மாடலாக மாறிய கைகள்!! (மகளிர் பக்கம்)
எலென் சிரோட், புகழ்பெற்ற மாடல். விளம்பர மாடலிங் துறையில் இவர் பிரபலம். ஆனால் எந்த ஒரு விளம்பரத்திலும் நாம் அவரின் முகத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அவர் ஹேண்ட் மாடல் (hand model). அதாவது விளம்பரங்களில் இடம் பெற்றிருப்பது, அவரின் கைகள் மட்டுமே. ஃபேஷன் மாடல் தெரியும், அதென்ன ஹேண்ட் மாடல் ? வெளிநாடுகளில் பிரபலமாகி, இப்போது இந்தியாவிலும் இது ட்ரெண்டாகியுள்ளது.
விளம்பரங்களில் பொருட்களை க்லோஸ்-அப்களில் ஏந்தி நிற்கும் கைகள் பெரும்பாலும் அந்த விளம்பரத்தில் நடிப்பவரின் கைகள் கிடையாது. எப்படி சினிமாவில் கதாநாயகனுக்கு டூப் போடுகிறார்களோ அதே போல் கைகளுக்கு மட்டுமே டூப் உள்ளது. விளம்பரங்களில் மட்டும் இல்லை… திரைப்படங்களிலும் இது போல் க்ளோசப் காட்சிகளுக்கு ேஹண்ட் மாடல்களை பயன்படுத்துகிறார்கள்.
நாம் தினம்தோறும் பேனர்களிலும் பத்திரிகைகளிலும் பார்க்கும் விளம்பர பொருட்களை ஏந்திய கைகள் லட்சக்கணக்கில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? எலென் சிரோட், 20 வருடங்களாக ஹேண்ட் மாடலாக வலம் வருகிறார். தன் கைகளை பல லட்சத்திற்கு காப்பீடு செய்து அதை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள யோகா, பிரத்யேக உணவு முறை, எப்போதும் கையுறை என தன் விலைமதிப்பற்ற கைகளை பாதுகாத்து வருகிறார்.
20 வருடங்களாக தன் கைகள், சூரியனையே பார்த்தது இல்லை எனக் கூறும் எலென், திருமணத்தின் போது அவர் கணவர் அணிவித்த மோதிரத்தை, அந்த சில நிமிடங்கள் மட்டும் அணிந்து பின் கழட்டி வைத்தவர், இதுவரை அணியவே இல்லையாம். நடனக் கலைஞராக இருந்து ஹேண்ட் மாடலாக மாறிய எலென், கைகளில் நல்ல நளினத்தையும் நேர்த்தியையும் கொண்டு வந்து, சரியான நிலையில் கைகளை திருப்பி போஸ் கொடுக்கும் போது, கச்சிதமாக புகைப்படம் வரும் என டிப்ஸ் கொடுக்கிறார்.
கை மாடல்களுக்கு, நீண்ட விரல்கள், ஆரோக்கியமான நகம், ஜொலிக்கும் சருமம் மற்றும் நரம்புகள், எலும்புகள் எதுவும் மேலே தெரியாத கைகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேலான விளம்பர படங்களுக்கு தன் கைகளை மாடலாக கொடுத்துள்ளார். அதிக வேலையோ அல்லது பளுவான பொருளையோ தூக்கும் போது கைகளில் தசைகள் பெருகும் என்பதால், அது போன்ற வேலைகளை தவிர்த்து வருவதாய் கூறுகிறார் எலென் சிரோட்.
ஹேண்ட் மாடலாய் இருப்பது சுலபமில்லை. கைகள் நடுங்காமல் சமநிலையில் பொருட்களை ஏந்தி கேமராவிற்கு போஸ் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை கைகளை அசைக்காமல் ஒரே நிலையில் விளம்பர பொருளை ஏந்தி நிற்க வேண்டும். சமையல் செய்வது போல் காட்சிகள் வந்தால் நேர்த்தியாக காய்கறிகள் வெட்டி, அழகாக முட்டையை உடைத்து சமைக்க வேண்டும்.
சென்னையிலும் ேஹண்ட் மாடல்களுக்கு அதிக தேவை இப்போதுள்ளது. வாட்ச், நகைகள், நெயில் பாலிஷ், சோப், சரும க்ரீம்கள், உணவு பொருட்கள் என பல விளம்பரங்களுக்கு ஹேண்ட் மாடல்கள் அதிக அளவு தேவையில் இருக்கின்றனர். அனுபவம் மிக்க ேஹண்ட் மாடல்கள் ஒருநாள் வேலைக்கு பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை சம்பாதிக்கலாம்.
Average Rating