புகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை!! (மருத்துவம்)
பத்தியம் இருப்பவர்கள் உண்ணகூடாத கீரை என்று அகத்தி கீரையை குறிப்பிடுவர். ஏனெனில் தன்னுள் இருக்கும் அதீதமான சக்திகளால் இது மருந்தின் வீரியத்தை குறைத்து விடுகிறதாம். இக்கீரை 63 சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. சுண்ணாம்பு சத்தை அதிகமாக கொண்டது. கண்பார்வை, நினைவாற்றலை பேணுவதற்கு அகத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்தி கீரையை தொவரன் வைக்கும்போது புழுங்கலரிசியை வறுத்து பொடிசெய்து கலந்தால் கீரையின் கசப்புதன்மை விலகும்.
சத்துகள்
ஈரப்பதம் – 73 சதம், புரதச்சத்து – 83 சதம். தாதுஉப்புக்கள் – 3.1 சதம், நார்ச்சத்து – 2.2 சதம், மாவுச்சத்து – 12 சதம், கொழுப்புச்சத்து – 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் – ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் – சி போன்றவை அடங்கியுள்ளன.
அகத்திக்கீரை கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும். கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.
குழம்பு வைக்கும் போது தாளிதத்துடன் கறிவேப்பிலைக்கு பதிலாக அகத்தியை சிறிது வதக்கி சேர்த்தால் உடல்சூடு, வாய்ப்புண், வயிற்று புண் அகலும். மலேசியாவை தாயகமாக கொண்ட அகத்தி இந்தியாவில் ஈரப்பசை அதிகமுள்ள நிலங்களிலும், களிமண் நிலத்திலும் செழித்து வளரும். நான்கு வகைகள் கொண்ட அகத்தியில் வெள்ளை பூ பூக்கும் அகத்தியே மனிதன் உண்ண தகுந்தது. மற்ற வகைகள் அபூர்வம் என்றாலும் அவை கால்நடைகளுக்கே உணவாக பயன்படுகின்றது.
புகையிலை உபயோகிப்போர் நிகோடின் நச்சுவால் பாதிக்கப்பட்டால் அதனை களையும் சக்தி அகத்திக்கு உண்டு. நீராகாரம் பருகும் பழக்கமுடையவர்கள் அகத்தி கீரை சமையலாகும் நாட்களில் கீரை, ரசம், நீராகாரம் மூன்றையும் கலந்து பருகுவர். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல், நீரடைப்பு நிவாரணமடைவதுடன் உடலின் நச்சு நீர்கள் முறிவடைகின்றன. எனினும் மாதத்துக்கு இருமுறை மட்டுமே உண்ணவல்லது அகத்தி.
இலைச்சாறும் நல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
Average Rating