சென்னையில் டப்பாவாலாக்கள்!! (மகளிர் பக்கம்)
சென்னையில் வேலைக்கு செல்பவர்கள், கையில் சாப்பாட்டு பையை எடுத்துச் சென்ற காலம் எல்லாம் மறைந்துவிட்டது. காரணம், ஸ்விக்கி, சொமட்டோ, உபேர் ஈட்ஸ் போன்ற ஆப்களில் இவர்கள் சுடச்சுட உணவினை ஆர்டர் செய்து சாப்பிட பழகிவிட்டனர். இவர்களின் முந்தைய தலைமுறையினர்தான் இந்த டப்பாவாலாக்கள். மும்பையில் இவர்கள் மிகவும் பிரபலம்.
வெள்ளை சட்டை, பேன்ட், தலையில் குல்லா அணிந்திருக்கும் இவர்கள் மும்பை நகரில் எந்த மூலையில் அலுவலகம் இருந்தாலும் அங்கு உணவு கொண்டு போய் கொடுப்பார்கள். அதாவது, வீட்டில் சமைத்த உணவினை சுடச்சுட எடுத்துச் செல்வதுதான் இவர்களின் வேலை.
என்னதான் பல உணவகங்கள் இருந்தாலும், அவர்கள் சுடச்சுட உணவினை கொடுத்தாலும் வீட்டுச் சாப்பாடு போல் வராது. அப்படி வீட்டுச் சாப்பாட்டிற்காக ஏங்குபவர்களுக்காகவே தான் டப்பாவாலாக்கள் தோன்றினார்கள் என்று கூட சொல்லலாம். இவர்களின் பணியை மும்பை வந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.
மும்பையில் மட்டுமே பிரபலமான இவர்கள், சென்னையிலும் உள்ளனர். அதில் பெண்களும் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர். புரசைவாக்கம், வேப்பேரி, அண்ணாநகர், சூளை போன்ற இடங்களில் உள்ள வீடுகளில் இருந்து அண்ணாசாலை, பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகம், நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் பணியை இவர்கள் செய்து வருகிறார்கள்.
மதியம் 12 மணிக்கு பைக்கில் கூடை அல்லது பெரிய பைகளுடன் புறப்படும் இவர்கள் வேப்பரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வீடுகளில் லஞ்ச் பாக்ஸ்களை சேகரிக்கின்றனர். பின்னர் சமைத்த உணவின் சூடு ஆறும் முன்பு அதை அலுவலகத்திற்கு கொண்டு செல்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த சேவை சென்னையிலும் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட டப்பாவாலா பெண்கள் குழு உள்ளனர். மின்சார ரயில்களிலும் எடுத்துச் சென்று உணவு சேவை செய்கின்றனர்.
இந்தப் பணியில் ஈடுபடும் மல்லிகா, ‘‘3வது தலைமுறையாக நான் இந்த உணவு சப்ளை செய்யும் பணியை செய்கிறேன். காலை 11 மணிக்கு எனது வேலை ஆரம்பிக்கும். பைக்கில் 150க்கும் மேற்பட்ட உணவு பைகளை சேகரித்து கொண்டு பாரிமுனை அண்ணா சாலை பகுதியில் உள்ள அலுவலகத்தில் கொண்டு போய் சேர்க்கிறேன். ஒரு லஞ்ச் பாக்சை கொண்டு சென்று சேர்க்க எனக்கு மாதம் ரூ.500 கிடைக்கும். இவ்வாறு 150 பேருக்கு உணவு பையை எடுத்துச் செல்கிறேன்.
காலையில் எனது வீட்டு வேலையை முடித்துக்கொண்டு பைக்கில் புறப்பட்டால் மாலை 3 மணிக்குள் டப்பாவாலா பணி நிறைவடைந்துவிடும். இதனால் என்னுடைய வீட்டு வேலையும் பார்க்க முடிகிறது. பையில் முகவரி அடங்கிய அட்டை இருக்கும் என்பதால் எந்த அலுவலகத்தில் சேர்ப்பது, காலி டப்பாக்களை எந்த வீட்டில் தருவது என்பதில் குழப்பம் ஏற்படாது. மழை நேரமாக இருந்தாலும் நேரத்துக்கு உணவு கொண்டு போய் சேர்க்க வேண்டும். இதுவரை நான் ஒருபோதும் நேரம் கடந்து கொண்டு சென்றதில்லை. பெரும்பாலும் நாங்கள் இந்தப் பணியை பைக் மற்றும் ஆட்டோ மூலம் செய்கிறோம்.
அலுவலகத்தில் சேர்த்த ஒருமணி நேரம் அங்கேயே இருந்து மீண்டும் காலி லஞ்ச்பாக்ஸ்களை சேகரித்து அவர்களது வீட்டில் ஒப்படைத்து விட்டு திரும்புவோம். நாங்கள்தான் இந்த ஆன்லைன் உணவு சப்ளையர்களுக்கு முன்னோடி’’ என்கிறார் மல்லிகா.
Average Rating