அமேசானை இயக்கும் பெண்கள்!! (மகளிர் பக்கம்)
பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்றாகிவிட்டது. பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவர்களுக்கு என சில குறிப்பிட்ட வேலையில்தான்நியமிக்கப்படுவார்கள்.
அதாவது அலுவலகம் சார்ந்த வேலையான கிளர்க், அக்கவுண்ட்ஸ், அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற வேலைகளில்தான் இடம் பெறுவார்கள். மார்க்கெட்டிங், ஓட்டலில் சர்வர், மெடிக்கல் ரெப், டெலிவரி கொடுப்பது…. போன்ற வேலைகள் எல்லாம் ஆண்கள்தான் செய்து வந்தனர். ஆனால் இப்போது பெண்கள் இந்த வேலையையும் தனதாக்கி கொண்டுள்ளனர். சென்னையில் அமேசான் நிறுவனத்தின் ஒரு டெலிவரி ஸ்டேஷன் முழுக்க பெண்கள் நிர்வகித்து வருகிறார்கள். பெண்கள் மட்டுமே இயங்ககூடும் டெலிவரி ஸ்டேஷனை ஜமுனா ராணி நிர்வகித்து வருகிறார்.
‘‘நான் பிறந்தது வளர்ந்து படிச்சது எல்லாம் சென்னையில் தான். ஐ.டியில் பட்டப்படிப்பினை முடித்த நான் அதே துறையில் வேலைக்கும் சேர்ந்தேன். கிட்டத்தட்ட 11 வருஷம் ஐ.டியிலேயே என் காலம் கழிந்தது. ஐ.டி வேலையை பற்றித்தான் எல்லாருக்குமே தெரியுமே. நேரம் காலம் பார்க்காம வேலைப் பார்க்கணும். நானும் அப்படித்தான் தினமும் குறைந்தபட்சம் 12 மணி நேரம் வேலைப் பார்த்தேன்.
அதுவே எனக்கு பெரிய மனஉளைச்சலா இருந்தது. வேலை வேலை என்று ஓடிக் கொண்டு இருந்த எனக்கு குடும்பத்தின் மேலும் குழந்தைகள் மீதும் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. அவர்களை பார்த்துக் கொள்ள நேரமே இல்லாமல் உழைத்துக் கொண்டு இருந்தேன். பணம் மட்டுமே சம்பாதிக்க முடிந்ததே தவிர எனக்கான நேரமோ அல்லது குடும்பத்திற்கான நேரமும் செலவு செய்ய முடியவில்லை என்ற கவலை மேலும் மனஉளைச்சலுக்கு என்னை தள்ளியது. வேலையும் செய்யணும், அதே சமயம் குடும்பத்திற்கான நேரமும் செலவு செய்யணும்.
என்ன செய்யலாம் என்று யோசனை என் மண்டைக்குள் குடைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தான் என் நண்பர் மூலமா அமேசான் நிறுவனம் பெண்களுக்கான சர்வீஸ் ஸ்ேடஷன் ஒன்றை துவங்க இருப்பதாக தெரிய வந்தது’’ என்றவர் தயக்கத்தோடு தான் அதனை நிர்வகிக்கஆரம்பித்துள்ளார்.
‘‘பெண்களுக்கான சர்வீஸ் ஸ்டேஷன் என்றதும் முதலில் எனக்கு புரியவில்லை. அதனால் அது குறித்து முழு செய்தியை சேகரித்தேன். எனக்கான வேலையாகத்தான் இருந்தது. ஆனாலும் என்னால் அதனை நிர்வகிக்க முடியுமான்னு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எனக்குள் ஒரே குழப்பமாக இருந்தது. நேர்காணல் போது அமேசான் நிர்வாகிகளிடம் பேசிய போதுதான் எனக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டது.
2016ம் ஆண்டு பெண்களுக்கான சர்வீஸ் ஸ்டேஷனை நிர்வகிக்க துவங்கினேன். சர்வீஸ் ஸ்டேஷன் என்பது அமேசான் பொருட்கள் வைக்கப்படும் கொடவுன். அதாவது வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்து இங்கு வந்துவிடும். இங்கிருந்து குறிப்பிட்ட நபருக்கு டெலிவரி செய்யப்படும். ஸ்டேஷனின் எல்லா வேலையிலும் பெண்கள் தான் நியமிக்கப்பட்டார்கள். அதாவது பொருட்களை ஸ்டேஷனில் வைப்பது, அதை கணக்கு எழுதுவது, டெலிவரி ரிப்போர்ட் தயாரிப்பது மற்றும் டெலிவரி செய்வது அனைத்தும் பெண்கள் தான்.
முதலில் குறைந்த அளவில் தான் நாங்க டெலிவரி எடுத்தோம். அதன் பிறகு டெலிவரி செய்யும் பெண்களிடமும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது. அதுவே எங்களுக்கு மேலும் உற்சாகம் அளித்தது’’ என்றவரிடம் தற்போது 12 பெண்கள் டெலிவரி பெண்களாக உள்ளனர்.
