மாலைப்பொழுதின் மயக்கத்திலே… பார்த்த ஞாபகம் இல்லையோ… சௌகார் ஜானகி!!(மகளிர் பக்கம்)

Read Time:25 Minute, 19 Second

சிறு வயதில் கிராமங்களின் டூரிங்க் டாக்கீஸ்கள், நகரங்களின் திரையரங்குகளில் பாட்டிகள், அத்தைகளுடன் பெண்கள் பகுதியில் அமர்ந்து பெரும்பாலும் பெண்களுடனே படங்கள் பார்த்த தருணங்களே அதிகம். கொடூரமான வில்லன்களான பி.எஸ்.வீரப்பா, நம்பியார் இருவரும் பெண்களின் வசவுகளுக்கு ஆளாகி சாபத்தையும் பெறுவார்கள்.

அந்த வரிசையில் பி.எஸ்.ஞானம், சி.கே.சரஸ்வதி போன்ற வில்லி நடிகைகளும் உண்டு. அதேபோல் சௌகார் ஜானகி திரையில் தோன்றும்போதும், ஒரே குரலில் ’அய்யோ, வந்துட்டா அழுமூஞ்சி’ என்பார்கள். நடிக, நடிகையரை உரிமையுடன் அவன், அவள் என்று மிக இயல்பாகப் பேசிச் செல்வார்கள். மக்களின் உரிமைக்குரல் அல்லவா? இதற்கெல்லாம் எந்த நட்சத்திரங்களும் வருத்தப்பட்டதாகவோ கோபித்துக் கொண்டதாகவோ வரலாறு இல்லை. ’கூத்தாடிகளுக்கு அவ்வளவுதான் மரியாதை’ என இயல்பாகக் கடந்து செல்வார்கள்.

அமெச்சூர் நாடக நடிகையாகப் பரிணமித்தார்

ஆகாஷ்வாணி மதராஸ் கேந்திரம் (அதுதான் அன்றைய சென்னை வானொலி நிலையம்) மூலம் நாடகங்களில் தொடங்கிய நடிப்பும், வசன உச்சரிப்பும் திரைப்படங்களில் அடித்தளமிட உதவியதை ஜானகி எப்போதும் மறக்கவில்லை. அத்துடன் கூடுதலாக தமிழுக்கு கூடுதல் பயிற்சியும் பெற்றார். வானொலி நாடகங்களிலிருந்து திரைப்படங்களுக்குள் வந்து, அங்கிருந்து மேடை நாடகங்களுக்கும் பயணித்தார். மேஜர் சுந்தர்ராஜன் தான் அவரை நாடகங்களில் நடிக்க அழைத்துச் சென்றவர்.

சொல்லப் போனால், மேடை நாடகங்களின் வழியாகத்தான் இயக்குநர் கே.பாலச்சந்தரின் அறிமுகமே அவருக்குக் கிடைத்தது. திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகை நாடகங்களில் நடிக்க வருகிறார் என்பதை பாலச்சந்தர் முதலில் நம்பவே இல்லை. அவரது ‘ராகினி க்ரியேஷன்ஸ்’ அமெச்சூர் நாடகக் குழுவின் ‘மெழுகுவர்த்தி’ நாடகத்தில் முதன் முதலாக நடித்தார். ஊதியம் எதுவும் கிடைக்காது. நாடகத்துக்குத் தேவைப்படும் உடைகளைக் கூட இவரே எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆனால், நடிக்கிறோம் என்ற ஆத்ம திருப்தியும் மக்களுடன் நேரடியாக ஊடாடும் அனுபவமும் நிறைவாகக் கிடைத்தது. 300 மேடையேற்றங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவருடன் நாகேஷ், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்தார்கள். நாடகங்களில் அதிகமாக இணைந்து நடித்தவர் காந்த் மட்டுமே… திரைப்படங்களில் நடித்துக்கொண்டே நாடகத்தையும் விடாமல் தொடர்ந்த
திறமைசாலி சௌகார்.

