‘கனன்ற கருவறை இன்று உயிர் பெற்று எழுந்ததே! ’(மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 26 Second

ஆம். உண்மை. இதுநாள்வரை கருவுற முடியாத பெண்களுக்கு வாரிசை உருவாக்க ஒரே வழி ‘வாடகைத்தாய்’ மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை மட்டுமே. அவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் செய்தியாக தற்போது கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம், தன் வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றுக் கொள்ளும் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை முறை.

உலக அளவில் இதுவரை செய்யப்பட்ட 72 கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகளில் நேரடியாக 18 குழந்தைகள் உயிருடன் பிறந்திருப்பதாக பதிவாகியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதன் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.ஆசியாவிலேயே முதன்முறையாக 2017ம் ஆண்டில், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர் நம் இந்தியாவின், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனாட்சி வலாண்ட் என்ற பெண் தான். மீனாட்சிக்கு கருப்பையை தானமாக கொடுத்திருப்பது 49 வயதான அவரது தாய் என்ற தகவலைச் சொன்னார் மகப்பேறியல் மற்றும் மகளிர் நலத்துறையின் தலைமை மருத்துவரான டாக்டர் பத்மப்ரியா விவேக்.

“இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 6 லட்சம் பெண்கள் கர்ப்பப்பையே இல்லாமல் பிறந்துள்ளார்கள். அதிலும் நம்நாட்டில் வழக்கத்தில் இருந்து வரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை பல முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ள நிலையில், தற்போது அதற்கு மாற்றாக வந்துள்ளது கருப்பை மாற்று அறுவை சிகிச்சை. இதன் மூலம் தானே தனக்குச் சொந்தமான கருவை சுமந்து, ஈன்றெடுக்கும் வாய்ப்பை பெண்கள் பெறுகின்றனர்.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம், சரிவர செயல்படாத கருப்பை, பாதிப்படைந்த கருப்பை அல்லது கருப்பையே இல்லாத பெண்களையும் கருத்தரிக்க வைக்கும் ஒரு செயல்முறை. இந்த செயல்பாட்டில், உயிருள்ள அல்லது இறந்த பெண்ணிடமிருந்து நல்ல நிலையில் கர்ப்பப்பையை எடுத்து பயனாளியின் உடலுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முறையானது, குழந்தையை தத்தெடுப்பது அல்லது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறைகளுக்கு சரியான மாற்றாக உள்ளது. இதில் முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். மற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் குறிப்பிட்ட உறுப்பை பயனாளியின் உடம்பில் மாற்றி, அது இயங்க ஆரம்பித்த நிமிடத்தில் அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விடுகிறது. ஆனால், கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை முறையை பொறுத்தவரையில், பயனாளி அதை 10 மாதம் நல்லபடியாக சுமந்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும்போதுதான் வெற்றியடைகிறது என்பது கவனம் பெற வேண்டிய விஷயம்.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை முறையானது, மருத்துவம் சார்ந்து மட்டுமல்லாது உளவியல் தாக்கங்கள், நெறிமுறைகள், தார்மீக, கலாச்சார கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளால் சூழப்பட்ட சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. மேலும், மற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நன்கொடையாளர் மற்றும் பயனாளியுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பார்கள். இதில், பயனாளி, நன்கொடையாளர், பயனாளியின் கணவர் மற்றும் பிறக்கப்போகும் குழந்தை என குறைந்தபட்சம் நான்கு பேர்களாவது சம்பந்தப்படுகிறார்கள்.’’

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை பற்றிய சில உண்மைகள்

பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல் இருப்பது, உறுதியற்ற அல்லது செயல்படாத கர்ப்பப்பை போன்றவற்றால், ஒரு பெண்ணிற்கு கர்ப்பப்பை மட்டுமே காரணியாக அமைந்து கருவுறாமை பிரச்னை இருக்கிறது. இந்தப் பெண்களும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற அனுமதிப்பதுதான் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செயல்முறை.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை யாரெல்லாம் செய்து கொள்ளலாம்?