‘‘ஆரம்பத்தில் இரண்டு பெண்கள்தான் வேலையில் நியமிக்கப்பட்டனர். இப்போது 12 பேர் என்னிடம் வேலை செய்றாங்க. இரண்டு பேர் என்பதால் சிறிய இடத்தில் தான் எங்களின் அலுவலகம் இருந்தது. எங்க பெண்கள் நிறுவனத்தின் டிஷர்ட் போட்டுக் கொண்டு டெலிவரி செய்வதை பார்த்து பல பெண்கள் வேலை வாய்ப்பு தேடி வந்தார்கள். அப்படித்தான் எங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. என்னதான் பெண்கள் எல்லா துறையிலும் வேலைப் பார்த்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான்.
அதனால் ஆரம்பத்தில் அவர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. எல்லா பெண்கள் பையிலும் பெப்பர் ஸ்பிரே இருக்கும். அதே சமயம் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு பேச வேண்டும் மற்றும் பொருட்களை எவ்வாறு டெலிவரி செய்ய வேண்டும் என்று பயிற்சியும் வழங்கப்படும். மேலும் தவறாக நடப்பவர்களிடம் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளணும் என்பது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும். எங்களுக்கு என்று ஒரு ஆப்பும் உண்டு.
அதன் மூலம் என்ன பொருட்கள் வரும், அதை எங்கு கொடுக்க வேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். அதற்கு ஏற்ப நாங்க டெலிவரி செய்வோம். ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு அஞ்சல் குறியீடு இருக்கும். அந்த குறியீடு உள்ள இடங்கள் மட்டும் தான் நாங்க டெலிவரி செய்வோம். அதாவது எங்களின் அஞ்சல் குறியீடு 600069… நாங்க ராமாபுரம், நந்தம்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் தான் டெலிவரி செய்வோம்’’ என்றவர்பெண்கள் என்பதால் அவர்களின் பயணம் பாதுகாப்பு குறித்தும் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
‘‘ஆரம்பத்தில் சேர்ந்த இரண்டு பெண்களிடமும் இரண்டு சக்கர வாகனம் இருந்தது. அதனால் அவர்கள் டெலிவரி செய்திடுவாங்க. அதன் பிறகு சேர்ந்த பெண்களிடம் ஒரு சிலரிடம் பைக் இல்லை. அவர்கள் ஆரம்ப காலத்தில் நிறுவன பைக்கினை பயன்படுத்தினாங்க. இப்ப அவங்களே சொந்தமா பைக் வாங்கிட்டாங்க. டெலிவரி என்பதால் வெயில் மழைன்னு பார்க்காம போகணும்.
வெயில் காலத்தில் அதிக வெயில் நேரத்தில் நாங்க டெலிவரி செய்ய மாட்டோம். அதே சமயம் எல்லாரிடமும் கையில் ரெப்பிரஷிங் டிரிங்க் இருக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க. அது எப்போதுமே அவங்க கையில் இருக்கும். மழை காலத்தில் ரெயின் கோட், ஷூக்களும் கொடுத்திடுவோம்.
வண்டியில் எப்போதும் ஒரு சேப்டி கிட் இருக்கும். டிராபிக் பொறுத்தவரை ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டமா இருந்தது. இப்ப எங்க ஏரியாவில் எப்ப டிராபிக் இருக்கும் இருக்காதுன்னு புரிஞ்சுக்கிட்டோம். டிராபிக் அதிகமாக இருக்கும் நேரத்திலும் டெலிவரி செய்ய மாட்டோம். எல்லாரிடமும் மொபைல் போன் இருப்பதால், ஜி.பி.ஆர்.எஸ் மூலம் விலாசம் கண்டுபிடிப்பதிலும் சிக்கல் இல்லை.
சில சமயம் டெலிவரி செய்யும் ேபாது கஸ்டமர்கள் இருக்க மாட்டாங்க. அப்ப அவங்களிடம் பேசி அவர்களின் அருகில் உள்ள வீடுகளில் டெலிவரி செய்ேவாம். ஒரு வேளை அவர்கள் ஏதும் ரெஸ்பான்ஸ் செய்யலைன்னா பொருளை நாங்க திரும்ப எடுத்துக் கொண்டு போயிடுவோம். அவர்கள் மறுபடி எங்களுக்கு ெதரிவித்த பின் டெலிவரி செய்வோம்’’ என்றவர் இங்கு வேலை செய்யும் பெண்கள் தங்களின் குடும்பத்திற்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருப்பதாக ெதரிவித்தார்.
‘‘பெண்கள் மட்டுமே அனைத்து வேலையும் செய்யும் ஒரே ஸ்டேஷன் இதுதான். மற்ற ஸ்டேஷனிலும் பெண்கள் இருக்காங்க. ஆனால் அங்கு ஆண்களும் வேலைப் பார்க்கிறாங்க. அமேசான் நிறுவனம் ஏதாவது புதுமையா செய்யணும்னு விரும்பினாங்க. அதன்படி துவங்கப்பட்டதுதான் பெண்களுக்கான டெலிவரி சர்வீஸ் ஸ்டேஷன்.
இதனை நிர்வகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. நான் பயன்படுத்திக் கொண்டேன். 600 சதுர அடி இடத்தில் தான் முதலில் எங்க அலுவலகம் அமைக்கப்பட்டது. இப்போது 1500 சதுர அடி இடத்தில் 12 பேர் கொண்ட குழுவாக வேலைப் பார்க்கிறோம்’’ என்றார் ெபருமை பொங்க ஜமுனா ராணி.
Average Rating