தமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் !! (கட்டுரை)

Read Time:22 Minute, 0 Second

விடுதலைக்கான வேள்வியோடு இருக்கும் ஓர் இனம், எப்போதும் ஓயாது, தனது இலக்கு நோக்கிய பயணத்தை, முன்னகர்த்திக்கொண்டே இருத்தல் வேண்டும் என்பது புரட்சியாளர்களது கருத்தாக உள்ளது.

அந்தவகையில், உலக வரலாற்றுப் பக்கங்களில், பாதிக்கப்பட்ட இனங்களுக்கான விடுதலைப் பயணங்களை எடுத்துக்கொண்டால், பலநாடுகளில் விடுதலையை முன்னெடுத்த அத்தனை இனக்குழுமங்களும், தமக்கான விடுதலை நோக்கிய பயணத்தை, முடிந்த வரையில் இலக்கு நோக்கி நகர்த்தியிருந்தன. அதன் வெளிப்பாடாக, சமாதான ஒப்பந்தங்களும் தனிநாட்டுப் பிரகடனங்களும் அந்தந்த இனக்குழுமங்களுக்குக் கிடைத்திருக்கின்றன.

அவ்வாறானநிலை, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கின்றதா என்பது தொடர்பில், ஆராயப்பட வேண்டிய தேவை உள்ளது.

இலங்கையைப் பொறுத்த வரையில், ஆதிக்குடிகள் என்ற வரலாற்றுப் பெருமையைக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், தமது இருப்புத் தொடர்பாக, நிரூபிக்கும் தருணங்களில், இற்றைக்கு சுமார் 1,000 வருடங்களுக்குள்ளான மன்னராட்சிக்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே ஆராய முற்படுகின்றனர். இது ஒரு துர்ப்பாக்கிய விடயம் என, பல உள்நாட்டு, வௌிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏனெனில், இலங்கைத் தமிழர்களின் வரலாறு என்பது, இராவணன் காலத்தில் இருந்து கணிக்கப்பட வேண்டும்; அது தமிழ் மக்களால் முன்னிறுத்தப்படவும் வேண்டும் எனப் பல வரலாற்று ஆய்வாளர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்களின் இருப்பு என்பது, இன்று, இலங்கை தேசத்துக்குள் கேள்விக்குள்ளாகும் நிலையை அடைந்துள்ளது; அடையவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, தமிழ் மக்களுக்கான அரசியல் செயற்பாட்டுகள் எந்தளவுக்கு ஆக்கபூர்வமானதாக உள்ளன என்பது தொடர்பிலான புரிதல்கள் தேவைப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களுக்கான ஓர் அரசியல் பிரவாகமாகப் பார்க்கப்பட்டே உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிநடத்தலிலும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அதன் செயற்றிட்டங்கள், தமிழர்களின் விடுதலைக்கான சரியான பாதையை தெரிவுசெய்து, தனது பயணத்தை முன்னெடுத்து இருந்ததாக மக்கள் நம்பினார்கள்.

தமிழர் தரப்பில் இருந்து செயற்படத் தவறியவர்களும் நாடாளுமன்றக் கதிரையை வெறுமனே அலங்கரித்தவர்களும் தகுதியிழப்புக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களது பதவிகள், அவர்களுக்கு தெரியாமலேயே பறிக்கப்பட்டு, பொருத்தமானவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஈழவேந்தனின் பதவி, அவர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தபோது, உத்தியோகபூர்வாகவே விடுமுறை அறிவிக்கப்படாமலேயே, பதவி வலிதாக்கப்பட்டது.

இந்தக் கட்டமைப்பும் சிறந்த பொறிமுறை அரசியலும் புலிகளின் மௌனிப்புக்குப் பின்னர், அற்றுப்போகத்தொடங்கியது. த.தே.கூட்டமைப்புக்கு உள்ளேயே பிளவுகளும் பிரதேசவாத சிந்தனைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. என்ன நோக்கத்துக்காகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதில் இருந்து பிறழ்வு நிலைக்குக் கூட்டமைப்பு செல்லத்தொடங்கியது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி, ஆரம்பத்தில் இருந்து தமது கொள்கையாகக் கொண்டிருந்த ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்பதான இணக்க அரசியல் தளத்துக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னை உட்படுத்திக்கொண்டது.

யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீள வேண்டிய தமிழ் மக்களுக்கு, அபிவிருத்தி என்ற தளம் தேவையாக இருந்த போதிலும் உரிமை, அபிலாசை, தேசியம் என்ற எண்ணக் கருக்களைக் கைவிட்டு, சரணாகதி அரசியல் தளத்தில் ஈடுபட்டு, அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளதா என்ற கேள்வி காணப்படுகின்றது.

ஒரு தொன்மையான இனம், தனக்கு நாடும் தேசமுமற்று, ஏதிலிகளாக உலகம் பூராகவும் பரந்து வாழும் நிலையில், அதன் யதார்த்த நிலைமையை வெளிப்படுத்தும் அரசியல் போக்கு, தமிழ் இனத்தின் அரசியல்வாதிகளிடம் காணப்படாமை வேதனைக்குரியதாகும்.

நீண்ட நெடிய அரசியல் பயணத்தினூடாகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தமிழ்த் தலைமைகள், காலச்சக்கரத்தில் தமக்குள் தோன்றிய கருத்து வேறுபாடுகள், பதவிநிலைப் போட்டிகளால் இன்று சிதைந்து போயிருப்பதானது; சிதைவுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதானது சாலச்சிறந்ததல்ல.

வெறுமனே, மத்திய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருந்து விட்டுப்போவதால், சாதிக்கப்போவது என்பது, மண் வீதிகள் தார் வீதியாவதும், ஓலைக் குடிசையில் இருந்த கோவில்கள் கட்டடத்துக்கு உருமாறுவது மட்டுமே, தவிர, கல்வித் தரத்திலும் அரச உயர் பதவிகளிலும் சந்தர்ப்பங்களை நழுவ விடுவதாகவே இருக்கும். இதற்குமப்பால், ‘கம்பரலிய’ போன்ற சிங்கள மொழிகள், தமிழ்க் கலப்பாகத் தமிழர்கள் மத்தியில் உலாவரும் நிலையிலேயே, தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்கள் எங்கும், சிங்கள மயமாகுவதும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. தமிழர்களது தொன்மையின் சான்றாகக் காணப்பட்ட இடங்கள் எல்லாம், பௌத்தர்களின் வருகையின் போதான, தியான இடங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டு, அவை இன்று பௌத்தர்களின் வாழ்விடங்களாகச் சித்திரிக்கப்பட்டு வருகின்றன.

அரக்கர், இயக்கர், நாகர் என்ற தமிழர்களின் பூர்வீகத்தின் அடையாளங்கள், அழிக்கப்படுவது தொடர்பான கரிசனை, தமிழ் தலைமைகள் மத்தியில், உயிர்ப்புப் பெறாமல் உள்ளமை ஏன் என்ற கேள்விகள் நிறைந்துள்ளனவே தவிர, அதற்கான பதில்கள் தொடுவானம் போலவே தெரிகின்றன; எவராலும் தேடப்படக் கூடவில்லை.

இன்றைய நிலையில் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை நடத்தியே, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்ற நிலைப்பாடானது உருவாக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள், இன்று தமது இருப்புத் தொடர்பாக, நாடிபிடித்து பார்ப்பதற்கான ஓர் செயற்பாடாகவும் தமிழ் மக்களின் உணர்வைத் தூண்டிப்பார்க்கும் செயன்முறையைப் பின்பற்றுகின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.

கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இரண்டாவது தடவையாக, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வில், முன்னாள் முதலமைச்சர் சீ.வியுடன் இணைந்து செயற்பட்டிருந்தது.

எனினும், தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விக்னேஸ்வரனும் போட்ட திட்டத்தில், இறுதிச் சந்தர்ப்பம், இருட்டறைக்குள் கறுப்புப் பூனைகளைத் தேடும் நிலைமைக்குள் தள்ளிவிட்டிருந்தது. இதன் காரணமாகவே, இம்முறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது ஆதரவை, ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு வழங்காது இருந்துள்ளது.

