குளிர்கால கொண்டாட்டம் !! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 43 Second

‘வின்டர் கார்னிவல்’ ஒரு திருவிழாக் கோலத்துடன் காணப்பட்டது. பொதுவாக ‘கார்னிவல்’ என்றால் நிறைய அழகழகான கடைகள் வரும். பலவிதமான பொருட்கள் புதிதாக காணப்படும். பலூன் கடைகள், மிட்டாய் கடைகள் என மக்கள் கூட்டத்துடன் ‘ஜே ஜே’ என காணப்படும். இந்த ‘வின்டர் கார்னிவலு’ம் அப்படித்தான் களை கட்டியது. ஆனால் இங்கு பல்பொருள் அங்காடிகளுக்குப் பதில் ‘ஐஸ்கட்டி’ சிலைகள் நம்மை வரவேற்றன. பனிமழை கொட்டிக்கொண்டிருந்தாலும், கால் முட்டியளவுக்கு ஐஸ் பாறைகள் காணப்பட்டாலும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. வருடா வருடம் ஐஸ் மழை பெய்யும்பொழுது சுமார் பத்து பதினைந்து நாட்கள் இத்திருவிழா நடைபெறும்.

அகலமான தெருக்கள், ஒவ்வொரு திருப்பத்திலும் ‘சிக்னல்’ போர்டுகள், தனித்தனியான வீடுகள் என இருந்தாலும் அங்கு மனிதர்களின் நடமாட்டத்தை பார்க்க முடியாது. காரணம், தலை முதல் கால் வரை கம்பளி, லெதர் ஆடைகளுடன் கையில் ஒரு மெஷினுடன் அனைவரின் வீடுகளிலும் பனிக்கட்டிகளை பெயர்த்தெடுத்து ஓரங்களில் போட்டு வாகனம் செல்ல அவரவர் வழியமைத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று கார்களாவது இருக்கும். கார்கள் முழுவதும் உறைந்து விடும். அதில் படிந்து இருக்கும் பனியை அகற்றுவதற்கென துடுப்புகள் இருக்கும். அதைக் கொண்டு கார் கண்ணாடிகளில் உறைந்துள்ள பனிப்பாறைகளை அகற்றுகிறார்கள். வழி சரிசெய்தபின், காரை பல மணி நேரம் ‘என்ஜின்’ ஓடவிட்டு பிறகுதான் வண்டியை இயக்க முடியும்.

பல இடங்களில், பனிக்கட்டிகள் முட்டு முட்டாக காணப்படுவதால், வண்டிகள் வழுக்கிக்செல்ல வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட பனியைத் தாங்கிச்செல்லும் விதத்திலான சக்கரங்கள் பொருத்தப்பட்ட கார்களையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். ‘மினியாபோலிசில்’ ரொம்ப வருடங்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு இது சகஜமாகி விட்டது. அவர்களை பொறுத்தவரை ‘குட் எக்ஸஸைஸ்’. இப்படி நம்மை உறைய வைக்கும் பனி மழை கொட்டும் அழகே தனி தான். வானத்திலிருந்து முல்லைப்பூக்கள் கொட்டுவதுபோல பனித்துளிகளை அள்ளி வீசும். என்ன ஒரு கடவுளின் படைப்பு! பனி பொழிந்த சில விநாடிகளில் தரை முழுவதும் முல்லைப்பூவால் போர்த்தியதுபோல காணப்படும்.

பனித்துளிகளாக இருக்கும்பொழுது, ‘பூட்ஸ்’ கால்களை வைக்க முடியும். ஆனால் ‘ஐஸ்’ கட்டிகளாக மாறி விட்டால், வழுக்கிவிடும். பழக்கமில்லாமல் நடப்பது கஷ்டம். இரவு முழுதும் பொழிந்த பனித் துளிகள் தரை மட்டத்திலிருந்து பிளாட்பாம் அளவானது. வீட்டின் வாயிற்கதவு கூட உறைந்துவிடும். பனிக்கட்டிகளை பெயர்த்தபின்தான், திறக்க முடியும். மரங்கள், செடிகளில் இருக்கும் ஒவ்வொரு இலையும் பனியில் உறைந்து, தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது, வெள்ளைக் கலரில் முழுவதும் ‘சீரியல்’ லைட்டால் அலங்கரித்தால் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கும். வாயிற்படிகளின் மேலேயிருந்து விழும் பனித்துளிகள் உறைந்து, அழகான டிசைன்கள் போல் காட்சியளிப்பதும் ஒரு அழகுதான்.

இரவு முழுவதும் அந்த பனித்துளிகளால் வெள்ளை வெளிச்சம், ஜன்னல் கண்ணாடிகளால் ஊடுருவி ‘டீயூப் லைட்’ போட்டதுபோல காட்சி தரும். இந்த அழகை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதவே போதாது. வெள்ளைப்பனி போர்த்தப்பட்ட தரையில், சில சமயம் முயல் குட்டிகள், துள்ளி ஓடும் மான்களின் கால் தடங்களையும் பார்க்கலாம். ஆந்தைகளும் பார்ப்பதற்கு மிகப்பெரியதாக இருக்கும். ஒவ்வொரு வீட்டின் தோட்டமும் உறைந்துகிடப்பதால், அவை விலங்குகள் விளையாடும் மைதானமாக மாறிவிடும்.

