மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது!! (மருத்துவம்)
‘புற்றுநோய் பாதிப்பும் அச்சமும் பரவலாகி வருவதை வெளிப்படையாகவே கண்டு வருகிறோம். நோய் வந்துவிட்டாலும் இனி வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற மேலோட்டமான நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது.
முக்கியமாக, புற்றுநோய் என்பது ஏதோ நவீன காலத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய நோய் என்றும் நினைக்கிறோம். உள்ளபடியே பார்த்தால் புற்றுநோய் ஒன்றும் நாம் நினைப்பது போல புதிய நோய் அல்ல’’ என்கிறார் நோய்க்குறியியல் மருத்துவரான அஜிதா. புற்றுநோய் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல முக்கிய தகவல்களையும் இங்கே விளக்குகிறார்.
புற்றுநோய் மனிதர்களிடையே காணப்பட்டதை எகிப்தியர்களின் மம்மிக்களில் காணப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களும், மருத்துவ வல்லுநர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். கி.மு 460 – 370 காலகட்டத்தில் வாழ்ந்து வந்த Hippocrates என்ற கிரேக்க மருத்துவர் இதற்கு ‘கேன்சர்’ என்ற பெயரை சூட்டினார்.
கேன்சர் என்ற வார்த்தை ‘கார்கிநோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து திரிந்து வந்தது. ‘கார்கிநோஸ்’ என்ற வார்த்தை ‘நண்டின் ஓடு போல் கடினமான உறுதி கொண்ட கட்டி’ என்பதைக் குறிக்கிறது. பிறகு ஆங்கில மருத்துவம் Cancer என்ற சொல்லுக்கு ‘அதீதமான திசு வளர்ச்சி’ என்ற பொருளை விளக்கியது.
பழந்தமிழர்களிடையேயும் புற்றுநோய் காணப்பட்டதற்கான பதிவேடுகள் தமிழர் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1800-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘சிறு பஞ்சமூலம்’ எனும் நூலில் ‘சிதலை போல் வாயுடையோர்’ என்று புற்றுநோயைக் குறிக்கிறது ஒரு பாடல். ‘சிதலை’ என்றால் கரையான் என்று பொருள். புற்றினை உருவாக்குவது கரையான். அதனால் காரணப் பெயராக அமைந்துள்ளது. அவ்வாறு உருவாகிய புற்றுநோய், கட்டிகளாக உருவாகி உடலில் பல இடங்களுக்கு பரவியதாகவும், நாளடைவில் உடல் உருகி நோயாளிகள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, புற்றுநோய் என்பது ஒரு புதிய நோய் அல்ல.
புற்றுநோய் உருவாகும் விதம், ஏன் உருவாகிறது? எப்படி இதனை வராமல் தடுக்கலாம் வந்துவிட்டால் அதன் ஆரம்பகால அறிகுறிகள் என்னென்ன? அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொண்டால், நாம் விழிப்புணர்வுடன் இந்த நோயைக் கையாண்டு எதிர்த்து போராடி வெல்லலாம்.
இயல்பாக உடலில் உள்ள உறுப்புகளில் ஸ்டெம் செல்ஸ் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கும். இந்த ஸ்டெம் செல்ஸ் எண்ணற்ற செல்களை உருவாக்கும். புதிதாக உருவாகிய செல்கள்(Immature Cells) நாளடைவில் செயல்களைச் செய்த பிறகு முதிர்ச்சியடைந்து (Mature Cells) தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும். இந்த இயன் முறையை நாம் ‘அப்போடோசிஸ்’ என்று கூறுகிறோம்.
Apoptosis என்றால் Programmed cell death என்று அர்த்தம். அதாவது திட்டமிட்டப்பட்ட செல் அழிவு என பொருளாகும். இந்த திட்டமிடப்பட்ட செல் அழிவு நம் உடலில் இயங்கும் நிகழ்வு. ஒரு செல் உருவாகி, அதன் வேலையை செய்து முடித்த பின் தம்மைத் தாமே அழித்து கொள்வதும், மீண்டும் ஸ்டெம் செல்களிடமிருந்து புதிய செல்கள் உருவாகும். இந்தப் போக்கினை நாம் ‘செல் சுழற்சி’ என்கிறோம்.
இந்தசெல் சுழற்சி நம் உடம்பிலுள்ள உறுப்புகள் அனைத்திலும் காணப்படுகிறது. தோல், செரிமான மண்டலம், கல்லீரல், சுவாசக்குழாயை தழுவியுள்ள செல்கள், கர்ப்பப்பையின் உட்புறம் உள்ள திசுக்கள், மார்பகங்களிலுள்ள பால் சுரப்பிகள் மற்றும் பல உறுப்புகளில் இந்த ‘செல் சைக்கிள்’ அன்றாடம் நடந்து கொண்டிருக்கும், செல் சைக்கிள் போக்கினால் உடலில் செல்கள் உற்பத்தி மற்றும் செல்கள் அழிதல் ஆகிய இரண்டும் சமநிலையில் காணப்படுகிறது. எந்த நிலையில் இதில் ஏற்றத் தாழ்வு நிகழ்கிறதோ, அந்த நிலையில் புற்றுநோய் உருவாவதை நாம் காண்கிறோம்.