வித்தியாசமான வேடங்கள் அளித்த இயக்குநர் சிகரம் இயக்குநர் பாலச்சந்தரின் படங்களில் அவருக்கு வித்தியாசமான பல வேடங்கள் கிடைத்தன. ‘நீர்க்குமிழி’, ’நாணல்’, ’பாமா விஜயம்’ துவங்கி ‘அழகன்’ வரை ஏராளமான படங்களில் ஜானகி நடித்துள்ளார். அதிலும் ‘எதிர் நீச்சல்’ பட்டு மாமி, நகைச்சுவையும் துறுதுறுப்பும் நிறைந்த கலகலப்பான பாத்திரம். படத்தில் மனோரமா இருந்தபோதும் பட்டு மாமியும் தன் பங்குக்கு ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்தார். அந்த மடிசார் சௌகாருக்கு அவ்வளவு பாந்தமாய்ப் பொருந்தியது.

அசட்டு கிட்டு மாமா பட்டு மாமிக்கு ஜாடிக்கேற்ற மூடி. இருவருக்குமான அந்த டூயட் இருக்கிறதே ‘அடுத்தாத்து அம்புஜத்தப் பார்த்தேளா….’ அடடா… எத்தனை தலைமுறை தாண்டியும் நகைக்கவும் ரசிக்கவும் வைக்கிறதே.‘ஜீவனாம்சம்’ படத்திலும் வழக்கறிஞர் நாகேஷின் மனைவியாக அதே மடிசார் மாமி வேடம்தான். நகைச்சுவையுடன் சட்ட நுணுக்கங்கள் அறிந்த வக்கீல் மனைவியாக, வார்த்தைக்கு வார்த்தை ‘லா-பாய்ண்ட்’ பேசக் கூடியவராக அசத்தினார். இரு படங்களுமே 1968 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து வெளியானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாகவே ‘நீர்க்குமிழி’ யின் டாக்டர் இந்திரா. கண்டிப்புக்கார டாக்டர் மேஜரின் மகளாக, டாக்டரே ஆனாலும் தந்தையின் சொல்லுக்கும் கண்டிப்புக்கும் கட்டுப்பட்டவராக, காதலைத் துறந்து மேற்படிப்புக்குச் செல்பவராக, வழக்கம் போல் அழவும் வைத்தார். பாலச்சந்தர் படங்களில் அவருக்குக் கிடைத்த மாஸ்டர் பீஸ் வேடம் என்றால் ‘இரு கோடுகள்’ கலெக்டர் ஜானகி. கம்பீரம், மிடுக்கு என குறைவற்ற வேடம். கலெக்டரே ஆனாலும் பெண் அல்லவா? அழாமல் முடியாது.

ஃபைல், லைஃப் வசனங்கள், வேலையில்லாமல் வீட்டிலிருக்கும் (முன்னாள்) கணவரின் குடும்பத்துக்கு உதவுவதற்காக, இரு மகன்களுக்கும் இடையில் புதிர்ப் போட்டி வைத்து பணத்தைப் பரிசாகக் கொடுப்பது, கணவரின் இரண்டாவது மனைவியையும் குழந்தைகளையும் கொலு பார்க்கும் சாக்கில் வீட்டுக்கு அழைத்து வருவது, வழக்கம் போல் அங்கும் புதிரான ‘புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் யாருக்கானவன்?’ என பாடல் வழி கேள்வி எழுப்புவது என பாலச்சந்தரின் இயக்குநர் டச் இல்லாமல் முடியாதல்லவா? என்னதான் ஐ.ஏ.எஸ். படித்த கலெக்டர் என்றாலும், அரசாங்க அதிகாரிக்கேயுரிய தோரனையுடன் தன் கடமைகளைச் செய்தாலும் வீடு என்று வந்து விட்டால் நவராத்திரிக்குக் கொலு வைத்து நாலு சுமங்கலிகளையாவது வீட்டுக்கு அழைத்து பாட்டுப் பாடியே தீர வேண்டிய கட்டாயமும் இருக்கிறதே?‘தில்லுமுல்லு’ படத்திலும் அவர் ஏற்று நடித்த வேடத்தின் வழியாக அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.

