சிகரம் தொட்ட சிறிசேன!! (கட்டுரை)
“அந்த நெல்லை காய வைக்காட்டி பதரா போய்விடுமே”
“பெரியவனை அதையாவது செய்ய சொல்லன்”
“அவனுக்கு கூட்டத்துக்கு போக இருக்காம். அதனால முடியாதாம்”
“ஏன் அவர் அரசியல் கூட்டத்திற்குப் போய் கவுன்சிலுக்கு போகப் போறாராக்கும்”
அம்மாவை பார்த்து சொன்ன அப்பாவின் அந்த ஏளனப் பேச்சு ஒரு நாள் நனவாகுமென மைத்திரிகூட அன்று நினைத்திருக்க மாட்டார். ஆயினும் மாணவ பருவம் முதலே சமூக நலன் மீது கொண்டிருந்த அதீத அக்கறையே மைத்ரியின் வாழ்க்கையை புடம் போட்டதென்றால் அது மிகையாகாது.
சிறுபராயம் முதலே தாம் வாழ்ந்து வளர்ந்து வந்த பொலன்னறுவை மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயமே இருந்து வந்தது. ஆயினும் அம்மக்களை அதே விவசாயம் வாழ வைப்பதையும் தாழ வைப்பதையும் கண்கூடாக கண்ட மைத்திரி அந்த மக்களின் வாழ்க்கையை வளமாக்க வேண்டுமென்றால் அவர்களின் கமத் தொழிலுக்கு முக்கிய இடையூறாக இருந்து வரும் நீர்ப் பற்றாக்குறையை தீர்க்க வேண்டுமேன்ற கனவை நீண்ட நாட்களாகவே கண்டு வந்தார்.
இளைஞனாக இருந்தபோதே தமது நண்பருடன் இணைந்து அரசாங்கத்தின் வெற்று காட்டு நிலங்களை சுத்தப்படுத்தி அவற்றை திறமையான விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்த மைத்திரி, அந்த நிலத்தின் நல்ல பலனை அடைய வேண்டுமாயின் நீர்ப்பாசன வசதிகளை பெற்றுக்கொடுத்தே ஆகவேண்டுமென்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டார். தமது சமூகம் சார்ந்த ஏழை மக்கள் மீது கொண்டிருந்த பாசமே மைத்ரியை இடதுசாரி அரசியல் பக்கம் திருப்பியது. அதன் மூலமே அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளம் செயற்பாட்டாளராக அக்கட்சியில் இணைந்து கட்சியின் அங்கத்தவராக, செயலாளராக, தலைவராக வளர்ந்து வந்தார். அவரின் அந்த அரசியல் வளர்ச்சிக்கு சமாந்தரமாக அவர் பெரிதும் எதிர்பார்த்திருந்த மகாவலியின் பிரதி அமைச்சர் பொறுப்பும் பிற்காலத்தில் அதே அமைச்சின் அமைச்சர் பொறுப்பும் அவரை தேடி வந்தது. தமது நீண்டகால கனவை நனவாக்க மகாவலி அமைச்சின் ஊடாக செயற்பட வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டிருந்த மைத்ரி, துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களில் இறுதி நீர்த்தேக்கமாக இனங்காணப்பட்டிருந்த மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இலங்கை கட்டிடக் கலையின் வித்துவானாக விளங்கிய கலாநிதி குலசேகரவின் வழிகாட்டலில் மொரகஹகந்த நீர்த்தேக்க அணைக்கட்டை நிர்மாணிப்பதற்கான திட்டத்தினை வடிவமைத்து உள்நாட்டு, வெளிநாட்டு நிதியுதவியைக்கொண்டு அப்பணியை ஆரம்பிக்க திட்டம் வகுத்த போதிலும் நீண்டகாலமாக அந்த கனவை நனவாக்கி கொள்வதென்பது கைகூடாத காரியமாகவே இருந்து வந்தது. இந்த பின்னணியிலேயே வடமத்திய மாகாண விவசாய தலைமுறையின் வாரிசான மைத்ரிபால சிறிசேனவை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் அரச தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள். அதனை வாய்ப்பாக கொண்டு அதுவரை காலமும் தமது கனவுக்கு குறுக்கே எழுந்த தடைகளை தகர்த்த மைத்திரி, மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தை அசுர வேகத்தில் முன்னெடுத்தார். அதன் பலனாக 2018ஆம் ஆண்டு இந்த நாட்டின் இதுவரை காலமும் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக இருந்து வந்த பராக்கிர சமூத்திரத்தைவிட அளவில் 05 மடங்கு பெரியதான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை இந்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்காக பெற்றுக்கொடுக்க முடிந்தது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் இணை நீர்த்தேக்கமாகவே களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. மத்திய மலை பிரதேசத்திலிருந்து திருகோணமலையை நோக்கிய பயணத்தில் எந்தவித பயனும் பெறாது கடலை சென்றடையும் பிரமாண்ட நீரை வழிமறித்து உருவாக்கப்பட்ட களுகங்கை நீர்த்தேக்கமானது அதன் எஞ்சிய நீரை மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு நிலத்தடி சுரங்கக் கால்வாய் மூலம் கொண்டு செல்லும் வகையிலேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
