தென்னிந்திய மக்கள் நாடக விழா!! (மகளிர் பக்கம்)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும், சென்னை கேரள சமாஜமும் இணைந்து தென்னிந்திய மக்கள் நாடக விழாவைச் சமீபத்தில் அரங்கேற்றினர். ஆளுமைகளின் வளாகம், அரங்கம், படத்திறப்பு, நாடக அரங்கேற்றம் என விழாக்கோலம் பூண்டிருந்தது. ‘‘கடவுளின் தேசம் கேரளா என்பார்கள். அது நாடகங்களின் தேசமும் கூட. அங்கு மாவட்ட அளவில் கூட நாடக விழா நடக்கிறது. அந்த குறையை இந்த நாடக விழா ஈடு செய்யும். 1979ஆம் ஆண்டு முதல் நான்கு நாடக விழாக்கள் தான் தமுஎகச நடத்தியுள்ளது.
அதிலிருந்து மாறுபட்டு தென்னிந்திய மக்கள் நாடக விழா இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது. நாடகக் குழுக்களிடையே ஒரு வலைப் பின்னலை உருவாக்க, பல மொழி, தனித்த அடையாளம் ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கவே இந்த விழா” என்றார் விழாக்குழுச் செயலாளரும், நாடகவியலாளருமான பிரளயன். “நாடக விழா நடக்கும் இந்த அரங்கை சுற்றியுள்ள எளிய மக்களின் குடியிருப்புகளுக்குச் சென்று அழைத்தோம். கதவுகள் திறந்து வைத்தோம். தயங்கிய மக்களைத் வாருங்கள் என்று அழைத்தோம்.
குடியிருப்பு வாசிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் குவிந்தனர். இதுவே விழாவின் வெற்றி. கலை யாருக்கானதோ அவர்களிடமே நிகழ்த்துகிறோம்” என்றார் விழாக்குழுத் தலைவரும், திரைக்கலைஞருமான ரோகிணி. “குறு- பெரிய நாடகங்கள், புதியவர்கள் மேடை ஏற்றிய நாடகங்கள், ஓராள் நாடகங்கள் அரங்கேறின. இதில் மக்களுடைய வாழ்க்கையை, வலிகள், அவர்கள் கடந்து செல்லக் கூடிய பாதையைப் பற்றியும் எடுத்துக் கூறக் கூடிய கலாபூர்வமான நாடகங்களை பிரளயன் தேர்வு செய்தார்.
கலை வடிவங்களில் மக்களின் குரலாக இந்த நாடகங்கள் மேடையில் அரங்கேற்றப்பட்டன. கலை பண்பாட்டு மையம், தென்னக பண்பாட்டு மையம் எங்களோடு கை கோர்த்து செயல்பட்டார்கள். இந்த நிகழ்வை மக்கள் மத்தியில் கொண்டு போக வேண்டுமென்ற முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்றார். விழாவில் சிறப்பாளராக பங்கேற்ற டி.எம் கிருஷ்ணா “எல்லா குரலும் ஒத்துப் போக வேண்டும் என்ற அவசியமில்லை. மோதலில்தான் சமூகம் வளரும். கேள்வி கேட்க வேண்டும்.
சிந்தனைகள் மோத வேண்டும். இதுதான் கொண்டாட்டம். வெவ்வேறு சிந்தனைகளும், கேள்விகளும் மோதும்போதுதான் நிஜமான ஜனநாயகம் நிலவும். சமூகம் முன்னேறும்” என்றார். திரைப்பட இயக்குநர் ப.ரஞ்சித், “தமிழகத்தில் ஒரு நாடகப்பள்ளி கூட இல்லை. அரசு செய்ய வேண்டியதைத் தனிப்பட்ட நபர்களும், அமைப்புகளும் செய்ய வேண்டியுள்ளது. தமிழக அரசு இனியாவது கலைகளைக் கலைஞர்களை ஊக்கப்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். கலை இல்லையென்றால் சமூகம் இல்லை” என்றார்.
நாடகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் நாசர், “நவீன நாடகக் குழுக்களின் அணுகுமுறை வேறாக இருக்கலாம். இலக்கு ஒன்றாக உள்ளது. இதுதான் தருணம். அனைவரும் ஒரே தளத்தில் நின்று இயங்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். அந்த வழியில் ஒன்றிணைவோம். எதிர்கால கடமையாக நாடக விழாவைக் கருதுவோம்” என்றார்.
நம்மைச் சுற்றி மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. கலை இலக்கிய வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இதில் நேரில் பார்த்து, தொட்டுணரக்கூடிய கலையாக நம்மிடையே எஞ்சியிருப்பது நாடகக் கலை மட்டுமே. இந்த மாற்றங்களை நாடகக்கலையானது எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை அறிந்து கொள்கிற ஓர் அனுபவமாக இந்நாடகவிழா அமைந்தது.
Average Rating