டெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 35 Second

வருடம் தவறாமல் தீபாவளி வருவதுபோல், இப்போது டெங்கு காய்ச்சல் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு பருவகாலங்களிலும் டெங்குவால் அவஸ்தைகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், அதிலிருந்து நாம் ஒன்றும் கற்றுக் கொள்வதில்லை என்பதையே அடுத்தடுத்த ஆண்டுகளின் நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,900 பேர் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் சென்னையில் இதன் தாக்கம் தீவிரமாகவே உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரே ‘டெங்குவை எதிர்கொள்வது சவாலாகத்தான் இருக்கிறது’ என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். சென்னை மாநகராட்சி துணைகமிஷனர் மதுசூதன் ரெட்டியும் சென்ற ஆண்டைவிட சென்னையில், டெங்கு 9 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மாநில காவல்துறை தலைமையகத்தில்(DGP Office) மட்டுமே குறைந்தபட்டசம் 8 காவலாளர்களுக்கு டெங்கு காய்சசல் வந்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறைந்தது 24 பேராவது சிகிச்சைக்காக சொந்த ஊர் சென்றிருப்பதாகவும் தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சென்ற வாரம் DGP அலுவலகத்தைச் சுற்றிலும் கொசு மருந்து அடிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு காவலர் மனைவி ஒருவரே டெங்குவுக்கு பலியாகியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

இவையெல்லாமே நமக்கு டெங்கு பற்றிய இன்னும் தெளிவான புரிதல் இல்லையென்பதையே காட்டுகிறது. டெங்கு காய்ச்சல் கொசுக்கடியாலும், வைரஸாலும் வரக்கூடிய ஒரு நோய். Aedes Aegypti மற்றும் Aedes Albopictus என்ற இரண்டு வகை கொசுக்கள் டெங்கு நோயை ஏற்படுத்துகின்றன. இவை சுத்தமான தண்ணீரில் மட்டுமே வளர்பவை. அதேபோல பருவமழைக்காலமான ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதங்களில் தீவிரமாக பரவக்கு கூடியவை.

டெங்கு பாதிப்பில் உலக அளவில் 70 சதவீதம் ஆசியாவில்தான் உள்ளது. இந்த 70 சதவீதத்தில் இந்தியாவின் பங்கு 34 சதவீதம். இந்த நிலையில் டெங்குவை குணமாக்கக்கூடிய மருந்தையோ, டெங்கு வராமலிருக்க தடுப்பூசியோ உலகம் முழுவதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம், மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தும் டெங்கு வைரஸ் 2-வானது அவ்வப்போது மாற்றமடைகிறது என்று சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். அடுத்து புவி வெப்பமயமாதல் செயல்பாட்டில், பருவநிலை மாற்றத்தால் டெங்கு இனப்பெருக்கமும் அதிகமாகிறது. இவற்றையெல்லாம் உலக சுகாதார அமைப்பே ஒப்புக் கொண்டுள்ளது. நிலைமை இப்படியிருப்பதால் நாம் தொலைநோக்கு திட்டங்களை வகுக்க வேண்டிய அவசர நிலையில் உலகம் இருக்கிறது.

டெங்கு காய்ச்சல் பரவும்போது, அது இந்தியாவில் ஏற்கனவே உள்ள டெங்கு வைரஸ்தானா அல்லது மாற்ற மடைந்த வைரஸா என்பதைப் பார்க்க வேண்டும். இந்தியாவில் முதன் முதலில் 1996-ம் ஆண்டு அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய டெல்லியில் டெங்கு என்ற வைரஸ் காய்ச்சல் பரவியபோது, இந்தியாவில் இந்த வைரஸ் கிடையாது, இது மாற்றம் அடைந்த கொசு. மேலும், இது உயிரிப்போராக இருக்குமோ? என்ற சந்தேகத்தை அன்றைய உள்துறை செயலர் தெரிவித்தார். இதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், மேல்நிலை தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை பாதுகாக்காமல் நீங்கள் சுற்றிலும் தேங்கியுள்ள தண்ணீரை மட்டும் சுத்தம் செய்வதில் என்ன பயன் என்ற கேள்வி வருகிறது. அதுமட்டுமல்ல, டெங்கு கொசுக்கள் தண்ணீருக்கடியில் முட்டையிடுகின்றன. தண்ணீருக்கு மேல் கொசு மருந்து அடித்து பயனில்லை. அதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள தண்ணீர் சேமிப்பு நிலையங்களை பாதுகாப்பதும் அவசியமாகிறது.

அடுத்ததாக, பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. கழிவுநீர் வடிகால்களை சுத்தம் செய்யாவிட்டால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதன் கொடுமையை ஏற்கனவே கடந்த 2015-ல் சென்னை மக்கள் அனுபவித்துவிட்டார்கள்.

ஆனால், கழிவுநீர் வடிகாலை சுத்தப்படுத்தும் பணி இதுவரை 30 சதவீதம் மட்டுமே நடந்திருக்கிறது. சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரப்படி 3.2 லட்சம் டன் அளவு மண்ணை கழிவுநீர் வடிகாலிலிருந்து அகற்ற வேண்டும். இதுவரை ஒரு லட்சம் டன் அளவு மண் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், 7,365 கழிவுநீர் வடிகால்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் கார்ப்பரேஷன் கமிஷனர் ஒரு மீட்டிங்கில் தெரிவித்துள்ளார்.

