பொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு!! (கட்டுரை)
“இலங்கையில் இன்னும் ஜனநாயகக் கட்டமைப்பு முழுமையாகக் கட்டியெழுப்பப்படவில்லை. 1948இல் கிடைத்த சுதந்திரம் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. நாட்டில் பெயருக்கு மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது. அதன் பெயரால் ஆட்சிக்கு வருபவர்கள் நாட்டை உண்டு வயிறு வளர்க்கிறார்கள்” என்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க.
ஜனநாயகம் முழுமைபெறாத நிலையில், எல்லையில்லா அதிகாரங்களைக் ெகாண்ட ஜனாதிபதி பதவிக்கு, புத்திசாதுரியமற்ற ஒருவரைத் தெரிவுசெய்வது ஆபத்தானது. தேசிய பாதுகாப்பு என்பது இராணுவத்தை வீதியில் நிறுத்துவது அல்ல. மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலமே அதனைச் செய்ய முடியும் என்றும் திருமதி சந்திரிகா குமாரதுங்க வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான தீர்மானத்தை மேற்கொண்டிருக்கும் அவர், தாம் மேற்கொண்ட அந்தத் தீர்மானத்தை இந்தப் பேட்டியில் விளக்குகிறார்.
“நீங்கள் தான் இலங்கை வரலாற்றில் ஓர் உருப்படியான, காத்திரமான தீர்வுத்திட்டத்தை வழங்கியதாகச் சொன்னார்கள். அதனைப் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்த்தது. அவ்வாறான கட்சியுடன் இணைந்து கொண்டு நீங்கள் தற்போது தமிழ் மக்களுக்கு வழங்கும் உறுதிமொழி என்ன?”
“உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கவில்லை. அரியதொரு பொன்னான வாய்ப்பினை அவர்கள் சீர்குலைத்தார்கள். ஆனால், ராஜபக்ஷ பதவிக்கு வந்ததும், ரணில் விக்கிரமசிங்க என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டுச் சொன்னார், அந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் உங்களுக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும் என்று. ஆகவே, மனிதர்கள் மாறுவார்கள் என்பதை உணரக்கூடியதாகவிருக்கிறது. கடந்த ஐந்தாண்டு காலமாக அவர்கள் அரசியலமைப்பை மாற்றுவதற்குக் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டார்கள். அவர்கள் மாறியிருக்கிறார்கள். எமது ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தாலும், எமது தரப்பினரின் வாக்குகளைப் பெற்றுக்ெகாடுக்க எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. இறுதியில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்று கூறுகிறேன் என்று என்னைத் திட்டினார்கள்.
கடைசியாக நான் சொன்னேன், நீங்கள் விரும்பாவிட்டால், உங்களின் அதிகாரங்களை இழக்க வேண்டாம் என்று கூறினேன். அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதுடன் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். எனக்குத் தேவையாக இருந்தது இரண்டாவது விடயம். இந்த நாட்டில் ஏனைய இன, மத மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாகவிருந்தது. அதற்காக என்னைத் திட்டித் தீர்த்துக் ெகாண்டிருந்தார்கள். “என்ன மேடம் உங்களுக்கு விசரா? என்றுகூடக் கேட்டார்கள்! எமது தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததாலேயே அரசியலமைப்பு விடயத்தைப் பூர்த்திசெய்ய முடியாமல் போனது என்ற உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். சரியான தலைமைத்துவம் இல்லாததன் விளைவுதான் இது. ஐந்து வருடங்களைப் பற்றி மட்டுந்தான் நான் பேசுகிறேன்.
மனிதர்கள் மாற்றமடையக்கூடும். ரணில் போன்றோர் எனக்குச் செய்தவற்றைப் பார்த்தால், அவர்களுடன் என்னால் ஒன்றாக அமரவே முடியாது. ஆனால், அவர்கள் தற்போது தங்களை மாற்றிக்ெகாண்டுள்ளார்கள். நான் ஒரு நல்ல பௌத்தர் என்ற வகையில், மனிதர்கள் தங்களை மாற்றிக்ெகாள்வார்கள் என்று நம்பிக்ைக கொள்ள முடியும். நானும் நிலைமையை மிக உன்னிப்பாக அவதானித்துக்ெகாண்டிருக்கின்றேன். எனவே, ஜனநாயக ரீதியாக அவர்கள் என்ன செய்வார்கள் என்று ஊகித்துக்ெகாள்ள முடியும். ஆனால், நூற்றுக்கு நூறு வீதம் என்னால், உறுதி வழங்க முடியாது.
அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்ெகாள்ளவும்கூடும். எனக்கு என்னுடைய நிலைப்பாட்டைச் சொல்ல முடியும். உண்மையில் 2015இல் நான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் கூறினேன், எமக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தபோது, அரசியலமைப்பு மறுசீரமைப்பைச் செய்வதாக ஓர் உடன்படிக்ைகயைக் கைச்சாத்திடுமாறு கூறினேன். அரசியலில் அவர்களுக்கிருந்த அர்ப்பணிப்பின் காரணமாக அவர்கள் சொன்னார்கள். அவ்வாறு செய்தால், சிங்கள வாக்குகள் குறைவடையும் என்று. எனவே, நாங்கள் உடன்படிக்ைகயைக் கோரவில்லை, செய்வார்கள் என்று எமக்கு நம்பிக்ைக இருக்கிறது என்று சொன்னார்கள். இறுதியில் என்ன நடந்தது?
எனவே, இம்முறை நான் நினைக்கின்றேன், அந்த வாக்குறுதியைப் பெற்றுக் ெகாண்டுள்ளார்கள் என்று.
“புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன. அந்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளனவா?”
“அதில் நானும் தொடர்புபட்டிருக்கின்றேன். ஆரவாரமில்லாமல் தமிழ்,முஸ்லிம், சிங்கள கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன். அதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சியும் கலந்துகொண்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக நாம் எதனை வழங்கலாம் என்று அவர்களுடன் கலந்துரையாடி பெற்றுக் ெகாண்ட ஆலோசனைகளின்படியே, பிரதமர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்தார். அதன்படி அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது. ஆனால், அதனைப் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். ராஜபக்ஷமார்களுடன் பிரதமர் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைக்குமாறு கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். மொட்டுக்கட்சியைச் சேர்ந்தவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் இரண்டு தோணியில் கால்வைத்துக்ெகாண்டு ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் காலத்தைக் கடத்தினார்கள். ஜனாதிபதியும்கூட எமது கட்சியின் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் இருந்துகொண்டு இந்த விடயத்திற்கு ஆதரவு வழங்குமாறு யாரிடமும் சொல்லவில்லை. உண்மையைச் சொல்வதானால், ஐக்கிய தேசிய கட்சி இயன்றளவு முயற்சித்தது என்பதை நானறிவேன். நான் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதாகக்ெகாள்ள வேண்டாம், இஃது உண்மை. ஆகவே, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் முயற்சித்ததைப்போல், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் வந்தால், பணியைத் தொடர்ந்து முன்னெடுப்பார் என்று நம்பலாம். ஆனால், என்னால், உறுதி வழங்க முடியாது!” “அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டிக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள, தமிழ் மொழிகளில் வேறு வேறான சொற்பதங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் எதிரணியினர் கூறுகிறார்களே!”
“தோழரே, இங்கு சொற்பதங்கள் முக்கியமல்ல. அதியுச்ச அதிகாரப் பகிர்வினை வழங்குவதாக சஜித் கூறுகிறாராம். எனவே, ஒற்றையாட்சியா, ஒருமித்த ஆட்சியா? என்பதல்லவே முக்கியம். அதிகாரப்பகிர்வின் ஊடாகத் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் கிடைக்கின்றதா? என்பதைத்தானே நாம் பார்க்க வேண்டும். ஆனால், அன்றைய காலகட்டத்தைவிட ராஜபக்ஷாக்கள் இனவாதத்தை மிக மோசமாகத் தூண்டிவிட்டுள்ளார்கள். அன்று பொதுபல சேனா, சியலராவய, மகாசோனா போன்றவர்கள் இருக்கவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்கள் பணம் செலவழித்து அவர்களை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே, வாக்குகளைப் பெறுவதற்கு அன்றைய காலத்தைவிட இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அன்று செய்தததை இன்று செய்ய முடியாது.
