தலை சுற்றல் வருவது ஏன்? (மருத்துவம்)
எட்டாம் தரத்தில் படிக்கும் மகனை, பாடசாலை முடிந்தவுடன், டென்னிஸ் பயிற்சிக்காக அப்பா அழைத்துச் சென்றார். பாடசாலையில் நடந்தவற்றைத் தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், “நேற்றைக்கு ப்ரெக்டிஸின்போது தலை சுத்திடுச்சு… அப்படியே உட்கார்ந்துட்டேன்பா” என்றான்.
“பகல் சாப்பாட்டுக்குப் பின் எதுவுமே சாப்பிடாமல், மாலை வரைக்கும் இருந்தா, பசியில் அப்படித்தான் இருக்கும்” என்று, அப்பா பதிலளித்தார்.
பயிற்சி மைதானத்தில் மகனை விட்டதற்குப் பின், சற்று தூரத்தில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து, மகனுக்காகக் காத்திருந்தார். அரை மணி நேரத்தில், பயிற்சியாளர் பதற்றத்துடன் அருகில் வந்து, “உங்கள் மகன், தலைசுற்றி மயக்கமாயிட்டான்” என்றதும், பதற்றத்துடன் ஓடினார்.
உடனடியாக அருகில் இருந்த டொக்டரிடம் அழைத்துச் சென்றார். அடிப்படையான சில கேள்விகளிலேயே, மகனுக்கு, ‘வெர்டிகோ’ பிரச்சினை இருக்கலாம் என்று, தெளிவாக அவரால் ஊகிக்க முடிந்தது.
‘வெர்டிகோ’ என்பது பற்றி அறிந்துகொள்வதற்காக, மறுநாளும் டொக்டரிடம் அவர்கள் சென்றனர்.
‘வெர்டிகோ’ என்பது, தலைச்சுற்றலாகும். உலகமே சுற்றுவது போல இருக்கும். மதுப்பழக்கம், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற கோளாறுகள் உள்ளவர்களும் ‘தலை சுற்றுகிறது’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு வருவது, தலைச்சுற்று இல்லை. பல காரணங்களால் ஏற்படும் மயக்கமே ஏற்படுகிறது. நோயாளி சொல்வதை வைத்து, மயக்கமா, தலைச்சுற்றலா என்பதை, டொக்டரால் தான் முடிவுசெய்ய முடியும். எதனால் என்பதை உறுதி செய்வதற்கு, சில பரிசோதனைகள் உள்ளன.
நாம் நடக்கும் போது, நம் உடலைச் சம நிலையில் வைப்பதற்காக, இரு காதுகளிலும், உள் காதுப் பகுதியில் ஒருவகைத் திரவம் உண்டு. இது, எந்த நேரத்திலும் வற்றாது. இந்தத் திரவம், நாம் தலையை அசைப்பதற்கேற்ப இடம் நகரும். இந்தத் திரவம், வழக்கத்துக்கு மாறாகச் சுற்றினால், தலைச்சுற்றல் ஏற்படும்.
குறிப்பிட்ட வேகத்தில், ‘சீட் பெல்ட்’ போடாமல் காரில் போகும்போது, எதிர்பாராமல் ‘பிரேக்’ போடும்போதும் மணிக்கணக்கில் ஒரே நிலையில் வேலைசெய்து, சட்டென அந்த நிலையில் இருந்து மாறும்போதும், பல மணிநேரம் கொம்பியூட்டர் திரையையே பார்த்து, திடீரென எழும்போதும், நிமிர்ந்தே ஒட்டடை அடித்தவிட்டுக் குனியும்போதும், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போதும், இந்தத் திரவம் எதிர்த் திசையில் சுற்றுவதால், தலை சுற்றுகிறது.
அதனால், எந்தச் சூழ்நிலையில் தலைசுற்றல் வருகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப சில பயிற்சிகளை, டொக்டர்கள் வழங்குவார்கள். குறுகிய காலத்துக்கு மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும். கணினியில் அதிகம் வேலை செய்பவர்களுக்கு, தலைச்சுற்றல் பிரச்சினை வருகிறது.
தீர்வு யோசனைகள்…
தொலைக்காட்சியைப் பார்ப்பது, புத்தகம் படிப்பது, அலைபேசியைப் பயன்படுத்துவது என்று எதையும் படுத்தபடி செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், தலைசுற்றல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கழுத்துக்கு அதிக வேலை தருவது, தலையில் அடிபடுவது, காதில் ஏற்படும் தொற்றால் பாதிக்கப்படுவது போன்றவற்றால், இந்த ‘வெர்டிகோ’ பிரச்சினை ஏற்படுவதுண்டு.
பிரச்சினை இருப்பது தெரிந்தால், எந்தச் சூழலில் இது வருகிறது என்பதை உறுதிசெய்து, தேவையான பயிற்சி மற்றும் மருந்துகளைத் தவறாமல் எடுக்க வேண்டும்.
டொக்டரின் ஆலோசனைப்படி, நீச்சல் தவிர ஏனைய விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்பலாம். பயிற்சியின் போது தலைசுற்றல் வந்தால், பதறாமல், அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தால், சில நிமிடங்களில் சரியாகிவிடும்.
குழந்தைகளுக்கு, ‘வெர்டிகோ’ பிரச்சினை இருப்பது தெரிந்தால், பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிறப்பு வகுப்புகளுக்கோ பாடசாலைகளுக்கோ அனுப்பினாலும், நாள் முழுவதும் என்னவாகுமோ என்று பயப்படுகின்றனர். விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்புவதைத் தவிர்க்கின்றனர். இப்படிச் செய்யக்கூடாது.
பிரச்சினையைப் புரிந்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் போதும். இது, ஆபத்தான பிரச்சினை இல்லை. முறையான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால் போதும். இயல்பாக இருக்கலாம்.
Average Rating