Make Way for Tomorrow!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 55 Second

திரைப்படங்கள் வெறுமனே பொழுதைப் போக்கி நம் பணத்தை வீணடிப்பவை அல்ல. அவை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைக் கண்ணாடிப் போல காண்பித்து, நம்மை நமக்கே அடையாளம் காட்டும் திறன் வாய்ந்தவை. வேறு எந்த கலையும் இவ்வளவு ஆழமாக நம் மனதுக்குள் ஊடுருவுவது இல்லை. தவிர, நல்ல திரைப்படங்கள் நம் தவறுகளையும் குற்றங்களையும் சரி செய்யும் நல் வழிகாட்டியாகவும் உள்ளது. சில நேரங்களில் நம் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு வேறு ஒரு மனிதனாக பரிணமிக்கச் செய்யும் ஆற்றலும் திரைப்படங்களுக்கு உண்டு. அப்படியான ஒரு படம்தான் ‘மேக் வே பார் டுமாரோ’.

இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக தங்களின் பெற்றோர்களை நிராகரிக்க மாட்டார்கள். குறிப்பாக பெற்றோர்களின் முதிய காலத்தில் தங்களுடனே வைத்து நன்றாக பராமரிப்பார்கள். பெற்றோர்களைக் கைவிட்டவர்கள் கூட அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தங்களுடனே கடைசி வரைக்கும் வைத்துக்கொள்வார்கள். குறைந்தபட்சம் சிறுதுளி கண்ணீராவது சிந்துவார்கள். ஆம்; அப்படியான ஒரு அற்புத மாற்றத்தை நமக்குள் செலுத்துகிறது இந்தப் படத்தின் கதை. அமெரிக்காவில் உள்ள ஒரு பெருநகரம். புதிது புதிதாக கட்டடங்கள் முளைக்க ஆரம்பித்த காலகட்டம். குறிப்பாக பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகத் தொடங்கிய நேரம்.

அங்கே ஒரு முதிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் வயது எழுபதுக்கு மேல் இருக்கும். ஆனால், பென்சன் யாருக்கும் வருவதில்லை. அப்படியான ஒரு இக்கட்டான சூழல். அசந்தர்ப்பமாக அவர்கள் தங்களின் வீட்டை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு நடுத்தெருவில் நிற்க வைக்கப்படுகின்றனர். அவ்வளவு பெரிய ஊரில் அவர்கள் தங்குவதற்கு யாருமே இடம் கொடுக்க முன்வருவதில்லை. ஆனால், வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளும், பெரிய பெரிய பங்களாக்களும் ஆளில்லாமல் காலியாக பூட்டிக் கிடக்கின்றன. அதைப் பாதுகாக்க இரண்டு செக்யூரிட்டிகள் வேறு. இன்னொரு பக்கம் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் அளவுக்கு அந்த முதிய தம்பதியினருக்கு வருமானம் இல்லை.

அவர்களிடம் சேமிப்பும் பெரிதாக இல்லை. வீட்டு வாடகை கொடுக்கவும், மூன்று வேளை உணவுக்காகவும் ஒரு வேலைக்குப் போகலாம் என்று முயற்சி செய்கிறார் முதிய கணவர். அவரின் மனைவியும் அதற்கு அரை மனதோடு சம்மதம் தருகிறார். ஆனால், வயது காரணமாக எந்த வேலையும் அவருக்குக் கிடைப்பதில்லை. இத்தனைக்கும் அந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அவர்களில் நான்கு பேரின் குடும்பம் அருகில் தான் வசிக்கின்றது. ஒருத்தர் மட்டும் ஆயிரம் மைல் தொலைவில் வசிக்கிறார். வேறு வழியில்லாமல் தங்க இடம் வேண்டி குழந்தைகளின் வீட்டுக்குச் செல்கின்றனர்.

ஆனால், அவர்கள் யாரும் அவ்வளவு நேசத்துடன் தங்களின் அம்மா, அப்பாவை வரவேற்கவில்லை. அவர்கள் ஏன் வந்தார்கள் என்ற வெறுப்புடனே அணுகுகின்றனர். ஒரு மகள் தனது கணவனுடன் பல நாட்கள் ஆலோசனை செய்து அப்பாவை மட்டும் தன்னுடன் தங்க அனுமதிக்கிறாள். மகன் ஒருவன் அம்மாவை மட்டுமே தன்னுடன் தங்க அனுமதிக்கிறான். இப்படி தங்கினால் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படும் என்று கவலையில் அழுகின்றனர் அந்த முதிய தம்பதியினர். நாட்கள் நகர்கிறது. இறுதியாக முதிய கணவர் ஒரு மகளின் வீட்டிலும், மனைவி இன்னொரு மகனின் வீட்டிலும் தங்குவதற்கு சம்மதிக்கின்றனர். அப்படி அவர்கள் தங்கிய பிறகு நடக்கும் துயரச் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.

முதியவர்களின் உணர்வுகளை, வாழ்க்கை முறை மாற்றத்தால் தலைமுறைகளுக்கிடையில் ஏற்படும் மாபெரும் விரிசலை அற்புதமாக சொல்லிய முதல் படம் இதுதான். லியோ மெக்கரேவின் இயக்கத்தில் 1937ல் வெளியான இந்தப் படம் காலவெளியில் மாறிவரும் வாழ்க்கை முறையில் அகப்பட்டு கொண்ட முதிய தம்பதியினரின் இயலாமையை, தனிமையை நினைவுகளினூ டாக கிடைக்கும் சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை மெல்லிய நிகழ்வுகளின் வழியாக சித்தரிக்கிறது.

முதிய வயதில் உறங்க இடமோ, வசிக்க வீடோ இல்லையென்றால் அன்றாட வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் உணர்த்தும் படைப்பு இது. இந்தப்படம் ரிலீசான காலத்தில் அவ்வளவு பெரிதாக பேசப்படவில்லை. கல் நெஞ்சையும் கரைய வைக்கும் ஆற்றல் மிகுந்தது இந்த படம். இப்போது நம்மைச் சுற்றி, நம் குடும்பத்தில் நடக்கிற ஒரு கதையாக இப்படத்தைப் பார்த்து கொண்டாடுகிறார்கள். பெற்றோரை புறக்கணித்தவர்கள் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். இதுவே இப்படத்தின் வெற்றி. சிறுதுளி கண்ணீராவது சிந்துவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீரியஸாக மாறிய சில ஜாலி Prank வீடியோக்கள்.!!! (வீடியோ)
Next post அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)