அரசு இப்படி மெத்தனமாக இருந்து கொண்டு தனியார் நிறுவனங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்று அபராதத் தொகை வசூலிப்பது எந்தவிதத்தில் நியாயம்? இதையெல்லாம் சரி செய்யாமல் எங்கிருந்து டெங்குவை ஒழிப்பது?

இப்போது தமிழக அரசு ‘நாங்கள் நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்கிறோம்’ என்று சொல்கிறது. ஆனால், நிலவேம்பு குடிநீர் மட்டுமே டெங்குவை எதிர்க்க போதுமான அஸ்திரமில்லை. நிலவேம்பு என்பது ஒரு தற்காப்பு நடவடிக்கைதான். நிலவேம்பு கொடுத்துவிட்டாலே கடமை முடிந்தது
என்றும் இருக்கக் கூடாது.

ஏனெனில், நிலவேம்பு குடிநீருக்கு வைரஸைக் கொல்லும் திறன் இருக்கிறதா? நிலவேம்பு நீரை கொடுப்பதால் டெங்கு வராமல் தடுக்கிறதா அல்லது வந்த பின் நோயாளிகளை காப்பாற்றுகிறதா? இப்போது வந்திருக்கும் டெங்குவை பரப்பும் வைரஸ் நிலவேம்புக்கு கட்டுப்படுகிறதா? என்பதைஒவ்வொரு முறையும் ஆய்வு செய்ய வேண்டும்.

முக்கியமாக, பெண்களின் உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன்கள் ஆண்களிடமிருந்து வேறுபட்டவை. இதன் காரணமாக நிலவேம்பு குடிநீர் கொடுக்கும்போது டெங்கு வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய தன்மையானது அவர்களிடத்தில் போதுமான அளவு உதவி செய்வதில்லை என கண்டறிந்திருக்கிறார்கள்.

நிலவேம்பு குடிநீர் நோயின் தீவிரத்தன்மையைக் குறைக்குமே தவிர, நோயே வராமல் தடுக்கவோ வந்தபின் பூரண குணமாக்கவோ செய்யாது. இது ஒரு துணை அமைப்பே தவிர, டெங்கு நோயாளியை காப்பாற்றும் ஆதார மருந்து கிடையாது. இந்த நிலவேம்பு குடிநீரை டைப் 2 வைரஸில் மட்டும் அதிக அளவில் சோதனை செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

2015-ம் ஆண்டில் Plos மருத்துவ இதழில், சென்னை மாநகராட்சி அளித்த தரவுகள் அடிப்படையில் அறிவியலாளர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்னையில் மட்டும் ஏறக்குறைய 2 லட்சம் பேர் (93 சதவீதம்) டெங்குவால் பாதிக்கப்படுவதாக சொல்கிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் ஒரு சதவீதம் என்று வைத்துக் கொண்டால் கூட 2 ஆயிரம் பேர் இறந்திருக்க வேண்டும். வருடம் முழுவதுமே இந்தியாவில் டெங்கு பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

அடுத்து, சோதனை முறையிலும் குழப்பம் இருக்கிறது. டெங்கு நோய்த்தொற்று ஏற்பட்ட மறுநாளிலிருந்து ஒரு வாரம் வரை NS 1(Non Structural Protein 1) பாசிடிவ் முடிவு காட்டும். ஒரு வாரத்துக்குப் பிறகுதான் IGM பாசிடிவும், அதன்பிறகுதான் IGG பாசிடிவ் காண்பிக்கும். அடுத்து ரத்த தட்டணுக்கள் இழப்பு தெரியும்.ஒரு நோயாளிக்கு எந்த சோதனை செய்தார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். டெல்லியில் டெங்கு பரவியபோது டெங்கு பேக்கேஜ் சோதனைமுறை கொண்டு வந்தார்கள்.

அந்த சோதனையில் நான்குமே 2 மணி நேரத்தில் தெரிந்துவிடும். அப்படியிருக்கும்போது அந்த சோதனை முறையை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? சிகிச்சையிலும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தரநிலை சிகிச்சையை சட்டமாக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. 1996ம் ஆண்டு இயற்றிய சட்டப்படி டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனைக்கு வந்தால், அந்த தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதையும் அரசு மருத்துவமனைகளோ, தனியார் மருத்துவமனைகளோ கடைபிடிப்பதில்லை.

சுத்தமான நீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் நடவடிக்கை எடுப்பது, டெல்லி பேக்கேஜ் சோதனை முறையை கிராம அளவில் கொண்டு செல்வது, சிகிச்சையில் தர நிர்ணயத்தை சட்டமாக்குவது, எந்த வகை வைரஸ் பரவுகிறது என கண்டறிவது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தாமல், தகவல்களை மறைப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்தும் வரை டெங்குவை ஒழிக்க முடியாது என்பது நிதர்சனம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதர்களின் உயிரை காப்பாற்றிய 5 காட்டு விலங்குகள்!! (வீடியோ)
Next post கண்களில் உண்டாகும் காயங்கள்!! (மருத்துவம்)