வயதை மீறிய சுறு சுறுப்பையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்திய வேடம். அவருடைய சொந்த வீட்டிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தது. திருட்டுத்தனமாக குழாய் வழியாக மேலே ஏறிச் செல்லும் காட்சியில் டூப் நடிகைகளைப் பயன்படுத்தாமல், துணிச்சலாக அவரே ஏறியிருக்கிறார். ஒரே டேக்கில் அது ஓ.கே. செய்யப்பட்டது என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவையின் உச்சம் அந்த வேடம். ஆரம்ப கால சௌகார் ஜானகிக்கும் ‘தில்லுமுல்லு’ படத்தின் ஜானகிக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடுகள்? அவரா இவர் என்றே நம்மை அதிசயிக்க வைத்தவர்.
காவியத்தலைவி – ரங்க ராட்டினம் தயாரிப்பாளராக…..

‘1963ல் வங்காள மொழியில் வெளியான ‘உத்தர் ஃபால்குனி’ பின்னர் 1966ல் ‘மம்தா’ என இந்தியிலும் எடுக்கப்பட்டது. இரு மொழிப் படங்களிலும் நாயகியாக நடித்தவர் சுசித்ரா சென். அதன் ஈர்ப்பில் 1970ல் தமிழில் இதை காவியத்தலைவி என சௌகார் ஜானகியே சொந்தமாகத் தயாரிக்க, பாலச்சந்தர் இயக்கினார். தாயும் மகளுமாக இரட்டை வேடங்கள் ஏற்று உணர்வுப்பூர்வமாக நடித்தார் ஜானகி. வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்ட படமும் கூட. ‘ஒருநாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்’ இந்தப் பாடல் வானொலியில் ஒலித்த காலம் துவங்கி சிறு வயது முதலே மனதுக்கு மிக நெருக்கமானதோர் உணர்வை ஏற்படுத்தத் தவறியதே இல்லை.

அதிலும் ‘கண்ணா சுகமா.. கிருஷ்ணா சுகமா… என் கண்மணி சுகமா சொல் என்றேன்’ என்ற வரிகளைக் கேட்கும்தோறும் நம்மிடம் நேரிடையாக நலம் விசாரிப்பது போன்ற ஆத்மார்த்தமான பிணைப்பை உண்டாக்கும். 1971ல் கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையரின் இயக்கத்தில் ‘ரங்க ராட்டினம்’ படத்தைத் தயாரித்து நடித்தார். அதிலும் இரட்டை வேடம்தான் ஏற்றார். இந்தப் படங்கள் இரண்டுமே கதாநாயகியை முதன்மைப்படுத்தியவை. ஜெமினி கணேசன், ரவிச் சந்திரன் இருவரும்தான் கதாநாயகர்கள். இரவு விடுதியின் பாடகியாக பார்த்த ஞாபகம் இல்லையோ….

ரசிகர்களால் ‘அழுமூஞ்சி’ என்று சுட்டப்பட்ட சௌகார் ஜானகி, திடீரென்று ஒரு படத்தில் மலேசியாவின் இரவு விடுதி ஒன்றில் இளமை துள்ளும் பாடகியாகத் தோன்றினார் என்றால், நம்பத்தான் வேண்டும். மின் விளக்கொளியில் நவீன பாணியில் ஜொலிக்கும் கருப்பு நிறப் புடவை
யில், கையில் மைக்குடன் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ… பருவ நாடகம் தொல்லையோ…’ எனப் பாடியவாறே அறிமுகமாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். அந்தக் காட்சி யில் அவருடன் நடிக்கும் சிவாஜி கணேசன் வியந்து அவரைப் பார்த்து ரசித்து பாடலில் ஒன்றி, பின் காதல் வயப்படுவார். பார்வையாளர்களாகிய நாமும் அவ்வாறே வியந்துதான் சௌகார் ஜானகியைப் பார்த்தோம்.

