இந்தியாவை சமாளிப்பாரா கோத்தா? (கட்டுரை)
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியைத் தொடர்ந்து, எழுப்பப்படுகின்ற முக்கியமான கேள்வியாக இருப்பது, எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமையப் போகிறது என்பது தான்.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்திய ஊடகங்கள், சீன சார்பு கோத்தாபய ராஜபக் ஷ முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாகவே செய்திகளை வெளியிட்டிருந்தன.
அவர், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும், கோத்தாபய ராஜபக் ஷவை சீன சார்பாளராகவே அந்த ஊடகங்கள் அடையாளப்படுத்தின.
மஹிந்த ராஜபக் ஷவைப் பிரதமராக நியமித்த போதும், சீன சார்பாளரான தனது, அண்ணனை பிரதமராக நியமித்திருக்கிறார் என்றே வர்ணித்தன.
இதன் மூலம், கொழும்பின் தற்போதைய ஆட்சியாளர்கள் பற்றி இந்தியாவில் சீன சார்பு விம்பம் ஒன்றே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்க இந்தியப் புலனாய்வுப் பிரிவு முக்கிய பங்காற்றியது என்ற குற்றச்சாட்டுகளை ராஜபக் ஷவினர் சுமத்திய பின்னர், அவர்களுக்கும் புதுடெல்லிக்கும் இடையில் உறவுகள் நல்ல நிலையில் இருக்கவில்லை.
எனினும், அண்மைக்காலத்தில் மஹிந்த ராஜபக் ஷ புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு உறவுகளை சீர்படுத்த முயன்றிருந்தார்.
ஆனாலும், ஜனாதிபதி .வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், கோத்தாபய ராஜபக் ஷ புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பிய போதும், அதற்குச் சாதகமான பதில், புதுடெல்லியில் இருந்து கிடைத்திருக்கவில்லை.
எனினும், இந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து இந்தியா அதிகம் கரிசனை கொண்டிருந்தது. உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது, தேர்தல் தொடர்பாக எந்தக் கருத்தையும் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.
நடுநிலையில் இருப்பது போன்று இந்தியா காட்டிக் கொண்டாலும், ”கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெறுவதை இந்தியா விரும்பவில்லை என்றும், அவர் வெற்றி பெற்றதும் உள்ளுக்குள் வருந்தியபடி தான் வாழ்த்துக் கூறியது” என்றும் பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று எழுதியிருந்தது.
இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தெளிவான வாய்ப்புகளை இந்தியா கணித்திருந்தது. எனவே, யார் வெற்றி பெற்றாலும் அவருடன் இணைந்து பயணிப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக் கொள்வதில் தான் இந்தியா கவனம் செலுத்தியது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கை விடயத்தில் சீனாவின் அதிக பட்ச தலையீடுகளை எதிர்க்கிறது. அதனால் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதில் கவலை கொள்கிறது.
இந்தியாவின் இந்தக் கவலைகளையும் மீறி சில சம்பவங்கள் நடந்து விடுவதையும் புறக்கணித்து விட முடியாது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சீன கடற்படையின் ஆழ்கடல் ஆய்வுக்கப்பலான, Zhu Ke Zhen 150 கடற்படையினருடன் கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருந்தது.
கோத்தாபய ராஜபக் ஷ நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட பின்னர், கடந்த 19ஆம் திகதி தான் அந்தக் கப்பல் கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
பல மாதங்களாக சீன கடற்படைக் கப்பல்கள் கொழும்பு வருவது குறைந்து போயிருந்த போதும், தேர்தல் காலத்தில் சீன கடற்படைக் கப்பல் ஒன்று கொழும்பில் தரித்து நின்றது சாதாரணமான விடயமல்ல.
இது பாரதூரமான விடயமாக எடுத்துக் கொள்ளப்படாவிடினும், அலட்சியம் செய்யப்படக் கூடிய ஒன்றாக இருக்கவில்லை.
இதுவே, ஒரு நாசகாரிக் கப்பலாகவோ, நீர்மூழ்கிக் கப்பலாகவோ இருந்திருந்தால், இந்தியாவின் பிரதிபலிப்பு வேறு விதமானதாகவே இருந்திருக்கும். இதுபோன்ற நிகழ்வுகளை இந்தியா விரும்பவில்லை.
சீன கடற்படையின் கப்பல்களுக்காக இலங்கை தனது தளங்களை திறந்து விடுவதையோ, இலங்கை கடற்பரப்பை சீன கடற்கலங்கள் பயன்படுத்திக் கொள்வதையோ இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. ஆனால், ராஜபக் ஷவினர், சீனாவை தங்களின் நெருங்கிய பொருளாதாரப் பங்காளியாகப் பார்க்கின்றனர். இந்தியாவின் நலன்களைப் புறக்கணிக்காவிடினும், சீனாவின் உறவுகளையும் அவர்களால் ஒதுக்கி வைக்க முடியாதுள்ளது.
