ஏமாறத் தயாராகும் தமிழ்க்கட்சிகள்!! (கட்டுரை)
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன விடம், எந்த எழுத்துமூல வாக்குறுதியையும் பெற்றுக் கொள்ளாமல் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
பேச்சுக்களின் இறுதியில், அவருக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுக்கப்பட்ட போது, உங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுடன் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுங்கள் என்று இரா.சம்பந்தனிடம் சந்திரிகா குமாரதுங்க, கேட்டிருந்தார்.
அதற்கு இரா.சம்பந்தன், எழுத்து மூல உடன்பாடு செய்து கொண்டால், தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு, மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடிக்கும் பிரதான நோக்கம் பாழாகி விடும், மைத்திரிபால சிறிசேனவின் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஆதரவளிப்போம் என்று கூறியிருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தால், அவருக்கு கூட்டமைப்பினால் அழுத்தம் கொடுக்க முடிந்திருக்கும். ஆனால், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருப்பாரோ தெரியாது.
ஏனென்றால், இரகசிய உடன்பாடு என்று சிங்கள மக்களை உசுப்பேற்றி, மஹிந்த ராஜபக் ஷ தரப்பு வெற்றியைப் பெறுவதற்கு கடுமையாக முயற்சித்திருக்கும்.
சம்பந்தனின் அந்த இராஜதந்திரம், பொது அரசியலின் வெற்றிக்கு உதவியது, ஆனால் சுய அரசியலின் வெற்றிக்கு உதவவில்லை.
மைத்திரிபால சிறிசேனவின் மூலம், கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, அந்த வாய்மொழி வாக்குறுதிகள் சம்பந்தனுக்கு உதவியிருக்கவில்லை.
இந்த விடயத்தில் சூடு கண்டதால் தான், இனிமேல், எழுத்து மூல உடன்பாடு செய்து கொள்ளத் தயாராக இருக்கும் தரப்புகளுக்கே ஆதரவளிக்க முடியும் என்று, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறி வருகிறார்.
இன்னொரு பக்கத்தில், மஹிந்த ராஜபக் ஷவின் வாக்குறுதிகளை நம்பி, அவருடன் ஏற் கனவே இணைந்து செயற்பட்ட சில சிறிய தமிழ்க் கட்சிகள், கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி, வரதராஜப்பெருமாளின் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகியனவும் அவற்றில் சில.
இந்தக் கட்சிகளில் ஈ.பி.டி.பி மாத்திரம், கோத்தாபய ராஜபக் ஷவுடன் பேசியிருக்கிறது. அந்தப் பேச்சுக்களில் அவர் நம்பிக்கை அளிக்கக் கூடிய வாக்குறுதிகளை தந்துள்ளார் என கூறியிருக்கிறது.
ஆனால், வரதராஜப்பெருமாள் கோத்தாபய ராஜபக் ஷவைக் கூடச் சந்திக்கவில்லை. மஹிந்த ராஜபக் ஷவுடன் மாத்திரம் பேசியிருக்கிறார்.
ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக் ஷ, தனக்கு ஆதரவளிக்க முன்வந்த ஒரு தமிழ்க் கட்சியின் தலைவரை இன்னமும் சந்திக்க வில்லை என்றால், அந்தக் கட்சியை அவர் பொருட்டாகவே கருதவில்லை என்று தான் அர்த்தம். டக்ளஸ் தேவானந்தாவையும், வரதராஜப்பெருமாளையும் ஒரே அளவில் எடை போட மஹிந்த தரப்பு தயாராக இல்லை.
காரணம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு கணிசமான ஆதரவுத் தளம் இருக்கிறது, அதனை தேர்தல்களில் நிரூபித்திருக்கிறார்.
ஆனால் வரதராஜப்பெருமாள் அவ்வாறில்லை. அவரது கட்சி தேர்தல்களில், தமிழ் மக்களிடம் தமக்குள்ள ஆதரவை நிரூபிக்கவில்லை.
அதனால் கோத்தாபய ராஜபக் ஷ அவரையோ அவரது கட்சியின் ஆதரவையோ பொருட்டாக கருதாமல் இருக்கலாம்.
கோத்தாபய ராஜபக் ஷவையே இன்னமும் சந்திக்காத வரதராஜப்பெருமாளும், கோத்தாவைச் சந்தித்தும், அவரிடம் இருந்து முறைப்படியான எந்த வாக்குறுதியையும் பெற்றுக் கொள்ளாத டக்ளஸ் தேவானந்தாவும், தமிழ் மக்களுக்கு பொய்யான வாக்குறுதியையே வழங்க முனைந் திருக்கிறார்கள்.
கோத்தாபய ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்ததும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கான உத்தரவாதத்தை அவர் தந்திருக்கிறார் என்றும், வவுனியாவில் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வரதராஜப்பெருமாள், கூறியிருந்தார். அரசியல் கைதிகள் இவ்வளவு காலமும் சிறைக்குள் வாடுவதற்கு காரணம் கோத்தாபய ராஜபக் ஷ தான்.
அவரது காலத்தில் கடுமையான சட்டங்களுக்குக் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதில் இன்று வரை சிக்கல்கள் இருந்து வருகின்றன.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாக அவர்களை விடுவிக்காத கோத்தாபய ராஜபக் ஷ, தாம் ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதற்காக இப்படியொரு வாக்குறுதியைக் கொடுக்க முனைகிறார்.
