சூரிய நமஸ்காரம் !! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 7 Second

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஓர் எளிய, சிறிய முயற்சி மட்டுமே! அதை மட்டும் நீங்கள் செய்தால், உங்கள் வாழ்வே உன்னதமாக மாறிவிடும். நீங்கள் சொல்வதை உங்களது உடல் கேட்கும். இரவில் படுத்த உடனே தூக்கம் வரும்; அதிகாலையில் விழித்து எழுந்த அடுத்த நிமிடமே புத்துணர்வு பெறுவீர்கள். சோர்வு, எரிச்சல், கவலை எல்லாம் காணாமல் போகும். உடலின் உள்ளேயும் மாற்றத்தை உணர்வீர்கள்.

செரிமானம் தொடங்கி அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளும் நன்றாக இருக்கும். இது தொடரும்போது நோய் எதிர்ப்புச் சக்தி கூடி, மருத்துவமனைக்கு போவது குறையும்; அல்லது போக வேண்டிய தேவையே இருக்காது. மருந்துகளை விழுங்கி அதன் பக்க விளைவுகளால் உடல் வதைபடுவது மாறும். பண விரயம், உடல் வேதனை, பொன்னான நேரம் வீணாவது என எல்லாமே தடுக்கப்படும்.

இத்தனையும் ஓர் எளிய, சிறிய முயற்சிக்குக் கிடைக்கும் பரிசுகள் என்கிறபோது, செய்யாமலா விட்டு விடுவீர்கள்? அந்தப் பயிற்சிதான் சூரிய நமஸ்காரம். ஒரு விஷயத்தை இங்கு புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு நன்மை செய்யும் ஒரு விஷயத்தை நாம்தான் முயற்சி எடுத்து செய்ய வேண்டும். வேறு யாரோ ஒருவர், வேறு ஏதோ ஒரு பொருள் அதைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.

நீங்களே உங்கள் உடல் மீது அக்கறை கொண்டு முயற்சியோடு பயிற்சி செய்ய வேண்டும். இதன் ஒவ்வொரு படியும் பலனாகப் பிரதிபலிக்கும். இது ஏதோ புதிரான கருவிகள் கொண்டு செய்வதல்ல; மசாஜ் போன்ற சிகிச்சை அல்ல; மருந்து, மாத்திரை கொண்டு மாற்றுவது அல்ல. ஒரு பயிற்சி எப்படி அமைய வேண்டும் என்று பதஞ்சலியின் யோக சூத்திரம் இப்படிச் சொல்கிறது: ஸது தீர்க்கால நைரந்தர்ய ஸத்கார ஆதரா ஆஸேவிதோ திர்ட பூமி:

இதன் சுருக்கமான பொருள்: ‘ஒரு சரியான பயிற்சியானது, நீண்ட காலம் செய்யப்படவேண்டும்; தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும்; தவம் மாதிரி முழு ஈடுபாட்டுடன் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தொடரும்போது ஒரு உறுதியான அடித்தளம் அமையும்.’ யோகக்கலை இந்த மண்ணில்தான் வேர்விட்டு செழித்தது. ஆனால் அது இப்போது நம் மக்களின் மனதிற்கு நெருக்கமாகவோ, ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகவோ பெரும்பாலும் நம் தேசத்தில் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இங்கு யோகா பலருக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகவே மாறிவிட்டது.

இங்கிருந்து சென்ற அது, பல தேசங்களில் கிளை பரப்பி செழித்திருக்கிறது. யோகா பெரும் பெயரோடும் புகழோடும் வளத்தோடும் அங்கெல்லாம் இருப்பதற்குக் காரணம், அது மக்களைச் சேர்ந்த விதம் எனலாம். முறையாகப் படித்து, தினமும் பயிற்சி செய்து, ஆரோக்கியமாக வாழ்ந்து, அதிலேயே தீவிரமாய் மூழ்கிய ஒருவர் யோகாவைப் பேசினாலும் செய்தாலும் யாருக்குத்தான் பிடிக்காது? பயிற்சி செய்கிறவர்களும் உடலின் அருமையை நன்கு உணர்ந்து, தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள். முழுதாய் நம்புவதும், அதுபற்றிப் படிப்பதும், அதற்காக உரிய தொகையை சந்தோஷமாக செலவழிப்பதுமாக இருக்கிறார்கள். இது முழுப்பலன் பெற
உதவுகிறது.

நம் ஊரில் கற்றுக்கொடுப்பவர்களில் இருந்தே ஆரம்பிக்கிறது பிரச்னை. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே ஏதோ ஒரு புத்தகத்தைப் பார்த்து யோகா சொல்லித் தருவார். தனக்கே தெரியாத ஒரு விஷயத்தை ஒருவர் இன்னொருவருக்கு எப்படிக் கற்றுத் தர முடியும்? அப்படிப்பட்ட குருவிடம் கற்றுக்கொள்ளும் ஒருவருக்கு அதன்மீது எப்படி நம்பிக்கை வரும்?

