அவர் தம்பியை திருமணம் செய்யலாமா? (மகளிர் பக்கம்)
அன்புத்தோழி,எல்லோரையும் போல் அதிக கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் எனது திருமணம் நடைபெற்றது. அப்பா, அம்மா பார்த்த மாப்பிள்ளையைதான் திருமணம் செய்தேன். திருமணத்திற்குப் பின்பு எனக்கு இருந்த எதிர்பார்ப்புகளும் கனவுகளும் பொய்த்துப் போகவில்லை. அத்தனை அன்பான கணவர், ஆதரவான மாமியார் வீடு என மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு வாய்த்தது.
கணவரின் அன்பில் தினமும் திளைத்து போனேன். போன ஜென்மத்தில் நான் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால்தான் எனக்கு நல்ல கணவர் கிடைத்தார் என்று ஒவ்வொரு நிமிடமும் நினைப்பேன். அத்தனை அன்பு எனக்கு கிடைத்தது. எனக்கு நல்ல கணவராக மட்டுமல்ல… என் பெற்றோருக்கு நல்ல மருமகனாக, ஏன் நல்ல மகனாகவே கிடைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
என் தம்பிகளுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். ஒரு நண்பனை போன்று அவர்களிடம் பழகுவார். அவர்கள் வீட்டிலும் எல்லோரிடத்திலும் அன்பாக நடந்து கொள்வார். அவரது தம்பி, தங்கைகள் என எல்லோருக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.
அது மட்டுமல்ல, அவரது உறவினர்கள் கூட இவரிடம் அதிகம் அன்பு காட்டுவார்கள். காரணம், எந்த நிகழ்விலும் உறவினர்களை, நண்பர்களை மதித்து செய்யும் நல்ல குணம்தான். அவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் முதலில் போய் நிற்கும் ஆள் இவராகத்தான் இருப்பார்.
இப்படி மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் அந்த மகிழ்ச்சியை அதிகரிப்பது போல் ஒரு மகன் பிறந்தான். கணவரின் அன்பை என் மகனுடன் பங்கு போட்டுக் கொள்ள முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் அவரிடம் கொட்டிக் கிடந்த அன்பு எனக்கும் எனது மகனுக்கும் பஞ்சமில்லாமல் கிடைத்தது. அதனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது.
பொறியாளரான அவர் பணி நிமித்தமாக வட மாநிலம் சென்றார். மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைத்தேன். அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில்… அவர் இல்லை என்று சொல்லக்கூட எனக்கு மனது இன்றும் வரவில்லை. ஆம். விபத்தில் எங்களை விட்டு விட்டு போய்விட்டார்.
அளவில்லாமல் தந்த அன்பையும் அள்ளிக் கொண்டு சென்றுவிட்டார். நானும் எனது பிள்ளையும் இப்போது எனது பெற்றோரின் பராமரிப்பில் இருக்கிறோம். கணவர் வீட்டிலேயே தங்க சொல்லி மாமியார், மாமனார் என எல்லோரும் வற்புறுத்தினர். என் பெற்றோர்தான் ‘இடமாறுதல் ஆறுதலாக இருக்கும்’ என்று அழைத்து வந்து விட்டனர்.
இதெல்லாம் நடந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. எனக்கு வயது 28. எனது மகனுக்கு 3 வயது. எனக்கு இன்னொரு கல்யாணம் செய்யலாம் என்று வீட்டில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து மாமனார், மாமியாரிடம் எனது பெற்றோர் தெரிவித்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். ஆனால், எனக்குத்தான் தயக்கமாக இருந்தது.
இந்நிலையில் ஒருநாள் எனது மாமனார், மாமியார் இருவரும் எங்க வீட்டுக்கு வந்தனர். குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் என் பெற்றோரிடம், ‘எனது மருமகளுக்கு மறுமணம் செய்து, புதிதாக வருபவர் எனது பேரனை நன்றாக பார்த்துக்
கொள்வாரா… மாட்டாரா என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது’ என்று கூறினார்கள். அதை கேட்ட எங்கள் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்கள் அடுத்து சொன்னதுதான் எனக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ‘அதனால் எங்கள் 2வது மகனுக்கும் மருமகளுக்கும் திருமணம் செய்யலாம்’ என்றனர். எங்களால் எதுவும் பேச முடியவில்லை. ‘யோசித்துவிட்டு சொல்கிறோம்’ என்று என் பெற்றோர் தெரிவித்தனர்.
அதற்கு என் மாமியார், ‘‘யாரோ ஒருவருக்கு திருமணம் செய்து தருவதைவிட எனது மகனுக்கு திருமணம் செய்து தந்தால் என் மருமகளை நன்றாக பார்த்துக் கொள்வான். எனது பேரனையும் நன்றாக பார்த்துக் கொள்வான். அது மட்டுமல்ல நாங்களும் கூடவே இருப்பதால் எங்கள் மருமகளையும் பேரனையும் நன்றாக கவனித்துக் கொள்வோம். என் பிள்ளையிடம் பேசிவிட்டேன்.
அவனும் சம்மதம் தெரிவித்து விட்டான்’’ என்று சொன்னார்.எனது மைத்துனர் என்னைவிட இரண்டு வயது பெரியவர். இப்போது அதுவல்ல பிரச்சனை. இன்னொரு கல்யாணத்திற்கு நான் தயங்குவதே, ‘திகட்ட திகட்ட கிடைத்த அன்பு தந்த என் கணவரை மறந்து இன்னொருவரை எப்படி திருமணம் செய்வது’ என்பதுதான். அது அவருக்கு செய்யும் துரோகம் தானே.
