காதாபாத்திரத்திற்கு ஏற்ப மாறணும்…!! (மகளிர் பக்கம்)
தமிழ் சினிமாவும் காமெடி நடிகரும் இணைபிரியாத ஒன்று. இந்த துறையில் ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை என்பது சொல்லப்படாத விதி. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு காமெடி நடிகர் தங்களுக்கான ஒரு தளத்தை பதித்துவிட்டு செல்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் பல நடிகர்கள் இருந்தாலும், ஒவ்வொருவரும் தனித்துவமாக தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ். இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லை, குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என எந்த கதாபாத்திரத்திலும் தனக்கான ஒரு சிறப்பு முத்திரை பதித்து வருகிறார்.
காமெடி நடிகர் சதீஷ் எட்டு வருடங்களுக்கு மேலாக கிரேஸி மோகன் நாடக ட்ரூப்பில் உதவியாளராக பணிபுரிந்தவர். இவர் முதன் முதலில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘பொய் சொல்ல போறோம்’ என்ற படத்தில் வசன உதவியாளராக பணிபுரிந்தார். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியன் கதாப்பாத்திரம் ஏற்று நடித்தார்.
சதீஷ்?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலம் அருகில் உள்ள இளம்பிள்ளை என்ற ஊர். சின்ன வயசில் இருந்தே எனக்கு சினிமா மேல் ஈர்ப்பு இருந்தது. ஊர்ல இருக்கும் போதே நான் டிராமா போடுவேன். அதுக்கான ஸ்கிரிப்ட் கூட எழுதுவேன். அது தான் என்னுடைய சினிமாவின் அடித்தளத்திற்கு முக்கிய காரணம்னு கூட சொல்லலாம்.
நாடகத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட காரணம்?
நான் ஊருல இருக்கும் போதே டிராமா எல்லாம் போடுவேன். அதன் பிறகு மறைந்த காமெடி நடிகர் கிரேஸி மோகன் அவர்களின் நாடக குழுவில் சேர எனக்கு வாய்ப்பு கிடைச்சது. ஒரு நாள் நாடகத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்க கூடிய நடிகரால வரமுடியாம போயிடுச்சு. சின்ன கதாபாத்திரம் என்றாலும் அவ்வளவு பெரிய கலைஞருடன் மேடையில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைச்சது. எனக்கு நடிப்பு மேல ஆர்வம் இருந்ததால, அந்த கதாபாத்திரத்தின் டயலாக் எல்லாவற்றையும் நான் மனப்பாடம் வேறு செய்து இருந்தேன்.
அந்த சமயத்தில் யாரை அதில் நடிக்க வைக்கலாம்னு பார்த்த கிரேஸி மோகன் அவர்கள் என்னை நடிக்க சொன்னார். வருகிற வாய்ப்பை அப்படியே பிடிச்சுக்கிட்டேன். அதன் பிறகு யாராவது வரலைன்னு தெரிஞ்சா உடனே அவங்களின் டயலாக்கை பேசி மனப்பாடம் செய்ய ஆரம்பிச்சிடுவேன். ஆனால் என் நடிப்பை பார்த்த பிறகு தான் அவருக்கு என்னாலும் நடிக்க முடியும்ன்னு என் மேல நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த முறை ஏதாவது பெரிய ரோல் தருவதாகவும் சொன்னாங்க.
சினிமா பிரவேசம்…
நாடகத்தில் அவ்வப்போது நானும் எனக்கான முத்திரையை பதிவு செய்ய ஆரம்பிச்சேன். அதை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வாய்ப்புகள் வர தொடங்கியது. ‘பொய் சொல்ல போறோம்’ படத்தில் வசன உதவியாளராக எழுத வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ‘மதராஸபட்டினம்’ படத்தில் வேலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. அந்த சமயத்தில் தான் ‘தமிழ்ப்படம் 1’ படம் ஷூட்டிங் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அந்த படத்தின் கேமராமேன் என்னுடைய நண்பர் என்பதால், அவர் மூலம் அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.
அதில் என்னுடைய கதாபாத்திரம் எல்லாராலும் பரவலாக பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு தான் மதராஸபட்டினம் படம் ரிலீஸ் ஆனது. இதற்கிடையில் ஒரு குறும்படத்திலும் நடிச்சேன். அட்லி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்போது தான் நான் அவரை முதல் முறையா சந்திச்சேன். அன்று முதல் நானும் சிவகார்த்திகேயனும்
நல்ல நண்பர்களானோம்.
தற்போதைய படங்கள்?