இன்னும் சில முறைகளில் குரு வகுப்பெடுப்பார். அவரது பேச்சும் பயிற்சியும் சாதாரண மனிதர்கள் நெருங்க முடியாதபடி அந்நியப்பட்டிருக்கும். ‘யோகா புரிந்துகொள்ளவே கஷ்டமான விஷயம் போலிருக்கிறது’ என வருபவர்கள் மிரண்டு ஒதுங்கிவிடுவார்கள். இப்படிப்பட்ட கூத்துகளின் இடையே நுழைந்துதான் அசலை உணர வேண்டும். கூச்சலான விவாதங்களுக்கு இடையில், நியாயத்தை அலைந்து தேடித்தான் பார்க்க முடியும். அந்த அலைதல் தேடுதலே சில புரிதல்களைத் தந்து விடும்.

ஒன்றைப் பெற விரும்பும் ஒருவர், அதற்கென ஒரு விலையைத் தர வேண்டும். இல்லாவிட்டால் பெறுவதும் பலன்களும் முழுதாய் இருக்காது. இலவசங்கள் யாருக்குமே அருமையை உணர்த்தாது. இந்தப் பார்வையோடு யோகாவிற்கு வருகிறபோது – குறிப்பாக சூரிய நமஸ்காரத்திற்கு வருகிறபோது – பயிற்சி செய்பவர்களின் முயற்சியும் பார்வையும் நன்றாக அமைய வேண்டும். ‘எவ்வளவு நாள்தான் இந்த சூரிய நமஸ்காரத்தின் 12 நிலைகளைச் செய்வது?’ என்று சிலர் நினைக்கலாம்.

சூரிய நமஸ்காரத்தில் பல முறைகள் உள்ளன. முன்பே குறிப்பிட்டபடி அந்த ஒவ்வொன்றையும் பலவாறு செய்யலாம். உதாரணத்திற்கு ஸ்ரீகிருஷ்ணமாச்சாரி யோக மரபு, அஷ்டாங்க யோக மரபு, சிவானந்தா யோக மரபு, பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா, விவேகானந்தா கேந்திர யோகா என பலர் புதிய சூரிய நமஸ்கார முறைகளை உருவாக்கியுள்ளனர். வழக்கமான முறையைச் செய்ய முடியாதவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து செய்யும் ஒரு முறை கூட உருவாக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணமாச்சாரி யோக மரபில் உள்ள சூரிய நமஸ்காரத்தை மட்டுமே பல முறைகளில் செய்யலாம். இவற்றோடு, முன்தயாரிப்புகளில் மாற்றங்கள், சூரிய நமஸ்காரத்திற்குப் பின் ஓய்வு, பிராணாயாமம், தியானம் என்கிற சேர்க்கை… இப்படி புதிது புதிதாக பயிற்சியை அமைத்துக் கொண்டு, நீண்டகாலம் தொடர்ந்து செய்ய சூரிய நமஸ்காரம் இடம் தருகிறது.இதையே காலையில், மாலையில், மதியத்தில் என வெவ்வேறு நேரங்களில் செய்யும்போது அனுபவம் வேறுபடும். ஒவ்வொரு உடையில், ஒவ்வொரு மனநிலையில், செய்யும் வேகத்தில் என்று பலநூறு விதமான பயிற்சி அனுபவங்களை சூரிய நமஸ்காரம் தரும்.

எத்தனை வகைகள் இருந்தாலும், துவக்கம் சற்று கடினமாகவோ, பிடிபடாமலோ இருக்கலாம். இது இயல்பானதுதான். புதியதாய் ஒன்றில் நுழையும்போது, ஆரம்பகட்டத் தடுமாற்றம் இருப்பது இயல்பானது. முழுதாகக் கைகூட சில வாரங்கள் எடுக்கலாம் சிலருக்கு. ‘சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு இதைச் செய்தால் என்ன பலன் கிடைக்கும்’ என்று சிலர் நினைப்பது தெரிகிறது. பலன் இல்லாமல், உயர்வு இல்லாமல் சூரிய நமஸ்காரத்தை யார் பயிற்சி செய்வார்கள்?

நீங்கள் தொடர்ந்து காலையில் (அந்த நேரம்தான் சிறந்தது) சூரிய நமஸ்காரத்தை (ஒரு ஆறு அல்லது எட்டு சுற்றுகள்) செய்து விட்டு, முழு ஓய்வோ அல்லது பிராணாயாமமோ செய்தால், அப்பயிற்சி அன்றைய தினத்தை வளமாக்கி விடும். நாள்முழுக்க உழைக்கத் தேவையான சக்தியைத் தந்து விடும்; உடல் இறுக்கம் குறையும்; மூச்சு நன்றாக இருக்கும். அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளும் நன்றாக இருக்கும். தூக்கம் தொடங்கி, செரிமானம், புலன்கள் என்று பலன்கள் பெருகும். ‘ஆரோக்கியம்தான் உண்மையான சொத்து’ என்பது மகாத்மா காந்தி சொன்ன வாசகம். அந்த சொத்து உங்கள் கையில் பத்திரமாக இருக்க, சூரிய நமஸ்காரம் அவசியம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு வராமல் தடுப்பது எப்படி? (மருத்துவம்)
Next post விபத்தை காரின் ஏர்பேக் எப்படி தெரிந்து கொள்கிறது தெரியுமா!! (வீடியோ)