சைக்கிள் ஓட்டும் பெண்ணை காதலியுங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 5 Second

‘லவ் பண்ணுங்க… லைஃப் நல்லாருக்கும்’ என்ற ‘மைனா’ வசனம் நம்மூரில் மிகவும் பிரபலம். பெங்களூருவைச் சேர்ந்த சைக்கிளிஸ்ட்டான மோனிகா பிள்ளை, ‘சைக்கிள் ஓட்டுகிற பெண்ணாக இருந்தால் மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் வருத்தப்படுவீங்க’ என்று அந்த காதல் டிப்ஸில் இன்னும் கொஞ்சம் ஃப்ளேவர் சேர்க்கிறார்! அதெல்லாம் சரி… சைக்கிளுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்? அதுவும் ‘குங்குமம் டாக்ட’ருக்கும் இதுக்கும் என்ன சம்ந்தம்? அவசரப்படுகிறவர்களுக்கு மோனிகாவின் பதிலில் இருக்கிறது அழகான ட்விஸ்ட்!

‘‘இது கட்டுரையின் சுவாரஸ்யத்துக்காக நிச்சயம் சொல்வது இல்லை. மனநலம், உடல்நலம், குணநலம் என்று பலவிதங்களிலும் சைக்கிள் ஓட்டும் பெண்களிடம் நிறைய ப்ளஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன’’ என்று டிப்ஸுக்கு முன் டைட்டில் கார்டு போடுகிறார் மோனிகா. ‘‘சைக்கிளிஸ்ட்டை காதலிப்பது பலவிதங்களிலும் உங்கள் வாழ்வை அழகாக்கும்.

ஏனெனில், உங்களுக்கு நெருக்கமானவர்களில் அவள் மிகவும் ஆரோக்கியமான நபராக இருப்பாள். சைக்கிள் பயிற்சி செய்வது இதயத்துக்கு நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறியிருக்கின்றன. தேவையற்ற எடையைக் குறைத்து ஸ்லிம் பியூட்டியாக உங்களைக் கவர்வது அவளின் இயல்பான குணமாகவே இருக்கும்.

ஏனெனில், சைக்கிளை பேலன்ஸ் பண்ணி ஓட்டுகிற பெண்களுக்கு, ஏற்றம் இறக்கம் நிறைந்த வாழ்க்கையையும் பேலன்ஸ் பண்ணும் மனப்பக்குவம் இருக்கும் என்பது உளவியல் உண்மை. அவளுக்கு வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்வது எப்படியென்று தெரிந்திருக்கும்.

ஏனெனில், சைக்கிளில் உங்களவளோடு ஜாலியாக ஒரு ரொமான்ஸ் ரைடு போக முடியும். ஹனிமூன் செல்கிற தம்பதிகள் படகு சவாரியைப் போலவே சைக்கிளிங்கையும் முயற்சி செய்து பாருங்கள். அது வாழ்நாள் முழுவதையும் தேன்நிலவாக்கிவிடும்.

ஏனெனில் ஒரு சைக்கிளிஸ்ட் ஆடம்பரத்தை விரும்பாத எளிமையான குணநலன்கள் கொண்டவளாக இருப்பாள். சைக்கிளிங் போவது மனதுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அள்ளித் தருகிற ஒரு வழி என்பதால், அவளின் சந்தோஷ அலை உங்களையும் தொற்றிக் கொள்ளும். வாழ்க்கையின் ருசி அறிந்த அவள் சுவையான சமையலிலும் உங்களை திக்குமுக்காட வைப்பாள். உங்களை கவனித்துக் கொள்வதுடன் சமர்த்தாக சாப்பிட்டு, நன்றாகத் தூங்கி எழுகிற பெண்ணாகவும் இருப்பாள். சைக்கிளிங் செல்கிறபோது வழியெங்கும் உற்சாகமான நல்ல நண்பர்களை அவள் சம்பாதித்திருப்பாள். உறவுகளுடன் வாழ நினைக்கிறவளாகவும் இருப்பாள்.

ஏனெனில், வாழ்க்கை என்பதே பயணம் என்பதும், இலக்கு எத்தனை முக்கியம் என்பதும் அவளுக்குத் தெரியும். பயணத்தில் வருகிற எதிர்பாராத பிரச்னைகளையும், அவற்றை வெற்றிகொள்ளும் கலையும் அவளுக்குத் தெரிந்திருக்கும். புதிய மனிதர்களை தயக்கமில்லாமல் சந்திக்கிற சுவாரஸ்யமான பெண்ணாக இருப்பாள்.

ஏனெனில், ஒரு சைக்கிளிஸ்ட் உங்கள் மேல் அக்கறை செலுத்துவதைப் போலவே சமூக அக்கறை கொண்டவளாக, இந்த பூமியின் நலனில் அக்கறை செலுத்துபவளாகவும் இருப்பாள். இன்று வாகனப் புகை பூமியை வெப்பமாக்கிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தவளாக இருப்பாள்.

ஏனெனில், பயணத்தின்போது சைக்கிளில் ஏற்படுகிற சின்னச் சின்ன பழுதுகளை அவளுக்கு சரிபார்க்கத் தெரிந்திருக்கும். இது இல்லத்தரசியாக வீட்டை நிர்வகிக்கும்போது ஒவ்வொரு பிரச்னைக்கும் உங்களை எதிர்பாராதவளாக தானே சமாளிக்கத் தெரிந்தவளாக இருப்பாள். பல்பை மாற்றுவதிலிருந்து சமையலறையின் பைப்பை சரி செய்வது வரை உங்களை அவள் சார்ந்திருக்க மாட்டாள். ஆதலால், உங்கள் பைக் பயணத்தில் சைக்கிளிஸ்ட் பெண் குறுக்கே வந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிதான். பூக்களைக் கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்!’’‘சைக்கிளிங்கால் நமக்கு என்னென்ன மருத்துவப் பலன்கள் கிடைக்கின்றன?’ ஃபிட்னஸ் டிரெய்னரான பத்மினி விளக்குகிறார்.

‘‘ஏரோபிக் வகை உடற்பயிற்சிகளில் ஒன்றுதான் சைக்கிளிங் (Cycling).இந்த சைக்கிளிங் பயிற்சியால் மருத்துவரீதியாக பல நன்மைகள் கிடைப்பதை ஆய்வுகளில் நிரூபித்திருக்கிறார்கள். தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி செய்கிறவர்களுக்கு 40 சதவிகிதம் நீரிழிவு குறைந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்புப் பிரச்னைகள், மூட்டு வலி, முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் பரிந்துரைக்கப்படுகிற பயிற்சியாக இருக்கிறது.

பருமன் உள்ளவர்களால் அதிக எடையை தூக்க முடியாது என்பதால் இவர்களுக்கு சைக்கிளிங் நல்ல சாய்ஸாக இருக்கும். உடற்பயிற்சிக்குக் கூட கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். அதிக எடையை தாங்க வேண்டி வரும். ஆனால், சைக்கிளிங் என்பது விளையாடுவதைப்போல உட்கார்ந்து கொண்டு செய்யும் Low impact exercise. கஷ்டம் எதுவும் இல்லை. ஆனால், கைமேல் பலன் உண்டு.

இதில் இன்னொரு ஆச்சரியமான உண்மையும் இருக்கிறது. நடைப்பயிற்சியில் 150 முதல் 250 கலோரி வரைதான் எரிக்க முடியும். ஜாக்கிங் செல்லும்போது 300 முதல் 400 வரைதான் கலோரிகள் செலவாகும். சைக்கிளிங்கிலோ 500 முதல் 600 வரை கலோரிகளை எரிக்க முடியும். தினமும் 30 நிமிடம் சைக்கிளிங் பயிற்சி செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, வருடத்தில் 5 கிலோ வரை எடை குறையும் என்பதும் நிரூபிக்கப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு.

தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ள பயிற்சியாக சைக்கிளிங் இருக்கும். இதயத்துடிப்பின் விகிதத்தையும் சராசரி அளவுக்கு மிதமாகக் கொண்டு வர முடியும். இதற்காகவே, ஒருவருக்கு சைக்கிளிங் பயிற்சி கொடுக்கும் முன்னர் அவரது இதயத்துடிப்பைக் கணித்துக்கொண்டு அந்த வேகத்துக்குத் தகுந்தாற்போல சைக்கிளிங் பயிற்சி கொடுப்பார்கள் . சைக்கிளிங் பயிற்சியை பலருடன் இணைந்து மேற்கொள்வது இன்னும் நல்ல பலனைத் தரும். ஜிம்மில் செய்யும் சைக்கிளிங்கிலேயே இதுபோல் கூட்டாக 10 பேர் சேர்ந்து சைக்கிளிங் செய்யும் ஸ்பின்னிங் முறை இருக்கிறது.

