இந்திய ஜனநாயகப் பாதைக்கு ‘ஒக்டோபர் 24’ திருப்புமுனை? (கட்டுரை)

Read Time:14 Minute, 6 Second

ஹரியானா, மஹாராஷ்டிரா மாநில சட்ட மன்றத் தேர்தல்கள், மிகப்பெரிய திருப்புமுனையை இந்திய அரசியலில் தோற்றுவிக்கப் போகின்றது.

காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது அரசியல் சட்டப் பிரிவை இரத்துச் செய்த பிறகு நடக்கும் இந்தத் தேர்தல், பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குத் தனிப்பெரும்பான்மையை மாநிலங்களவையிலும் கொடுக்கும் நிலை உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை மனதில் வைத்தே, “இரு மாநிலங்களிலும் இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர், இனிப் பாகிஸ்தானுக்குப் போகாது” என்றும், “நீக்கப்பட்ட 370 ஆவது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று, எதிர்க்கட்சிகள் வாக்குறுதி கொடுக்க முடியுமா” என்றும் கடுமையான தாக்குதலை நரேந்திர மோடி, தனது பிரசாரத்தில் தொடுத்திருக்கிறார். இந்தப் பிரசாரத்தை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திணறிக் கொண்டிருக்கின்றன.

மஹாராஷ்டிராவைப் பொறுத்தமட்டில், தற்போது பா.ஜ.கவின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் இருக்கிறார். அவருக்குப் பல வகையிலும் தொல்லை கொடுத்த கூட்டணிக் கட்சியான சிவசேனா, இறுதியில் இப்போதும் கூட்டணியாகவே அங்கு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது.

அம்மாநிலத்தில் உள்ள 288 சட்ட மன்றத் தொகுதிகளில், பா.ஜ.க 150இல் போட்டியிடுகிறது. பா.ஜ.கவுடன் நேரடியாகக் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் போட்டியிடும் 14 தொகுதிகளையும் சேர்த்தால் மொத்தம் 164 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுகிறது.

சிவசேனா கட்சியோ 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 260 தொகுதிகளில் போட்டியிட்டு 122 இடங்களை மட்டும் பிடித்த பா.ஜ.க ஆட்சி அமைத்தது. 263 தொகுதிகளில் போட்டியிட்டு, 63 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிவசேனா ஆட்சிக்குத் துணை நின்றது.

ஆனால், இந்த முறை சிவசேனாவின் கண்ணில் முதலமைச்சர் பதவி பட்டுள்ளது. அக்கட்சியின் பத்திரிகை, ‘சிவசேனிக் ஒருவர்தான் மஹாராஷ்டிரா முதலமச்சராக வேண்டும்’ என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், பா.ஜ.கவின் தேசியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, “முதலமைச்சர் பா.ஜ.கவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவீஸ்தான். துணை முதலமைச்சர் பதவி குறித்து, சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம்” என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது ஒரு புறமிருக்கு, இந்தக் கூட்டணியில் நீடிக்க முதலில் சிவசேனாவுக்குத் தயக்கம் இருந்தாலும், ‘காஷ்மிருக்குப் பிறகு’ இக்கூட்டணியை விட்டால், தோல்வியில் சிக்குவோம் என்ற அச்சம் சிவசேனாவுக்கு இருந்தது.

அதனால்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காட்டிய வேகத்தை, பா.ஜ.கவிடம் இந்தச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிவசேனா காட்டவில்லை. சென்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட சிவசேனா, இந்தச் சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.

இக்கூட்டணியை எதிர்கொள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்குப் புதிய யுக்திகளும் இல்லை; புது கட்சிகளும் இல்லை. 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் பலமுள்ள பிராகாஷ் அம்பேத்காரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியைக் கூட, கூட்டணியில் சேர்க்க முடியவில்லை.

காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி விவகாரத்தில் வைப்பாளர்கள் படும் கஷ்டத்தை முன்வைத்தும் மத்திய அரசாங்கத்தால் ஏற்பட்டுள்ள வேலை இல்லாத் திண்டாட்டம், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை உள்ளிட்டவற்றை முன்னிறுத்தியும் காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்கிறது.

சமயோசிதமாக, ‘காஷ்மிர்’ போன்ற தேசியப் பிரச்சினைகளை உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை இந்த முறை காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வைத்து விட்டு, மஹாராஷ்டிரா மாநில வளர்ச்சி பா.ஜ.க ஆட்சியால் பாதிக்கப்பட்டு விட்டது என்று குற்றம் சாட்டி வருகிறது.

ஆனால், பா.ஜ.கவோ தேசியவாத காங்கிரஸின் முக்கிய தலைவர் பிரபுல் பட்டேலுக்கு அமலாக்கப் பிரிவின் அழைப்பாணை; எதிர்காலத்தில் சரத்பவாருக்கும் அழைப்பாணை வரலாம் என்ற நிலை போன்றவற்றை முன்னிறுத்துகிறது.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், சில குற்றவாளிகளைத் தப்ப விட்டது காங்கிரஸ், தேசியவாதக் கூட்டணி என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க தேர்தல் களத்தில் வைத்து, “நாட்டின் பாதுகாப்பையும் மதமயமாக்குகிறது காங்கிரஸ்” என்றே கடுமையாகக் குற்றம் சாட்டுகிறது.

ஹரியானா மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான் நடைபெறுகின்றது. அதன் முதலமைச்சராக இருக்கும் கட்டர், மீண்டுமொருமுறை மக்களின் வாக்குகளைக் கேட்கிறார். 90 தொகுதிகளைக் கொண்ட இந்தச் சட்டமன்றத்தில் காங்கிரஸும் பா.ஜ.கவும் நேரடிப் போட்டியில் இருக்கின்றன.