ஆனால், கோத்தாபய ராஜபக் ஷ இந்த வாக்குறுதியைக் கொடுத்தாரா – அதற்கான உறுதிமொழி எழுத்து மூலமோ, வாய்மொழியாகவே கொடுக்கப்பட்டதா என்பது தெளிவில்லை.
எந்தவொரு சிங்களத் தலைவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கும் எந்த வாக்குறுதியையும் எழுத்து மூலம் கொடுக்கமாட்டார்கள். அதற்கு கோத்தாபய ராஜபக் ஷவும் விதிவிலக்கானவர் அல்ல.
அரசியல் கைதிகள் விடயத்தில், கோத்தாபய ராஜபக் ஷ கொடுத்த உறுதிமொழி உண்மையானதெனின், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில்- சிங்களத்தில் அதனை வெளிப்படுத்த தயாராக இருக்கிறாரா?, அந்த உறுதிமொழியை அதில் இடம்பெறச் செய்யும் தகைமை வரதராஜப்பெருமாள் போன்றவர்களுக்கு இருக்கிறதா?
வவுனியா செய்தியாளர் சந்திப்புக்கு சில நாட்கள் முன்னர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த, செவ்வியில் வரதராஜப்பெருமாள், அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை எல்லாம், தமிழ் மக்களின் பிரச்சினைகள் இல்லை என்றும், அது கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட பொய்யான விவகாரங்கள் என்றும் கூறியிருந்தார்.
எனினும், அடுத்த சில நாட்களில் கோத்தாபய ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.
அதுபோலத் தான், ஈ.பி.டி.பி.யுடனான சந்திப்பின் போது, 13 ஆவது திருத்தச்சட்டத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைமுறைப்படுத்த தயார் என்றே கோத்தாபய ராஜபக் ஷ கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
காணி அதிகாரங்களை வழங்கவே முடியாது என்றும், மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரங்களை மட்டும் வழங்குவது பற்றி ஆலோசிக்கலாம் என்றும் தான் அவர் கூறியிருந்தார்.
ஆனால், யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா நடத்திய செய்தியாளர் சந்திப்புகளில், கோத்தாபய ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்தால், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் என்று கூறி வருகிறார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வாக்குறுதியை மஹிந்த ராஜபக் ஷ கூட கொடுக்கவில்லை. அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை.
13 ஆவது திருத்தச்சட்டம் ஆகட்டும், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகட்டும், காணிகள் விடுவிப்பு ஆகட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் ஆகட்டும், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகட்டும், எல்லாவற்றுக்குமான அல்லது இந்த விடயங்கள் சார்ந்த வாக்குறுதிகளை எழுத்து மூலம் கொடுக்க எந்த வேட்பாளராவது முன்வருவார்களா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு சிங்களத் தலைவரும் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்கத் துணியமாட்டார்கள்.
இது கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் பொருத்தம், ரணில் அல்லது சஜித்துக்கும் பொருத்தமுடையது தான்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்களத் தலைவர்கள் யாருமே, சிங்கள மக்களுக்கு சரியாக எடுத்துக் கூறியது கிடையாது. சிங்கள மக்களை தவறாக வழிநடத்துவது சிங்களத் தலைமைகள் தான்.
ஒரு தரப்பு தமிழர்களுடன் உடன்பாடு செய்து கொண்டால், அல்லது தீர்வுகளை வழங்கும் வாக்குறுதியை கொடுக்க முனைந்தால், மறுதரப்பு அதனை வைத்து இனவாதத்தை கக்கி பிரசாரம் செய்யும்.
அதுதான் இதுவரை காலமும் நடந்து வந்த அரசியல். அந்த அரசியல் பாதையை மாற்றிக் கொள்ள சிங்களத் தலைவர்கள் தயாராக இல்லை.
வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை உறுதிப்படுத்திக் கொள்வதை விரும்புகின்ற சிங்களத் தலைமைகளும் வேட்பாளர்களும், மறுபுறத்தில் அதற்கான உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவோ, எழுத்து மூலம் வாக்குறுதி கொடுக்கவோ தயாராக இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறான ஒரு எழுத்துமூல வாக்குறுதியை பெற்றே ஆதரவு கொடுப்போம் என்று இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்தாலும், கடைசி நேர நிலைமை எப்படி அமையும் என்று கூறமுடியாது.
சூடு கண்ட பூனையாக இருக்கும் கூட்டமைப்பு, இந்த விடயத்தில் எப்படி முடிவெடுக்கும் என்று தெரியாது.
ஆனால், எப்போதும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக நடித்து வந்த தரப்புகள், கோத்தாபய ராஜபக் ஷவிடம் இருந்து எந்த எழுத்துமூல வாக்குறுதியையும் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு செல்லப் போவதில்லை என்பது உறுதி.
அவ்வாறு பேரம் பேசும் நிலையில் தாம் இல்லை என்பதை வரதராஜப்பெருமாள் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தமிழர்கள் வாக்களிக்காமலேயே கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்று விடுவார் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
அப்படியான அடிமை மனோநிலையில் இருக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு, தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில், விடாப்பிடியாக நின்று காரியத்தை நிறைவேற்றுக் கொள்ளப் போகின்றன என்ற கேள்வி உள்ளது,
மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்படுவதற்கோ, ஏமாந்து போய் நிற்கவோ தான், தமிழ்க் கட்சிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
Average Rating