கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
* சுக்குப்பொடியுடன் வெல்லம், தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து சாப்பிடலாம். டேஸ்ட்டாக இருப்பதோடு, சுக்கு ஜீரண சக்திக்கு நல்லது.
* குலோப்ஜாமூன் பாகு மீதமாகி விட்டால், அதில் மைதா மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல திரட்டி சிறுசிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான பிஸ்கெட் ரெடி!
* வீட்டிலேயே ஜாம் தயாரிக்க விரும்பினால், சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் விரைவில் கெடாமல் இருக்கும்.
* உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது அதில் சிறிது சோம்பைத் தூளாக்கி தூவினால் உருளைக்கிழங்கு வறுவல் ‘கமகம’ வாசனையுடன் இருக்கும்.
* இரவு நேரங்களில் சமையலறையில் ஜீரோ வாட் பல்பை எரிய விட்டால், சமையலறையில் கரப்பான் பூச்சி நடமாட்டம் குறையும்.
* கேக் செய்யும் போது கலவையில் சிறிதளவு தேன் சேர்த்தால் கேக் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
* சேனைக்கிழங்கை வேக வைக்கும் முன் ஒரு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்புப் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கைப் போடவும். விரைவில் பதமாக வெந்து பக்குவமாகவும் சுவையாகவும் இருக்கும்.
* வாடிப்போன காய்கறிகளை வினிகர் கலந்த தண்ணீரிலோ, உப்புத் தண்ணீரிலோ 10 நிமிடம் போட்டு வைத்த பிறகு எடுத்து சுத்தம் செய்து பயன்படுத்தினால் புதியது போலவே இருக்கும்.
* வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை சிறிதளவு வதக்கி பஜ்ஜி செய்தால், வட்டம் பிரிந்து வராது.
* குழம்பு வைக்க வெங்காயம், தக்காளி, காய்கறிகளை வதக்கும் போது, வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கி விட்டு, அதன் பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கினால் குழம்பைப் பார்க்கவே அழகாக இருக்கும். ருசியும் அதிகமாகும்.
* ஆப்பத்துக்கு மாவு அரைக்கும் போது தேங்காய்த் துருவலுடன், தேங்காய் தண்ணீரையும் சேர்த்து அரைத்தால், பஞ்சு பஞ்சாக அருமையான ஆப்பம் தயார்!
* குருமா, கிரேவி, நூடுல்ஸ் போன்றவற்றுக்கு தக்காளி சேர்ப்பதற்குப் பதில் தக்காளி கெச்சப் சேர்த்து சமைத்துப் பாருங்கள். நிறமும் சுவையும் சூப்பராக
இருக்கும்!
* காரம் சேர்த்துச் செய்யும் பலகாரங்களுக்கு காரப்பொடி போடாமல், பச்சை மிளகாயுடன் காய்ந்த மிளகாய்கள் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அந்த தண்ணீரைப் பயன்படுத்தினால் பலகாரங்கள் சூப்பராகவும் நல்ல நிறமாகவும் இருக்கும்.
* கறிவேப்பிலை துவையல் அரைக்கும் போது சுக்கை உப்பு தடவி தணலில் சுட்டால் அது உப்பிக் கொண்டு வறுபடும். அந்த சுக்கையும் கறிவேப்பிலை சாமானோடு சேர்த்து அரைத்தால் இந்தத் துவையல் மிகவும் ருசியாகவும் இருக்கும். வாயு உபத்திரவம், சளித்தொல்லை, உடல் வலியும் போகும்.
* பிஸிபேளா ஹுளி செய்யும் போது அரிசியுடன் சிறிதளவு ஊற வைத்த ஜவ்வரிசியையும் சேர்த்து செய்தால், சாதம் மிக மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஆழாக்கு அரிசிக்கு 1 அல்லது 2 டீஸ்பூன் ஜவ்வரிசி போதுமானது.
* பப்பாளி இலை சாறை எடுத்து தேமலின் மீது தேய்த்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும். பப்பாளி பழத்தை நன்கு மசித்து பால் ஏட்டுடன் முகத்தில் தேய்த்து கடலைமாவும் தயிரும் கலந்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.
Average Rating