சூரியனுக்கு வணக்கம் சொல்வோம்!! (மகளிர் பக்கம்)
யோகா, தியானம் போலவே சூரிய நமஸ்காரத்துக்கும் அபரிமிதமான மருத்துவப் பலன்கள் உள்ளன’ என அறிவியல் உலகம் சான்றிதழ் கொடுத்த பின்னர், சூரிய நமஸ்காரம் உலகமெங்கும் லேட்டஸ்ட் டிரெண்டாகி வருகிறது. யோகா ஆசிரியரான ராமகிருஷ்ணனிடம் இதுபற்றி கேட்டோம்…
‘‘சூரியனை வணங்கி செய்யும் பயிற்சி என்பதால் இதற்கு ‘சூரிய நமஸ்காரம்’ என்று பெயர் வந்தது. இதில் யோகாசனத்தையும் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமத்தையும் இணைத்துச் செய்கிறோம்…” என்று விளக்க ஆரம்பிக்கிறார் அவர்.
சூரிய நமஸ்காரம் எப்படிச் செய்வது?
சூரிய நமஸ்காரம் செய்வதில் 12 நிலைகள் இருக்கின்றன. இதில் முதல் 7 நிலைகளுக்குப் பிறகு, அதே பாணியில் திரும்பிச் செய்து முதல் நிலைக்கு வர வேண்டும்.
1. பிராணம் ஆசனா
நேராக நிமிர்ந்து நில்லுங்கள். பாதங்கள் இரண்டும் சேர்ந்து இருக்கட்டும். இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து மார்பின் நடுப்பகுதியில் வைக்கவும். இப்போது கைகளின் கட்டைவிரல்கள் இரண்டும் நெஞ்சுக்குழியைத் தொட வேண்டும். உடலைத் தளர்ந்த நிலையில் வைத்துக்கொண்டு, கண்களை மூடி மனதில் சூரிய உதயத்தைக் கற்பனை செய்து வணங்கவும்.
2. பாதி பிறை ஆசனா
முதல் நிலையிலிருந்து கைகளை காதுகளைத் தொட்டபடி மேலே உயர்த்துங்கள். இடுப்புப் பகுதியிலிருந்து தலை வரை உடலை பின்பக்கமாக வளைக்கவும். மூச்சை உள்நோக்கி இழுக்க வேண்டும்.
3. பாதஹஸ்தாசனா
பாதங்களின் பக்கத்தில் கைகளை வைப்பதனால் இந்த ஆசனத்துக்கு ‘பாதஹஸ்தாசனா’ என்று பெயர். முதல் நிலையிலிருந்து தண்டுவடத்தை நேராக நிமிர்த்தி மூச்சை வெளியே விட்டபடியே முன்னோக்கி வளைய வேண்டும். உள்ளங்கைகள் பாதங்களின் பக்கவாட்டில் தரையைத் தொட்டபடியே, முகம் முழங்கால்களை ஒட்ட வேண்டும்.
4. அஸ்வ சஞ்சலாசனா
‘அஸ்வ’ என்றால் குதிரை என்று அர்த்தம். குதிரை ஓடுவது போன்ற தோற்றம் உள்ளதால் இதற்கு ‘அஸ்வ சஞ்சலாசனா’ என்று பெயர். பாதஹஸ்தாசனா நிலையில் இருந்தபடியே கைகளை வளைக்காமல் வலது காலை மட்டும் பின்னோக்கி நீட்டி கால் விரல்களை தரையில் ஊன்றி வைக்கவும். இடது முழங்கால் தானாகவே மடங்கும். உள்முகமாக மூச்சு வாங்கியபடியே, கைகளை தரையில் அழுத்தி நெஞ்சை நிமிர்த்தி பார்வையை 5 டிகிரி கோணத்தில் பார்க்கவும்.
5. பர்வதாசனம்
‘பர்வதா’ என்றால் மலை என்று பொருள். மலை போன்ற தோற்றத்தில் உடல் வளைவதால் பர்வதாசனம் என்று இது அழைக்கப்படுகிறது. 4ம் நிலையின்படி மடக்கி வைத்துள்ள இடது காலை பின்புறம் நீட்டி பாதம் மற்றும் குதிகால்களை தரையில் ஊன்றி அழுத்தியபடி இரண்டு கால்களை யும் வைக்கவும். இடுப்பை சற்று மேல் நோக்கி தூக்கவும். தலையை கவிழ்த்து தாடையால் நெஞ்சைத் தொடவும். மூச்சை வெளியில் விட வேண்டும்.
6. அஷ்டாங்க நமஸ்காராசனம்
கால்விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி வணங்குவதால், இது அஷ்டாங்க நமஸ்காராசனம். 5ம் நிலையிலிருந்து முழங்கால்களை தரையில் ஊன்றி உடலை முன்புறம் நீட்டவும். வயிறு மட்டும் தரையில் படாமல் இருக்க வேண்டும். வெளியே மூச்சுவிடாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
7. புஜங்காசனம்
‘புஜங்க’ என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுப்பது போலவே இந்த ஆசனம் அமைந்துள்ளதால், புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது. ஆறாம் நிலையில் உள்ளபடியே கால்விரல்களையும் உள்ளங்கைகளையும் முழங்கால்களையும் வைத்துக்கொண்டு கைகளை நிமிர்த்தி முதுகெலும்பை வளைக்கவும். மூச்சை உள்வாங்கி மார்பை உயர்த்தவும். உள்முகமாக மூச்சு வாங்க வேண்டும்.