ரசிப்பதற்கு இவ்வளவு இருக்கும் பொழுது, இதையெல்லாம், அணு அணுவாக ரசிக்க வேண்டாமா? வேறு வண்டிகள் எதிரில் வருகிறதோ, இல்லையோ, அக்கம் பக்கம் மக்கள் நடமாட்டம் உள்ளதோ, இல்லையோ ஒவ்வொரு திருப்பத்திலும், தெரு மூலைகளிலும் நின்று செல்வது மிகமிக முக்கியம். அதை யாருமே மீறுவது கிடையாது. முந்திக்கொண்டு செல்லும் பழக்கமும் கிடையாது. போக்குவரத்து சட்டங்களை இங்கு யாரும் மீறுவதில்லை. இரவு நேரம் பனிமழை பெய்யும்
பொழுது, வீட்டின முகப்பு விளக்குகள் மின்மினிப் பூச்சிபோல் ஜொலிக்கும். வீட்டிற்குள் எவ்வளவு பேர் இருந்தாலும், வெளியில் ஆள் அரவமே கிடையாது. கார்கள் ஓடும் சப்தம் தவிர, வேறு சப்தமே கேட்க முடியாது.

இதற்கு நேர்மாறாக வெயில் ஆரம்பித்தால் போதும் வீட்டிற்குள் இருப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். வெளியே மக்கள் நடமாட ஆரம்பித்துவிடுவார்கள். பனி பொழிவதில் இருந்து சாதாரண நிலைக்கு வெப்பநிலை வந்தபொழுது, வாசலில் சிறுகுழந்தைகள் முதல் முதியவர் வரை வேகமா நடந்து செல்வதைக் காணமுடியும். வெப்ப நிலை ‘0’வில் இருந்தாலே இங்கு சாதாரணம். அந்த பனித்தூள்களில் கால் வைத்து நடந்தால் அது நினைக்க முடியாத சுகமான அனுபவமாக இருக்கும். இருப்பினும் அவரவர் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். இம்முறை, ‘அண்டார்டிகா’வைவிட அதிகம் பனி இங்கு பெய்துள்ளது அது மனிதர்கள் இல்லாத இடம்! இதுவோ மக்கள் வாழுமிடம்.

இத்தகைய நிலையில், அன்று பொங்கல் பண்டிகை. 00 வெப்பநிலை. இந்தியாவில் அனைத்து வீடுகளின் வாசலில் வண்ணக்கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட குளிரிலும் வீட்டு வாசலில் கோலம் போட்டு அழகு பார்த்தேன். அந்த ரங்கோலியை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டனர்.

ரங்கோலிக்கே இவ்வளவு பாராட்டு என்றால், ‘ஐஸ்’ கட்டியால் செதுக்கப்பட்ட, கலைத்திறன் கொண்ட ஓவியங்களை யோசித்துப் பாருங்கள்! சிறிய சிறிய விஷயங்களுக்காக பெருமையடித்துக் கொள்கிறோமே, உயிரைப் பணயம் வைத்து ஓவியங்களை ‘ஐஸ்’ கட்டிகளில் செதுக்கியுள்ளார்கள். அவர்களின் ரசனையைப் பாராட்டுவதா, கலைத்திறனை மெச்சுவதா? இதைக்காண வரும் மக்களின் ரசனைதான் என்ன? சிறிய ‘தலைவலி’ என்றாலே ஓய்வெடுக்கும் நமக்கிடையே, எண்பது-தொண்ணூறு வயதானவர்கள்கூட வந்து ரசித்து, புகைப்படம் எடுத்துச்செல்வது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்! அழகான தேவதை, பெண்ணின் மணக்கோலம், கையில் மோதிரம் மாற்றும் காட்சி, பட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்சி யின் வடிவம், கடல் குதிரைகள் என அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தன.

பனிக்கட்டியால் செய்யப்பட்ட ‘சோபா’ நாற்காலிகள் அனைவரையும் வரவேற்றன. அதில் அமர்ந்து வந்தவர் அனைவரும் ஞாபகார்த்தமாக புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். இதுபோல், சிலர் ஒவ்வொரு வருடமும் ‘வின்டர் ஷோ’வைக் கண்டு வருகின்றனர். சிறிய புயலென்றால்கூட, வீட்டுக்குள் முடங்கும் நாம், இங்குள்ள குழந்தைகளைப் பார்த்தால் போதும்! தானே துணிச்சல் வந்துவிடும்.

இயற்கை அன்னையின் எத்தனையோ படைப்புகளில், நான் முதன்முதலில் கண்டுகளிக்கும் ‘பனிமழை’ இதுவேயாகும்! காற்றில் தூசிகள் பறப்பதுபோல், பஞ்சு காற்றில் பறந்தால் எப்படியிருக்குமோ, அப்படியாக ஒரே மாதிரி மேகத்திலிருந்து வெள்ளைநிற பனித்துளிகள் ‘படபட’வென நாள் முழுவதும் கொட்டுவதை ஜன்னல் வழியாக, நேரம் போவதே தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சிறிது நேரத்தில் தரை மட்டும் உயர்ந்துவிடும். ஒரே மாதிரி வந்தவுடன் மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு மறைந்துவிடும். ‘வெள்ளைப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட’ அழகிய நகரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுகாதாரத்திலும் சுவிட்சர்லாந்து பெஸ்ட்டுதான்!! (மருத்துவம்)
Next post அண்ணன் உடையான் வெற்றிக்கு அஞ்சான்! (மகளிர் பக்கம்)