ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)
உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது – தேவதேவன்
மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது. ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், மாரிமுத்துவுக்கும் அவனது வீட்டாருக்கும் ஏக வருத்தம். அவர்கள் ஆண் குழந்தைதான் பிறக்கும் என எதிர்பார்த்து இருந்தார்கள். எங்கள் வழியில் ஆண் வாரிசுதான் அதிகம் என பெருமை பேசினார்கள்.
இரண்டாவது முறை மதுமிதா கருவுற்றபோது, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் ‘பிறக்கப்போகும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா?’ எனப் பார்க்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். பிறக்கப்போவது பெண் குழந்தையாக இருந்தால் கருவை கலைத்துவிடுமாறு கணவனது வீட்டார் சொல்லியது மதுமிதாவின் அடிவயிறை கலக்கியது. டாக்டரிடம் மதுமிதாவை கூட்டிப்போன கணவன் மாரிமுத்து ஸ்கேன் யோசனையை கூறினான். ‘ஸ்கேன் செய்தால் கூட தோராயமாகத்தான் கூற முடியுமே தவிர, உறுதியாக கூற முடியாது. அப்படி செய்வது சட்டப்படி குற்றம்’ என டாக்டர் கண்டிப்புடன் மறுத்துவிட்டார்.
மதுமிதாவுக்கு இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்தது. அவனது கணவன் வீட்டார் தாம் தூம் என குதிக்க ஆரம்பித்தனர். மாரிமுத்துவுக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் தான் ஆண் வாரிசு கிடைக்கும் என மதுமிதாவின் காதுபடவே பேசினார்கள். இதனால் இரு வீட்டாருக்கும் சண்டை பெரிதாகி கலவரமானது.‘குழந்தை பிறப்பதற்கு பெண் மட்டும்தான் காரணமா? பிறக்கப்போவது ஆணா? பெண்ணா?’ என்பதை முடிவு செய்வது யார்?
எல்லா மனிதர்களுக்கும் 46 குரோமோசோம்கள் உள்ளன. இதில் 23 பெண் கரு முட்டையில் இருந்து வருகிறது. மற்ற 23 குரோமோசோம்கள் ஆண் உயிரணுக்களில் இருந்து வருகிறது. மொத்தம் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கிறது. இந்த 23 குரோமோசோம்களில் 22 பரம்பரையாக வரக்கூடியது. 23 வது குரோமோசோம் ‘ஆணா? பெண்ணா?’ என செக்ஸை நிர்ணயிக்கும் குரோமோசோம். பெண் உடலில் 23 வதாக X செக்ஸ் குரோமோசோம் இருக்கும்.
ஆண் உடலில் 23 வது குரோமோசோமில் சில உயிரணுக்களில் X ஆகவும், சில உயிரணுக்களில் Y ஆகவும் இருக்கும். இந்த ஆணுக்கான குரோமோசோம், பெண்ணுக்கான குரோமோசோமுடன் சேர்ந்து XX என அமைந்தால் அது பெண் குழந்தையை உருவாக்கும். XY என அமைந்தால் ஆண் குழந்தையை உருவாக்கும். எந்தக் குழந்தை பிறந்தாலும் அதை நிர்ணயிப்பது ஆணின் குரோமோசோம்தான். எனவே, இதற்குப் பிரதான காரணம் ஆண்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொள்ளாமல்தான் பெண் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அது உங்கள் குழந்தை. அதை பாதுகாப்பது உங்கள் கடமை. அதை விடுத்து அர்த்தமில்லாமல் கருக்கலைப்பு போன்ற காரியங்களில் ஈடுபடுவது கொலைக்கு சமமானது. இன்று குழந்தை பிறந்தாலே போதும் என பல தம்பதிகள் குழந்தைகள் இல்லாமல் அல்லாடுவதை பார்க்கிறோம்.
குழந்தையின் அருமை உணர்ந்து செயல்படுங்கள். இன்றைய காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். அதனை புரிந்து பெண் குழந்தையை போற்றுங்கள். ஆண் குழந்தையை விட பெண் குழந்தை எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்பதை உணருங்கள்.
Average Rating