திரையில் நடிக்க ஆரம்பித்து 14 ஆண்டுகளுக்குப் பின்னரே, வழக்கமான பாதையிலிருந்து விலகி நடிக்கும் வாய்ப்பு ஜானகிக்குக் கிடைத்தது. ஆனால், அதுவும் பெரும் போராட்டம்தான். இந்த வேடத்துக்கு அவரை இயக்குநர் தாதா மிராஸியிடம் பரிந்துரைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அது அவரது சொந்தப் படமும் கூட. இயக்குநருக்கு இந்த வேடத்தை ஜானகிக்கு அளிப்பதில் உடன்பாடில்லை. அதனால் அவர் மறுத்து விட்டார். இவ்வளவுக்கும் ஜானகி இந்த வேடத்தை சிறப்பாகச் செய்வார்’ என்று சிவாஜி வலியுறுத்திப் பேசிய பின்னரே அரைகுறை மனதுடன் இந்த வாய்ப்பை அவருக்கு அளித்தார். அந்த நம்பிக்கைக்குக் குந்தகம் விளைவிக்காமல் ஜானகியும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாகச் செய்தார்.

அதுவரை அவர் நடித்த படங்களின் பட்டியலைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தோம் என்றால், அடக்கமான பெண்ணாக, எளிய குடும்பத்தைச் சேர்ந்த வராக, வசதி படைத்த பெண்ணே ஆனாலும் கணவனுக்கு அடங்கியவராக, திருமணமானவராக, குழந்தை களின் தாயாக, வயதான பெண்மணியாக, குடும்பப் பொறுப்பு மிக்கவராக, படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்ணாகப் பெரும்பாலும் ஒரு சோகச் சித்திரமாகவே தோன்றியுள்ளார். இரவு விடுதிப் பாடகியாக மது அருந்துபவராக நடித்த வேடம் அவரது திரையுலக வாழ்க்கையில் நிச்சயம் ஒரு திருப்புமுனைதான்.

கொஞ்சம் கற்பனையும் அதீத திறமையும் கலந்த பாத்திரம் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலில் உடன் ஆடிய குழு நடனப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே வெண்ணிற நீண்ட கவுன் தான் நாயகிக்கும் காஸ்ட்யூம். ஜானகிக்கு அதை அணிந்து கொள்வதில் தயக்கம் இருந்தது. அத்துடன் முதன்மையான பாத்திரமான தன்னை வேறுபடுத்திக் காண்பிக்கும் உடை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற தன் கருத்தையும் இயக்குநரிடம் தெரிவித்துவிட்டு, தன் சொந்த உடையான கருப்பு நிறப் புடவையை, காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஒப்பனைக் கலைஞரின் உதவியுடன் மாடர்னாக உடுத்திக்கொண்டு வந்து நடித்து அசத்தி விட்டார்.

அதுவரை இல்லாத வகையில் இந்த வேடத்துக்காகவே முதன் முதலாக தலையில் ’விக்’ வைத்துக்கொண்டு நடித்தார். பாடலின் தொடக்கத்தில் கம்பீரமாக மேடையில் நடந்து வருவது, பாடலின் ஊடாக மெல்லிய ட்விஸ்ட் நடன அசைவுகள், கண்களை உறுத்தாத கண்ணியமான கவர்ச்சி, குழு நடனப் பெண்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிப்பது என தன் சொந்த முயற்சியிலேயே அந்த வேடத்தில் திரையில் அறிமுகமானார். இப்போது வரை அந்தப் பாடல் காட்சியை மறக்க முடியாத ஒன்றாக, காலம்தோறும் நினைக்கும் விதத்தில் மாற்றியமைத்த பெருமையும் ஜானகியையே சேரும்.

மலேசியத் தமிழ்ப் பெண்ணுக்கு ஏற்ற வடகிழக்கு மாநிலப் பெண் போன்ற முக அமைப்பும் அவருக்கு ஒத்திசைவாக அமைந்தது. சிறு வயதில் அஸ்ஸாம் மாநிலத்தில் வளர்ந்ததாலோ என்னவோ அந்த சாயல் அவருக்கும் அவருடைய தங்கையும் நடிகையுமான கிருஷ்ணகுமாரிக்கும் இயல்பாகவே இருந்தது. ‘பேசும் தெய்வம்’ படத்திலும் பர்மியப் பெண்ணாகத் தோன்றுவார். ‘செம்மீன்’ புகழ் மலையாள நடிகர் சத்யன் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த வேடமும் பர்மிய உடையும் கூட ஜானகிக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. கிருஷ்ணகுமாரியும் ’உயிரா மானமா’
படத்தில் ரஷ்யப் பெண்ணாக நடித்தார்.

