ஆடை!! (மகளிர் பக்கம்)
‘சுதந்திரக் கொடியாகவே இருந்தாலும் கொடியின் சுதந்திரம் கொடிக் கம்பம் வரைக்கும் தான்’ என முடியும் படத்தில், பல இடங்களில் வாய்ப்புக் கிடைத்தும், ஆடை உருவப்பட்ட காமினி தனது நிர்வாணத்தை மறைக்க ஓடிக் கொண்டே இருக்கிறார். காமினி யாரால் நிர்வாணமாக்கப்பட்டார்? அவர் நண்பர்கள் எங்கே? எப்படி அவர் வெளியே வருகிறார்? என்பதை எதிர்பாராத திருப்பத்துடன் பதிவு செய்திருக்கிறது படம்.
முழுக்க முழுக்க அமலாபால் மீதே கதை முழுவதும் நகர்கிறது. அவரின் துணிச்சலான நடிப்பு பாராட்டுக்குரியது. தனது துடிப்பான நடிப்பால் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார்.
காலியான அலுவலகக் கட்டிடத்தில் ஆடையின்றி அமலா பால் சுற்றிவரும் காட்சிகளில், அவரின் பரிதவிப்பை, பார்ப்பவர்களை சலனப்படுத்தாமல், துளியும் ஆபாசம் இன்றி பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கும், படத் தொகுப்பாளருக்கும் பாராட்டுக்கள்! திருவாங்கூர் சமஸ்தானத்தின் கொடூரமான மார்பக வரிச் சட்டத்தை எதிர்த்து உயிர் துறந்த நங்கேலியின் வரலாற்றோடு துவங்கும் படத்தில், நங்கேலி கதைக்கும் ஆடை
படத்திற்கும் தொடர்பில்லை.
‘அப்போ முலைய மூட போராட்டம் பண்ணாங்க.. இப்ப முலைய காட்டி போராட்டம் பண்றீங்க’ என்ற இயக்குநரின் ஒப்பீடு ஏமாற்றத்தையே தருகிறது. முலை வரி என்பது பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அல்ல, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை. ஒரு கட்டத்தில் ‘நான் மானத்தோடு வந்துருவேம்மா’ என்று காமினியை இயக்குநர் சொல்ல வைத்ததன் மூலம், பெண் உடலை ஒரு ஆண் பார்த்துவிட்டால் அவள் மானம் போய்விடும் என்பதுதான் ‘ஆடை’ சொல்ல வரும் செய்தியா? மணிப்பூரில் 12 பெண்கள் ராணுவத்தை எதிர்த்து நிர்வாணமாகப் போராட்டம் நடத்தினர்.
விசாரணைக்காக அழைத்துச் சென்ற மனோரமா என்ற பெண்ணை இந்திய ராணுவம் கற்பழித்து கொன்று வீசியது. ராணுவத்திற்கு எதிராக மணிப்பூரின் 12 பெண்களும் தங்கள் உடலையே ஆயுதமாக்கி ஆடைகளைக் களைந்து ‘உங்களிடம் ஆயுதங்கள் இருக்கிறது.. எங்களுக்கு எங்கள் உடலே ஆயுதம்.. நாங்கள் மனோரமாவின் தாய்மார்கள்.. இந்திய ராணுவம் எங்களையும் கற்பழிக்கப்பட்டும்’ என்று கோஷமிட்டு, ராணுவத்திற்கு எதிராக நிர்வாணப் போராட்டத்தை நடத்தினர். மணிப்பூர் பெண்களின் ஆடையற்ற போராட்டம் கவனம் பெற்றது.
பெண்ணியமும், கம்யூனிசமும் பேசி ப்ராங் ஷோ நடத்தி, சுதந்திரமாக சுற்றித்திரியும் காமினி, இறுதியில் மனம் திருந்தி, பெயரை மாற்றி சமூகம் எதிர்பார்க்கும் பெண்ணாக மாறுவதும்.. உடைதான் கவசம் என ஆடை பட நங்கேலி சொல்லும் செய்தியும் கந்தல்.
நங்கேலியின் ரத்த வரலாறு
18, 19ம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் மன்னர்கள் கேரளத்தின் பெரும்பகுதியை ஆண்டு வந்தனர். திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த கீழ்சாதி மக்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன. பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைத்துக் கொள்வதற்கும் வரி கட்ட வேண்டும். இந்த வரிக்குப் பெயர் “முலக்கரம்” என அழைக்கப்பட்டது. அதாவது, தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பின் அளவிற்கு ஏற்ப தங்கள் மார்பகத்தை மறைக்க வரி விதிக்கப்படும். மேலாடை அணியவில்லை என்றால் வரி கட்டத் தேவையில்லை.
பெண்கள் மார்பை மறைக்காமல் இருப்பதும், நகை அணியாமல் இருப்பதும், ஆண்கள் மீசை வைக்காமல் இருப்பதும்தான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்ற எண்ணத்தில் உருவானதே இதற்கான வரிகள். உடை அணியும் விதத்தை வைத்தே தாழ்த்தப்பட்டவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதே உயர் சாதியினர் எண்ணம். இவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு அரச வம்சம் செல்வச் செழிப்புடன் மிதந்தனர். கீழ்சாதி மக்கள் கொடூரமான வரிகளால் துயரத்தில் உழன்றனர்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுகண்டன் என்பவரின் மனைவி நங்கேலியால் அரசு விதித்த வரியைக் கட்ட முடியவில்லை. கணவன் இல்லாத சமயத்தில் வீடு தேடி வந்த வரி வசூலிப்பவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாத நங்கேலி, மார்பகங்களை துணி கொண்டு மூடினால்தானே வரி கேட்கிறாய். எனக்கு மார்பகங்களே வேண்டாம் எனக் கூறி, தன் இரு மார்பகங்களையும் அறுத்து வாழை இலையில் வைத்து வரி வசூலிக்கும் அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்தவர், மார்பை அறுத்த சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் மூழ்கி இறந்தார்.
இந்தத் துயரத்தை தாங்க முடியாத கணவர் சிறுகண்டன் நங்கேலியின் சிதையிலேயே உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் எல்லா இடங்களுக்கும் பரவி, முலக்கரத்திற்கு எதிராக மாநிலமெங்கும் போராட்டம் துவங்கி பெரும் இயக்கமாக மாறியது. பிறகு தோள்சீலைப் போராட்டமாக மாறியது. மக்களின் இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க 1812ம் ஆண்டு ‘முலக்கர’த்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நங்கேலி வசித்த இடத்திற்கு ‘முலச்சிப்பறம்பு’ எனவும் பெயரிடப்பட்டது. நங்கேலியின் துணிச்சல் மிக்க இந்த தியாகம் சாதிய அடக்குமுறையின் ஒரு செயலுக்கான முடிவு.
Average Rating