இப்ப ‘சிக்சர்’ படத்தில் நடிச்சி இருக்கேன். நல்லா போயிட்டு இருக்கு, அடுத்து லட்சமணன் இயக்கத்தில் ஜெயம் ரவியோடு இருபத்து ஐந்தாவது படத்தில் நடிக்கிறேன். ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன், டைரக் ஷனில் கார்த்தி நடிக்கும் படம், அடுத்து ஆரியாவுடன், டிக் டிக் டிக், சக்தி சௌந்திரராஜன் டைரக் ஷனில் ‘டெடி’ படம். அடுத்து உதயநிதியுடன், ‘கண்ணை நம்பாதே’, சசிகுமார் நடிக்கும் ‘ராஜவம்சம்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். ஜீவாவோடு ‘சீறு’, எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும், ‘ஆயிரம் ஜென்மங்கள்’, எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வந்த் நடிக்கும், ஸ்ரீகார்த்திக் டைரக் ஷனில் அந்த படம். ‘சுகர்’ல் சிம்ரன், திரிஷா இரண்டு பேருடன் சேர்ந்து நடிக்கிறேன்.
டைமிங் காமெடி டிரெண்ட்…
கிரேஸி மோகன் அவர்களின் நாடகத்தில் பார்த்தீங்கனா டயலாக் எக்ஸ்ட்ராடினரியா இருக்கும். இன்றைய திரையுலகில் டைமிங் காமெடி தான் பெரிய லெவல்ல இருக்கு. அந்த காலத்தில் பஞ்ச் டயலாக் நடிகர் கவுண்டமணி அவர்கள் பேசும் போது, டைமிங் காமெடி எல்லாமே பாடிலேங்வேஜுடன் நிறைய பஞ்ச் டயலாக்கும் சேர்ந்து வரும். திரையுலகில் காமெடி நடிகர்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. என்.எஸ்.கே அவர்கள் காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொருவரும் அவர்களுக்கு என ஒரு தனி முத்திரையை பதித்துதான் இருக்காங்க.
ஒரு சிலர் காமெடியனாக அறிமுகமாகி இப்போது ஹீரோவாகவும் நடிக்கிறாங்க. எந்த நடிகராக இருந்தாலும் அவர்கள் காமெடி நடிகனாகவே இருந்தாலும், அதைத்தாண்டி வேறு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது, அதற்கான பயிற்சி எடுப்பது மட்டும் இல்லாமல் அந்த கதாப்பாத்திரம் நமக்கு பொருந்துமான்னு பார்த்து தேர்வு செய்யணும். அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டால் எந்த கதாபாத்திரத்திலும் நம்மால் மிளிர முடியும்.
உங்க ரோல் மாடல்?
சத்தியமா கவுண்டமணி சார்தான். அவர் எது பண்ணினாலும் நடித்தாலும், பேசினாலும், எல்லாமே காமெடியாக எனக்கு தெரியும். அவரை என் ரோல் மாடலாக சொல்வதில் எப்பவும் எனக்கு பெருமை.
எங்க வீட்டு தீபாவளி…
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி எப்படி தீபாவளியை கொண்டாடினேனோ அப்படித்தான் இன்றும் கொண்டாடுகிறேன். தீபாவளி எங்க வீட்டில் ரொம்ப முக்கியமான பண்டிகை. எனக்கு மட்டும் இல்லை, இந்தியா மட்டும் இல்லை உலகமெங்கும் உள்ள மக்கள் அனைவரும் இந்த பண்டிகையை விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். அன்றைக்கு அதிகாலையில் எழுந்து தலையில் எண்ணை வைத்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிச்சு, பூஜைக்கு பிறகு அம்மாவின் கைபக்குவத்தில் செய்யும் பலகாரத்தை சாப்பிடுவதுன்னு அன்றைய நாள் மிகவும் கொண்டாட்டமா இருக்கும்.
வீட்டில அம்மா செய்யற இனிப்பில் எனக்கு பிடித்த ஸ்வீட்ஸ் ஜாங்கிரி, அதிரசம், மைசூர் பாகு, பாதுஷா. நான் மட்டுமல்ல, எங்க வீட்டில் எல்லாருமே விரும்பி சாப்பிடுவோம். தீபாவளி அன்று எங்களின் வீட்டில் உறவினர்கள் வந்த வண்ணம் இருப்பாங்க. அன்று இனிப்பும் கொண்டாட்டமாக இருக்கும்.
கல்யாணம்…
பொண்ணுப் பாக்கிற படலம் வீட்டில ஆரம்பிச்சுட்டாங்க. என்னுடைய கல்யாண பொறுப்பை முழுசா நான் அம்மா, அப்பாக்கிட்ட கொடுத்துட்டேன். கூடிய விரைவிலேயே நல்ல செய்தியை சொல்றேன்.
அறிவுரை…
தினசரி பத்திரிகை படியுங்கள், சினிமாவை தியேட்டருக்கு சென்று பாருங்க… அது எங்களுக்கு நல்லது. அப்புறம், தண்ணீரை சேமியுங்கள் அது நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது.
Average Rating