அதுமட்டுமல்ல… எனது மைத்துனரை திருமணம் செய்தால், இந்த சமூகத்தில் என்னால் இயல்பாக நடமாட முடியுமா? இரண்டு தரப்பு உறவினர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள். யாராவது எனது கணவரை பற்றி பேசினால் இவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்றெல்லாம் நிறைய யோசிக்கிறேன்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
திருமணமான காலத்தில் மைத்துனர் என்னிடம் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொண்டார். கிண்டல், கேலி கூட செய்தது கிடையாது. அண்ணி என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை சொன்னதில்லை. இப்போது அவரை திருமணம் செய்வது சரியாக இருக்குமா? என் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருக்குமா? சமூகத்தில், உறவுகளிடம் என்னால் இயல்பாக நடந்து கொள்ள முடியுமா? அவர்கள் என்னை மதிப்பார்களா? என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள் தோழி…இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,உங்கள் கேள்வியை படித்து பார்த்ததில் இருந்து சொல்கிறேன். நீங்கள் 2 விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். ஒன்று, உங்கள் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். 2வது உங்களையும் அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த 2 விஷயங்களுக்கும் உங்கள் கணவரோட தம்பி சரியாக இருப்பாரா என்பதைத்தான் நீங்கள் யோசிக்க வேண்டும்.
அப்படியானால் நீங்கள் அவரை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிரச்னையும் இருக்காது. ஆனால், இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம்தான். உங்களுக்கு பிடித்திருந்தால் அவரை தேர்ந்தெடுப்பதில் தப்பு ஒன்றும் இல்லை. இதில் குழப்பமடைய தேவையில்லை.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. நீங்கள் யாரை மறுமணம் செய்தாலும் பேசுகிறவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். கட்டாயம் எதிரில் பேச மாட்டார்கள். அதனால் அது பற்றி பிரச்னை இல்லை.
உங்க கணவரோட தம்பியை நீங்கள் அப்படி பார்க்கவில்லை. அவரை கணவராக நினைக்க முடியவில்லை என்றால்தான் அது சிக்கல். அது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
உங்கள் மைத்துனர் நல்லவராக இருந்தாலும், என்னதான் அவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக இருந்தாலும் மற்றவர்
களுக்காக அவரை திருமணம் செய்யும் முடிவை எடுக்க வேண்டாம்.ஏனெனில் உங்கள் கணவர், அவரது தம்பியை பற்றி உங்களுக்கும் நன்றாக தெரியும். எது நல்லது… கெட்டது என்பது உங்கள் அறிவுக்குத்தான் தெரியும். ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தோன்றினால் அவரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
உங்கள் மனதுக்கு பிடித்திருந்தால் தாராளமாக திருமணம் செய்யுங்கள். மற்றவர்களை திருமணம் செய்தால் என்னென்ன பிரச்னை வரும், மைத்துனரை திருமணம் செய்தால் என்ன பிரச்னை வரும் என்று யோசித்து பாருங்கள்… ஒப்பிட்டு பாருங்கள்… உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக யோசனை பண்ணுங்கள். வெளியில் என்றால் ஏற்கனவே திருமணம் ஆனவர் கூட மாப்பிள்ளையா வரலாம்.
அப்போது உங்களுக்கு, அவருக்கு குழந்தைகள் இருந்தால் அதை கவனிக்க வேண்டிய கடமையும் இருக்கும். இது எல்லாமே யூகம்தான் எதையும் 100 சதவீதம் கணிக்க முடியாது. உங்க மனது உங்களுக்குத்தான் தெரியும். மற்றவர்களுக்காக முடிவு எடுக்கக் கூடாது. அவர் நல்லவரா உங்க மனதுக்கு பிடித்திருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். உங்களையும் உங்கள் குழந்தையையும் நல்லா பார்த்துக் கொள்ள யாரால முடியும் என்று நினைக்கிறீர்களோ அவர்களையே தேர்ந்தெடுங்கள்.
அவர் உங்க கணவரோட தம்பியா இருக்கணும்னு அவசியம் இல்லை. வெளி ஆளாக கூட இருக்கலாம். ஆனால், ‘உங்களுக்கு உங்க கணவரோட தம்பியை திருமணம் செய்ய விருப்பம் இருக்கு… மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றுதான் தயக்கமாக இருக்கு’ என்றால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது தேவையில்லாத தயக்கம்.
புறம் பேசுகிறவர்கள் யாரும் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு சொல்லப் போவது இல்லை. நமது கஷ்டத்திலும் பங்கு எடுத்துக் கொள்ள போவது இல்லை. எனவே உங்களுக்கு பிடித்திருக்கிறது, சரியென்று தோன்றினால் உங்கள் கணவரின் தம்பியை நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம் மறுமணம் செய்வதெல்லாம், இறந்து போன கணவருக்கு செய்யும் துரோகம் கிடையாது. உங்கள் மீது அன்பு வைத்திருந்த கணவர், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். மறுமணம் செய்தால் அவர் மட்டுமல்ல, நல்லவர்கள் எல்லோரும் வாழ்த்துவார்கள். நன்றாக யோசித்து சீக்கிரம் நல்ல முடிவை எடுங்கள்.தொகுப்பு: ஜெயா பிள்ளை
வாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக… ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல…
Average Rating