எனினும், இன்றுவரை தமக்கான அரசியல் இருப்பு இல்லாதுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப், தமது இருப்புக்கான தளமாக, விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியையே நம்பியிருக்கின்றது. தனித்துத் தமிழ் மக்களிடம் சென்று வாக்குக் கேட்கும் திடகாத்திரமின்றி உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப், இப்போது இன்னொரு கட்சியை ஒட்டியிருப்பதும் தேர்தலின் பின்னர், அதனை கழற்றிவிட்டு வேறொன்றுக்கு மாறுவதும் இயல்பாகிப்போயுள்ள நிலையில், இம் முறை ‘எழுக தமிழ்’ நிகழ்வை இணைந்து செயற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை என்ற இலச்சினைக்குள் மறைந்துள்ள விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமசந்திரனும் இம்முறை ‘எழுக தமிழ்’ நிகழ்வில் கணிசமான மக்கள் கலந்துகொண்டால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் புறந்தள்ளித் தமது கூட்டைப் பலப்படுத்திக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக அமைத்துக் கொள்ள முடியும் என எண்ணியிருந்தனர். ஆனால், அது சாத்தியமற்றதாகவே போயிருக்கின்றது எனலாம். இச்சூழலிலேயே, இவ்வாறான தமிழ் தலைமைகளை நம்பி, தமிழர்கள் தமது தொன்மை மற்றும் உரிமை தொடர்பான போராட்டத்தை முன்னெடுக்க முனைகின்றனர். ‘மண்குதிரைகளை நம்பி, ஆற்றில் இறங்கிய நிலையாகியுள்ள தமிழர் அரசியல் களத்தில், சுயநல அரசியல் என்பது, அற்றுப்போகும் நிலை ஏற்படும் பட்சத்திலேயே, தமிழ் மக்களின் நம்பிக்கையும் மேன்மைபெறும். ஆனால், அதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டியதேயாகும்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செல்நெறியில் பிறழ்வுள்ளதாக வெளியேறிய பலரும், தமது பொதுஎதிரியை இனம் கண்டு எதிர்ப்பதை விடுத்து, தமது தாய் வீடான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சரமாரியாக விமர்சனம் செய்யும் நிலைப்பாடே காணப்படுகின்றது. இது, ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கும் போக்கிலானதாகத் தெரியவில்லை.

தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்ட அரசியலின் பிரதான போக்கில், பல பிரிவுகள் விரிந்து செல்கின்றமை, ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் நூற்றுக்கணக்கான ஆயுதக் குழுக்கள் உருவானமை போன்ற சமிக்ஞை மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் களமும் நலிவடைந்து செல்கின்றது என்பதற்கான, துர்ச்சகுனமாகவும் பார்க்க வேண்டியுள்ளது. இச்சூழலிலேயே தமிழர்கள், தமது உரிமை, காணாமல் ஆக்கப்பட்டோர், காணி விடுவிப்பு போன்றவை தொடர்பாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இப்போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டிய, அதற்கான அடுத்த கட்டப் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டிய அரசியல் தலைமைகள், தமக்குள் முட்டி மோதிக்கொண்டு, தமது அரசியல் இருப்புத் தொடர்பான விடயங்களுக்காக, மக்களை உசுப்பேற்றும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றன.

வடபுலத்தில் உள்ள அரசியல்வாதிகளின் ஒவ்வொரு செயற்பாடும், ஒவ்வோர் அறிக்கையும் தமிழ் மக்களின் இருப்புக்குப் பங்கம் விளைவிப்பதாக அமைந்து விடக்கூடாது என்பது அரசியல்வாதிகளால் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கியமான விடயம் ஆகும். இதற்குமப்பால், தமிழ் அரசியல்வாதிகளிடமுள்ள மாறுபட்ட அரசியல் அணுகுமுறையானது, தமிழர் தரப்பில், பேரம் பேசும் தளத்தை இல்லாமல் செய்துவிடும் என்பது உண்மை. இந்நிலையில் ஓரணியில் நின்று செயற்படும் பொறிமுறை தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்காத வரையில், தமிழர்களின் தொன்மையோ அவர்களது அரசியல் உரிமைகளோ இலங்கை வரலாற்றில் பதியப்படாத விடயமாகவே இருக்கப்போகின்றது என்பதே உண்மையிலும் உண்மை.

