மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை!! (மகளிர் பக்கம்)
கூடை நிறையக் குப்பை. கொட்டினால் குப்பை மாயமாகும். கூடையும் சுத்தமாகும். கொட்டிவிட்டால் கூடை நிறைந்திருக்காதே என்று கவலைப்பட்டால், குப்பை காலியாகாது. குப்பையை அகற்றியதும், காலிக் கூடை என்றுதானே அழைக்கிறோம்.. ஆனால், அதுதான் நிஜக் கூடை. மனதிலும் எண்ணங்கள் குப்பைகளாகச் சேர்கின்றன. சேர்ந்துகொண்டே இருக்கின்றன.
இவற்றை அகற்ற நினைத்தால்கூட, அதுவே எண்ணமாகப் பதிவாகிவிடுகிறது. எண்ணம் இல்லாவிட்டால், அது மனமே இல்லை என்று நினைக்கிறோம். ஆனால், எண்ணம் எழாவிட்டால், அதுவே நிஜ மனம். அங்கு ஆர்ப்பரிப்பு இருக்காது. அமைதி தவழும். அதையே ஆதி நிலை என்கின்றனர்.கூடையில் இருந்து குப்பையைக் கொட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனால், மனதில் இருந்து எண்ணங்களைத் தூக்கியெறிவது எளிதாக இருப்பதில்லை.
தூக்கியெறிந்தாலும், புதிய எண்ணங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும்.. அதுதான் இயல்பு என்று ஒதுங்கினால், அழுக்குகள் சேர்ந்ததே மனமாக இருக்கும்.ஆனால், யோக நிலையை எய்தினால், எண்ணங்கள் தானாகவே அகன்றுவிடுகின்றன. அடி ஆழம் வரை தெளிந்த குளம் போல் ஸ்படிகமாய் மனம் மாறிவிடும். யோகா என்பது மனதைக் காலி செய்தல் – கூடையில் இருந்து குப்பையை அகற்றுவதுபோல.
உடல் அழகைப் பேணுவதற்காக எடுத்துக்கொள்ளும் அக்கறையைப் பெரும்பாலானோர் அக அழகைப் பேணுவதில் காட்டுவதில்லை. ஆனால், நிஜ அழகு அகத்தில்தான் இருக்கிறது. சர்வதேச யோகா தினம் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், உடலை வளைத்துக்காட்டும் வித்தைகள்தான் பலரது பார்வையில் படுகின்றன. செல்போன் தொடுதிரை சித்து விளையாட்டில் வளைத்து நெளிப்பதெல்லாம் சகஜம்.
ஆனால், உடலை வளைப்பதா, கைகளை உயர்த்துவதா, கால்களைத் தூக்குவதா… ஊஹூம் என்று ஒதுங்கிக்கொள்வதுதான் செல்போன் சித்தர்களின் ஆசை. ஆனால், உடலின் ஒத்துழைப்பின்றி மனதைச் செம்மையாக்க இயலாது. அதேசமயம் மனதில் செம்மை தோன்றாவிட்டால், உடலும் செம்மை இழந்துவிடும். எண்ணங்களே செயலாக மாறுகின்றன. செயல்தான் பழக்கமாகிறது. பழக்கம்தான் நடத்தையாகிறது. நடத்தையே ஆளுமைத்தன்மையை உருவாக்குகிறது. அதுவே விதியாக மாறுகிறது. எண்ணங்களின் வலிமை அப்படிப்பட்டது. எண்ணங்களைப் புடம் போட வைப்பதற்கு யோகா உதவுகிறது.
எண்ணங்கள் வராமல் தடுக்க முடியாது. ஆனால் நெறிப்படுத்த முடியும். தீய எண்ணங்கள் நுழைகின்றனவே என்று அதிலேயே மனம் நிலைத்தால், அந்த எண்ணமே வலுப்படும். மூன்றாவது நபராக அகத்தில் இருந்தே கவனித்தால், தீய எண்ணம் விலகி ஓடும். அதிகாலை உடலை இயல்பாக்கும் யோகப்பயிற்சிகள், மனதில் அலைச்சுழலையும் குறைக்கும். எண்ணங்கள் குறையத் துவங்கும்.
