மனிதரை கொல்லும் மாசு! (மருத்துவம்)
ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்ட மனநிலையில் இருந்து அதை விழிப்புணர்வு மனநிலைக்கு கொண்டு செல்ல அரசுகள் முயற்சி செய்ய வேண்டும்…
“சட்டென்று மாறுது வானிலை…” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் டெல்லி தான் நினைவிற்கு வருகிறது. மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் போடும் மாஸ்க் அணிந்து கிரிக்கெட் வீரர்களை மைதானத்தில் எந்த காலத்திலாவது பார்த்திருக்கிறீர்களா? காக்கும் கடவுளான சிவலிங்கத்திற்கும் மாஸ்க் அணிவித்து பார்த்ததுண்டா? இதற்கு காரணம் யார்? கண்ணுக்குத் தெரியாத கொலையாளியான காற்று மாசு தான்.
காற்று மாசினால் உலக அளவில் இறக்கும் மக்கள்தொகையில் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது.
ஒரு லட்சம் பேரில், 195 பேர் காற்று மாசினால் உயிரிழக்கின்றனர். காற்று மாசைக் கட்டுப்படுத்தினால் உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள மக்களின் சராசரி வயது தற்போது இருப்பதை விட 1.3 சதவீதம் முதல் 1.8 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறது ஆய்வறிக்கை. உலகில் மிகவும் மாசடைந்த 20 நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் 15 நகரங்கள் ‘தூய்மை இந்தியாவில்’ தான் இருக்கின்றன என்றால்… நீங்கள் நம்பித்தான் தீரவேண்டும். உலகிலேயே மிகவும் மாசடைந்த தலைநகரமாக டெல்லி இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறியதை உண்மை என ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.
காற்று தரத்தின் அளவு என்ன?
காற்றின் ஒட்டுமொத்த தரக்குறியீடு 100-200 என்ற அளவில் இருந்தால் மிதமான பிரிவு, 201 -300 மோசம், 301 -400 மிக மோசம், 401-500 என்ற அளவில் இருந்தால் கடுமையான அளவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. டெல்லியில் காற்றின் நுண்துகள் அளவு 465 ஆகவும் பதிவாகியிருந்தது. இதனால் ஏராளமானோர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக டெல்லியில் ஏற்பட்ட அவசரநிலை. பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலையை ஏற்படுத்தியது. கட்டுமானப்பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. டெல்லிக்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை. இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தலைநகர்.
வாட்டும் வயல் தீ
டெல்லியின் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக மோசமாக உள்ளது. அதை பொருட்படுத்தாது அண்டை மாநிலங்களான அரியானா, பஞ்சாப் விவசாயக் கழிவுகளைத் தொடர்ந்து எரித்து வருகின்றன. வேளாண் சீர்திருத்தம் என்ற பெயரில் அந்த மாநிலங்களில் நடைபெறும் விவசாயப்பணி பயிர்களின் உற்பத்தியை பெருக்கியுள்ளது. ஆனால், பயிர்கழிவுகளை எரிப்பது, அதனால் காற்றை மாசுபடுத்துவதை அதிகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அக்டோபர் மாதமே டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “டெல்லி புகை மண்டலமாக மாறுவதை தடுக்க அரியானா, பஞ்சாப் அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த 2 மாநிலங்களில் 2,400க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் பயிர்கழிவுகள் எரிக்கப்பட்டதாக டெல்லி அரசும் குற்றம் சாட்டியிருந்தது. உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவு என்று தெரிவித்துள்ளதை விட மிகவும் அதிகமான அளவில் பி.எம்.2.5 துகள்களை உள்ளடக்கிய மாசுபாடு டெல்லியில் காற்றில் இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அரியானா, பஞ்சாப்பில் கிடைக்கும் வைக்கோல் சத்து இல்லாத காரணத்தால் அவற்றை சேமிக்கவோ, விற்கவோ விவசாயிகள் விரும்புவதில்லை. இதன் காரணமாக வயல்களுக்கு தீ வைக்கின்றனர். இதன் காரணமாகவே புகை மூட்டத்தால் காற்று மாசுபடுகிறது என்று டெல்லிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னைக்கும் ஆபத்து
இந்தியாவின் தலைநகரை தொடர்ந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் காற்று மாசு அதிக அளவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் காற்று மிக மோசமாக மாசடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருக்கிறது. சராசரி காற்று மாசுபாட்டில் டெல்லியை சென்னை மிஞ்சும் நிலை உருவாகி உள்ளது. சென்னையில் சராசரி காற்று மாசு 274 புள்ளியாக உயர்ந்துள்ளது. இதில் காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5 இன் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது. நவம்பர் 8ம் தேதி காலை நிலவரப்படி, மணலியில் 320 மைக்ரோ கிராம், வேளச்சேரியில் 292 மைக்ரோ கிராம், ஆலந்தூரில் 285 மைக்ரோ கிராமாக உள்ளது.
டெல்லியைத் தொடர்ந்து சென்னையில் எப்படி இவ்வளவு மாசு?
இதற்கு முக்கிய காரணம் மனிதக்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், கட்டுமானக் கழிவுகள், இடிபாட்டுக் கழிவுகள், பிளாஸ்டிக் கவர்கள், காலாவதியான மருந்துகள், சலவைக்கழிவுகள், ஆலைக்கழிவுகள், மின்னணுக்கழிவுகள் சென்னை முழுவதும் கொட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாக காற்று மட்டுமின்றி நீரும் கடுமையாக மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை காற்று மாசுவிற்கு வாகனப்புகை பெரும் காரணமாக இருக்கிறது.
வாகனப்புகை
சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இதில் டூவீலர்கள் மட்டும் 46 லட்சம். டெல்லி, பெங்களூருவிற்கு அடுத்தபடியாக அதிக டூவீலர்கள் இருப்பது சென்னையில் தான். கடந்த 15 ஆண்டுகளில் எந்த நகரங்களிலும் இல்லாத அளவிற்கு சென்னையில் 300 சதவீதம் வாகனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆண்டுக்கு மூன்றிலிருந்து 6 சதவீதம் வரை புதிதாக வாகனங்கள் வாங்குகின்றனர். இவ்வளவு வாகனப்புகையும் இப்போது காற்று மாசு பிரச்னைக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. சென்னையின் மாசுவிற்கு காரணமான கழிவுகளை அழிப்பதற்கான நடவடிக்கையில் சென்னை மாநகராட்சியோ, மாசுகட்டுப்பாட்டு வாரியமோ பெரும் நடவடிக்கை எடுத்திருந்தால், சென்னையின் காற்றின் மாசு அளவு இவ்வளவு கூடியிருக்காது.
தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6.92 லட்சம் டன் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உரிய முறையில் செயல்பட்டாலே காற்று மாசு ஏற்படுவதை தடுக்க முடியும். ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்ட மனநிலையில் இருந்து அதை விழிப்புணர்வு மனநிலைக்கு கொண்டு செல்ல அரசுகள் முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டெல்லி போல, முகமூடி அணிந்த மனிதர்களைத்தான் தமிழக வீதிகளிலும் காண வேண்டிய அவலநிலை ஏற்படும்.
மிருகங்களும் தப்பாது…
காற்று மாசினால் மனிதர்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, கண்கள், மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல், மூச்சிரைப்பு, இருமல் மற்றும் சுவாச கோளாறு, தலைவலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், நரம்பு மண்டலம் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும். மனிதர்களுக்கு மட்டுமிமன்றி விலங்குகள், மீன்கள் பெருமளவு உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.
Average Rating