்பு
ஆண் குழந்தையின் பிறப்புறுப்பு சில நேரம் வீங்கி விடும். எறும்பு கடித்திருக்கிறதா என்று பாருங்கள். சில குழந்தைகளுக்கு அந்த இடம் புண்ணாகி விடும். அப்படி அந்த இடம் புண்ணாகாமல் இருக்க வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் அந்த இடத்தை கழுவி துடைத்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். டயாபரில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க அந்த இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி விடலாம்.
கால்கள்
சில பச்சிளங் குழந்தையின் கால்கள் கொஞ்சம் லேசாக உட்பக்கமாக வளைந்து இருக்கும். கருப்பையில் இருந்ததனால் அப்படி இருக்கும். பயப்பட தேவையில்லை. ஆறு வாரங்களில் சரியாகி விடும். (Club Foot வேறு. அதற்கு சிகிச்சைகள் தேவைப்படும்.) அதேபோல் பச்சிளங் குழந்தையின் பாத விரல்கள் ஒன்றன் மீது ஒன்றாக இருக்கும். கால் விரல்களில் நகங்கள் இருப்பதே தெரியாது. ஆனால் நகங்கள் இருக்கும். அந்த விரல்கள் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். அதற்காகவும் வருந்தத் தேவையில்லை.
நோய் நேர பராமரிப்பு
குழந்தைக்கு காய்ச்சல் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம். இதுமட்டுமின்றி குழந்தை இயல்பாக இல்லை என்று தோன்றும் பொழுது கட்டாயம் மருத்துவரிடம் குழந்தையை எடுத்துச் சென்று காண்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகள் பால் மட்டும் அருந்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.
நிறைய முறை கொஞ்சம் தண்ணீராக (Semi Solid) மலம் கழிப்பார்கள். சில நேரம் அது இளம் பச்சை நிறத்தில் கூட இருக்கும். அது பற்றி பிரச்னையில்லை. ஆனால், குழந்தைக்கு நிற்காமல் வாந்தி மற்றும் பேதியாகும்போது மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டியது மிக அவசியம். மேலும், பால் குடிக்க மறுக்கிறது. தூங்காமல் கதறி அழுது கொண்டே இருக்கிறது.
வயிற்று உப்புசமாக இருக்கிறது. தோலில் தடித்துப்போதல், அதிகம் சிவந்து போதல், வீக்கம் போன்ற தோல் அலர்ஜி.தொப்புள் கொடி சிவந்து புண்ணாகி இருத்தல் அல்லது வீங்கி இருத்தல். இயல்பான நேரத்தை விடவும் அதிகமாக எழுந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டே இருக்கிறது. குழந்தை ஆக்டிவ்வாக இல்லை…
இதுபோன்ற சமயங்களில் மருத்துவரின் உதவியை நாடலாம். ஒரு உயிரை வளர்ப்பது என்பது அத்தனை சுலபமா என்ன? ஆனால், இப்படி சில விஷயங்களை அழகாக பின்பற்றும் போது தாய்மைப் பருவம் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக மாறிவிடும். பூரிப்பு
நிறைந்ததாக இருக்கும்!
Average Rating