பர்ஃபெக்ஷனும் பக்க விளைவும் !! (மருத்துவம்)
எந்த வேலையைச் செய்தாலும் அதில் Perfection இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இதுபோன்ற மனநிலை கொண்டவர்கள் கூடுதல் மன அழுத்தத்துக்கும் ஆளாகிவிடுகிறார்கள். எனவே கவனம் அவசியம் என்று
எச்சரிக்கிறார்கள் நவீன உளவியலாளர்கள்.
முழுமையாக ஒரு வேலையை முடிப்பதில் பிடிவாதமாக இருப்பதற்கு பரிபூரணவாதம் (Perfectionism) என்று பெயர். வல்லுநர்கள் பரிபூரணவாதத்தை ‘ஒருவர் வகுத்துக் கொள்ளும், அதிகப்படியான மிக உயர்ந்த தனிப்பட்ட தரநிலைகள் மற்றும் அதிகப்படியான விமர்சன சுய மதிப்பீடுகளின் கலவை’ என்று வரையறுக்கின்றனர்.
கோர்டன் பிளெட் மற்றும் பால் ஹெவிட் எனும் இரண்டு முன்னணி நிபுணர்களும், பரிபூரணத்துறையில் அதிகாரத்துவம் பெற்றவர்கள். இவர்கள் இருவரும் இந்த தலைப்பை பல வருடங்களாக ஆய்வு செய்துள்ளனர். இருவரில் ஃப்ளெட், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் சுகாதாரப் பேராசிரியராகவும், ஹெவிட் கனடாவிலும் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில்(UBC) உளவியல் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்கள்.
இந்த இரு உளவியலாளர்களும் சேர்ந்து, கிட்டத்தட்ட 30 வருடங்களாக மேற்கொண்ட முக்கிய ஆய்வின் அடிப்படையில் பரிபூரணத்தின் மூன்று முக்கிய அம்சங்களை வரையறுத்தனர். ‘சுயம்சார்ந்த பரிபூரணவாதம், பிறர் சார்ந்த பரிபூரணவாதம் மற்றும் சமூக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பரிபூரணவாதம்’ இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
பரிபூரணவாதம் நம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக, இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத் துறை விரிவுரையாளர் தாமஸ் குர்ரான் மற்றும் இங்கிலாந்தில் உள்ள யார்க் செயின்ட் ஜான் பல்கலைக்கழகத்தின் ஆண்ட்ரூ பி. ஹில் ஆகியோர் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கோர்டன் பிளெட் மற்றும் பால் ஹெவிட் இருவரும் வகுத்துள்ள மூன்று வடிவங்களான பரிபூரணவாதங்களில், சமூக ரீதியான தொடர்புடைய பரிபூரணவாதம் மனிதனை மிகவும் பலவீனப்படுத்துகிறது’ என்று விளக்குகின்றனர்.
அதாவது, சமூக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பரிபூரணவாதத்தில், தனிநபர்களிடத்தில் சமூகம் அதிகமாக எதிர்பார்ப்பதும், ஒருவர் செய்யும் செயல்கள் மீது சமூகம் கடுமையாக தீர்ப்பளிப்பதால், தங்களை நிரூபிப்பதற்காக தன் வேலையில் முழுமையைக் காட்ட வேண்டும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த சமூகரீதியான பர்ஃபக்ஷனிஸம் உள்ளவர்கள் கவலை, மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஆகிய மனநலப் பிரச்னைகளுக்கு அடிக்கடி ஆளாகிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும், இந்த ஆய்வில், ‘தற்கொலை செய்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களால் பரிபூரணவாதிகள்(Perfectionists) என்று விவரிக்கப்படுகிறார்கள். மற்றொரு ஆய்வில், தற்கொலை செய்து கொண்ட இளைஞர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களை மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கும் பழக்கத்தில் உள்ளனர்’ என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பர்ஃபக்ஷனிஸம், குறிப்பாக இளைஞர்களை கடுமையாக தாக்குகிறது.
