கனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வெளிநாட்டுத் தலையீடு! (கட்டுரை)
கனடாவின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நிலையில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்தது என அறியப்படுகின்றமை போல, கனேடியத் தேர்தலிலும் வெளிநாட்டு குறுக்கீடு, உள்நாட்டு அரசியல் மற்றும் கட்சி கொள்கைகள் மற்றும் அரசியலுள் உட்புகுந்து தவறான – அல்லது முறையற்ற வகையில் ஆனால், தேர்தலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய இணையத்தள தகவல் தாக்குதல்களை மேற்கொள்ளல் தொடர்பில் கனேடிய மக்களும், ஊடகங்களும், கட்சிகளும், கனேடிய பாதுகாப்பு துறையும் மிகவும் கவனமாக இருக்கின்றமை, ஜனநாயகத்தை பிரதிபலிப்பதற்கான தேர்தல் தொடர்பில் மக்கள் ஏற்கெனவே விழிப்புடன் இருப்பதை காட்டுகின்றது.
கனடா, ஒப்பீட்டளவில் ஒரு ‘சமாதானத்துக்கான நாடு’ என கூறப்பட்டாலும், அந்நிலை முற்றுமுழுதாகவே வெளிநாட்டு தவறான தகவல் தாக்குதல்களின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை முழுமையாக விடுவிக்கவில்லை. இந்நிலையை சமாளிப்பதற்கு கனேடிய அரசாங்கம் மட்டுமன்றி, அதனுடன் சர்வதேசத் தொடர்புகளை பேணும் ஏனைய நாடுகளும் – குறிப்பாக இலத்தீவியா போன்ற நாடுகள் மிகவும் சுதாகரித்து இருக்கின்றமை, மேலும், குறித்த விடயம் தொடர்பில் கனேடிய அரசாங்கமும், தகவல் பரிமாற்ற ஊடகங்களாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியனவும் இத்தாக்குதல்களில் விழிப்பாக இருக்கின்றமை, கனேடிய அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள், ஐக்கிய அமெரிக்க தேர்தல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்களிப்பு போன்றவற்றில் இருந்து வெகுவாகவே பாடங்களை கற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
கனேடிய வெளிநாட்டமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் கனடாவின் உளவு நிறுவனங்களில் ஒன்றான தொடர்பாடல் பாதுகாப்பு விரிவாக்க அமைப்பு ஆகியன அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்கமுடியும் எனவும் அத்தலையீடுகளுக்கு எதிராக சமீபத்தில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிகமாக, இலத்தீவியாவின் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஆர்ட்டிஸ் பாப்ரிக்ஸ் கனடாவின் தேர்தல் நிலைமைகளில் வெளிநாட்டு தலையீட்டை முற்றாகவே தடுக்க தனது நாடு எப்போதுமே உதவியாக இருக்கும் என அறிவித்திருக்கின்றமை இலத்தீவியா எவ்வாறு ரஷ்யா தனது உள்நாட்டு தேர்தல்களில் தலையிட்டதோ – அல்லது ஐக்கிய அமெரிக்க வாக்கெடுப்புக்களில் முறைதவறிய செல்வாக்கை செலுத்தியிருந்ததோ அவ்வாறான தலையீடு இனியும் இடம்பெறக்கூடாது என்பது தொடர்பில் தனித்து ஒரு நாடாக அல்லாது – பாதுகாப்புக்கான கூட்டான நேட்டோவின் மூலோபாய தகவல்தொடர்பு மையத்தின் தளத்தை பயன்படுத்துவது மூலம் தலையீடுகளை தடுத்தல் உத்தமமானது என கருதுவது, மேற்கத்தேய தேர்தல்கள் தொடர்பில் நேட்டோ புதிய பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவையை சுட்டிக்காட்டுகின்றது.
கனேடிய மற்றும் இலத்தீவிய அதிகாரிகள் ஏற்கெனவே, மேற்கத்தேய நாடுகளின் தேர்தலின் போது தவறான தகவல்களை ஊக்குவிப்பதிலும், சிவில் சமூகத்தை சிதைத்தலிலும், நேட்டோ நாடுகள் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் ஆளுகைக்கு அழிவை ஏற்படுத்தும் இறுதி இலக்கை அடைய ரஷ்யா செயல்படுகின்றது என அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ரஷ்ய முறை தவறிய வகையில் தவறான தகவல்களை ஊக்குவித்ததன் மூலம் இன்னொரு உள்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியமைக்கான மிகவும் பிரபலமான சமீபத்திய உதாரணம், 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலாகும்.
