கோதுமையால் வரும் குழப்பம்!! (மருத்துவம்)
ஊரெல்லாம் ‘சப்பாத்தி டான்ஸ்’ பாடல் ஹிட்டாகிக் கொண்டிருக்கும் வேளையில் கோதுமைக்கு இப்படி ஒரு சோதனையா என்று கவலையைத் தருகிறது Celiac Disease. கோதுமை, கம்பு, பார்லி போன்றவை ஆரோக்கியம் தரும் தானியங்கள்தான். ஆனால், இவற்றில் இருக்கும் குளூட்டன் (Gluten) என்கிற ஒரு வகை புரதம் சிலரின் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாத அலர்ஜியை உண்டு பண்ணும். இந்த க்ளூட்டன் புரதம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு எதிராக செயல்படுவதை Celiac Disease என்கிறார்கள். இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் பிரமநாயகம் மேலும் இதுகுறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
‘‘கோதுமையை தென்னிந்திய மக்கள் குறைவாகவும், வட இந்திய மக்கள் அதிகளவிலும் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்நோய் வட இந்திய மக்களிடம் அதிகளவில் காணப்படுகிறது. செலியாக் நோய் Gluten sensitivity enteropathy அல்லது Sprue என்றும் அழைக்கப்படுகிறது.செலியாக் நோய் மரபணுக்களுக்கு இடையிலான தொடர்பு, குளூட்டன் அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள் அல்லது பிற சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவற்றால் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. குளூட்டன் புரதமானது இந்த நோயாளிகளின் உடல் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு எதிராக செயல்படுகிறது. இது சிறுகுடலில் உள்ள விரலிகள் (Villi) அல்லது குடலுறுஞ்சிகளை சேதப்படுத்துகிறது.
சிறிய அளவிலான, முடி நீட்டிக் கொண்டிருப்பது போன்று இருக்கக்கூடிய குடலுறுஞ்சிகள் நாம் உண்ணும் உணவிலுள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இந்த நோயால் குடலுறுஞ்சிகள் பாதிக்கப்படுவதன் காரணமாக, இந்நோயாளிகள் சத்தான உணவை சாப்பிட்டாலும்கூட அவர்களுக்கு போதுமான சத்துக்கள் கிடைப்பதில்லை.இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு, கால்சியம் மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு, கருவுறாமை மற்றும் கருச்சிதைவு, வலிப்புத் தாக்கங்கள் போன்ற நரம்பியல் பிரச்னைகள் மற்றும் சிறு குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்.இந்நோயின் அறிகுறிகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் வேறுபட்டு காணப்படுகின்றன. வயிற்றுப்போக்கு, சோர்வு, எடை இழப்பு, வீக்கம், குமட்டல், வாந்தி மற்றும் பசியின்மை போன்றவை இந்த நோயின் பொதுவான அறிகுறிகள். அனீமியா, தோல் அரிப்பு, வாய்ப்புண் போன்ற மேலும் சில அறிகுறிகள் பெரியவர்களில் காணப்படுகின்றன.
ஒரு குழுவாக இருக்கும் புரதங்களின் தொகுதியை குளூட்டன் என்று சொல்கிறோம். பசை போன்று இருக்கும் அது ஒன்றாக ஒட்டிக்கொண்டு ரொட்டியை மென்மையான அமைப்புடையதாக மாற்றுகிறது. இரண்டு புரோட்டீன்களின் கலவையாக இருக்கும் இந்த குளூட்டனை உடைய கோதுமை மாவின் நெகிழ்வுத்தன்மைக்கு அது காரணமாக இருக்கிறது.குளூட்டனை ஏற்றுக்கொள்ளாத நபர்களுக்கு விவரிக்க முடியாத சோர்வு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது தோல் பிரச்னைகள் போன்ற சில அறிகுறிகள் ஏற்படுகிறது. இதுபோன்ற அறிகுறிகளோடு உங்களுக்கு சீலியாக் நோய் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது’’ என்கிற மருத்துவர் பிரமநாயகம், க்ளூட்டன் ஃப்ரீ டயட் இதற்கு நல்ல தீர்வு என்கிறார்.‘‘குளூட்டன் புரதமுள்ள உணவுப் பொருட்களை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இந்த குளூட்டன் ஃப்ரீ டயட். மருத்துவர் ஆலோசனைப்படி வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக இந்த உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் சீலியாக் நோயை சரி செய்யலாம்.
இந்த குளூட்டன் ஃப்ரீ டயட்டானது சீலியாக் நோயின் அறிகுறிகளை நிர்வகிக்கவும், இந்த நோயிலிருந்து குடல் குணமாவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது. கோதுமை மற்றும் கோதுமை அடிப்படையிலான உணவுகள், பார்லி, கம்பு போன்ற அனைத்து பொருட்களையும் தவிர்ப்பதாக இந்த உணவு முறை அமைந்துள்ளது. கோதுமை அல்லது பார்லி சேர்த்து ஓட்ஸ் தயாரிப்பதால் சில சந்தர்ப்பங்களில் இதுவும் தவிர்க்கப்படுகிறது.
ரொட்டி, கேக், பிஸ்கட், குக்கீஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர், ஐஸ்கிரீம் போன்ற கோதுமை அடிப்படையிலான உணவு வகைகள், மால்ட் அடிப்படையிலான உணவுகள், வேபர், பன், சில வகை சாஸ்கள், ஆரோக்கிய பானங்கள், சூப்கள் மற்றும் பெருங்காயம் போன்ற மசாலா பொருட்களிலும் குளூட்டனுக்கான ஆதாரங்கள் மறைந்துள்ளன.
இந்த குளூட்டனை இணைப்புப் புரதமாகக் கொண்டு தயார் செய்யப்படுகிற சில மருந்துகளையும் தவிர்க்க வேண்டும்.வீட்டில் சமையல் அறை மற்றும் அங்குள்ள பாத்திரங்களை சுகாதாரமான முறையில் வைத்திருப்பதோடு, குளூட்டன் உள்ள உணவுப் பொருட்களையும், அது இல்லாத மற்ற உணவுப் பொருட்களையும் தனித்தனியாக சேமித்து வைக்க வேண்டும். வெளியிடங்களில் நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களில் குளூட்டன் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதில் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.சீலியாக் நோயுள்ளவர்கள் குளூட்டன் ஃப்ரீ டயட்டினைக் கடைபிடிப்பதால், அவர்களுடைய சிறுகுடலில் உள்ள சேதமடைந்த குடலுறுஞ்சிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. மேலும் இது எதிர்காலத்தில் இந்நோயால் ஏற்படும் பிரச்னைகளை வராமல் தடுக்கவும் உதவுகிறது!’’.
Average Rating