‘புதிய பறவை’ க்குப் பின் நவநாகரிக மங்கையாகப் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அதில் முக்கியமான ஒரு படம், ‘எம்.ஜி.ஆர். நடித்த ‘பணம் படைத்தவன்’. எம்.ஜி.ஆர். பாடும் ‘கண் போன போக்கிலே கால் போகலாமா?’ பாடலுக்கு மனோகருடன் இணைந்து அற்புதமாக மெல்லிய அசைவுகளுடன் மேற்கத்திய நடனம் ஆடுவார் பாருங்கள். முறையாக நடனம் கற்றவர் இல்லை. ஆனால், பல படங்களில் நன்றாகவே ஆடியிருக்கிறார்.

மாலைப் பொழுதின் மயக்கத்தில் ஆழ்ந்த பாக்கியலட்சுமி பால்ய விவாகங்கள் பெருகியிருந்த காலகட்டத்தில், நினைவு தெரியும் முன்பாக இரு குழந்தைகளுக்குச் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில்; கணவனான சிறுவன் இறந்து போனால், அந்தச் சிறுமியின் கதி என்னவாகும் என்பதை பட்டவர்த்தனமாய்ச் சொல்லிய படம் ‘பாக்கியலட்சுமி’. கைம்பெண் வாழ்க்கையைக் காலமெல்லாம் ஏற்க வேண்டிய பாத்திரத்தை முதன்மையாகக் கொண்ட படத்தின் பெயரில் மட்டும் பாக்கியமும் லட்சுமியும் இருந்ததுதான் எத்தனை நகைமுரண்?

அந்தப் படத்தின் கதையையும் பாத்திரத்தின் வேதனையையும் சொல்ல அப்படத்தில் இடம் பெற்ற ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடல் ஒன்றே போதுமானது. அத்தனை அர்த்தம் பொதிந்த பாடலை எழுதிய கவிஞருக்கும் பெருமையில் பங்குண்டு. பொதுவாகவே பாடல் என்பது கூட்டு முயற்சி. தங்கள் நடிப்பின் வழியாகக் காட்சிப்படுத்தலில் பெரும் பங்கு கலைஞர்களுக்கு என்னும்போது சௌகார் ஜானகி அத்தனை அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் அப்பாடலில்.

ஒரு இளம் விதவை தன் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடலை மென் முறுவலுடன் பாடுவதென்பதும், அந்தப் பெண்ணைப் பாட வைத்து கணவன் – மனைவி இருவரும் ரசிப்பதும் என காட்சிப் படுத்தலே ஒரு கலவையான உணர்வைப் பார்வையாளர்களுக்கு கடத்துவதை என்னென்று சொல்வது? மெல்லிய வீணையின் நாதத்துடன் பாடல் தொடங்கி அதனுடனேயே முடிவதும் அப்பாடலின் சிறப்பு.

சௌகார் ஜானகி நடித்த பாடல் காட்சிகளில் அதை மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். எத்தனை காலங்கள் ஆனாலும் என்றென்றும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் அந்தப் பாடல், அதைப் பாடிய பி.சுசீலாவுக்கு மட்டுமா பெருமை சேர்த்தது? இளம் வயதில் கணவனை இழந்த கைம்பெண்களின் துயரை இதை விட விளக்கமாகச் சொல்லவே முடியாது என்பது போல் அமைந்த பாடலும் காட்சியும் அற்புதம் என்று சொல்வது மிகக் குறைவானதே. அதனால், படமும் அதன் கதையும், இறுதி முடிவும் பெண்களுக்கு விடிவே கிடைக்காதா என்ற நினைவலைகளையும் எழுப்பிச் செல்லும். இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்குஎம்.ஜி.ஆருடன் ‘ஒளிவிளக்கு’ படத்திலும் நடித்தார்.