அங்கு ரஷ்ய ஹக்கர்கள் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை ஆதரிப்பதற்கும் அவரது அரசியல் எதிரியான ஹிலாரி கிளின்டனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் பல்வேறு வகையான ஊடுருவல்களைப் பயன்படுத்தினர். சர்வதேச வலைப்பின்னல்களில் போலியான- மேற்குறித்த தேவைகளுக்கு ஏற்ப விளம்பரங்களை மேற்கொள்ளல், போலி சுயவிவரங்களை உள்ளடக்கிய கணக்குகளை உருவாக்குதல் மற்றும் போலியான அரசியல் பேரணிகளை ஒழுங்கமைத்தல் ஆகியவை நாட்டின் தேர்தல் முடிவுகளை பாதிக்கப் பயன்படுத்தப்படும் சில நடைமுறைகளாக அமைந்திருந்தது.
வெளிநாட்டு குறுக்கீடு தொடர்ந்து இருப்பதால், எந்தவொரு இணையத் தாக்குதல்களையும் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு நிலையான கவனம் மற்றும் தகவமைப்புத் திறன் தேவைப்பாடு இருக்கின்றமையை கனேடிய அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை. கனேடிய அரசாங்கத்தால் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு கொள்கை என்னவென்றால், போலியான கருத்துப்பரிமாற்றம் மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காண உள்நாட்டு மற்றும் இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும், என்பதும் இவை தொடர்பாக தொடர்ச்சியாகவே கனேடிய மக்களுக்கு தகவல்கள் வழங்கப்படவேண்டும் என்பதே ஆகும். இருக்க வேண்டும். இது தொடர்பில் கனேடிய ஊடகங்கள் மற்றும் அரசு சாரா சிவில் அமைப்புகளும் கனேடிய மக்களுக்கு தேவையான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கவேண்டும் என்பதுமே அக்கொள்கையில் இரண்டாம் நிலை எதிர்பார்ப்பாகும்.
இவற்றின் அடிப்படையிலேயே கனேடிய அரசாங்கம் Critical Election Incident Public Protocol (CEIPP) என்னும் சட்டக் கட்டுப்பாட்டை அண்மையில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த CEIPP இன் நடைமுறைக்குழுவில் சிரேஷ்ட சிவில் அதிகாரிகள் 5 பேர் கடமையாற்றுவார்கள் என்றும் அவர்கள் குறித்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த நிலைமைகளை கண்காணிக்க மற்றும் ஒரு வெளிநாட்டின் தலையீடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும் என கண்டறியும் போது, அவர்கள் பின்வரும் நெறிமுறைகள் பேணவேண்டும் எனவும் அச்சட்ட கட்டுப்பாடுகள் அமைகின்றன. அதன்படி,
1. தேசிய பாதுகாப்பு துறைகள் தொடர்ச்சியாவவே வளர்ந்து வரும் தேசிய பாதுகாப்பு முன்னேற்றங்கள் மற்றும் தேர்தலின் ஒருமைப்பாட்டிற்கு சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து வழக்கமான விளக்கங்களை CEIPP குழுவுக்கு வழங்கும் என்றும்,
2. ஒரு தேசிய பாதுகாப்பு துறையின் தலைமையகம் (அதாவது, Communications Security Establishment, the Canadian Security Intelligence Service, the Royal Canadian Mounted Police அல்லது Global Affairs Canada) 2019 பொதுத் தேர்தலில் வெளிநாடு தலையிடுவதை அறிந்தால், அவர்கள் குறித்த விடயத்தை தமது தலைமையக்கங்களுக்கு இடையில் கலந்தாலோசிப்பார்கள் வேண்டும் எனவும் , குறுக்கீட்டை திறம்பட தீர்க்க அனைத்து முறைமைகளையும் அவர்கள் கையாளவேண்டும் எனவும். எந்தவொரு தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு காரணங்களை தவிர்ந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், குறித்த பாதுகாப்பு துறைகள் பாதிக்கப்பட்ட கட்சிக்கு (ஒரு வேட்பாளர்; ஒரு அரசியல் கட்சி; மற்றும் தேர்தல் கனடா) குறித்த சம்பவத்தை நேரடியாக தெரிவிக்கும் எனவும்,
3. குறித்த விடயத்தை பொதுமக்களுக்கு அறிவிப்பதா இல்லையா என்பது தொடர்பில் CEIPP குழு மதிப்பீடு செய்யும் எனவும்,
4. அம்மதிப்பீட்டின் பிரகாரம் பொதுமக்களுக்கு அறிவிக்க முனைப்படின், அது தொடர்பாக பிரதமர் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு அறிவித்து, அதன்பிறகே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும்
கொள்கையினை வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை எல்லாவற்றையும் தாண்டி வெளிநாடு ஒன்று மீண்டும் ஒரு உள்நாட்டு தேர்தலில் தலையீடு செய்யுமாயின் அது எவ்வாறான விளைவுகளை சந்திக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Average Rating