ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்களின் அபிலாசைகள்!! (கட்டுரை)
இலங்கை, தேர்தல் ஜனநாயக ஆட்சியில் ஒரு முக்கியமான தேர்தலாகக் கருதப்படும் சனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்கின்றது. இத்தேர்தல் எவ்வாறு நாட்டுக்கு முக்கியமானதோ அது போலவே சர்வதேசத்துக்கும் முக்கிமானது. எனவேதான் பல நாடுகள் இத்தேர்தலில் முதலீடு செய்து தாக்கம் செலுத்துகின்றன. இலங்கையின் பல தேர்தல்களை மக்கள் அல்லாமல் வெளிநாட்டு சக்திகளே தீர்மானித்துள்ளன. அதுபோலவே இத்தேர்தலும் அமையும். எனவே ஜனாதிபதித் தேர்தல் மக்களுக்கானதல்லாமல், இது அதிகாரத்திலுள்ளோருக்கானது என்றால் மிகச்சரியாக இருக்கும்.
இந்தத் தேர்தல் சாதாரண மக்களுக்கு எதையும் வழங்கப்போவதில்லை மாறாக கடன்சுமை, வரிச்சுமை, சுரண்டல், வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, ஊழல், என மக்கள் பிரச்சினையில் எவ்விதமான மாறுதலும் இருக்கப் போவதில்லை. ஆனாலும் சிலர் தமது இருப்பு, தமக்கான இடம், பலத்துக்காக வெற்றி போதையில் கனவு வாழ்வில் ஆகாயத்துக்குக் குதிக்கின்றனர்.
அதுபோலவே 2010, 2015ஆம் ஆண்டுகளிலும் நடந்தன பின் ஓய்ந்தன என்றாலும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், போராடுவதற்கானச் சூழலைத் தக்கவைக்கவும் மக்களின் அதிகாரம் எனும் கருத்தேற்பை ஞாபகமூட்டவும் இத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல், சற்று வித்தியாசமான புதுமுகங்களைக் கொண்ட, பல பேரின் போட்டியால் சூடுபிடித்துள்ளதைக் காணலாம் ஆனாலும் பல சிக்கல்களையும் மர்மங்களையும் கொண்டுள்ளது என்பதை மக்கள் உணர வேண்டியவர்களாக உள்ளோம். வழமைப்போலவே வானைக்கிழிக்கும் வாக்குறுதிகளுக்கு மத்தியில் மக்களை நனைத்து பின் நினைவுகளை இழந்துத் திரியும் போது, இதோ தேர்தல் திகதியும் வந்துவிட்டது. இந்த நிலையில் மலையக மக்களின் அபிலாசைகள் இந்தத் தேர்தலில் எவ்வளவாக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித்துக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோட்டபாயவுக்கும் தமது ஆதரவை வழங்கி வருகின்றன. அவர்கள் மலையக மக்கள் சார்பாகக் கோரிக்கைகளை, நிபந்தனைகளை முன்வைத்ததாகக் கூறினாலும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்தவிதமான கோரிக்கையும் உள்வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
கோட்டபாய Vat வரியைக் குறைத்து, 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாகக் கூறியதாக இ.தொ.கா கூறுகின்றது என்றாலும் Vat குறைத்தால் அரசாங்கத்தின் வருமானம் குறையும். இது இவ்வாறிருக்கையில், அரசாங்கம் எவ்வாறு மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்கப் போகிறது? எவ்வாறு மலையக தோட்டத் தொழிலாளருக்கு 1,000 ரூபாய் வழங்கப்போகின்றது எனத் தெரியாது. இது பொய்யான, விஞ்ஞான ரீதியாக சாத்தியமற்ற கூற்று. மறுபக்கம் சஜித் 1,500 ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறுகிறார். அவர் நவீன் திஸாநாயக்கவுடன் பயணிக்கிறார். இலங்கைத் தேயிலைச் சபையிலிருந்து 50 ரூபாயைத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது எனவும் அவ்வாறு திறைசேரியில் பணம் ஒதுக்கினால் அமைச்சிலிருந்து விலகுவேன் எனக் கூறியவர் எவ்வாறு இதை செய்யவிடுவார் என்றநிலை இருக்கும் போது, த.மு கூட்டணியில் இரண்டு கபினட் அமைச்சர்கள் இருந்தும் செய்யமுடியாததை எவ்வாறு செய்வார்கள் என்பது கேள்விக்குறி.
எவ்வாறானபோதிலும் சஜித் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஒருநாள் தனிநபர் வருமானத்தை 1500ரூபாய- பெறக்கூடியதாக Out grower முறைப்படி செய்வதாகவும் சிறுதோட்ட உரிமையாளர்களை ஊக்குவிக்கும் திட்டம் பற்றியே கூறியுள்ளார். இவை நவினின் திட்டங்கள்.