அந்தப் படம் இந்தியில் ‘ஃபூல் அவுர் பத்தர்’ என வெளியாகி நன்கு ஓடிய படம். தமிழில் ஜெமினி நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அதில் மீனாகுமாரி ஏற்ற வேடத்தில் நடிக்க வேண்டும் என அவராகவே விரும்பி எம்.ஜி.ஆரிடம் கேட்டு வாங்கிய வேடம் அது. படமும் மிக நன்றாக ஓடி வசூலை வாரிக் குவித்தது. அதில் இடம் பெற்ற ‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ பாடல் சௌகார் ஜானகி பாடி நடித்த பாடல். அது அவரது அசல் வாழ்க்கையிலும் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தது. எம்.ஜி.ஆர் உடல் நலமின்றி அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இங்கு தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் உள்ள கோயில்களில் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி இடைவெளியில்லாமல் ஒலித்தது.

சில கசப்பான அனுபவங்களையும் கடந்தவர்சுயமரியாதை மிக்கவர் என்பதற்கும் இப்படமே ஓர் உதாரணம். டைட்டிலில் சீனியர் நடிகையான சௌகார் ஜானகியின் பெயர் முதலில் இடம் பெறாமல் ஜெயலலிதாவின் பெயர் இடம் பெற்றது குறித்து வாதாடி யிருக்கிறார். அது குறித்த கசப்புணர்வு பல ஆண்டு காலம் நீடித்திருக்கிறது. இதற்கு முன்னதாகவே, நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ‘தேவதாஸ்’ படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒத்திகைகள் எல்லாம் முடிந்த பிறகு எந்தக் காரணமும் சொல்லப்படாமல் அந்த வேடத்திலிருந்து ஜானகி விலக்கப்பட்டு, பின்னர் சாவித்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த வலியும் வருத்தமும் கூட நீண்ட காலம் அவருக்குள் கனன்று கொண்டிருந்துஇருக்கிறது.

அவர் நடித்த பல பாடல்கள் மிகப் பெரும் ஹிட் கொடுத்தவை. ‘நீரோடும் வைகையிலே’, ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’, ‘அத்தானின் முத்தங்கள்’, ‘மியாவ் மியாவ் பூனைக்குட்டி’, ‘ஆனிமுத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே’ என எழுதிக்கொண்டே போகலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 385 படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு திரைப்பட விருது கமிட்டியின் தலைவராகவும் தேசிய விருது தேர்வுக் குழுவிலும் பங்கேற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது, ‘இருகோடுகள்’ படத்துக்காகத் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழக அரசின் பெருமை மிகு எம்.ஜி.ஆர். விருது, ஆந்திர அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான நந்தி விருது போன்றவை இவரது திறமையைப் பறை சாற்றுபவை.

நடிப்பைக் கடந்த தனித்திறமைகள்சமையல், தோட்டப் பராமரிப்பு போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். சில ஆண்டுகள் சொந்தமாக ரெஸ்டாரன்ட் வைத்து நடத்தியவர். அதற்கான உணவையும் கூட பல நேரங்களில் அவரே தயாரிக்கும் நுட்பமும் அறிந்தவர். திரையுலகிலும் இவரது கைப்பக்குவமும் கைமணமும் மிகப் புகழ் பெற்றவை. சாய்பாபாவின் தீவிர பக்தை. ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன் பெற்றவர்.

இது சிறு வயதில் ஆங்கிலப் பத்திரிகையை வாசிக்க வேண்டும் என்ற அவருடைய அப்பாவின் தீவிரக் கண்டிப்பு மற்றும் கண்காணிப்பின் மூலம் கிடைத்த திறமை. ஒரு மகன், இரு மகள்கள் என அளவான குடும்பம். தற்போது பெங்களூருவில் வசிக்கும் ஜானகி அவ்வப்போது சென்னைக்கும் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!! (மகளிர் பக்கம்)
Next post சீனா 70: வரலாறும் வழித்தடமும் !! (கட்டுரை)