கிறிஸ்டி பிரவுனின் அம்மா!! (மகளிர் பக்கம்)
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். அந்த வகையில் கிறிஸ்டி பிரவுன் என்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளனின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் அவரின் அம்மா. கிறிஸ்டி பிரவுனின் நிஜ வாழ்க்கையும், அவருக்கும் அம்மாவுக்கும் இடையிலான பந்தமும் தான் ‘My left foot’.கிறிஸ்டி பிரவுன் எந்த மாதிரியான எழுத்தாளர்? அவர் நம்மிடம் எதை பகிர்ந்து கொள்ள விழைகிறார்? அவரின் எழுத்து எங்கிருந்து தொடங்கியது? என்பதை பார்க்கலாம்.
பிரவுன் நம்மைப் போல ஆரோக்கியமான உடல்நிலையோ, இயல்பான பேச்சாற்றலோ கொண்டவர் இல்லை. பிறக்கும்போதே மூளையில் ஏற்பட்ட பாதிப்பு அவரின் உடல் இயக்கங்களை கைது செய்து இடதுகாலை மட்டும் விடுதலையாக விட்டுவிட்டது. இடதுகாலே எல்லாமும் ஆனது. இந்த மாதிரி ஒருவரை உண்மையில் நேசிக்க இந்த உலகில் யார் இருக்கிறார்கள் அம்மாவைத் தவிர பிரவுனின் மொத்த பலமும் அவரின் அம்மா தான். பிரவுனின் தாய் ஒரு தாயைவிட மேலானவளாகத்தான் இருக்கிறாள். அவள் உண்மையில் அன்பின் வடிவமாக இருக்கிறாள். அதனால் தான் பிரவுன் தனது இடதுகாலால் எழுதத் தொடங்கும்போது ஆரம்பிக்கும் முதல் சொல்லே ‘mother’ என்று இருக்கிறது.
எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையுமே முற்றிலும் மாற்றக்கூடிய திறன் காதலியிடம் இருக்கிறது. பிரவுனுக்குப் பேச கற்றுக்
கொடுக்க ஒரு பெண் வருகிறாள். ஆணின் இயல்பு எந்தச் சூழலிலும் எப்போதுமே மாறுவதே இல்லை. தன் வாழ்க்கைக்குள் வரும் எந்தப் பெண்ணையும் ஒரு ஆணால் காதலிக்காமல் இருப்பது கடினமே. அதற்கு பிரவுனும் ஒரு சாட்சியே. அந்தப் பெண்ணின் மீதான காதல் பிரவுனை பேச வைக்கிறது. ஆனால், பிரவுனின் தாயை அச்சமுற வைக்கிறது .
என்ன மாதிரியான அம்மா இவள்? எப்படி இவளுக்கு முன்கூட்டியே எல்லாவற்றையும் கணிக்க முடிந்தது? தன் மகனின் காதலை அந்தப் பெண் ஏற்றுகொள்ளமாட்டாள் என்பது பிரவுனின் அம்மாவிற்கு முன்பே தெரிந்து இருக்கிறது. அந்த தாயின் அச்சம் உடலால் ஏற்கனவே உடைந்து போன தன்னுடைய மகனின் உள்ளமும் உடைந்து போய்விடுமோ என்ற பயம் தான். பிரவுனின் காதல் மரணிக்கிறது. உடலுடன் சேர்ந்து உள்ளமும் உடைகிறது. தாயின் அன்பும், எழுத்தும் பிரவுனை அயர்லாந்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக மாற்றுகிறது. பிரவுன் ஆரம்ப காலத்தில் ஒரு ஓவியராக தன் கலைப் பயணத்தை ஆரம்பிக்கிறார்.