இந்த செல் சைக்கிளை இயக்குவிப்பது சில மரபணுக்களாகும். செல் சைக்கிளை இயக்குவிக்கும் மரபணுக்கள் பழுதடைந்தாலும், புற்றுநோய் உண்டாகும். சுருக்கமாக சொன்னால் புற்றுநோய் செல்கள் ‘சாகாவரம்’ பெற்ற செல்கள் என்றே சொல்லலாம். அதிக திசு வளர்ச்சியையே நாம் புற்றுநோய் என்கிறோம்.
கட்டுப்பாடின்றி வளரும் திசுக்கள் கட்டிகளாக உருவாகிறது. அதிகம் வளருவதால், அருகிலுள்ள சாதாரண செல்களுக்கு செல்ல வேண்டிய ஊட்டச்சத்து குறைந்து நாளடைவில் உடம்பு மெலிந்து தோற்றமளிக்கிறது. வளர்ந்து வரும் புற்றுநோய் கட்டிகள் ரத்தகுழாய்களின் மூலமோ அல்லது நிணநீர் மண்டலத்தின் மூலமோ அல்லது நேரடியாகவோ உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்கு பரவி, மேலும் அவ்வுறுப்புகளைச் செயலிழக்கச் செய்து, இறுதியில் மரணத்தை சம்பவிக்கும்.
அதீத திசு வளர்ச்சியை நாம் கழலை(Tumor) என்கிறோம். எல்லாக் கழலைகளும் புற்றுநோயல்ல. கழலைகளை இரண்டு வகையாகப் பிரிக்கிறோம். ஒன்று, தீங்கில்லா கழலைகள்(Benign) என்றும், மற்றொன்று தீங்குண்டாக்கும் கழலைகள்(Malignant) என்கிற புற்றுநோய் கட்டிகளாகும்.
தீங்கில்லா கழலைகள் பொதுவாக மற்ற உறுப்புகளுக்கு பரவாது. அதே சமயம் அறுவை சிகிச்சையின் மூலம் அவற்றை முற்றிலும் அகற்றி விடலாம். உயிருக்கும் கேடு விளைவிக்காது. உதாரணத்திற்கு, Fibroid என்கிற கருப்பையை பாதிக்கும் கட்டி தீங்கில்லா கழலை. Fibroid கட்டி உயிருக்கு கேடு விளைவிக்காது. மாறாக தீங்குண்டாக்கும் கழலைகள்(Malignant tumors) எனப்படும் புற்றுநோய் கட்டிகள் இயல்புகள் மாறாக, எந்த கட்டுப்பாடுமின்றி பெருகி ரத்த குழாயின் மூலமோ, நிணநீர் மண்டலத்தின் மூலமோ அல்லது நேரடியாக அருகிலுள்ள உறுப்புகளுக்குப் பரவி, அவ்வுறுப்புகளைச் செயலிழக்க செய்து உயிருக்கு கேடு விளைவிக்கும். இவ்வாறு மற்ற உறுப்புகளுக்கு சென்றடையும் புற்றுநோய் செல்களை நாம் மெட்டாஸ்டேஸிஸ் (Metastasis) என்று அழைக்கிறோம்.
புற்றுநோய் உருவாவதற்குரிய முழுமுதற் காரணம் செல்களில் உள்ள DNA சேதம் அடைதலாகும். குறிப்பாக, செல் சைக்கிளை இயக்குவிக்கும்
மரபணுக்களிலுள்ள டி.என்.ஏ சேதம் அடைவதால், செல் சைக்கிள் கட்டுக்கடங்காமல் திசுக்கள் பல்கி பெருகுகிறது.
டி.என்.ஏ சேதம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. குறிப்பாக மரபுரிமை மரபணு கோளாறுகள் (Inherited Genetic Disorders) புற்றுநோய் உண்டாக்கும் கெமிக்கல்கள்(Aniline dyes, Nicotine, Aflatoxin, Vinyl chloride) ஆகியவை டிஎன்ஏ சேதம் உண்டாக்கும். சில நுண்கிருமிகள்(Hepatitis B, Hepatitis C வைரஸ்கள், Human Papilloma virus, HIV virus, EB virus) போன்றவையும் டிஎன்ஏ சேதமடைய செய்து புற்றுநோயை உண்டாக்குகிறது.
புற்றுநோய் உருவாக்கத்திற்கு மற்றொரு கோட்பாடு என்னவென்றால், நம் உடலுக்கு இயல்பாகவே புற்றுநோயை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை இயக்குவதை Tumor Suppressor Genes என்கிறோம். குறிப்பிட்ட சில மரபணுக்களாகும். இவை செயலிழந்தாலும் புற்றுநோய் உருவாகும். எனவே, புற்றுநோய் எதிர்ப்புசக்தி குறைந்து, புற்றுநோய் உண்டாக்கும் காரணங்கள் இரண்டும் ஒன்று கூடினால், புற்றுநோய் உண்டாகும். செயலிழந்த மரபணுக்கள் நாம் Mutant Gene என்று அழைக்கிறோம். புற்றுநோய் கணிக்கும் முறையில் Stages மற்றும் Grading
உள்ளது.
Average Rating