1. சூலகங்கள் (Ovaries) மட்டும் இருந்து, கர்ப்பப்பை இல்லாமல் இருக்கும் பெண்கள். (இதற்கு MRKH Syndrome என்று பெயர்.)
2. கருப்பை நீர்க்கட்டிகள் அல்லது புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றிய பெண்கள்.
3. கருப்பை கோளாறுகள் அல்லது கருப்பை வளர்ச்சியற்ற (Hyplastic Uterus) பெண்கள்.
4. கதிர்வீச்சு வெளிப்பாடு மற்றும் கருப்பையக ஒட்டுதல்களால் ஏற்படும் சேதம் காரணமாக செயல்படாத கருப்பை கொண்ட பெண்கள்.
5. பிற உடல்ஆரோக்கியம் நன்றாக உள்ள, 18- 40 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்கள் (நிலையான துணைவர் உள்ளவர்கள் மட்டும்).

யாரெல்லாம் கர்ப்பப்பையை நன்கொடையாக தரலாம்?

1. உயிருடனோ அல்லது இறந்தவராகவோ, ஆனால், பயனாளியின் ரத்த சம்பந்தமான உறவினராக இருக்க வேண்டும்.

2. கொடையாளியிடம் இருந்து பெறப்படும் கர்ப்பப்பையானது, பயனாளியின் உடம்பு நிராகரிக்காத வண்ணம் இருக்குமாறு பல தேர்வு அளவீடுகளைப் பயன்படுத்தி சோதிக்கப்படும்.

3. 40-60 வயதுக்குட்பட்ட பெண்கள் கொடையாளியாக இருக்க வேண்டும்.

4. நல்ல ஆரோக்கியத்துடன் பிரசவித்த மற்றும் நிரந்தரமாக கருத்தடை செய்து கொண்ட 40 வயதுக்குட்பட்ட பெண்கள்.

5. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள பெண்கள்.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை எப்படி செய்கிறீர்கள்?

நன்கொடையாளரிடமிருந்து, அதன் ரத்த விநியோகத்துடன் கருப்பையானது அகற்றப்பட்டு மைக்ரோவாஸ்குலர் அனஸ்டோமோசிஸ் (Microvascular anastomosis) மூலம் பெறுநருக்கு இடமாற்றம் செய்யப்படும். இப்படி, மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு, பெறுபவர், கட்டுப்படுத்தப்பட்ட கருப்பை ஹைப்பர் தூண்டுதல் (Controlled Ovarian hyper stimulation) மற்றும் கரு முட்டை சேகரிப்புக்கு (Egg collection) உட்படுத்தப்பட வேண்டும்.

மேலும், IVF, ICSI மூலமாக பயனாளியின் கணவருடைய உயிரணுக்கள் மற்றும் பயனாளியின் கருமுட்டைகள் கிரையோ பிரிசர்வேஷன் (Cryopreservation) மூலம் இணைக்கப்படும். இப்படி உரமாக்கப்பட்ட கருமுட்டை மற்றும் உயிரணுக்கள், கருப்பையை வெற்றிகரமாக பயனாளிக்கு இடமாற்றம் செய்த பின்னர், கருப்பைக்குள் செலுத்தப்படும். மற்ற அறுவைசிகிச்சைக்கு ஆகும் நேரத்தைவிட, இதற்கு கூடுதல் நேரம் செலவாகும். குறைந்தபட்சம் 3 மணிநேரம் கூட ஆகலாம். இதை மிகத் துல்லியமாக செய்ய வேண்டும்.

கருப்பையை தானம் செய்பவருக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா?

கொடையாளிக்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காகவே, மகளிர் நல நிபுணர் மட்டுமல்லாது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரையும் உடன் வைத்துக் கொள்வோம். சர்வதேச கருப்பை மாற்று அறுவை சிகிச்சை சமூகத்தின் உறுப்பினர் ஒருவரையும் வரவழைப்போம். மற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் குறிப்பிட்ட உறுப்பு செயலிழந்து, உடலில் பிற பிரச்னைகளும் இருப்பவர்களுக்கு செய்வோம்.