8. பர்வதாசனம்
5வது நிலையில் செய்த பர்வதாசனத்தை மீண்டும் செய்ய வேண்டும். அதேபோல், மூச்சை வெளியில் விட வேண்டும்.
9. அஸ்வ சஞ்சலாசனா
மீண்டும் 4வது நிலையைச் செய்ய வேண்டும். 4வது நிலையின்போது இடது காலை நீட்டியிருந்தால், அதற்குப் பதிலாக வலது காலை நீட்டிக்
கொள்ளலாம்.
10. பாதஹஸ்தாசனா
3வது நிலையை மறுபடியும் செய்ய வேண்டும்.
11. பாதி பிறை ஆசனா
2வது நிலையை மறுபடியும் செய்ய வேண்டும்.
12. பிராணம் ஆசனா
முதல் நிலையை மீண்டும் செய்து சூரிய நமஸ்காரத்தை முடிக்க வேண்டும்.
இந்த 12 நிலைக்குப் பிறகு யோகாசனங்கள், பிராணாயாமம் செய்வது அபரிமிதமான பலன்களைத் தரும். சூரிய நமஸ்காரம் பற்றிய விழிப்புணர்வுக்காகவும், சூரிய நமஸ்காரம் கற்றுக் கொண்ட பிறகு ஒரு வழிகாட்டியாகவும் உங்களுக்கு உதவவே இதில் விரிவாக விளக்கியிருக்கிறோம். சூரிய நமஸ்காரம் உள்பட எல்லா யோகா பயிற்சிகளையும் தகுதிவாய்ந்த ஒரு யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி செய்வதே நல்லது. குறைந்தபட்சம் சூரிய நமஸ்காரத்தை ஒருமுறையாவது குருவின் வழிகாட்டுதலின்படி கற்றுக் கொண்டு, அதன்பிறகு பயிற்சி செய்யுங்கள்!
டிப்ஸ்…
மேலோட்டமாகப் பார்த்தால் சூரியனை நோக்கி கையெடுத்துக் கும்பிடும் எளிதான முறையாகவே தோன்றும். ஆனால், இதற்குப் பின்னால் பல நுட்பமான வழிமுறைகள் இருக்கின்றன. சூரிய உதயம், சூரிய அஸ்தமன வேளைகளில் பயிற்சி செய்வதனால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். சூரியனைப் பார்த்தவாறு பயிற்சி செய்ய விரும்பினால் அதிகாலை வேளைதான் சிறந்தது. சூரிய உதயத்துக்குப் பிறகு சூரியனை நேரடியாகப் பார்த்து பயிற்சி செய்வது கண்களைப் பாதிக்கும்.
உடலை இறுக்காத, மென்மையான உடைகள் அணிந்து கொள்வது அவசியம். உணவுக்குப் பிறகு 4 மணி நேரமும், சிற்றுண்டி சாப்பிட்டிருந்தால் 2 மணி நேர இடைவெளியும் அவசியம். எந்த உடற்பயிற்சியையும் காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்வதே சரியானது. சூரிய நமஸ்காரமும் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்யப்பட்டால்தான் நாம் எதிர்பார்க்கிற நன்மைகளைத் தரும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் அறைக்குள் பயிற்சி செய்வதாக இருந்தால் காற்றோட்டம் உள்ள அறையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேடு பள்ளம் இல்லாத தரையில் ஜமுக்காளம் விரித்து, அதன்மேல் பயிற்சி செய்ய வேண்டும். வெறும் தரையிலோ, கட்டிலின் மீதோ செய்வது சரியானது அல்ல. கண்ணாடி மற்றும் ஆபரணங்கள் பயிற்சி யின் போது சிரமங்களை உருவாக்கும் என்பதால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
உடல் சோர்வு இருக்கும்போதோ, நீண்டதூரப் பயணம் செய்த பிறகோ பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். தலைவலி, காய்ச்சல், மாதவிலக்கு காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், இதயநோய், முதுகுவலி, கழுத்துவலி உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமல் செய்யக் கூடாது எலும்பு, தசை, சுவாசம், ரத்தம், ஜீரணம், கழிவு உறுப்புகள், நரம்பு, நாளமில்லா சுரப்பிகள் ஆகியவை சீராக இயங்க சூரிய நமஸ்காரம் பெரிதும் உதவி செய்கிறது. இதனால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புத்துணர்வு கிடைக்கும்.
சருமம் பொலிவு பெறும். எடை சீராகும். தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டுகள் வலுவடையும். தண்டுவடம் தளர்வடைவதால் முதுகுவலி வராது. நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும். உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும். சுய கட்டுப்பாடு உண்டாகும். நுரையீரல் விரிவடையும், குதிகால் நரம்பு, பாதம், தொண்டை, கழுத்து ஆகிய இடங்கள் வலிமை பெறும். மலட்டுத்தன்மை நீங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். மந்த நிலையைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். உடல் கழிவுகள் வெளியேறும். சூரிய நமஸ்காரம் செய்த பின் செய்கிற பிராணாயாமங்களின் பலன் அதிகரிக்கும்… இதுபோல் எத்தனையோ பலன்கள் உள்ளன!
Average Rating