ஹரியானாவில் தான் ‘இந்தியாவின் தண்ணீர், இனிமேல் இங்குள்ள விவசாயிகளுக்குத்தான். பாகிஸ்தானுக்கு அல்ல’ என்று பா.ஜ.க தரப்பில் முன் வைத்து, தேசத்தின் பெயரில் வாக்கு கேட்கிறார்கள்.

ஆகவே, ஹரியானாவும் மஹாராஷ்டிராவும் இரு முக்கிய களத்தில் நிற்கின்றன. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பொருளாதார தேக்க நிலைமையைப் பிரசாரமாக்கினாலும் அதற்குப் பதில் சொல்லாமல் தேசப்பாதுகாப்பை எடுத்து வைத்து, காங்கிரஸ் இந்தியாவின் நலனுக்குப் பாடுபடாத கட்சி என்ற பிரசாரத்தை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க.

எல்லாவற்றுக்கும் மேலாக, “இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை வீர் சவார்க்கர் பார்வையிலிருந்து திருத்தி எழுத வேண்டிய தருணம் வந்து விட்டது” என்றே உள்துறை அமைச்சர் அமித்ஷா சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆகவே, இரு மாநிலத் தேர்தல்களில் ‘பொருளாதார தேக்க நிலைமையா’, ‘தேசப் பாதுகாப்பா’ என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.

ஒக்டோபர் 24 ஆம் திகதி வெளிவரப்போகும் இந்த இரு மாநிலங்களில் உள்ள 378 சட்ட மன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள், பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும். ஏனென்றால், ‘போருக்கு போகும் முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது’ போல் இருக்கிறது தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரசாரம். இந்த இரு மாநிலங்களிலும் மீண்டும் கூடுதல் பலத்துடன் பா.ஜ.க ஆட்சிக்கு வருமேயானால், அதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், இராமர் கோவில் கட்டும் நிகழ்வு அமையலாம்.

எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்குள் இராமர் கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. அந்தத் தீர்ப்பு இராமர் கோவில் கட்டுவதற்குச் சாதகமாக வருமென்றால், பா.ஜ.கவின் மூன்று முக்கிய அடிப்படைக் கொள்கைகளில் (இந்திய அரசமைப்பின் 370ஆவது பிரிவு, இராமர் கோவில், பொதுச் சிவில் சட்டம்) இரண்டாவதும் நிறைவேறும் வாய்ப்பு உருவாகும்.

ஏற்கெனவே, அரசமைப்பின் பிரிவு 370 இரத்துச் செய்யப்பட்டு விட்டது. இராமர் கோவிலும் கட்டப்படும் என்றால், பிறகு மூன்றாவதும் கடைசியுமான பா.ஜ.கவின் அடிப்படைக் கொள்கை, ‘பொதுச் சிவில் சட்டம்’ மட்டுமே ஆகும்.

இப்போதே நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டமூலம் கொண்டு வரப்படும் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கி விட்டன. ஹரியானா, மஹாராஷ்டிராவில் தேர்தல் வெற்றியால் தற்போதுள்ள பா.ஜ.கவின் பலம் மாநிலங்களவையில் மேலும் கூடும்.

இப்போது இந்திய மக்களவையில் பா.ஜ.க தனிப்பெரும் பலத்துடன் இருக்கிறது. மாநிலங்களவையில் உள்ள 245 இடங்களில் ஐந்து இடங்கள் வெற்றிடமாக உள்ளன. மீதியுள்ள 240இல் பா.ஜ.கவுக்கு 82 இடங்களும் காங்கிரஸுக்கு 45 இடங்களும் இருக்கின்றன.

காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்வி முகத்திலும், வலுவான தலைமை இல்லாமலும் தவிப்பதால் மற்ற எதிர்க்கட்சிகள் பா.ஜ.க மாநிலங்களவையில் கொண்டு வரும் சட்டமூலங்களுக்கு ஆதரவு கொடுக்கும் மனநிலையிலேயே இருக்கின்றன.

குறிப்பாக, வட மாநிலங்களில் இருக்கும் எதிர்க்கட்சிகள், பா.ஜ.கவின் இராமர் கோவில், காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து, பொதுச் சிவில் சட்டம் போன்றவற்றில் எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளன. இனி வரப்போகும் இரண்டு விடயங்களிலும் (இராமர் கோவில், பொதுச் சிவில் சட்டம்) காங்கிரஸ் கட்சியே எதிர்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆகவே, இரு மாநிலத் தேர்தல் வெற்றி என்றால், அது பா.ஜ.கவின் மூன்று அடிப்படைக் கொள்கைகளையும் நிறைவேற்றும் வாய்ப்பைக் கொடுக்கும். எஞ்சியிருக்கும் இரு மாற்றங்களுமே நடைபெற்று விட்டால், குறிப்பாகப் பொதுச் சிவில் சட்டம் நிறைவேறி விட்டால் அரசமைப்பின் முகவுரையில் உள்ள மதசார்பின்மை என்ற வார்த்தை நீக்கப்படுவதற்கான போர்க்குரல் கிளம்பும்.

ஏற்கெனவே, ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை, அம்பேத்கார் உருவாக்கிய அரசமைப்பில் இல்லை என்று, பேச்சுகள் எழத் தொடங்கி விட்டன. ஆகவே, ஒக்டோபர் 24 அன்று வரப்போகும் இரு மாநிலத் தேர்தல் முடிவுகள், சாதாரணமானவை அல்ல.

இந்திய ஜனநாயகத்தின் 1947 ஆம் ஆண்டு பாதையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் திருப்பு முனையாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெறித்தனமான 10 மெஷின்கள் !! (வீடியோ)
Next post ஆரோக்கிய அலாரம் !! (மருத்துவம்)