இணக்க அரசியல் என்ற தளம்

முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் கருத்து:
“இந்த நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. அதேபோல், இந்த நாட்டில் உள்ள மக்கள் அன்றாட தேவைகள் குறித்துப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் தென்பகுதியை விட அபிவிருத்தி விடயத்தில் பல்வேறு பொருளாதார சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளார்கள். 30 வருடம் நடந்த யுத்தால் ஏற்பட்ட அழிவுகள், சிதைவுகளில் இருந்து, அவர்கள் இன்னமும் மீளாதவர்களாகக் காணப்படுகின்றனர். அந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு, புதியதோர் உலகமாக மாற்ற, அவை இன்னும் பூரணமாக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

குறிப்பாகத் தமிழ் மக்கள், கடந்த காலங்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இப்பொழுதும் பல ஏமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். பல்வேறு வகையில் விரக்திகளுக்கு உள்ளாகி உள்ளார்கள். இந்த நிலைகளில், மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, தமிழ் சமுதாயம் முன்னேறும் வகையான ஓர் அடித்தளத்தை ஏற்படுத்தும் வகையான விடயங்களை பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

இவற்றுக்கு அரசியல் ரீதியாக அரசாங்கங்களில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வந்த ஆட்சியாளர்கள் நல்லாட்சி என்ற பெயரில் தொடங்கினார்கள். பின்னர் நல்லாட்சி இல்லாதமல் போய், அது கூட்டாச்சி ஆகியது. பின்னர், அந்த நிலைமையும் மாறிப் போய், கெட்ட ஆட்சி என்ற நிலையை அடைந்திருக்கிறது

ஒன்றையும் செய்யவில்லை என்பதற்கும் அப்பால், பல பாதகமான விடயங்களை ஐக்கிய தேசியக் கட்சி செய்துள்ளது. அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைபோயுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அரச அதிகாரத்தில் மாற்றம் வேண்டும். அதற்கான மாற்றத்தை அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தொடக்கி வைக்க வேண்டும்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அண்மையில் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரை, இந்த ஜனாதிபதி தேர்தல் பிரதானமானது. அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை இதுதான் நிர்ணயிக்கப் போகிறது. அந்தவகையில், அடுத்து வரும் ஆட்சியானது, ஆற்றலுடைய, மக்களுக்கான, அபிவிருத்தி, அரசியல் உரிமை, ஜனநாயக உரிமை தொடர்பான விடயங்களை முன்னகர்த்திக் கொண்டு செல்லக் கூடிய ஆட்சியாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை நம்பினால் தொடர்ந்தும் ஏமாளிகளாக இருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியை நம்பச் சொல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றி வருகிறது.

நான்கு ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய, அவர்கள் இப்பொழுது ஏமாற்றி விட்டதாகச் சொல்லுகிறார்கள். இதனையே நாங்கள் நான்கு வருடத்துக்கு முன்னர் திரும்பத் திரும்ப சொன்னோம். ஆனால், கூட்டாக இருந்து அனுபவிக்க வேண்டிய எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு, தற்போது தேர்தல் வருகின்ற நிலையிலேயே ஏமாற்றி விட்டதாகக் கூறுகிறார்கள்.

ஆனாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அதே ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரிக்கப் போகிறார்கள். பிசாசை கொண்டு வரக் கூடாது. பிசாசை விடப் பேயைக் கொண்டு வரலாம் என்கிறார்கள். ஆனால், மோசமான பேயை விடத் தெரிந்த பிசாசு பரவாயில்லை. இங்கு பேய்களும் பிசாசுகளும் தான் போட்டியிடப் போகின்றன. நல்லவரைத் தேடிக் கிடைக்கப் போவதில்லை. ஆகையால், தெரிந்த பிசாசு பரவாயில்லை.

அடுத்து, பேரம் பேசி ஆதரவு வழங்குவது என்னும் போது, தமிழ் மக்களில் மட்டும் தங்கியிருந்தால் பேரம் பேச முடியும். ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கட்டாயம் தமிழ் மக்களின் ஆதரவு அவசியம். தமிழ் வாக்குகள் இன்றி அவர்களால் வெல்ல முடியாது. ஆனால், கோட்டாபய தென்னிலங்கையின் கதாநாயகன். அவர் அங்கு அதிகபடியான வாக்குகளைப் பெற்று வெல்வார். இருப்பினும் தமிழ் மக்களின் வாக்குகளையும் வழங்குவதன் மூலமே, தேவையானவற்றை எமது மக்களுக்காகப் பெற முடியும். கோட்டாபய சொல்வதைச் செய்யக் கூடியவர்; அதனால் புரிந்துணர்வு, நம்பிக்கை அடிப்படையில் ஆதரவு வழங்குகின்றோம். தமிழ் மக்களும் அங்கிகாரத்தை வழங்கும் போது மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் நடிக்க வரும் அசின் !! (சினிமா செய்தி)
Next post மெடிக்கல் ஷாப்பிங்!! (மருத்துவம்)