‘தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை
தன்னை அறியாமல்தான் கெடுகின்றனன்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்ச்சிக்கத் தானிருந்தானே’ என்கிறது திருமந்திரம்.
தன்னை அர்ச்சித்தல் என்பது தன்னைத் துாய்மைப்படுத்துதலைக் குறிக்கும். அர்ச்சித்தல் தொடர் ந்தாலே வாழ் க்கை இனிக்கும்.
‘வினைப்பதிவாம் சுமையை விடுத்துத் தூய்மை பெறவே’ மானிட வாழ்க்கை. ஆனால், விடுவதற்குப் பதிலாக சுமையைக் கூட்டுவதையே வாழ்க்கையின் லட்சியமாக பலர் மாற்றிவிடுகிறோம். ‘மடல் விரிந்த பூவெனவே மலர்ந்த மதிகொண்டு மண்ணுலகில் வாழ்வோர்கள் மயக்கம் நீங்கி வாழ்க’என்ற பாடல் கருத்தைப் போல், மதி மலர்ந்தால் சிறப்பு. மதி மயங்கினால் அழுக்கு.
யோக நெறி, உடல் மற்றும் மனத் தூய்மையை உருவாக்கும் என்பது நிச்சயம். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று உலகம் பஞ்சபூதங்களால் உருவாகியிருக்கிறது. உடலும் பஞ்சபூதங்களால் ஆனதுதான். உடலில் இல்லாத பொருள், உலகத்திலும் இல்லை எனலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் இருக்கிறது என்று குறிப்பிடுவது இதைத்தான். பஞ்சபூதக் கலவை, எந்தளவு விகிதாச்சாரத்துடன் உடலில் இருக்க வேண்டுமோ, அப்போதுதான் ஆரோக்கியம் தழைக்கும். மனம் நினைத்தால்தான் மனம் தூய்மையடைய முடியும். முள்ளை முள்ளால் அகற்றுவது போல. மனதில் தீய எண்ணம் புகுகிறது. அந்த எண்ணத்தைப் போக்க நினைப்பதும் அதே மனம்தான். அதை உருவாக்குவதற்கு உடல் தூய்மை முக்கியமானது.
‘கல்லும், மரமும் மவுன நிலையில் நின்று
கடமை தவறாது பயனாகும்போது
சொல்லும் கருத்துமுடைய மனிதன் ஏனோ
சுகம் கெட்டு சமூகத்தை மறக்க வேண்டும்’என்று வேதாத்ரி மகரிஷி கூறும் கருத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். ஓரினப் பொருட்கள் கூட இயற்கையின் வழி ஒழுகுவதைக் கடமையாகச் செய்கின்றன. ஆனால், மனிதன்தான் சிற்றின்பங்களுக்காக சமூகத்தை மறந்து கடமையில் தவறி ஒழுக்கக்கேடான வாழ்க்கையைப் பின்பற்றுகிறான். அது ஒழுக்கம் நிறைந்ததாக மாறினால், இயற்கையே இன்முகமாய்ச் சிலிர்க்கும்.எங்கெங்கிருந்தோ ஆறுகள் உருவாகின்றன. இறுதியில், ஆறுகள் கடலில் கலக்கின்றன. கடலில் இருந்து ஆவியாகும் நீர்தான், மழையாய் மீண்டும் கொட்டுகிறது. ஆறுகளின் நீரோட்டத்துக்குத் துணையாகின்றன. பன்மையும், ஒருமையும் ஒன்றுதான். யோக நெறியில் பன்மை கலந்திருக்கலாம். ஆனால், அதன் நோக்கம் ஒருமைதான். மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை.
Average Rating