இனிதாய் கடக்கலாம் பிரீ மெனோபாஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 29 Second

ஒரு பெண் பேரிளம் பெண்ணாகப் பரிணமிக்கிறாள். பெண் தனது 35 வயதில் இருந்து நாற்பது வயதைக் கடப்பதற்குள் அவள் மனசுக்குள் ஒரு மலையைப் புதைப்பதற்கு இணையான மனப் போராட்டங்களைக் கடக்கிறாள்.

ஏன் இந்த மனப்போராட்டம் என்ற கேள்வியை அவளோடு வாழும் ஆண் எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறான் என்பதில் தான் அவளது மகிழ்ச்சி அடங்கியுள்ளது. பெண் பூப்பெய்தும் பருவத்தில் அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் கண்ணாமூச்சிகள் பிரீ மெனோபாஸ் சமயத்திலும் உண்டாகிறது. மாதவிடாய் நிற்பதற்கு முன்பான இந்தக் காலகட்டத்தை பெண்கள் இனிதாகக் கடப்பதற்கான ஆலோசனை வழங்குகிறார் மகப்பேறு மருத்துவர் டாக்டர் பிரேமலதா பாலச்சந்திரன்.

“அதுவரை வீட்டில் ஒவ்வொருத்தருக்காகவும் பார்த்துப் பார்த்துச் சமைத்த பெண் நானே தான் எல்லாம் செய்யணுமா என்ற கேள்வியை எழுப்புவாள். இந்த வீட்டில் என்னை யாருமே புரிஞ்சுக்கலை, எனக்கு யாருமே உதவறதில்லை” என்ற புலம்பலைக் கொட்டித் தீர்ப்பாள். வழக்கமான அம்மா தானே இதை செய்து வந்தாங்க… இப்போ ஏன் இப்படிப் பேசுகிறாள் என்ற குழப்பத்துடன் மற்றவர்கள் கடந்து செல்வார்கள். தாம்பத்யத்தைக் கூடத் தள்ளிப் போடுகிறாளே என்ற வியப்பு கணவனுக்குள். அன்பு மிகுந்த அந்தப் பெண்ணை அதிகபட்சக் குழப்பங்களுக்கு உள்ளாக்கும் காலகட்டம் தான் பிரீ மெனோபாஸ்.

பிரீ மெனோபாஸ் துவக்கத்தில் உண்டாகும் மாதவிடாய் பிரச்னைகள்?

பிரீ மெனோபாஸ் துவக்கத்தில் மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகம் இருக்கும். இதனால் பெண்கள் அதிகச் சோர்வாகக் காணப்படுவார்கள். ரத்த சோகை பாதிப்பும் ஏற்படும். இதற்கு மகப்பேறு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அதிக சோர்வில் இருந்து விடுபட பழங்கள், நட்ஸ் மற்றும் ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகமாக இருந்தால், எடைக் குறைப்பில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைக் குறைக்க முடியும். கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து அதில் பிரச்னைகள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கிற்கு சிகிச்சை மூலம் தீர்வுகாணலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும் மனநலப் பிரச்னைகள்?

பிரீமெனோபாஸ் காலத்தில் ஹார்மோனில் அதிகளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. இதனால் பெண்ணின் மனநிலையிலும் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். இதனால் மனக்குழப்பம், மனச்சோர்வு, மன அழுத்தம் காணப்படுகிறது. வீட்டில் உள்ள ஆண் மற்றும் குழந்தைகள் அவளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் மகப்பேறு மருத்துவரைச் சந்திக்கும் போது கணவரையும் அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம். பிரீ மெனோபாஸ் காலகட்டப் பிரச்னைகள் மற்றும் அதைக் கடக்க உதவவும் மருத்துவர் கணவருக்கும் ஆலோசனை அளிப்பார்.

மன நலப் பிரச்னைகள் அதிகளவில் இருப்பின் பெண்கள் மனநல சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் மனநலச் சிக்கல்களில் இருந்து வெளியில் வர தனக்குப் பிடித்த புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். தோழிகளுடன் பேசுவது, வெளியிடங்களுக்குச் செல்வது என தனது மனக் குழப்பங்களை பகிர்ந்து கொண்டு மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

தாம்பத்யக் குழப்பங்களில் இருந்து பெண்களை எவ்விதம் மீட்கலாம்?

மாதவிடாய்க் கால அதிக ரத்தப்போக்கு, அதனால் உண்டாகும் மனச்சோர்வினால் பெண்களுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் குறையலாம். ரத்தசோகையினாலும் ஆர்வம் குறையலாம். பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்படும் உலர்வின் காரணமாகவும் பெண்களுக்கு தாம்பத்ய உறவில் விருப்பமில்லாமல் போகலாம். உடல் நலத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பெண்கள் தங்களது எடையைக் குறைத்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம். பிறப்புறுப்பு உலர்வைச் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். தாம்பத்ய உறவில் உண்டாகும் சிக்கலுக்கு கவுன்சிலிங் கைகொடுக்கும்.

பிரீமெனோபாஸ் காலகட்டத்தை இனிதாகக் கடக்க பெண்கள் பின்பற்ற வேண்டியவை?

ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவரின் ஆலோசனைப்படி பெண்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறியும் பேப்ஸ்மியர் டெஸ்ட், மார்பகப் புற்றுநோய் கண்டறிவதற்கான மேமோகிராம் பரிசோதனைகளும் ஆண்டுக்கு ஒரு முறை அவசியம். தேவைப்பட்டல் பெண்கள் கால்சியம், வைட்டமின் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். சத்தான உணவு, உடற்பயிற்சி, எடைக் கட்டுப்பாடு என தனது ஆரோக்கியத்தைக் காப்பதில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தனது மனக்குழப்பங்களை நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டு ரிலாக்ஸ்டாக இருக்கலாம். இவைகளைப் பின்பற்றினால் பிரீமெனோபாஸ் காலகட்டத்தை எந்தப் பெண்ணும் இனிதாகக் கடக்கலாம். தனக்குப் போதிய அன்பும், ஆதரவும் கிடைக்கும் போது பிரீமெனோபாஸ் காலத்தில் உள்ள பெண் தான் புதிதாகப் பிறந்ததாக உணர்கிறாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை தன்னைப் பற்றி யோசித்து தனக்கான நேரத்தை ஒதுக்கி பேரிளம் பெண்ணுக்கான பூரண அழகில் முழுநிலவாக ஜொலிப்பாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்!! (மகளிர் பக்கம்)
Next post காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)