கோத்தாபபய ராஜபக் ஷவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் “இந்த வெற்றி, இருதரப்பு உறவுகளை புதிய யுகத்துக்கு கொண்டு செல்ல உதவும்” என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்க முன்னர் அவரை இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சந்தித்ததைப் போலவே, மஹிந்த ராஜபக் ஷ பிரதமராகப் பதவியேற்க முன்னதாக, சீனத் தூதுவர் செங் ஷியுவான் அவரைச் சந்தித்திருந்தார்.
இவ்வாறாக இந்தியாவுக்கு இணையான அரசியல் -இராஜதந்திர நகர்வுகளை சீனாவும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ள இந்தச் சூழல் இந்தியாவுக்கு முற்றிலும் சாதகமான ஒரு களம் என்று கூறிவிட முடியாது.
ஆனால், இந்தியா இதனை மிகவும் கவனமாகவும், அதேவேளை எச்சரிக்கையுடனும் கையாள முனைவதாகவே தோன்றுகிறது.
கோத்தாபய ராஜபக் ஷ தமது கடமைகளைப் பொறுப்பேற்ற 6 மணித்தியாலங்களுக்குள், எந்தவிதமான பகிரங்க முன்னறிவிப்புகளும் இன்றி- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கொழும்பு வந்திறங்கியது சாதாரணமான ஒரு விடயமல்ல.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பு வந்தார் என்பது அவ்வளவாக நம்பக் கூடிய கதையாக இல்லை.
இதற்கு முன்னதாக இந்தியா இவ்வாறான நகர்வுகளை முன்னெடுத்ததில்லை.
அண்மையில் மாலைதீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, புதிய ஜனாதிபதியாக இப்ராகிம் சோலி பதவியேற்பு நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். அது மாலைதீவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற பயணம்.
ஆனால், இந்திய வெளிவிவகார அமைச்சரே நேரடியாக கொழும்பு வந்தார் என்பது, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விடயமன்று.
அவர் கொழும்பில் வந்திறங்கிய பின்னர் தான், அதுபற்றிய தகவல்கள் உலகத்துக்கே தெரியவந்தது. அவர் கொழும்பு வந்திருப்பது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த இலங்கை வெளிவிவகார அமைச்சு மறுநாள் மதியம் வரை – அந்தப் பயணம் குறித்து எந்த செய்தியையும் வெளியிடவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேரடியாகச் சென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவைச் சந்தித்து விட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் செய்தியைப் பகிர்ந்திருந்தார்.
அதில், இந்தியப் பிரதமரின் அழைப்பை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக் ஷ ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும், அவர் எதிர்வரும் 29ஆம் திகதி புதுடெல்லி வருவார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பு நடந்து கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் வரை- இலங்கை அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமான எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை.
மறுநாள் நண்பகல் 11.40 மணிக்கு பின்னரே, கோத்தாபய ராஜபக் ஷவின் சமூக வலைத்தளப் பக்கங்களில், படங்களுடன் இந்திய வெளிவிவாகர அமைச்சருடனான சந்திப்பு பற்றிய தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
ஏன் இவ்வளவு தாமதம் என்பது விளங்காத புதிராக உள்ளது.
கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்றதும், இந்திய வெளிவிவகார அமைச்சர் உடனடியாகவே வந்து வாழ்த்தி, புதுடெல்லிக்கு வாருங்கள் என்று விடுத்த அழைப்பு உண்மையில் மதிப்புமிக்கதாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
ஆனால், ராஜபக் ஷவினராலும், அவர்களின் அரசாங்கத்தினாலும் இந்த அழைப்பையும், பயணத்தையும் அவ்வாறு பார்க்க முடிகிறதா என்ற கேள்வி இருக்கிறது.
ஏனென்றால், இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு, புதுடெல்லி பயணம் பற்றிய செய்தியை கோத்தாபய ராஜபக் ஷவோ அவரது அரசாங்கமோ உடனடியாக வெளிப்படுத்தவில்லை. 18 மணி நேரம் கழித்தே அந்தச் செய்தியை பகிரங்கப்படுத்தினார்கள்.
எனவே தான், இது, அழுத்தத்தின் பேரில் – வேறு வழியின்றி தீர்மானிக்கப்பட்ட, வேண்டா வெறுப்பாக முடிவு செய்யப்பட்ட ஒரு பயணமா என்ற சந்தேகங்களை எழுப்புகிறது.
ஏனென்றால், சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் பேரெழுச்சியுடன் பதவிக்கு வந்துள்ள அவர்களுக்கு, இந்தியாவின் தயவு இப்போது அதிகம் தேவைப்படவில்லை.
அவசரப்பட்டு இந்தியா தமது பக்கத்துக்குள் இழுக்க முயற்சிப்பதை அவர்களால் அவ்வளவு ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது.
ஆனாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளவும் முடியாமல், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், திணறுகின்ற ஒரு நிலை தென்படுகிறது.
இந்தியா தனது வெளிவிவகார அமைச்சரை உடனடியாக கொழும்புக்கு அனுப்பியதற்குக் காரணம், சீனாவோ, அல்லது, தனக்கு எதிரான வேறு சக்திகளோ, முதலில் கோத்தாபய ராஜபக் ஷவுடன் பேச்சுக்களை நடத்தி, தமது பக்கம் இழுத்துக் கொள்வதை தடுப்பதற்காக மாத்திரம் அல்ல.
புதுடெல்லிக்கான பயணத்தை மிகவிரைவாக அவர் மேற்கொள்வதற்கு வழியமைப்பது தான்.
வெளிவிவகார செயலரை அனுப்பியிருக்கலாம் அல்லது தூதுவர் மூலம் அழைத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இந்தியா வெளிவிவகார அமைச்சரை அனுப்பியதில் இருந்தே, இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஈடுபாடு அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.
கோத்தாபய ராஜபக் ஷவின் அரசாங்கம் இந்தியாவுக்கு சாதகமானதல்ல என்றே இந்திய ஊடகங்கள் எழுதி வருகின்றன. அவரது சீன, பாகிஸ்தான் சார்பு நிலைகளை அந்த ஊடகங்கள் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுகின்றன.
சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக் ஷவினர் மீண்டும் செல்வதை அனுமதித்து, இந்தியா மீண்டும் தவறிழைக்கக் கூடாது என்று அவை திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அதற்கான உறுதிப்பாட்டை கோத்தாபய ராஜபக் ஷவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு இந்தியா முனைகிறது போலவே தெரிகிறது.
ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தனது ஆசிரியர் தலையங்கத்தில், இரண்டு விவகாரங்களில் இந்தியா தனது தெளிவான எல்லைக் கோட்டை கீறி விட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது,
சீனாவுடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்குமாக இருந்தால், தனது செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டிவரும் என்பதை இலங்கைக்கு புதுடெல்லி தெளிவுபடுத்தி விட வேண்டும்.- இது முதலாவது விடயம்.
தமிழர்களின் கிளர்ச்சி மீண்டும் மூளக் கூடியதாக இலங்கையை ஒரு தனித்துவமான இனத்துவ அரசாக மாற்றி விடக்கூடாது என்று ராஜபக் ஷவினருக்கு சொல்லப்பட வேண்டும். அவ்வாறான நிலைமை தோன்றினால், அது இரு நாடுகளுக்குமே பாதகமாக அமையும் என்றும் கூறியிருக்கிறது ஹிந்துஸ்தான் ரைம்ஸ் – இது இரண்டாவது விடயம்.
பிராந்திய அரசியலில் மாலைதீவில் சீனாவின் ஆதிக்கத்தை அண்மையில் உடைத்த இந்தியா, நேபாளத்தில், கிட்டத்தட்ட தோல்வி கண்டிருக்கிறது, அங்கு சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.
அடுத்து மியான்மரிலும் தேர்தல் நடக்கப் போகிறது. நேபாளத்தைப் போல மியான்மரிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
இந்தியா தன்னைச் சுற்றி சீன ஆதிக்கம் வலுப்பெற்று வரும் ஒரு சூழலில், இலங்கையையும் சீனாவிடம் இழந்து விடக்கூடாது என்பதற்காக அதிகபட்ச முயற்சிகளை முன்னெடுக்கும் என்றே தெரிகிறது.
இந்த நிலையில், சிங்கள பௌத்த பெரும்பான்மையின மக்களால் தெரிவு செய்யப்பட்டவராக இருந்தாலும், இலங்கையை பெரும்பான்மையினருக்கான ஒரு அரசாங்கமாக மாற்றிக் கொள்வதற்கு கோத்தாபய ராஜபக் ஷவுக்கு இந்தியா இடமளிக்காது என்றே தெரிகிறது,
ஏனென்றால், அது இலங்கையிலும், பிராந்திய அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, பூகோள அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று இந்தியா கருதுகிறது.
அதனால் தான், கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், கோத்தாபய ராஜபக் ஷவிடம், தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, கண்ணியமான முறையில் அமைதியாக வாழக் கூடியதாக, அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயல்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அது மாத்திரமன்றி, இனத்துவ அடையாள பாகுபாடு இன்றி அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் இருப்பேன் என்ற உறுதிமொழியையும் அவர் கொடுத்திருக்கிறார்.
இவை, இலங்கை விவகாரத்தில் இந்தியா புதியதொரு வழிமுறையைக் கையாளுவதற்கான அறிகுறியாகவே தென்படுகிறது.
எனவே, விரும்பியோ விரும்பாமலோ கோத்தாபய ராஜபக் ஷவும், இந்தியாவும், எதிர்காலத்தில் தமக்கிடையில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating