இந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ !! (உலக செய்தி)
விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தபடி நிலவில் தரை இறங்காத போதும் ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்கு ‘இஸ்ரோ’ நன்றி தெரிவித்துள்ளது.
எந்தவொரு நாடும் இதுவரை ஆராய்ந்து அறிந்திடாத நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய இந்தியா, சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது.
அந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 7-ஆம் திகதி அதிகாலை நிலவின் தென்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த நிகழ்வை காண்பதற்கு பிரதமர் மோடி, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு சென்றிருந்தார்.
ஆனால் விக்ரம் லேண்டர், தரை இறங்க வேண்டிய இடத்துக்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விஞ்ஞானிகளையும், ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் முகங்களில் நான் ஏமாற்றத்தை பார்க்கிறேன். துவண்டுபோக வேண்டிய அவசியம் இல்லை. நாம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம்” என்று கூறி தேற்றினார்.
அது மட்டுமின்றி, “இது தைரியமாக இருக்க வேண்டிய தருணம். நாம் தைரியமாக இருக்க வேண்டும். நாம் நம்பிக்கையுடன் இருப்போம். நமது விண்வெளி திட்டங்களில் இன்னும் கடுமையாக உழைப்பதை தொடர்வோம்” என்றும் குறிப்பிட்டார்.
விக்ரம் லேண்டர், தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்துக்கு 500 மீட்டருக்கு அப்பால் விழுந்து கிடப்பது தெரிய வந்தது. விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பினை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகளும், நாசா விஞ்ஞானிகளும் முயற்சித்தனர். அந்த முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை நாசாவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கிற இடத்துக்கு மேலே கடந்து செல்வதாகவும், அப்போது படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம், எடுத்தால் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வோம் என்றும் நாசா கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதுவும் நடைபெறவில்லை.
விக்ரம் லேண்டரின் ஆயுள் 14 நாட்கள்தான். நாளை (20-ஆம் திகதி) அதன் ஆயுள் காலம் முடிகிறது. எனவே இனியும் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் தரை இறங்கி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாத போதும், மீண்டும் அதனுடன் தொடர்பு ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காத போதும், இந்த திட்டத்தில் இந்தியர்கள் அனைவரும் இஸ்ரோவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டனர். இது விஞ்ஞானிகளுக்கு ஆறுதலாக அமைந்தது.
இந்த நிலையில் இஸ்ரோ, இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
உலகமெங்கும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கையாலும், கனவுகளாலும் நாங்கள் உத்வேகம் பெற்று முன்னோக்கி நடைபோடுவதை தொடர்வோம். வானையே எப்போதும் நாங்கள் இலக்காக கொள்ள எங்களுக்கு ஊக்கம் அளித்த உங்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Average Rating