பீட்சா டயட்!! (மருத்துவம்)
பீட்சா பற்றி எப்போதும் எதிர்மறையான தகவல்களையே கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் பீட்சாவானது கெட்ட கொழுப்பு, அதிக உப்பு, தேவையற்ற கலோரிகள் நிறைந்தது’ என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அத்தகைய பீட்சாவை வைத்தே ஒரு டயட்டை உருவாக்கி இருக்கிறார் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சார்ந்த மட் மெக்லெலன். பீட்சா எப்படி டயட்டாக மாறும், இந்த உணவுமுறை எப்படி உருவாக்கப்பட்டது என்ற சந்தேகத்தை உணவியல் நிபுணர் புவனேஸ்வரி சங்கரிடம் கேட்டோம்…
பீட்சா டயட்டை உருவாக்கியவர் யார்?
நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய எல்லா வகை உணவுப் பொருட்களையும் தவிர்த்துவிட்டு பீட்சாவை மட்டுமே எல்லா நேரங்களிலும் உணவாக எடுத்துக் கொள்வதே பீட்சா டயட் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்தவர் மாட் மெக்லெலன் (Matt McClellan). இவர் ஒரு பீட்சா கடை உரிமையாளர்.
பீட்சாவையும் ஆரோக்கியமான உணவாக மாற்ற முடியும் என்று 2010-ம் ஆண்டில் ‘30 நாள் பீட்சா டயட்’ என்பதை அறிமுகம் செய்தார். ஒவ்வொரு நாளும் 8 பீட்சா துண்டுகள் வீதம் ஒரு மாத காலம் வரை அதை சாப்பிட்டு வந்தார். அப்போது அவர் அதற்கு முன்பு இருந்தது போலவே ஆரோக்கியமாக இருந்தார்.
அவர் சாப்பிட்ட பீட்சாவின் மேலே Sausage, Pepperoni முறைகளில் தயார் செய்யப்படுகிற இறைச்சிகள் இருப்பதை தவிர்த்தார். மேலும் அதற்கு பதிலாக ப்ரோக்கோலி, தேங்காய் சீஸ், கோழி போன்றவற்றை பீட்சாக்களில் சேர்த்துக் கொண்டார். அதோடு அவர் உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தினார்.
இதன் மூலம் அவருடைய உடல் எடை குறைந்தது. அதன்பிறகு அவர் இந்த உணவு முறையை பிரபலப்படுத்துவதற்காக ப்ளோரிடாவில் இருந்து நியூயார்க்கிற்கு சைக்கிள் மூலமாகவே பயணம் செய்தார்.மற்றொரு பீட்சா தயாரிப்பாளரான பஸ்க்வேல் கோஸோலினாவும் (Pasquale cozzolino) ஒரு பீட்சா டயட்டைக் கொண்டு வந்தார். அவர் அதுவரை சாப்பிட்டு வந்த பிரட், கேக் போன்ற (baked goods) வேகவைத்த பொருட்கள், இரண்டு அல்லது மூன்று கேன்கள் வரை குடித்து வந்த சோடா போன்றவற்றைத் தவிர்த்து விட்டார்.
ஒரு நாளைக்கு ஒரு Neapolitan pizza-வை மட்டுமே எடுத்துக்கொள்கிற Mediterranean என்கிற மத்திய தரைக்கடல் சார்ந்த உணவு முறையைப் பின்பற்றினார். அவர் எடுத்துக் கொண்ட பீட்சாவானது அதிகளவில் காய்கறிகள் மற்றும் மாவுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அது நொதிப்பதற்கு 36 மணி நேரம் ஆனது. அதில் சர்க்கரை குறைவாக இருப்பதோடு, அது ஜீரணிக்க எளிதாகவும் இருந்தது. இந்த உணவு முறையைப் பின்பற்றிய கோஸோலினாவுக்கு 100 பவுண்டுகள் வரை எடை குறைந்ததாக அவர் தெரிவித்தார்.
ஓர் எழுத்தாளர் மது மற்றும் சர்க்கரைப் பொருட்களை விட்டுவிட்டு, ஒரு வாரத்திற்கு அவர் விரும்பிய அளவிற்கு பீட்சாக்களை மட்டுமே சாப்பிட்டுள்ளார். இதனால் அவர் 5 பவுண்டுகள் எடை குறைந்ததாக தெரிவித்தார்.
இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்…
பீட்சா உணவு முறையில் பல வகைகள் உள்ளன. ரொட்டி மற்றும் கொழுப்பு நிறைந்த பட்டர், சீஸ், இறைச்சி போன்றவற்றை உடையது ஒரு வகை என்றால், முழு தானியங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உடையது மற்றொரு வகை. எல்லா வகை பீட்சாக்களையும் எடுத்துக் கொள்ளும் மெக்லெலன் முறை மற்றும் ஒரே ஒரு வகையில் அமைந்த ஆரோக்கியமான பீட்சாவை எடுத்துக்கொள்ளும் கோஸோலினாவின் பீட்சா உணவு முறைகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
பீட்சாவானது குறைந்த கலோரிகளை உடைய உணவு இல்லை என்றாலும், அதோடு காய்கறிகள், குறைவான கொழுப்புள்ள பொருட்களை சேர்ப்பதால் அதை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும் என்கிறது இந்த உணவு முறை. இந்த உணவு முறையில் பீட்சாக்களை மட்டும் எடுத்துக் கொள்வது ஒருபுறம் என்றால், ஐஸ்கிரீம், உருளைக்கிழங்கு சிப்ஸ், இனிப்பான பேக்கரி உணவுகள், கொழுப்பு அதிகமுள்ள பொரித்த உணவுகள் மற்றும் மது போன்ற உடலுக்கு ஆரோக்கியமற்ற பிற பொருட்களை எல்லாம் தவிர்த்துவிடுவது இதில் குறிப்பிடத்தக்கது.