இந்த ஸ்பின்னிங் முறையின்போது துள்ளலான இசை ஒலித்துக் கொண்டிருக்கும். இன்ஸ்ட்ரக்டர் ஒருவர் சொல்லிக் கொடுப்பார். மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ, ஒரு குகைக்குள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ கற்பனை செய்துகொள்ள வேண்டும். இதுதான் ஸ்பின்னிங் சைக்கிளிங் முறை. இது நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும். மனதிலும் உற்சாகம் பெருகும். இதனால் மன அழுத்தம், பதற்றம் போன்றவை நம்மைவிட்டுக் காணாமல் போய்விடும். சைக்கிளிங்கில் Aerobic என்ற ஆக்சிஜன் பயிற்சி, Anaerobic என்ற ஆக்சிஜன் இல்லாமல் செய்யும் பயிற்சி என இரண்டு வகைகள் இருக்கின்றன.

இதில் ஏரோபிக் முறை எளிதானது. இரண்டாவது வகை அனரோபிக் பயிற்சியில் கொஞ்சம் சிரமப்பட்டு, அதிவேகமாக, மூச்சிரைக்கப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏரோபிக் பயிற்சியில் நம் உடலில் இருக்கும் கிளைக்கோஜன் அப்படியே குளுக்கோஸாக மாறி, அதிலிருந்து சக்தி எரிக்கப்படும். அதன்பிறகு, கொழுப்பு எரிக்கப்படும். ஆனால், அனரோபிக்கில் கொழுப்பு சக்தி நேரடியாகவே எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் வரப்பிரசாதம் என்று சொல்லலாம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலின் செயல்பாட்டை அதிகரிக்க ஹேண்ட் சைக்கிளிங் என்ற பயிற்சி முறையும் இருக்கிறது. மற்ற உடற்பயிற்சிகளை ஒருவரின் வழிகாட்டுதல் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால், சைக்கிளிங் அப்படி இல்லை. நாமே நமக்குத் தேவையான, செய்ய முடிகிற அளவில் செய்து கொள்ளலாம்.

சைக்கிளிங்குக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. இப்படித்தான் சைக்கிளிங் செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும் சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். பெண்களுக்கு சைக்கிளிங் பயிற்சி செய்வதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடலுக்கு வசீகரமான வடிவம் கிடைக்கும். Upper body, Lower body என்று நம் உடலை இரண்டுவிதமாக பிரித்துப் பார்த்தால் லோயர் பாடியில்தான் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்திருக்கும். சைக்கிளிங்கில் இந்த லோயர் பாடியில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்பட்டு தசைகள் சரியான வடிவத்துக்கு வரும். குறிப்பாக, இடுப்புப் பகுதியில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க சைக்கிளிங் உதவுகிறது.

சைக்கிளிங் பயிற்சி செய்யும் இயந்திரத்தை முடிந்தால் வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டால் நேரம் கிடைக்கும்போது பயிற்சி செய்து கொள்ள லாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பயிற்சி செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும். வெளியிடங்களில் சைக்கிள் பயிற்சி செய்யும்போது பரபரப்பான இடங்கள், சுகாதாரமற்ற இடங்கள் போன்றவற்றைத் தவிர்த்து நல்ல சூழலில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இயற்கை சார்ந்த சூழலாக இருந்தால் நாம் எதிர்பார்க்கிற பலன்கள் இன்னும் பலமடங்கு அதிகமாகவே கிடைக்கும். சைக்கிள் ஓட்டுவது கிரவுண்டாக இருந்தாலும் சரி… ஜிம்மாக இருந்தாலும் சரி… இரண்டுக்குமே பலன் ஒன்றுதான்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 200 கோடி செலவில் கட்டப்பட்ட வீடு!! (வீடியோ)
Next post கதை நல்லது…!! (மருத்துவம்)