ஆனால், இந்த அறுவைசிகிச்சையைப் பொறுத்தவரை கொடுப்பவரும் சரி, பெறுபவரும் சரி இருவரும் நல்ல உடல் ஆரோக்கிய நிலையில் இருப்பவர்கள் என்பதால், பிற நோய்த்தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரே ஒரு நாள் மட்டும் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்தால் போதுமானது.

இதுநாள் வரை கருப்பை இல்லாததால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்கள் வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொள்ளும் வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். இப்போது நம்நாட்டில் ‘வாடகைத்தாய் ‘ முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் வந்ததால், சொந்தங்களை மட்டுமே வாடகைத்தாயாக மாறலாம் என்று, கட்டுப்பாடான மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

கருப்பை மாற்று அறுவைசிகிச்சையும், ரத்த சம்பந்தப்பட்ட உறவினரிடம் மட்டுமே கருப்பை தானமாக பெற அனுமதிக்கிறோம். ஏனெனில், ரத்தம், மரபணு போன்றவை இருவருக்கும் ஒத்துப் போகவேண்டும். பெரும்பாலும், அந்தப்பெண்ணின் தாய்தான் கருப்பையை தானமாக கொடுக்க முன்வருகிறார். மெனோபாஸ் நிலைக்கு வந்த பெண்களோ அல்லது மெனோபாஸ் வரவில்லை என்றாலும், நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்த குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களும் கருப்பை தானம் தரலாம்.

‘வாடகைத்தாய்’ முறைபோல, தன் குழந்தையை பெற்றெடுக்க வேறொரு பெண்ணை நம்பியிருப்பதோ, அந்தப் பெண்ணின் மீது பிரசவ ஆபத்தைத் திணிப்பதோ இல்லாமல், தன் குழந்தையை தன் வயிற்றில் வைத்து கருப்பையிலேயே சுமக்கும் பாக்கியத்தை ஒரு பெண் பெறுகிறாள் என்ற வகையில் இது மிகவும் பாதுகாப்பானது” என்று சொல்லும் மருத்துவர் பத்மப்ரியா விவேக் இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் யூட்ரஸ் டிரான்ஸ்ப்ளான்டேஷன்(ISUTx) உறுப்பினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிகிச்சைக்குப்பின் கவனத்தில் கொள்ள வேண்டியவை…

1. கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் ஒரே நோக்கம் பெண்கள் தானே குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுவதாகும்.

2. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் IVF முறை மூலமாக மட்டுமே கருத்தரிக்க முடியும். இயற்கையான உடலுறவு மூலம் கருத்தரிக்க முடியாது.

3. கர்ப்ப காலம் முழுவதும் இவர்களை மருத்துவர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். ஏனெனில், பிரசவ நேரத்தில் இவர்களுக்கு வலியையோ வேறு பிறப்புறுப்பு சுருக்கங்கள் அல்லது பிற அறிகுறிகளையோ இவர்களால் உணர முடியாது.

4. விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக் கொண்டவுடன், கருப்பை அகற்றப்பட வேண்டும்.

5. இவர்களுக்கு சுகப்பிரசவம் சாத்தியமில்லை. சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த முறையில் பிறக்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளைப் போலவே ஆரோக்கியமாக வளரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சையில், கருப்பை மட்டுமே மாற்றப்படுகிறது, நரம்புகள் மாற்றப்படுவதில்லை. எனவே கருவில் குழந்தை வளர்ந்தவுடன் பிரசவ வலி ஏற்படாது. அதனால் குறிப்பிட்ட நாளை கணக்கிட்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடல் எவ்வளவு ஆழம் செல்கின்றது? (வீடியோ)
Next post சிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…!! (மகளிர் பக்கம்)