சமீபத்திய மதிப்பீடுகளின்படி மாணவர்களிடத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் மனச்சோர்வின் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்றும், பெரும்பாலும் இந்த அறிகுறிகள் பர்ஃபெக்ஷனிஸத்தோடு பரவலான தொடர்புடையதாக இருப்பதாகவும் தெரிகிறது. ஜான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆண்ட்ரூ மற்றும் பி. ஹில், ‘சுயம்சார்ந்த பரிபூரணவாதம் உள்ள தனிநபர்கள் தங்களைப் பற்றிய நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை வைத்திருக்கும்போதும் மற்றும் தங்களின் சுய மதிப்பீடுகளில் தண்டனைக்குரியவர்களாக இருக்கும் போதும் மனச்சோர்வு, உணவுக் கோளாறுகளுடன் இணைக்கப்படுகிறார்கள் இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தற்கொலைகள் அடிக்கடி நிகழ்கிறது’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும், இது, ஒருவருக்கு Bipolar Disorder வரக்கூடிய அபாயத்தை உயர்த்துவதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் பர்ஃபக்ஷனிஸத்தின் தீமைகள் மன ஆரோக்கியத்தோடு நின்றுவிடவில்லை. சில ஆய்வுகள், உயர் ரத்த அழுத்தம் பர்ஃபக்ஷனிஸ்ட் மக்களிடையே அதிகம் காணப்படுவதாகக் கண்டறிந்துள்ளதோடு, இந்த குணம் இதய நோயுடன் தொடர்புள்ளதையும் நிரூபிக்கின்றன. இவர்கள் உடல்நோயை எதிர்கொள்ளும் நிலையில், கூடுதலாக நோயிலிருந்து மீளக்கூடிய நேரமும் அதிகமாகிறது.
பேராசிரியர் ஃப்ளெட் மற்றும் அவர்களது சகாக்கள் மேற்கொண்ட ஆய்வில், அல்சர், பெருங்குடல் அழற்சி, மாரடைப்பு போன்ற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் பர்ஃபக்ஷனிஸ்டாக இருக்கும்பட்சத்தில், அவர்களை மீட்பது மிகவும் கடுமையான வேலையாக இருக்கும் என்பதும் தெரிய வருகிறது. ‘பர்ஃபெக்ஷனிஸத்திற்கும் தீவிர நோய்க்கும் இடையிலான தொடர்பு ஆச்சரியமளிப்பதாக உள்ளது. காரணம், இடைவிடாத பர்ஃபக்ஷனிஸம் நாள்பட்ட மன அழுத்தத்திற்கான ஒரு செய்முறையாக இருக்கலாம்’ என்கிறார் பேராசிரியர் ஃப்ளெட்.
மேலும் இவர்கள் பெரும்பாலும் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்பவர்களாகவும், ஒரு வேலையைச் செய்ய கடுமையாக முயற்சி செய்திருந்தாலும் கூட, தாங்கள் எதற்கும் லாயக்கற்றவர் என்ற ரீதியில் தன்னைத்தானே விமர்சித்துக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது உள்குரலானது, ‘நீ இந்த வேலையைச் சரியாகச் செய்யவில்லை’ என்று அடிக்கடி எச்சரித்துக் கொண்டே இருப்பதால், தன்னைத்தானே தண்டித்துக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.
சரி… இதை எப்படி எதிர்கொள்வது?
அதற்கான வழிமுறைகளையும் ஆய்வு சொல்கிறது. சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேடலின் ஃபெராரி தலைமையிலான சமீபத்திய ஆய்வில், பர்ஃபெக்ஷன் போக்குகளைக் கொண்ட மக்கள் தங்கள் மனச்சோர்விலிருந்து பாதுகாக்க சுய இரக்கம் உதவும்’ என்று கண்டறியப்பட்டது. சுய இரக்கம், ஒருவரின் தவறான பர்ஃபெக்ஷன் மற்றும் அதனால் ஏற்படும் மனச்சோர்வுக்கிடையிலான வலிமையை குறைப்பதாக இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இறுதியாக ‘வாழ்க்கையில் அடைய வேண்டிய லட்சியங்கள் வகுத்திருந்தாலும் அல்லது எந்தவொரு சாதனையை அடைவதற்கும் எண்ணற்ற சிரமங்கள் மற்றும் தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும்’ என்ற உண்மையை ஒரு நிமிடம் யோசித்தாலே போதும், எந்த ஒரு செயலையும் பல தவறுகளுக்குப் பின்தான் முழுமையாக செய்ய முடியும் என்பதை தானாக உணர்வீர்கள். அப்போது மன அழுத்தம் இருக்காது.
முக்கியமாக சக மனிதர்களிடம் பர்ஃபெக்ஷன் பார்க்கும்போது உறவுகளை இழக்க வேண்டியும் வரலாம் என்று ஆலோசனை
சொல்கிறார்கள்.
Average Rating