புளிக்க வைக்கப்பட்ட மாவைக் கொண்டு பீட்சா தயாரிப்பதாலும், ஆரோக்கியமற்ற கொழுப்புகளைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வண்ணமயமான பல்வேறு வகை காய்கறிகளைச் சேர்த்து தயாரிப்பதாலும் அவை ஆரோக்கியமானது என்று சொல்கிறார்கள். மேலும் இந்த டயட்டை பின்பற்றும் சமயத்தில் மேற்கொள்கிற உடற்பயிற்சி, மது மற்றும் சர்க்கரைப் பொருட்களைத் தவிர்ப்பது போன்றவற்றால் உடல் எடை குறைவதாக சொல்கிறது இந்த உணவு முறை.
பீட்சா டயட் எப்படி செயல்படும்?
கொழுப்பு, சர்க்கரை, ஆல்கஹால் போன்றவற்றால் உருவாகிற அதிக கலோரி நுகர்வினை தவிர்ப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சி முறைகளைப் பெற்றிருப்பதை ஆரோக்கியமான உணவு முறை என்று சொல்லலாம். இதன் அடிப்படையில்தான் இந்த பீட்சா உணவு முறை செயல்படுகிறது.இந்த உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு பீட்சா மட்டுமே எடுத்துக் கொள்ளும்படி கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளை தவிர்த்துவிட்டு பீட்சாவை மட்டுமே சாப்பிடுவதால் உடல் சரியில்லாமல் போவதோடு, நாம் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைகிறது. இதோடு மேற்சொன்ன ஆரோக்கியமான உணவுமுறையையும் பின்பற்றுகிறபோது உடல் எடை குறைகிறது.
இந்தியர்கள் பீட்சா டயட்டைப் பின்பற்றலாமா?
அமெரிக்காவில் பிரட், பீட்சா போன்ற பேக்கரி வகை உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களுடைய உணவுப் பழக்கமாக இருந்து வருகிறது. அதனால் பீட்சா விற்பனையாளர்கள் அதில் புதுமை செய்யும் விதத்தில், வணிக ரீதியாக அதன் விற்பனையை அதிகப்படுத்தும் விதமாக, ஆரோக்கியமான பீட்சாவை மையமாக வைத்து பீட்சா டயட் என்கிற உணவு முறையை அறிமுகம் செய்திருக்கிறார்கள். உடல் எடை
குறைப்புக்கு உதவுகிறது என்ற ஒரே காரணத்திற்காக இந்த உணவு முறையை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் உட்கொள்ளும் உணவில் எப்பொழுதும் கட்டுப்பாடோடு இருந்தாலே போதும் உடல் எடையைக் குறைக்கலாம்.
பீட்சாவை ஆரோக்கியமான உணவு என்று சொன்னாலும், அதை மட்டுமே எடுத்துக்கொண்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்ற அனைத்து உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நிலையான, ஆரோக்கியமான உணவு முறை இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற உணவு முறையானது அந்நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இந்த உணவு முறையில் நிலையான ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு பெற இயலாது என்பதால் இதை நமது நாட்டிற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு முறையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது நம் நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்சா, பட்கர் மட்டுமின்றி பேக்கரி வகை உணவுகளையும் அதிகளவில் சாப்பிடும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற உணவுகளை எப்போதாவது அளவாக சாப்பிடலாம். ஆனால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நம் ஊரில் புளிக்க வைத்த மாவில்தான் இட்லி, தோசை தயார் செய்கிறோம். இவை நம் உடல் நலனுக்கு உகந்தது. நம் நாட்டு உணவு முறைகள் பாரம்பரியச் சிறப்புகளையும், மருத்துவ சிறப்புகளையும் உடையது. பல்சுவை உணவு பதார்த்தங்கள் பலவற்றைப் பெற்றிருப்பதோடு, அறுசுவையும், ஆரோக்கிமும் உடைய நம் நாட்டு உணவு முறை இருக்கையில், இந்த அந்நிய நாட்டு உணவு முறையும், அதில் அவர்கள் வைக்கும் விஷப் பரிட்சையும் நமக்கு எதற்கு?
என்னைக் கேட்டால், பலவித சீரான உணவுகள் மற்றும் தேவையான, வழக்கமான உடற்பயிற்சிகளை உள்ளடக்கிய நமது இந்திய உணவு முறை நிலையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதால் அதையே நம் நாட்டு மக்களுக்கு நான் பரிந்துரை செய்வேன்!
Average Rating