“நீங்கள் நிறைவேற்றதிகாரமுள்ள ஒரு ஜனாதிபதியாக இந்த நாட்டை ஆட்சி செய்தீர்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததும், 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுப் பெரும் நெருக்கடி உருவானது. நீங்கள் சொல்லுங்கள், இந்த நாட்டை ஆள்வதற்கு நிறைவேற்றதிகாரம் தேவைதானா?”
“இல்லை. அவசியம் இல்லை. ஏன், 2000ஆம் ஆண்டில் நான் முன்வைத்த அரசியலமைப்பு திருத்தத்தில், எந்தவித நிபந்தனைகளுமின்றி நிறைவேற்றதிகாரத்தை இல்லாதொழிப்பதாக ஓர் அத்தியாயத்தையே வைத்திருந்தேனே..அதற்கும் ரணில்மார் வாக்களிக்கவில்லையே..பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நகல் வரை எடுத்துப் பார்க்கலாம். ஜயம்பத்தி விக்கிரமரட்ன அதனை நன்றாகத் தெளிவுபடுத்துகிறார்.”
“அப்படியென்றால், ஒரு நெருக்கடியான நிலையை எவ்வாறு தவிர்த்துக்ெகாள்வது?”
“நிறைவேற்றதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும். ஜனாதிபதி ஒருவர் இருக்க வேண்டும். ஆனால், வில்லியம் கொபல்லாவ மாதிரி அல்லாமல், ஓரளவு சிற்சில அதிகாரங்களை உடையவராக இருத்தல் வேண்டும். நான் நினைக்கின்றேன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை செனற் சபையொன்றைக் கோரியிருக்கின்றது. கல்வி கற்ற நல்ல புத்திஜீவிகளைத் தெரிவு செய்து சில அதிகாரங்களையும் வழங்கினால், சமமாக இருக்கும். ஏனெனில், எமது நாட்டில் இன்னமும் ஜனநாயகம் சரியாகக் கட்டியெழுப்பப்படவில்லை. ஜனநாயக நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்படவில்லை. ஜனாதிபதியொருவர் பிரதம நீதியரசரை தொலைபேசியில் அழைத்து எவ்வாறு தீர்ப்பு வழங்க வேண்டும் எனச்சொல்வாரென்றால், என்ன ஜனநாயகம்? எமது நாட்டில் பெயருக்குத்தான் ஜனநாயகம் இருக்கின்றது. எமது நாட்டில் பெரும்பான்மையினம், பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்குத்தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. 1948ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை. நாம் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தோம். உங்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்த நாட்டில் ஜனநாயகம் உருவாக்கப்படவில்லை. ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சியிலிருக்கும் ஒவ்வொருவரும் நாட்டைக் குட்டிச்சுவராக்குகின்றனர். அவர்கள் நாட்டைத் தின்று வயிற்றைப் பெரிதாக்கிக்ெகாண்டு வாழ்கிறார்கள். இவ்வாறான ஒரு சூழலில், மட்டுப்பாடில்லாத அதிகாரங்களுடன் ஒருவரை அரச தலைவராகத் தெரிவுசெய்வது ஆபத்தானதாகும்! ஜனநாயகம் சரியாக நடைமுறையில் இல்லாத ஒரு நாட்டில், படிப்பறிவில்லாத, புத்திகூர்மை இல்லாத ஒருவரை, வரையறை இல்லாத அதிகாரங்கள் நிறைந்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்வது மிகவும் ஆபத்தானது. நான் எனது 11வருட ஆட்சிக் காலத்தில் அந்த எல்லையில்லா அதிகாரங்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால், எல்லோரும் அவ்வாறு செய்யமாட்டார்கள்.
“இவ்வாறான நிலையில், அமைச்சர் சஜித் பிரேமதாசவை நம்புமாறு தமிழ் மக்களுக்கு எப்படிச் சொல்கிறீர்கள்?”
“அவர் சொல்லியிருக்கிறாரே இன்னென்ன விடயங்களைச் செய்வேன் என்று. அவரின் விஞ்ஞாபனத்திலும் இருக்கிறதே! ஆனால், விஞ்ஞாபனத்தில் உள்ளதையெல்லாம் செய்வார் என்று நானென்றால் உறுதி வழங்க மாட்டேன். ஒரு தடவை ஒருவருக்காக உறுதி வழங்கி, நான் இன்னமும் மக்களிடம் திட்டு வாங்கிக்ெகாண்டிருக்கின்றேன். எனவே, எனக்கு என்னைப்பற்றி மாத்திரமே உறுதி வழங்க முடியும். ஆனால், இருவரில் யார் அதிகம் செய்வார்கள் என்று பார்த்தால், சஜித் என்று சொல்வேன்!