மாத்தளை பிரதேசத்தை மையமாகக்கொண்டு இந்த நீர்த்தேக்கங்கள் அமைந்திருந்தபோதிலும் அதனை சூழவுள்ள தம்புள்ள, சீகிரிய, கண்டி, குருணாகல் ஆகியன உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகளை வெகுவாக கவர்ந்த சுற்றுலா தளங்களாக இருந்து வருவதால் அப்பிரதேசங்களில் சுற்றுலா பயணத்தினை மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளின் தரிப்பிடமாக மொரகஹகந்த – களுகங்கை பிரதேசத்தை புனர்நிர்மாணிப்பதன் மூலம் அப்பிரதேசத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமென்பது இவ் அபிவிருத்தி திட்டத்தின் இன்னுமொரு நோக்கமாகும்.
இயற்கையுடன் ஒத்துப்போகும் விவசாய மற்றும் கால்நடை உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் நச்சுத்தன்மையற்ற உணவுகளை தயாரிக்கும் இயற்கை நேய சுற்றுலா தளமாக பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதற்காக சேதனப் பசளை மூலமான விவசாயத்தை வியாபிக்கப்படவிருக்கின்றது. அத்தோடு சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கை நோக்காகக் கொண்ட படகு சேவைகள் மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கங்களை ஊடறுத்து செல்லும் கேபல் கார் சேவை, நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் மின்சார உற்பத்தி ஆகியன மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்ப்பதற்கான திட்டங்களும் மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இத்தகைய பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டிருக்கும் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கான நில ஒதுக்கீட்டினால் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களை மீள்குடியமர்த்தும் வகையிலேயே அம்பன எனும் புதிய நகரம் நிர்மாணிக்கப்பட்டு பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச பணிமனைகள், வைத்தியசாலை, பாடசாலைகள், தபால்கந்தோர், சந்தைக் கட்டிடம், பொலிஸ் நிலையம் ஆகியன சகல வசதிகளுடனும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கடந்த 07ஆம் திகதி அன்று ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஓர் அங்கமாக வடமத்திய மாகாணத்தின் விவசாய குடியேற்றத் திட்டத்தின் கீழ் வீதி போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், வைத்தியம் ஆகிய எந்த அடிப்படை வசதிகளும் காணக் கிடைக்காத பொலன்னறுவை மாவட்டத்தின் “லக்‘ உயன” எனும் பின்தங்கிய விவசாய குடியேற்றத் திட்டத்தில் சுமார் 7 தசாப்தங்களுக்கு முன் குடியமர்த்தப்பட்ட ஒரு வறிய விவசாய குடும்பத்தின் பிள்ளையாக பிறந்து, இன்று தான் சார்ந்த சமூகத்தின் நீண்டகால துயரை துடைத்த நாட்டின் அரச தலைவன் என்ற உச்சத்தை தொட்டு அவரது பதவியிலிருந்து விடைபெற தயாராகிக் கொண்டிருக்கும் மைத்ரிபால சிறிசேன எனும் தனிமனித வரலாறானது இந்த நாட்டில் வறுமை எனும் ஒரே காரணத்தினால் தம்மால் தலை தூக்கவோ, சாதிக்கவோ முடியாதென பின்தங்கிய மனநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் கற்றறிய வேண்டிய ஒரு வாழ்க்கை சரித்திரமாக இருக்கின்றதென்றால் அதை மறுப்பதற்கில்லை.
மைத்திரிபால சிறிசேன எனும் மனிதர் பின்பற்றிய அரசியல் பாதை எதுவாக இருப்பினும் அவரது வாழ்க்கையானது இந்த நாட்டின் அனைவருக்கும் “வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்” என்ற மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வாழ்க்கை சித்தாந்தத்தையே போதிக்கின்றது.
Average Rating