லேடிஸ் அன்ட் ஜென்டில்வுமன் !! (கட்டுரை)

Read Time:5 Minute, 20 Second

“லேடிஸ் அன்ட் ஜென்டில்வுமன்” (Ladies and Gentlewomen), ஒரு பாலினப் பெண்களை (Lesbian) மையமாகக் கொண்டு தமிழில் வந்திருக்கும் முதலாவது ஆவணப்படமாகும். மாலினி ஜீவரத்னம் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு. 2017இல் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படம், அண்மையில் இலங்கையிலும் திரையிடப்பட்டது.

ஒரு பாலினப் பெண்கள் பற்றித் தமிழில் வெளியாகியிருக்கும் முதல் ஆவணப்படம் என்ற வகையில், “லேடிஸ் அன்ட் ஜென்டில்வுமன்” முக்கியமானது.

கருந்திரையில் குரல் மட்டுமே ஒலிக்க, ஓர் ஆணும் பெண்ணும் உரையாடுகிறார்கள். “அன்பே, ஒரு கதை சொல்லட்டுமா” என்று கோரும் பெண், வழக்கமான பாணியில் கதை சொல்கிறாள். ஓர் அரசன், இளவரசியைச் சந்தித்தான் என்பதாக. இடைமறிக்கும் ஆண் சொல்கிறான். “இதுபோல ஆயிரம் கதைகளைக் கேட்டிருக்கிறேன்” என்கிறான். உடனே அவள், இன்னொரு கதையைச் சொல்லத் தொடங்குகிறாள். ஒரு இளவரசி இன்னொரு இளவரசியைச் சந்தித்தாள் என்பதாக. “நாங்களே சொல்லாமல் அல்லது எங்களைச் சொல்ல அனுமதியாமல், எப்படி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” என்ற வர்ணனையோடு பறையிசை இரத்தத்தில் இறங்க, படம் தொடங்குகிறது.

இணைந்து வாழும் பெண் தம்பதிகளைப் பேசச் செய்திருக்கிறார்கள். அவர்கள் எங்கே, எப்படிச் சந்தித்தார்கள், பாலின அடையாளத்தை எப்படிக் கண்டுணர்ந்தார்கள் என்பதையெல்லாம் அதில் உள்ளடக்கி இருக்கிறார்கள்.

இப்படிப் பாலின அடையாளத்தைக் கண்டுணர்ந்தும் வெளிப்படுத்த முடியாத உள்மனப் போராட்டங்கள், வீட்டுக்குள்ளும் சமூகத்திலும் அவர்கள் நடத்தப்படும் விதம் என்பற்றை மெய்யான சம்பவங்களோடு தொய்வின்றிப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். ராஜஸ்தானில் இடம்பெற்றதாக நம்பப்படும் வாய்வழி வரலாற்றுக் கதையில் வரும் திஜாவும் பீஜாவும் (Tija and Bija), வாழ்தலுக்கு நடத்தும் போராட்டங்கள், மருட்டல்களையும் தமிழ்நாட்டின் எங்கோவொரு தொலைவிலிருக்கும் கிராமத்தில் வாழும் பாப்பாத்தியும் கறுப்பாயியும் உயிரையே மாய்த்துக்கொள்கின்ற கடந்தகாலத் தடயங்களையும், நிகழ்காலச் சம்பவங்களையும் ஒரு தண்டவாளத்தின் இரு கோடுகளாக்கியுள்ளது “லேடிஸ் அன்ட் ஜென்டில்வுமன்”.

கோவில் சிற்பங்களில் காணப்படும் ஒரு பாலின அடையாளங்களை இந்துத்துவ ஆர்எஸ்எஸ் அழிப்பது, வரலாற்றிலிருந்து ஒரு பாலினத் தடத்தைத் துடைத்தெறியும் செய்தியென அழுத்தமாகப் பதிவு செய்வதுடன் பாலின வேறுபாடு, பாலின அடையாளம் என்பவற்றைக் குற்றமாக்கியிருந்த பிரிவு 377 இந்திய சட்டத்திலிருந்து நீக்கப்பட்டதன் பின்னால் இருக்கும் வலிகள், துயர், இழப்பு என்ற நீண்டகாலப் போராட்டத்தை மட்டுமல்ல, காலணித்துவ அரசுகள் கீழைத்தேய நாடுகளில் திணித்துவிட்டுச் சென்ற சட்டங்களே இவை என்பதையும் தெளிவுபடுத்துகிறது கதையமைப்பு.

படத்தின் முடிவில், “ஒரு பாலினப் பெண்களை விரும்பியபடி வாழவிடவில்லை என்றால் அவங்க செத்துப் போறாங்களே…” என்று பொதுச் சமூகத்தில் பலரிடம் கேட்கிறார்கள். பெரும்பாலானவர்கள், “செத்துப் போகட்டும்” என்றே பதிலளிக்கிறார்கள்.

ஒரு பாலினப் பெண்கள் பற்றிய மௌனத்தை உடைத்தெறிந்திருக்கும் “லேடிஸ் அன்ட் ஜென்டில்வுமன்”, 45 நிமிடங்களில் அழுத்தமான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது. படத்தின் உயிர்நாடியாக கவிஞர் குட்டி ரேவதியின் லெஸ்பியன் கீதம் (Lesbian Anthem) கவிஞர் தமயந்தின் கவிதைகள் இடம்பெறுகின்றன.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டுவரும் இந்த ஆவணப்படத்துக்கு, சென்னை ரெயின்போ பில்ம் பெஸ்டிவல், நோர்வே தமிழ் பில்ம் பெஸ்டிவல் ஆகியவற்றில் சிறந்த ஆவணப்பட விருதுகளும் கிடைத்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெர்முடா முக்கோணத்தின் மர்மம் உண்மையில் முடிவுக்கு வந்ததா? (வீடியோ)
Next post வெப் தொடரில் அறிமுகமாகும் சமந்தா !! (சினிமா செய்தி)