ஜப்பானில் வரலாறு காணாத புயல் – தமிழர்களின் அனுபவம்!! (உலக செய்தி)
ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்துள்ளது. ஹகிபிஸ் என்னும் டைஃபூன் புயல் ஜப்பான் நேரப்படி சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் டோக்கியோவுக்குத் தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஈஸு தீபகற்பத்தில் கரையைக் கடந்தது.
இது கிழக்கு கடற்கரையை நோக்கி மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. புயலின் காரணமாக 270,000 க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
ஜப்பான் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புயலில் சிக்கி 90 பேர் காயமடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு பகுதிகளில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக கியோடா செய்தி நிறுவனம் கூறுகிறது.
இந்நிலையில் ஜப்பானில் கனகவா பகுதியில் வசிக்கும் பாரி வேல்முருகன், “இப்போது நிலைமை இந்தப் பகுதியில் ஓரளவுக்கு சீரடைந்துள்ளது. நேற்று அதிகாலை எல்லாம் இங்குப் பெருமழை பெய்தது. நேற்று இரவு 7 மணிக்குப் புயல் இந்த பகுதியைக் கடந்தது” என்கிறார்.
பெருமழையின் காரணமாக, ஜப்பான் சுருமி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறும் அவர், இதன் தொடர்ந்து சிரியோமா அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.
“அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதை அடுத்து, ஜப்பான் வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. மக்களை எல்லாம் ஐந்தாம் தளத்திற்குச் செல்ல அறிவுறுத்தினர்” என்கிறார்.
ஜப்பான் டோக்கியோவில் வசிக்கும் மாலினி பிரியதர்ஷினி அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறுகிறார்.
மாலினி, “கடந்த ஒரு வாரமாக அனைவருக்கும் இந்த புயல் குறித்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. எல்லா தெருக்களிலும் ஒலிபெருக்கிகள் வைத்து நிலைமை குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். அதுமட்டுமல்ல பேரிடர் காலத்தில் பயன்படுத்தும் விதமாக சிறப்பு வைஃபை தொலைத்தொடர்பு வசதி வழங்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை மையம் மிக சிறப்பாக செயல்பட்டதால் பெரும் சேதத்தில் இருந்து தப்பித்தோம்” என்கிறார்.
டோக்கியோவில் 23 வார்டுகள் உள்ளன. செட்டகயா வார்டு மட்டும்தான் டோக்கியோவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. அங்கு மட்டும்தான் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது என்று தெரிவிக்கிறார் மாலினி.
இந்தப் புயலில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது ஹகோனே மற்றும் சிபா பகுதிகள்தான் என்கிறார் அவர்.
“கடந்த புயலிலும் அந்தப் பகுதிகள் தான் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த புயல் தாக்கி உள்ளது” என்று தெரிவிக்கிறார் மாலினி.
சர்வதேச விமான நிலையங்கள் சிபா பகுதியில் உள்ளன. ஏறத்தாழ ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் தேசிய ஊடகம் தெரிவிக்கிறது.
சனிக்கிழமை நடப்பதாக இருந்த உலகக் கிண்ண ரக்பி போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசும் தேவையான நிவாரண பொருட்களை வழங்கி உள்ளது. மேற்கு டோக்கியோவில் வசிக்கும் ஜேம்ஸ் பாப், “எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் புகலாம் என்பதால் முகாம்களில் வசிக்கிறோம். அரசு பிஸ்கட்டும் போர்வையும் வழங்கி உள்ளது” என்கிறார்.
இயற்கை பேரிடர் அடிக்கடி ஏற்படுவதால், அதனை எதிர்கொள்ளும் விதமாக அரசு மிகவும் துரிதமாகவும், சிறப்பாகவும் செயல்படுவதாகக் கூறுகிறார் மாலினி.
வடக்கு டோக்கியோவில் வசிக்கும் ஆண்ட்ரூ ஹிக்கின்ஸூம் இப்படியான கருத்தையே முன் வைக்கிறார்.
“அரசு இந்த புயலை மிகவும் அபாயகரமானதாகக் கருதி, எதிர்கொள்வதற்கு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டது” என்கிறார் அவர்.
ரக்பி உலகக் கிண்ண போட்டி மற்றும் ஃபார்முலா 1 பந்தயம் ரத்து செய்யப்பட்டதால் இந்த புயல் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தது. புயல் காரணமாக சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்த பொருள்களை மக்கள் பெருமளவில் வாங்கிச் சென்றுவிட்டனர்.
வெள்ள காலத்தில் நீர் சேகரிப்பதற்கு என்றே மிகப்பெரிய அளவில் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நிலத்திற்கு அடியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் மாலினி.
நிலத்திற்கு அடியே 22 மீட்டர் ஆழத்தில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கால்பந்து மைதானம் அளவுக்கு இருக்கும் இந்த நீர் சேகரிப்பு கட்டமைப்பு 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனை கட்டி முடிக்க 13 ஆண்டுகள் ஆகின.
இரண்டு பில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட நீர் சேகரிப்பு தொட்டி பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள் மக்கள்.
1959 ஆம் ஆண்டு ஏற்பட்ட வீரா புயலுக்குப் பின் இந்த ஹகிபிஸ் என்னும் டைஃபூன் புயல்தான் மிகவும் வலிமையானதெனத் தரவுகள் கூறுகின்றன.
Average Rating