அவருக்கு சலிப்போ, சோர்வோ ஏற்படுவதே இல்லை. இறுதியில் தனக்கான கலை எழுத்தென உணர்கிறார். உடலால் மனதால் ஏற்பட்ட வேதனைகளை தன் எழுத்தால் மகிழ்ச்சியாக, மன அமைதியாக மாற்றுகிறார். உலகின் சகல வலிகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள எழுத்து என்ற கலை என்னிடமும் இருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்துகிறார். பிரவுனின் குடும்பம் மிகப்பெரியது. ஒரு கட்டிலில் நான்கு பேருக்கு மேலே படுத்துக்கொள்ள வேண்டிய சூழல். வறுமை கஞ்சியை தவிர வேறு எந்த உணவையும் அவர்களின் கண்ணில் காட்டுவதில்லை. இந்த நிலையிலும் தன் மகனுக்காக வீல் சேர் வாங்க பணம் சேர்க்கிறாள் அம்மா. அந்த அம்மாவின் அன்பை விவரிக்க சொற்கள் இல்லை.
பிரவுனிடம் இருந்தது. அதனால் தான் தன் நாவலில் வாழ்க்கையில் வேறு யாருக்கும் கொடுக்காத இடத்தை தன் அம்மாவிற்கு தந்து இருக்கிறார்.
பிரவுன் உள்ளத்தால் உடைந்து போயிருக்கும் தருணத்தில் அவனின் அம்மா பேசும் வார்த்தைகள் அற்புதமானது. பிரவுனிடம் ‘‘உடைந்த உடலின் வலியை விட உடைந்த இதயத்தின் வலி அதிகமானது. நான் என் இதயம் உடைந்து போயிருப்பதாக உணர்கிறேன் கிறிஸ்டி. எப்போதுமே நீ தான் என் இதயமாக இருந்திருக்கிறாய்.
நீ ஜெயிக்க வேண்டியது வெளியே இல்லை. உன் மனதிடம். ஒரு நாள் உனக்கான இடத்தை நீ பிடிப்பாய்…’’ என்று சொல்வதோடு நிறுத்தாமல் பிரவுனுக்காக வறுமையான சூழலிலும் தனியாக ஒரு அறையை தானே கட்டிக்கொடுத்து அதில் பிரவுனை அமர்த்தி வரைய சொல்வாள். ‘‘ஓவியம் வரைவதில் கவனம் செலுத்து…’’ என்று சொல்வாள். பிரவுனும் அம்மாவின் அன்பால் நெகிழ்ந்து உடைந்து போன இதயத்தை ஓட்ட வரையவும் பின் எழுதவும் தொடங்குவான்.
பிரவுனின் புத்தகத்தை படிக்கும் மேரி என்ற பெண் அவரை திருமணம் செய்து கொள்கிறாள். கிறிஸ்டி நம்மிடம், ‘‘நானே எழுதும் போது உங்களால் முடியாதா..?’’ என்ற கேள்வியை எப்போதுமே கேட்டுக்கொண்டே இருக்கிறார். ‘‘நீ எழுதுவதற்கு கதையோ, சம்பவங்களோ கிடைக்கவில்லையா? உன் கதையை எழுது. அங்கீகாரம் கிடைக்கவில்லையா? எழுதுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விடவா அங்கீகாரம் உனக்கு தரப்போகிறது…’’ என்கிறார். எழுதுவதற்கு மன சோர்வோ, தோல்வியோ, கழிவிரக்கமோ, வறுமையோ, நோயோ தடையாக இருக்கிறதா? தடையிலிருந்து உன்னை மீட்டெடுக்க தடையை பற்றியே எழுது.
ஒருவேளை மகிழ்ச்சியாக இருக்கிறாயா, அப்போது உன்னால் எழுத முடியாதே. வேதனைப்படாதே நண்பா எனது இடது காலில் சொருகி வைத்திருக்கும் எழுதுகோலை எடுத்துக்கொள்…’’ என்கிறார். இறுதியில் கிறிஸ்டி பிரவுனின் திறனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. அதை தன் அம்மாவுக்கு அவர் சமர்ப்பிப்பதோடு படம் முடிகிறது. கிறிஸ்டி பிரவுன் எழுதிய சுய சரிதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. டேனியல் டே லீவிஸ் கிறிஸ்டியாகவே வாழ்ந்திருந்தார். அதற்கு அங்கீகாரமாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அவருக்குக் கொடுக்கப்பட்டது. எந்த ஒரு மகனின் வாழ்க்கையையும் மாற்றக்கூடிய திறன் அம்மாவிடம் மட்டுமே இருக்கிறது என்பதை ஆழமாக உணர்த்துகிறது இப்படம்.
Average Rating