காஃபி நல்லதும் கெட்டதும்!! (மருத்துவம்)
காஃபியின்றி சிலருக்கு காலை விடியாது. எத்தனை முறை புரண்டு படுத்த பின்னரும் காஃபியின் வாசனை உணர்ந்ததும் சட்டென துள்ளி எழ வைக்கும். மிதமான சூட்டில் ருசித்துக் குடிக்கும்போது காஃபியின் அத்தனை சுவைகளையும் மூளை, இதயம் சிந்தனை, சொல் என ஒவ்வொன்றிலும் உணர முடியும்.
ஒரு நாளையே காஃபிக்கான நேரங்களால் சிலர் அளவிடுவதையும் கேட்டிருப்போம். இந்த காஃபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் காஃபியை மிஸ் பண்ண முடியாது. அப்படியே மிஸ் பண்ணினாலும் தலைவலி, டென்ஷன் என இருக்கும் இடத்தையே ரெண்டாக்கி விடுவார்கள்.
இப்படி நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட காஃபி குடிப்பது நல்லதா கெட்டதா என்ற விவாதம் எப்போதும் உள்ளது. காபி குடிப்பதால் ஏற்படும் பிளஸ் மைனஸ் பற்றி விரிவாகப் பேசுகிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவர் பாசுமணி.
ஒரு நாளைக்கு எத்தனை முறை காஃபி குடிக்கலாம்?
ஒரு வேளை நீங்கள் அருந்தும் ஒரு கப் காஃபியில் கஃபைன்(Caffeine) எவ்வளவு அடங்கியுள்ளது என்பது முக்கியம். இதன் அடிப்படையிலேயே காஃபி நல்லதா, கெட்டதா என்ற முடிவுக்கு வர முடியும். 100 கிராம் கஃபைனை உள்ளடக்கிய ஒரு கப் காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை வரை குடிக்கலாம். இதையே 6 முறை குடிப்பது அளவுக்கு அதிகமானதாகிவிடும். எனவே, காஃபி குடிக்கும் அளவை ஒரு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது கட்டாயம்.
காஃபி குடிப்பதால் நன்மைகள் ஏதேனும் உண்டா?
காஃபியும் இயற்கையில் இருந்து கிடைக்கும் ஒரு கொட்டை வகையே. எல்லா விதைகளைப் போலவும் இதுவும் ஒரு விதையே. காஃபிக் கொட்டையில் அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதனால் காஃபி குடிக்கும்போது சில நன்மைகள் உண்டாகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம், நடுக்குவாத நோய், கல்லீரல் நோய், ஈரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய், இதர புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து உடலுக்கு நன்மை அளிக்கிறது. காபியை அளவோடு குடிக்கும்போது இது போன்ற நன்மைகளைப் பெறலாம்.
காஃபி குடிக்கும் அளவு அதிகமானால் நாம் சந்திக்கும் ஆபத்துக்கள்?
காஃபி கொட்டைக்கு மூளையைத் தூண்டும் தன்மை உள்ளது. எனவே, காஃபியை அதிகளவில் குடிக்கும்போது அது நம்மைத் தூண்டிவிடுகிறது. இந்த தூண்டிவிடும் குணத்தால் மூளையினை அடிமையாக்கவும் செய்கிறது. இதுபோல் காஃபிக்கு அடிமையாகும் ஒருவர் படபடப்பு, அதிகபட்ச உற்சாகம் மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிகளவில் காஃபி குடித்தால் இதய நோய்கள் தாக்கும் என்கிறார்களே… இது எந்தளவுக்கு இதயத்தை பாதிக்கும்?
காஃபி தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் கவனிக்க வேண்டியவை. இவை அதிகளவு காஃபி குடிப்பதால் உண்டாகும் நன்மை, தீமைகளை உறுதி செய்கின்றன. ஆனால், அவை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட காரணத்தையும், அதன் விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக காஃபியில் கலந்திருக்கும் கஃபைன் மெதுவான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இத்தகைய உடல் அமைப்பு கொண்டவர்கள் தொடர்ந்து காஃபி குடித்தால் இதய நோய்கள் வர அதிகளவு வாய்ப்புள்ளது.
மேலும் எப்போதாவது மட்டுமே காஃபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை உற்சாகப்படுத்தலாம். இருப்பினும் இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். வடிகட்டப்பட்டாத காஃபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும். கஃபைன் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும். காஃபிக்கு அடிமை என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம், அதிலிருந்து வெளியில் வருவது எப்படி?
நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியைக் குடிக்காதபோது உங்களுக்குத் தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை இருந்தால் நீங்கள் காஃபிக்கு அடிமை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காஃபி குடித்தால் அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். இதனால் ஒரு நாளில் மூன்று முறைக்கு மேல் காஃபி குடிப்பதைத் தவிர்க்கவும்.
ஏதாவது பானம் அருந்த வேண்டும் என்ற மனதின் உணர்வை சற்று மாற்றி அமைக்கலாம். குறிப்பாக வேலை செய்யாமல் ஓய்வில் இருக்கும்போது காஃபி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்போது பழச்சாறு, இளநீர் அல்லது காய்கறி ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் உடலமைப்பு எப்போதும் எல்லா நேரமும் காஃபியை சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும். கஃபைன் தற்போது டீ, குளிர்பானங்கள், ஊட்டச்சத்து பானங்கள் ஆகியவற்றிலும் சேர்ந்து வருகிறது.
காஃபியை எப்படி எனர்ஜிக்கான பானமாக மாற்றிக் கொள்ள முடியும்?
ஒரு கப் காஃபி என்பது உங்களை உற்சாகப்படுத்தி உங்களது வாசிப்புத்திறனை மேம்படுத்துகிறது. அதிகளவில் காஃபி எடுத்துக் கொள்ளும்போது தூக்கமின்மை மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே, அளவாகத் திட்டமிட்டு காஃபி குடிக்கலாம். மாலை வேளைக்குப் பின்னர் காஃபி குடிப்பதைத் தவிர்க்கலாம்.
Average Rating