சஜித்தின் வீடமைப்பு அமைச்சின் கீழ் 20 பேச்சில் காணி வழங்கப்படுவதுடன் ஒப்பனையும் வழங்கப்படுகின்றது என்றாலும் மலையக மக்களுக்கு 7 பேச் காணியே வழங்கப்படுகின்றது. இது பாரபட்சமான ஒரு விடயம். ஆனால் மலையகத்தில் வீடமைப்பு அதிகார சபைகள், இன்னும் ஒப்பனைகளை வழங்க சஜித் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
7 பேர்ச் எனக் கூறி 4 பேர்ச் காணியும் தரமில்லாத கட்டுமானமும் பாதுபாப்பில்லா வீடமைப்புத் திட்டமும் மலையகத்தில் Plantation Human Development Trust அமைப்பால் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இது அரசாங்கமும் தனியார் தோட்ட நிர்வாகத்தின் கூட்டமைப்பு. இதில் வீடுகள் கடடுமானத்தில் மோசடியும் அரசியல் இலாபமும், மக்கள் பணம் கொல்லையடிக்கப்படுகின்றது என்றாலும் முதற்றடவையாக வீட்டுத்திட்ங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டன. வீட்டுத் திட்டங்கள் பல இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டம். இதை வைத்துத்தான் த.மு.கூ அரசியல் நடத்துகிறது.
மலையக மக்களின் அபிலாஷைகளாக இளைஞர் வேலைவாய்ப்பு, பெருந்தோட்ட மீள்நடுகை, தொழில் பாதுகாப்பு, வீட்டுரிமை 20 பேர்ச் காணி, கல்வி அபிவிருத்தி, பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகள் என பல இருந்தாலும் தேசிய மட்டத்தில் ஜனநாயகம்- பாசிசம் எனும் இரண்டுக்கும் இடையிலான தேர்தலாக ஜனாதிபதித் தேர்தல் பார்க்கப்பட்டாலும், மலையகத்தில் சாதியத்தை மையமாகக் கொண்டும் யாருக்கு அதிகமான வாக்கு எனும் சுயநலமான குறுகிய நோக்கம் கொண்டதாகக் காணப்படுகின்றது.
2015ஆம் ஆண்டுக்கு பிறகு, மலையகத்தில் போதைபொருள் பாவனை அதிகரித்துள்ளது. அது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சரால் கொண்டுவரப்படுவதாக ஒளடதங்கள் அதிகாரசபை கூறுகின்றது. எனினும் மக்கள் வீட்டுத்திட்டத்திலும் சம்பள பிரச்சினையிலும் தமது கவனத்தை செலுத்துவதால் ஏனைய பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகின்றன.
மலையகப் பெருந்தோட்டம் காடாகி வரும் நிலையில், இதுபற்றி எந்தவிதத் திட்டமும் இருவரிடமும் இல்லை மாறாக சிறு தோட்டங்களுக்கே முக்கியத்துவம் அழிக்கப்படுகின்றன. தோட்டங்கள் தனியாரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் காடாகி வருகின்றன. மீள்நடுகையில்லை, தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. வேலைவாய்ப்புக்கள் அல்லாமல் போய், மக்கள் போதியளவு பாதுகாப்பின்றி தினமும் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இளைஞர்கள் கல்வியை கைவிட்டு நகர்புறங்களில் அடிமைகளாக வாழ்கின்றனர். தோட்டங்கள் மூடப்பட்டு மரநடுகை நடைபெறுகின்றது. மலையக இனப்பரம்பல் உடைக்கப்பட்டு தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
இரத்தினபுரி கலவான தோட்டமக்கள், அரச பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் காணப்படும் மக்கள் கம்பஹா, களுத்துறை, காலி, ஏனைய ஐதாக வாழும் மலையக மக்கள், சிங்கள பேரினவாத தாக்குதலுக்குள்ளாகும் சமபவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. தோட்டங்கள் பல தனியாருக்கு விற்கப்பட்டதன் பிறகு, தனது உடலை புதைக்கக்கூட அனுமதியில்லாது, உடலை தான் வாழ்ந்த வீட்டில் வைக்க உரிமையில்லாதவர்களாக மலையக மக்கள் இன்னும் ஓர் தேசிய இனமாக அங்கிகர்க்கப்படாத ஓர் இரண்டாந்தர பிரஜையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஜனாதிபதி தேர்தலிலும் மலையக மக்களின் அபிலாசைகள் எவையும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் சேர்க்கப்படவும் இல்லை அதற்கு மலையகத் தலைவர்கள் யாரும் முனையவும் இல்லை. எனவே 32 அம்சக் கோரிக்கை என்பன பொய்யான தமது கடசியின் திட்டமாகவே இ.தொ. கா வைத்துக்கொண்டுள்ளது. இலங்கையின் இரண்டு பிரதான வேட்பாளர் போலவே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரின் தேர்தல் விஞ்ஞானபனம் மலையக மக்களை தேசிய இனமாக ஏற்கவில்லை.
இந்த நிலையில், மலையக மக்கள் சிந்திக்கவேண்டிய முக்கிய இடத்தில் இருக்கின்றோம் 1978, 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015 என ஜனாதிபதி தேர்தல்களிலும் வெறும் வாக்காளர்களாக இருந்திருக்கிறோமேயொழிய, அவற்றில் ஏதேனும் சலுகைகளைப் பெற்றிருக்கின்றோமேயொழிய, உரிமை அரசியலை இன்னும் மலையக மக்கள் செய்யவில்லை.
எனவே எதிர்கால இளைஞர் சமுகத்திடமும், சமுக ஆர்வலர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு முன்னால் மிகப்பெரிய உரிமையரசியலுக்கான இடைவெளி உள்ளது. அதனை மய்யமாகக் கொண்டு மக்களுக்கான அரசியல் செய்ய முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
Average Rating