சந்தர்ப்பங்களை சாதகமாக்கி கொள்பவரே சாதனையாளர்கள்! (மகளிர் பக்கம்)
‘‘மங்கையராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா’’கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
அதை மெய்பிக்கும் வகையில், ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்றும் எங்களாலும் துப்பாக்கி சுட முடியும் என்று நிரூபித்து பரிசுகளை வாங்கி குவித்து வருகின்றனர் நாமக்கல் சகோதரிகள் ராகவி மற்றும் ரசிகா. இவர்கள் இருவரும் இவ்வளவு தூரம் சாதிக்க அவர்களுக்கு பக்கபலமாக இருப்பவர் அவரின் அன்னை திலகம். இவர் வேத்தம்பாடி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ‘‘நான் பெண்ணாக பிறந்ததற்காக எப்படி என் வீட்டில் வருத்தப்படவில்லையோ அது போல எனக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை பார்த்து நான் என்றும் வருத்தப்பட்டதில்லை.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாமக்கல் அருகிலுள்ள சாலப்பாளையம் என்ற கிராமத்தில். எங்க கிராமத்தில் ஆண்கள், பெண்கள் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு சரிநிகராக உழவுத்தொழில் மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபட்டதை நான் பார்த்து இருக்கேன். அது மட்டும் இல்லை அதில் வரும் வருமானத்தைக் கொண்டு அவர்கள் வேறு ஒரு தொழிலிலும் முதலீடு செய்து வந்தனர். எனவே ஆண்- பெண் பாகுபாடு பற்றியோ, பெண் என்றால் தாழ்வு என்றோ எனக்கு சிறு வயது முதலே மனதில் தோன்றவே இல்லை.
என் கணவர் பாண்டியன் ராணுவ அதிகாரி. திருமணம் முடிந்து ராணுவ குடியிருப்புகளில் எனது குடும்ப வாழ்க்கை தொடங்கியது. அவர் ராணுவத்தில் வேலைப் பார்த்ததால், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு மாற்றலாகி செல்வது வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போது அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறைகள், கலாச்சாரம் எல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு இடங்களுக்கு சென்ற போது, அங்கு பெண்கள் தங்களின் திறமைகளை பல்வேறு துறையில் வெளிப்படுத்திக் கொண்டு இருப்பதைக் கண்டேன்.
அப்படி இருந்தும் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருப்பதாகவே நான் உணர்ந்தேன். எந்த இடத்திலும் நான் பெண் என்றோ எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தை இல்லை என்று நான் கவலைப் பட்டதில்லை’’ என்றவர் தான் கற்பிக்கும் பள்ளியில் பெண்களின் மேம்பாடு மற்றும் பெண்களின் பெருமை பற்றி மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். ‘‘ஆசிரியராக பணியாற்றி வருவதால் பெண் கல்வியின் சிறப்பு, அவர்களின் மேம்பாடு குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கிறேன். பெண்களின் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கு போட்டியானது அல்ல.
ஒவ்வொரு மனித உயிரும் தன்னை சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ளவும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்திட முனைப்பு காட்ட வேண்டும். என் மகள்கள் தற்போது உயர் கல்வி படிக்கிறார்கள். என் பள்ளி மாணவர்களுக்கு பெண் கல்வி பற்றி போதிக்கும் நான் வீட்டில் உள்ள என் மகள்களையும் சாதனையாளராக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என் கணவர் போல், இந்திய ராணுவத்திற்கு மகள்கள் இருவரும் பணி செய்ய வேண்டும் என்று விரும்பினேன். இதுவே என் மகள்கள் மட்டுமல்ல என் குடும்பத்தின் விருப்பமாக இருந்தது. அது தான் அவர்களை துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியில் மேற்கொள்ள தூண்டியது.
2017-ம் ஆண்டு சென்னை, வீராபுரத்தில் நடைப்பெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இருவரும் கலந்து ெகாண்டனர். அதில் இளையவள் ரசிகா, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். பின் இருவரும் தென்மண்டல அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு தகுதி பெற்றனர். அதில். ராகவி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அடுத்த ஆண்டு மதுரையில் மாநில அளவிலான போட்டி நடைப்பெற்றது. இதில், ராகவி தனித்திறன் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டலிலும், 25 மீட்டர் ஸ்போர்டீஸ் பிஸ்டல் பிரிவிலும் தங்கப் பதக்கங்களை வென்றாள்.
ரசிகா தனித்திறன் போட்டியில் வெண்கலமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கமும், 25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு தகுதி பெற்றனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று ராகவி டெல்லியில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது செலக்ஷன் ட்ரையலுக்கு தேர்வானாள். தற்போது இந்தாண்டு கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, 25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் மற்றும் தனித்திறன் போட்டியில் ராகவி தங்கப் பதக்கம் வென்றாள்.
25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ரசிகா தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் வெண்கலமும் வென்றுள்ளாள்’’ என்ற திலகம் ஆண்களை விட பெண்கள் வல்லமை மிக்கவர்களாக கருதுகிறார். ‘‘ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்கு சமம். என் மகள்களுக்கு நல்ல ஆசிரியராக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல தாயாகவும் செயல்படுகிறேன். அன்று பாரதி விதைத்த விதை, விருட்சமாய் வளர்ந்து பெண்கள் ஆண்களுக்கு இணையாகவும், சில துறைகளில் அவர்களையும் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண், பெண் என்ற பேதங்களை, காலம் இப்போது கணிசமாகக் குறைத்து விட்டது. சமம், சமத்துவம் என்ற கோரிக்கைக் குரல்கள் இப்போதெல்லாம் எங்கும் அதிகம் எழுவதில்லை.
பிறப்பிலிருந்து கல்வி, பணி, நிகழ்வுகளில் பங்கு, சாதனைகளெல்லாம் இருபாலருக்கும் சமமாய் கிடைக்கிறது என்பதே என் எண்ணம். வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள தயங்குவோரே போரிடுகிறார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள் தடைகளை கடந்து மண்ணிலிருந்து விண்வரை எட்டித் தொட முயற்சி செய்து அதில் வெற்றியும் காண்கிறார்கள். கலாச்சாரம், பண்பாடு எனும் கட்டமைப்புகளை சரியாகப் புரிந்து கொண்ட பெண்கள் சாதனைகளை வெல்வதோடு சமூக நற்பெயரையும் தன் வசமாக்கிக் கொள்கிறாள். அந்த வரிசையில் என்னோடு எங்கள் இரு மகள்களும் இருக்கிறார்கள்’’ என்றார் பள்ளி ஆசிரியரான திலகம்.
Average Rating