பஞ்சத்தை போக்கி வரும் தண்ணீர் தேவதை!! (மகளிர் பக்கம்)
அல்லியம்மாள் கடந்த பத்து வருடமாக தண்ணீர் சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார். தற்போது தண்ணீர் பற்றாக்குறை விஸ்வரூபமெடுக்க, பலர் இவரின் திட்டத்தை பார்த்து அவர்களும் அதனை ஒரு தொழிலாக செய்ய துவங்கியுள்ளனர்.
எம்.கே.பி நகரில் வசித்து வரும் அல்லியம்மாள், தினமும் தண்ணீர் லாரியிடம் இருந்து 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை வாங்கி தன்னுடைய வீட்டில் உள்ள சம்பில் நிரப்பிவிடுகிறார். இங்கு பல இடங்களில் தண்ணீர் திட்டாட்டம் இருக்கும் போது இவர் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொண்டு என்ன செய்கிறார் என்று கேள்வி எல்லாருக்கும் வருவது இயல்பு தானே…
அல்லியம்மாள் தினமும் தன் வீட்டு சம்பில் நிரப்பும் தண்ணீரை அந்த ஏரியாவில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்கிறார். அதாவது எம்.கே.பி நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த 200 வீட்டுக்கும் அல்லியம்மாள் தான் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். ஒரு குடத்திற்கு ஏழு ரூபாய் என்கிற விதத்தில் இவர் கடந்த பத்து வருடமாக அந்த ஏரியா மக்களை தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மீட்டு வருகிறார்.
‘‘இந்த தொழிலை ஆரம்பத்தில் என் கணவர் தான் செய்து வந்தார். அவர் இறந்த பிறகு நான் இதை தொடர்ந்து செய்ய துவங்கினேன். இப்போது தண்ணீர் பிரச்னை அதிகம் ஏற்பட்டதால், என்னைப் பார்த்து பலர் இதே போன்ற தொழிலை செய்ய துவங்கியுள்ளனர். மேலும் தண்ணீர் லாரி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. நடுஜாமத்திலும் வரும் அல்லது விடியற்காலையிலும் வரும். லாரி எப்போது வரும் என்று வீட்டில் உள்ள அனைவரும் தூக்கத்தை துறந்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அப்படியே காத்திருந்தாலும், அன்று லாரி வரும் என்று ஊர்ஜிதமாக சொல்ல முடியாது. இதனால் அவர்களின் தூக்கம் கெடுவது மட்டும் இல்லாமல், மறுநாள் வேலைக்கு செல்ல முடியாமல் போகும் சூழல் ஏற்படுகிறது. இனி அந்த கவலை இல்லை.
காலை எட்டு மணி முதல் இரவு 9 மணி வரை எப்போது வேண்டும் என்றாலும் என்னிடம் தண்ணீர் வாங்கிக் கொள்ளலாம். இவர்களுக்காக நான் எப்போதும் என்னிடம் தண்ணீரை ஸ்டாக் செய்து வைத்திருக்கிறேன்’’ என்றவர் மக்களுக்காக உதவி செய்யும் நோக்கத்தில் இதை செய்து வந்தாலும் பல பிரச்னைகளை சந்தித்துள்ளார்.
‘‘ஐந்து வருடம் முன்பு என்னை இந்த தொழில் செய்யக்கூடாதுன்னு போலீசார் கூறினர். எனக்கு தண்ணீர் கொண்டு வரும் லாரியையும் அவர்கள் மடக்கினார்கள். சில நாட்களுக்கு முன்பு என் வீட்டில் உள்ள மெட்ரோ தண்ணீரின் இணைப்பையும் நிறுத்திவிட்டனர்.
அவர்கள் நான் இந்த தண்ணீரை திருட்டுத் தனமாக இணைப்பு கொடுத்து பிறகு விற்பதாக நினைத்துவிட்டனர். நான் யாரையும் ஏமாற்றவில்லை. எனக்கு அதற்கு அவசியமும் இல்லை. சட்டப்பூர்வமாக இணைப்பு பெற்று இருக்கிறேன். அப்படி இருந்தும் ஒவ்வொரு நாளும் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறேன்’’ என்கிறார் அல்லியம்மாள்.
என்னதான் தண்ணீரை சேவைக்காக விற்று வந்தாலும் அது தரமானதா என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதித்து சான்றிதழ் வழங்குவார்கள். இது போன்று தண்ணீர் சார்ந்த தொழில் செய்பவர்கள் அனைவரும் அந்த சான்றிதழை பெற்று இருக்க வேண்டும்.
அப்படி இல்லாதவர்களிடம் மக்கள் தண்ணீர் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் மூலமாகத்தான் பல நோய்கள் பரவ காரணமாக உள்ளது. அதனால் ஒருவர் பயன்படுத்தும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும் சுகாதாரமானதாகவும் இருப்பது அவசியம்.
மரங்கள் அடுத்த தலைமுறையின் காப்பீடு
‘‘நம்மை சுற்றி மரங்கள் மற்றும் செடிகள் இருக்கும் வரைதான் நம்மால் உயிர் வாழ முடியும்’’ என்கிறார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். இவரின் கழுத்தில் ஒரு கறுப்பு கயிரில் மினி பூந்தொட்டி தொங்கிக் கொண்டு இருக்கிறது. மற்ற பிரபலங்களின் கழுத்தில் ஃபேஷன் நகைகள் அலங்கரித்துக் கொண்டு இருக்க இவர் ஒரு சின்ன செடியை தன் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறார்.
‘‘இது கொஞ்சம் வித்தியாசமான செடி. ஆங்கிலத்தில் Spider plantன்னு சொல்வாங்க. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பென்சீன் வாயுவை நீக்கி சுத்தமான பிராண வாயுவை கொடுக்கும் வல்லமை கொண்டது. கேள்விப்பட்ட அடுத்த நிமிடம், கழுத்தில் மாட்டிக் கொண்டேன். இந்த செடியை காரில் அல்லது வீட்டில் பெரிய தொட்டியில் வைக்கலாம்’’ என்றவருக்கு சின்ன வயசில் இருந்தே மரங்கள், செடி கொடிகள் மேல் அலாதி பற்றாம். இவர் சின்ன வயதில் இருக்கும் போதே வீட்டில் செடியினை வளர்த்துள்ளார்.
‘‘சாதாரண கொத்தமல்லி செடியை தான் நான் தொட்டியில் வளர்த்தேன். அதில் இருந்து சின்னதாக துளிர் வரும் போது, என்னால் ஒரு உயிர் உதிப்பதை பார்க்கும் போது, அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும்.
அது தான் நாம் நம்முடைய வருங்கால தலைமுறைக்கு கொடுக்கும் முக்கிய காப்பீடு. அதே போல் ஒவ்வொரு பள்ளி வகுப்பறையிலும் பள்ளி நிர்வாகம் Snake plant வைப்பது அவசியம். அறையில் உள்ள காற்றினை தூய்மைப்படுத்தி குழந்தைகள் நல்ல காற்றினை சுவாசிக்க உதவும்’’என்றார் இயற்கை காதலரான நடிகர் ஜாக்கி ஷெராப்.
Average Rating