“கூட்டமைப்பு முன்வைத்த 13 அம்சக் கோரிக்ைககளை எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக்ெகாள்ளவில்லை.அதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை என்று சொல்கிறார்களே!?”
வடக்கு, கிழக்ைக இணைக்க வேண்டும், ஈழத்தை வழங்க வேண்டும் என்பதல்ல வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை! சிங்கள மக்களுக்கு உள்ளவாறு சமமான உரிமை அவர்களுக்கும் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். வாழ்வதற்குத் தேவையான வசதிகள், கல்வி கற்பதற்கான வசதிகள், வேலைவாய்ப்புகள் வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். அவர்கள் ஈழ இராச்சியத்தைக் கோரவில்லை. 13 அம்சக் கோரிக்ைககளில் ஏற்றுக்ெகாள்ள முடியாத விடயங்கள் இருக்குமாயின், இந்தச் சந்தர்ப்பத்தில் அதுபற்றிப் பேச முடியாது அல்லவா! தேர்தல் நேரத்தில் ஏன் கேட்க வேண்டும்? இதற்கு முன்பே கேட்டிருக்கலாமே? இந்த அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன என்பவர் ஒரு தனிநபர் மட்டுமே. அவரைப்பற்றி மாத்திரம் நான் பேசவில்லை. ஆனால், அவரின் ஒத்துழைப்புடன் நாங்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குப் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம். நாம் பதவிக்கு வந்தபோது யுத்தத்தை முடித்துவிட்டு ராஜபக்ஷாக்கள் எதுவுமே செய்யாமல் ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்தார்கள். ஏ9 வீதியை மட்டுமே சீரமைத்திருந்தார்கள். அதில் கோடிக்கணக்காக இலஞ்சம் பெற்றார்கள். ஏ9 வீதியில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றால், அங்கிருந்து அரை அல்லது கால் கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிராமத்திற்குச் செல்வதற்குச் சேற்றில் நடந்து செல்ல வேண்டும். கிராமங்களுக்கு அவர்கள் எதையும் செய்யவில்லை. ஆனால், இந்த அரசாங்கம் செய்துள்ளது. நான் தனிப்பட்ட முறையில் சென்று செய்திருக்கின்றேன். ஏனைய அமைச்சுகள் மூலம் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கிற்கு மாத்திரம் நூற்றுக்கணக்கான குளங்களைச் சீரமைத்திருக்கின்றோம். கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறு குளங்களைப் புனரமைத்திருக்கின்றோம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் மேம்படுத்தியிருக்கின்றோம். சுயதொழில் வாய்ப்பு. மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்குப் பயிற்சிகளை வழங்கியிருக்கின்றோம். இது மாத்திரமே யாழ்ப்பாணத்து மக்களுக்குப் போதுமானதாக இருக்கும், யார் வேலை செய்வார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு. எனவே, ராஜபக்ஷமார் இல்லாமல் வேறு நபர் வருகிறபோது அவர்களுடன் சேர்ந்து எனக்கு இதனைவிட வலுவாகப் பணியாற்ற முடியும்.
“சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களின் சார்பில் ஆற்ற வேண்டிய விடயங்கள் குறித்து யோசனைகளை முன்வைப்பீர்களா?”
“நிச்சயமாக! தமிழ், முஸ்லிம் மக்கள் சார்பாக எனது கடமைகளைச் செய்வேன். அரசியலமைப்பு மறுசீரமைப்பு அவசியம். முஸ்லிம் மக்களின் மதச் சுதந்திரம், ஏனைய அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தல், சுதந்திரமாக வாழ்தல், வர்த்தக நடவடிக்ைககளை மேற்கொள்ளல் போன்றவற்றில் துரித நடவடிக்ைக எடுக்க வேண்டும். அவர்களின் பிரதேசங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். தொழில் வாய்ப்புகளை வழங்கும்போது அவர்களுக்கும் நியாயமான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும், எனது அரசாங்கத்தின் காலத்தில் செய்ததைப்போன்று.
“ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணி பற்றிப் பல்வேறு விதமாகப் பேசப்படுகிறது. நீங்களும் அதுபற்றிக் கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள். சிலர் கோட்டாபய ராஜபக்ஷ இவர்களைப் போஷித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி?”
“சஹ்ரான் கோட்டாபயவுடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். பணம் கொடுத்தாகவும் பொலிஸில் தகவல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகக் கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்களை விசாரித்தபோது, 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர், அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்து அடிப்படைவாத அமைப்புகளின் பின்னால் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர்கள் கூறியதாக நான் குறிப்பிட்டிருந்தேன். புலிகள் இயக்கத்தில் இளைஞர்கள் சேர்ந்தது அவ்வாறுதான். நாம் யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்து மக்களைக் கவனிக்கவில்லை. அதனால், இளைஞர்கள் அடிப்படைவாதத்தின் பின்னால் சென்றார்கள். அது நல்லதென்று நான் சொல்லவில்லை. இளைஞர்களின் தேவைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில், அவர்கள் அடிப்படைவாதத்தின் பின்னால்தான் செல்வார்கள்.”
“முஸ்லிம் சமூகத்திற்கு உங்களின் செய்தி என்ன?”
“தமிழ் மக்களுக்குச் சொல்வதைத்தான் முஸ்லிம் மக்களுக்கும் சொல்கிறேன். பிரதான வேட்பாளர்களுக்கு அளிக்கப்படாத எந்தவொரு வாக்கும் வீணாகும் வாக்காகும். இன்று மிகவும் தீர்மானகரமான ஒரு கட்டத்திற்கு எமது நாடு வந்திருக்கின்றது. நாம் ஒன்றில் முழுமையான சர்வாதிகார நாசத்திற்குச் செல்வதா, அல்லது ஜனநாயக ரீதியாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதா? என்ற கட்டத்திற்கு வந்திருக்கின்றோம். எனவே, மக்கள் சிறு சிறு விடயங்களைப் பற்றிச் சிந்தித்துக்ெகாண்டிருக்கும் நேரமல்ல இது. நாம் முகத்தைப் பார்க்காமல், யாரிடம் நல்ல கொள்கை இருக்கின்றது, யார் கூடுதலாக நல்லதைச் செய்யக்கூடியவர் என்பதைச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு நான் விசேடமாகச் சொல்ல வேண்டியதில்லை. 2013இலிருந்து ராஜபக்ஷமார் முஸ்லிம் மக்களுக்குச் செய்ததை அவர்கள் அறிவார்கள்.
“எனினும், தேசிய பாதுகாப்பை எம்மால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்று தற்போது சொல்கிறார்களே!?”
“இதற்கு முன்பு என்ன செய்தார்கள்? அவர்கள் தேசிய பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தினார்கள் என்று சொல்லட்டுமே! 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், 2015 வரை பொதுபல சேனாவை உருவாக்கி முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியா? யுத்த காலத்தில் அப்பாவி தமிழ் மக்கள், புலிகள் இயக்கத்துடன் சம்பந்தமில்லாதவர்கள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தபோது அவர்களைச் சுட்டுக்ெகான்றது மாத்திரமின்றி, தப்பி வந்து நந்திக்கடலில் அநாதரவாக இருந்தபோது அவர்களை இரத்தத்தில் சிதறடிக்கச் செய்தா தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்கள்? சிங்கள மக்களுக்கு என்ன பாதுகாப்பை வழங்கினார்கள்? அவர்கள் செய்த களவைப்பற்றி வெளிப்படுத்தியதற்காக லசந்த விக்கிரமதுங்கவையும் எக்னலிகொடவையும் கொண்டுபோய் கொலைசெய்தார்கள். மேலும் 18 ஊடகவியலாளர்களின் கை, கால்களை முறித்தார்கள். எப்படி பாதுகாப்பு வழங்குவார்கள். முதலில் எப்படி அந்தப் பாதுகாப்பை வழங்குவார் என்று நான் அவருக்குச் சவால் விடுக்கின்றேன். பாதுகாப்பு என்பது இராணுவத்தை வீதியில் நிறுத்துவது அல்ல. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். சுதந்திரமாக வாழும் உரிமை, சுதந்திரமாக விமர்சிக்கும் உரிமை, ஊடகச் சுதந்திரம், சுதந்திரமாக அரசியல் செய்யும் உரிமை, ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசினார் என்பதற்காக ரவிராஜைக் கொலைசெய்தேவிட்டார்கள். இனியென்ன பேச வேண்டியிருக்கின்றது?
“அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால், எவ்வாறு தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவார் என நினைக்கிறீர்கள்?”
“ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைப் பாதுகாப்புத் துறைக்கு நியமிப்பதாகச் சொல்லியிருக்கிறார். நான் நினைக்கின்றேன் அவர் அதற்குப் பொருத்தமானவர் என்று. தயங்கித் தயங்கிக்ெகாண்டிருக்காமல் உறுதியுடன் செயற்படுவார் என்று நம்பலாம். அவருடன் எமக்குப் பணியாற்ற முடியும்.
“2005இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு குமார வெல்கம உங்களிடம் கேட்டுக்ெகாண்டதாகச் சொல்லப்படுகிறது. அஃது உண்மையா?”
“யாரும் என்னிடம் சொல்லவில்லை; கோரவும் இல்லை. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் 69பேர் இருந்தோம். என்னையும் மஹிந்தவையும் தவிர்த்தால் 59. அதில் மூவரைத் தவிர ஏனைய அத்தனைபேரும் மஹிந்தவுக்குப் போட்டியிட இடமளிக்க வேண்டாம் என்றுதான் கேட்டார்கள். மஹிந்த ராஜபக்ஷகூட என்னிடம் கோரவில்லை. நான் தனித்து எடுத்த முடிவின்படியே அவருக்குப் போட்டியிட அனுமதித்தேன். வெல்லக்கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதால் அந்த முடிவை எடுத்தேன். குமார வெல்கம கூட்டங்களில் பேசியிருப்பார், ஆனால், என்னிடம் வந்து கதைக்கவில்லை.”
“நீங்கள் கொள்கையைக் கைவிட்டுவிட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே?”
“இல்லை. நான் எமது கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக இறங்கியிருக்கின்றேன். நான் தேர்தல் மேடைகளில் ஏறமாட்டேன் என்றுதான் சொல்லியிருக்கின்றேன். கடந்த முறை எம்மில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளர் என்பதால், அவருக்காக மேடையில் ஏறினேன். நான் ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத்திற்குக்கூட சென்றதில்லை.”
“இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் அளிக்கப்படாத வாக்கு வீணாகும் என்று சொல்கிறீர்கள். சில தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்திருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ பற்றிக் குறிப்பிட்டீர்கள். கோட்டாபய ராஜபக்ஷ பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்ன?”
“எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம் வர்த்தகர் என்னிடம் சொன்னார், அவர்களுக்கு ராஜபக்ஷமாரைப் பிடிக்கவேமாட்டாது என்று. எனினும், கோட்டாபய வர்த்தகத்திற்கு விநியோகம் செய்வார் என்றார். நல்ல தரகுக்காக விநியோகம் செய்வார்; ஆனால், உங்களின் சவப்பெட்டியையும் விநியோகிப்பார் என்பதை மனத்தில் வைத்துக்ெகாண்டு ஆதரவளிக்குமாறு நான் அவருக்குக் கூறினேன்.”
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து உங்களை நீக்குவதாகச் சொல்கிறார்களே?”
“அப்படி நீக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சியொன்றை உருவாக்கிக்ெகாண்டிருக்கிறார். நாம் எந்தவொரு கட்சியிலும் இணையக்கூடவில்லை. அவரை நீக்க முடியாதென்றால், எம்மை எப்படி நீக்க முடியும்?”
“அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கி, அவருக்கு எவ்வளவு வாக்குகளைப் பெற்றுக்ெகாடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?”
“அதுபற்றிச் சொல்ல முடியாது. அந்த நேரத்தில் பார்ப்போம்”
“வடக்கு மக்கள் வாக்களிப்பதைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். விசேடமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கிறார். இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?”
“பொன்னம்பலம் சொல்வதைக் கேட்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படியென்றால், கடந்த முறையும் எமக்கு வாக்களித்திருக்கமாட்டார்களே. பகிஷ்கரிப்பது மிகவும் தவறான விடயம் என்பதை வடக்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
Average Rating